தமிழ்த்தளம் அறிமுகம்: Free Tamil Ebooks

Wednesday, August 31, 2016

ஆங்கிலத்தில் ஒவ்வொருநாளும் ஏராளமான மின்னூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அச்சுநூல்களோடு ஒப்பிடும்போது, இவை மிகவும் மலிவு. ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்குக்கூட நல்ல மின்னூல்களை வாங்கலாம். பல மின்னூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

பணம் ஒருபுறமிருக்க, எந்நேரமும் கையில் பல நூல்களைக் கொண்டுசெல்லும் சவுகர்யம்தான் இங்கே பெரிய விஷயம். ஒரு நூல் பிடிக்காவிட்டால், இன்னொன்றை எடுத்துப் படிக்கலாமே!

 

இந்த மின்னூல்களைப் படிப்பதற்காக Amazon Kindle போன்ற மின்படிப்பான்கள் உள்ளன. அவற்றுக்காகச் செலவழிக்க விரும்பாதோர் தங்கள் மொபைல், டாப்லட் அல்லது கணினியிலேயே மின்னூல்களை வாசிக்கலாம்.

 

நம்மவர்கள் ஆங்கில மின்னூல்களை வாசிக்கும்போதெல்லாம், இதுபோன்ற நூல்கள் தமிழிலும் கிடைக்காதா என்று ஏங்குவதுண்டு. சமீபத்தில் அதற்கும் வழி அமைந்திருக்கிறது. பல தளங்கள் தமிழில் மின்னூல்களைப் பிரசுரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, Free Tamil Ebooks (http://freetamilebooks.com).

 

இந்தத் தளத்தின் பெயரைக் கேட்டதும், அதன் சிறப்பு விளங்கிவிடும். பலவகையான தமிழ் மின்னூல்கள், இங்கே இலவசமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நூலுக்கும் அழகிய அட்டை, பல்வேறு படிப்பான்களுக்கு ஏற்ற வடிவம் என்று மிகச்சிறப்பாகப் பிரசுரிக்கிறார்கள். நாவல், சிறுகதை, கட்டுரைகள், கவிதைகள் என எல்லாவகைகளிலும் நூல்கள் உள்ளன. தொடர்ந்து புதிய நூல்கள் சேர்க்கப்படுகின்றன.

 

கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தத் தளத்துக்கு வாசகர்கள் பேராதரவு தந்துவருகிறார்கள். இதற்குச் சான்றாக, இங்கே லட்சம் பிரதிகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களெல்லாம் உண்டு. இன்னொரு விசேஷம், உங்களுடைய நூல்களையும் இங்கே இலவசமாகப் பிரசுரிக்கலாம். அதற்கான வழிகளையும் தந்துள்ளார்கள்.

 

குறைகள் என்று  பார்த்தால், பல நூல்களில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் மிகுந்துள்ளன. முற்றிலும் ஆர்வலர்களால் நடத்தப்படும் ஒரு தளத்தில், புத்தகங்களைச் சரிபார்ப்பது சிரமம்தான். ஆனால் இந்நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்தத் தளத்தின் தரம் பற்றியும் சந்தேகங்கள் எழும். ஆகவே, நூல்கள் குறைந்தபட்சத் தரத்தில் உள்ளனவா என்று பார்த்துவிட்டுப் பிரசுரிக்கலாம்.

 

இந்தத்தளத்தில் எல்லா நூல்களும் கிடைத்துவிடாதுதான். அதேசமயம், 'தமிழில் மின்னூல்களா?' என்று சந்தேகத்துடன் இருக்கிறவர்களுக்கு இவை ஒரு நல்ல தொடக்கத்தைத் தரும். அதன்பிறகு, இங்கே மின்னூல்களுக்கான வணிகச்சந்தையும் அமையும். (தொடரும்)

- என். சொக்கன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles