புகைப்படம் எடுத்ததனால், நடிக்க வாய்ப்பு கிடைத்தது! - நெகிழும் அய்யப்ப மாதவன்

Wednesday, August 31, 2016

நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான கவி ஆளுமையாக அறியப்படுபவர் அய்யப்ப மாதவன். அது மட்டுமின்றி, சமகாலத்தில் சிறந்த புகைப்படக் கலைஞராகவும் அறியப்படுகிறார். அவரின் கவிதையை வாசிக்கும்போது, பல்வேறு விதமான படிமங்களும் காட்சிகளும் மனதில் விரிந்துகொண்டே போகும்.

அதேபோலத்தான், அவரின் புகைப்படத்தைப் பார்க்கும்போதும் நிகழ்கிறது. ’எந்த மாதிரியான சூழலில், மனநிலையில், ஒளியமைப்பில் இதை எடுத்திருப்பார்’ என்ற எண்ணங்கள் நம் மனதில் தோன்றும். அய்யப்ப மாதவனுடைய கவிதைகளும் புகைப்படங்களும், ஒன்றையொன்றை சார்ந்தே இருக்கின்றன. தொடர்ந்து அவரிடம் பேசியபோது..

 

சொற்களில் இருந்து ஒளியை நோக்கிப் பயணித்தது குறித்து சொல்லுங்களேன்?

“என்னுடைய பால்ய நண்பர் ஒளிப்பதிவாளர் செழியன். அவர் என்ன செய்கிறாரோ, அதையே நானும் செய்வேன். அவர் முதலில் கவிதை எழுதினார், நானும் எழுதினேன். அடுத்து அவர் பாடினார், நான் பாடவும் செய்தேன். தொடர்ந்து, அவர் புல்லாங்குழல் வாசித்தார். நான் புல்லாங்குழலைத் தேடிப்போனேன். அப்படித்தான், அவர் முதன்முதலாக ஒரு கேமிராவை வாங்கி புகைப்படம் எடுத்தார். ஆனால், என்னால் ஒரு கேமிராவை வாங்கி புகைப்படம் எடுக்க முடியவில்லை. புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற வேட்கை மட்டும், மனசுக்குள்ளே தொடர்ந்து எரிஞ்சிகிட்டே இருந்துச்சு. அலைபேசி அறிமுகமானப்போ, அதை வச்சுக்கிட்டு சில புகைப்படங்களை எடுத்தேன். அந்தப் படங்களை எல்லாம் “நல்லாயிருக்கு” என்றார்கள் நண்பர்கள். பிறகுதான், மனைவியின் உதவியோடு ஒரு டிஜிட்டல் கேமிராவை வாங்கினேன். ஆரம்பத்தில் ஆட்டோ மோடில் எடுத்தேன். பிறகுதான், மேனுவலாக எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அதன் நுட்பங்களை தேடித் தேடி கற்றுக்கொண்டு எடுக்க ஆரம்பித்தேன்.” 

 

உங்க புகைப்படங்களோட சிறப்பு என்ன?

“நம்ம எல்லோருக்கிட்டேயுமே கேமிரா இருக்கு. ஆனா, ஒரு சிறந்த புகைப்படத்தை எல்லோராலும் எடுக்க முடியறதில்ல. காரணம், பெரும்பாலானவங்க, கேமிராவை ஒரு பணம் சம்பாதிக்கிற கருவியாக மட்டுமே பார்க்கிறாங்க. எனக்கு கவிதையும் புகைப்படமும் வேறு வேறாக தெரியல. கவிதையில இருக்கிற உணர்வுகளைத்தான் புகைப்படங்களில் வெளிப்படுத்துறேன். என்னோட படங்கள் நல்லாயிருக்குன்னு சொல்றதுக்கு காரணம், அந்தப் படங்களில் காணப்படுகிற உயிரோட்டமும், மனிதர்களோடு உணர்வும்தான்!”

 

தொடர்ந்து, மெரினா கடற்கரையையே ஒரு களமாகத் தேர்ந்தெடுப்பதேன்?

“சென்னையினுடைய மெரினாவைத்தான், அதிகமாக நான் புகைப்படம் எடுத்திருக்கேன். அது காலையோ, மாலையோ, எந்த நேரமாக இருந்தாலும் போய் படம் எடுப்பேன். குறிப்பிட்ட நேரத்துல படம் எடுக்கும்போதுதான், அது சிறப்பா வரும்னு சிலர் சொல்லுவாங்க. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. கடுமையான வெயிலிலும், என்னால் ஒரு புகைப்படத்தை எடுக்க முடியும். அதற்கு, தீவிரமான என்னோட ஈடுபாடும் ஆழ்ந்த ரசனையும் காரணம். நல்ல ரசனை உள்ளவர்களாலேயே, நல்ல படைப்புகளைத் தர முடியும்!”

 

அழகான புகைப்படத்துக்கான இலக்கணம் என்ன?

“அழகு என்பதை, ஒரு வார்த்தையாக மட்டுமே பார்ப்பதில்லை. ஒரு மனிதனை படம்பிடிக்கும்போது, அவனுக்கு தெரியாமத்தான் அதை எடுக்கிறேன். ஏன்னா, தன்னை படம் பிடிக்கிறாங்கன்னா, உடனே அவனோட இயல்புகள் மாறிடுது. அவனுடைய கேரக்டர் உடல்மொழியிலும், முகத்தில தெரியுற உணர்வுகளிலும்தான் இருக்கு. அப்படித்தான் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் அம்ஷன்குமாரைப் புகைப்படம் எடுத்தேன். லண்டனில் இருக்கும் அவருடைய புகைப்பட நண்பர் ஒருவர் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, “இத்தனை ஆண்டுகளாக உங்களைப் பல்வேறு விதங்களில் போட்டோ எடுத்திருக்கேன். ஆனா, அதில் எதிலும் வெளிப்படாத உங்களுடைய இயல்பு இந்தப் படத்துல இருக்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் மூலமாக, அவர் இயக்கிவரும் படத்தில் நடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது.”

 

பிரபல இயக்குநரும், புகைப்படக் கலைஞருமான ராபர்ட் பிரஸ்ஸோன் கருப்பு வெள்ளையில் படம் எடுப்பதில் வல்லவர். வண்ணங்களில் படம் எடுக்க முடியும் என்றாலும், உங்களுடைய படங்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளையில் இருக்கிறதே?

“ஒரு மனுஷனை தன்னுடைய எண்ணங்களுக்குள் இழுத்துட்டுப் போகும் சக்தி கருப்பு வெள்ளை படங்களுக்குத்தான் இருக்கு. ஒரு படத்தில் வர்ணங்களை கொட்டி எடுப்பதால், அது எந்தப் பாதிப்பையும் நமக்குள் ஏற்படுத்தாது. கருப்பு வெள்ளை என்கிற இரண்டு வர்ணங்களை மட்டுமே பயன்படுத்தும்போது, அது ஒட்மொத்த உணர்ச்சிகளையும் வெளிக்கொண்டு வந்துடும். ஆனால், வர்ணங்கள் முக பாவங்களையும் உணர்வுகளையும் அழிச்சிடும். அதனால கேமிராவை எடுக்கும்போதே, செட்டிங்கில் கருப்பு வெள்ளைக்கு மாற்றிதான் எடுப்பேன். சிலர், கலரில் எடுத்து கருப்பு வெள்ளைக்கு மாற்றுவார்கள். ஆனால், நான் அப்படிச் செய்வதில்லை. அதேபோல என்னிடம் புகைப்படம் எடுக்க வருபவர்கள், கலரில் புகைப்படம் எடுக்கச் சொன்னாலும் மறுத்து விடுவேன்.” 

 

அடுத்து உங்களுடைய திட்டம்?

“ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இருக்கேன். நிச்சயமா என்னோட நண்பன் செழியன்தான் அதோட ஒளிப்பதிவாளர்!” ஒரு படைப்பாளி இருவேறு துறைகளில் பிரகாசிப்பது அபூர்வம். கவிதை, புகைப்படக்கலை என்றிருக்கும் அய்யப்ப மாதவனின் படைப்புலகப் பயணம், மேலும் பல சிகரங்களை நோக்கி நீள்கிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles