டாரண்ட்ஸ் தடை பூதாகரமாகுமா?

Tuesday, August 23, 2016

இணையமே உலகம் என்றாகிப்போன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் நிகழ்ந்தால், இங்கு எல்லோரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அந்த நேரங்களில் இணையச் சேவை இல்லாததே, இதன் பின்னிருக்கும் முக்கியக் காரணம். அவ்வாறு இணையத்தில் மேய்பவர்களின் முக்கிய இலக்காக இருப்பது சமூக வலைதளங்கள் தான். அதில் அரட்டையடித்தது போக மீத நேரத்தில், அவர்களது கவனம் தரவிறக்கம் செய்வதில் இருக்கிறது.

பிடித்த புத்தகம், புகைப்படம், வீடியோக்களில் தொடங்கி புதிதாக ரிலீஸான சினிமா வரை, அனைத்தையும் டவுன்லோடிடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர் சிலர். அவர்களைப் பொறுத்தவரை, இந்த சேவைகளை அளித்துவரும் டாரண்ட்ஸ் தளங்களே, அவர்களுக்குப் புனிதத்தலங்கள். இதற்கு ஆப்பு வைக்கும் வகையில், இந்திய தொலைதொடர்புத்துறை ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாகத் தகவல் கசிந்திருக்கிறது. இது நெட்டிசன்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்திருக்கிறது. 

 

டாரண்ட்களைப் பயன்படுத்தினால், சட்டத்திற்குப் புறம்பானவற்றைத் தரவிறக்கம் செய்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. காப்புரிமை சட்டம் 1957ன் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய அரசு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், இந்தச் செய்தியின் தாக்கம் அனைத்து மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. 

 

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போலவே, டாரண்ட்களின் துணையில்லாமல் வாழ்வது எப்படி? என்ற கேள்வியுடன் இருக்கின்றனர் இணையவாசிகள். காரணம், ஒரு புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது முதல் அறிவுசார்ந்த பல தகவல்களை உலகெங்கிலும் பகிர்ந்து கொள்வது வரை, பல விஷயங்களுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது டாரண்ட் வலைதளங்கள். சில துறைகளில் வணிகப் பரிவர்த்தனைகள் இதனை வைத்தே நடக்கின்றன. 

 

ஆனாலும், பெரும்பாலானவர்கள் இந்த வலைதளங்களின் மூலமாகப் பிறரது படைப்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வழியாக, கோடிக்கணக்கில் சட்டவிரோதமாகப் பணம் குவிகிறது. குறிப்பாக, புதிய சினிமாக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, அவற்றின் பிரதி டாரண்ட் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. சுல்தான், கபாலி, பாகுபலி உள்ளிட்ட பெரிய வெற்றிகளைப் பெற்ற சினிமாக்கள் வெளியானபோது, இதற்கு எதிராகக் கடும் கண்டனக்குரல் எழுப்பியது நினைவிருக்கலாம். 

 

டாரண்ட் வலைதளங்களைத் தடை செய்வது புதிதல்ல. சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் கிக்காஸ் டாரண்ட் என்ற வலைதளம் முடக்கப்பட்டது. அதனை நடத்திவந்தவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில், வேறொரு பெயரில் அந்த தளம் இயங்கத் தொடங்கியது. இந்தியாவிலேயே பலமுறை இதுபோன்று நிகழ்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பைரேட்ஸ்பே.காம் என்ற தளம் தடை செய்யப்பட்டது. அடுத்த சில நாட்களில், பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு இயங்கியது அந்தத் தளம். இவ்வாறு சில தளங்கள் தடைசெய்யப்படும்போது, அதனை மீறி எவ்வாறு பயன்படுத்துவது என வழிகாட்ட சில கும்பல்கள் இயங்கி வருகின்றனர். ’யாருக்கு சாமர்த்தியம் அதிகம்?’ என்று நிரூபிப்பதே இவர்களது நோக்கம். 

 

எப்போதிருந்து இந்தத் தடை அமல்படுத்தப்படும் என்பதில், எந்தத் தெளிவும் இல்லை. ஆனாலும், டாரண்ட்களை முன்பு போலப் பயன்படுத்த முடியாது என்ற நிலைமை உருவாகியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதற்கு எதிரான குரல்கள் எழுமா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும். 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles