கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 28

Monday, May 15, 2017

ஒரு படம் எடுக்கறதும் ஒரு மனுஷன் பொறந்து, வருஷா வருஷம் வளர்ந்து, அப்பா அம்மாகிட்ட அடி வாங்கி , ஸ்கூல் படிச்சு, எக்ஸாம்ல பாஸ் பண்ணி, கஷ்டப்பட்டு காலேஜ்ல சீட் வாங்கி, அதுல அரியர் வெச்சு, நைட்டும் பகலுமா கண்ணு முழிச்சு படிச்சு, காலேஜ் முடியறதுக்குள்ள அரியர க்ளியர் பண்ணி, 50 இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, வேலைக்கு போயி, மேனேஜர்கிட்ட அசிங்கமா திட்டு வாங்கிட்டே வேலை செஞ்சு, ஒரு பொண்ண பாத்து,

அது பின்னாடி நாய் மாதிரி சுத்தி , அத ஓக்கே பண்ணி , அவங்கப்பன் அனுப்பற குண்டாஸா சமாளிச்சு , அந்த பொண்ண கல்யாணம் பண்ணி, வீட்டு லோனுக்கு ஈ.எம்.ஐ , ஏசி லோனுக்கு ஈ.எம்.ஐ கட்டி , ஒரு பொண்ண பெத்து அத வளர்த்து , படிக்க வெச்சு , பொண்டாட்டிக்கு அக்‌ஷய திரிதியை ஆபர்ல நகை வாங்கி குடுத்து , புள்ளைய டொனேஷன் கட்டி காலேஜ் சேர்த்து , அது படிச்சு முடிச்சதும் நல்ல இடமா மாப்பிள்ளை பாத்து , ஊரே பேசற மாதிரி கல்யாணம் பண்ணி , பேரன பேத்திய கொஞ்சி , அதுங்களுக்கு ஆயி கழுவி விட்டு கடைசியா எதாவது வியாதி வந்து , ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி போய்ச் சேர்றதும் ஒண்ணுதான். ஏன்னா ரெண்டுலயும் அவ்ளோ கஷ்டங்கள் , நஷ்டங்கள், உதவிகள், துரோகங்கள், சாதனைகள், சோதனைகள்ன்னு அத்தனையும் உண்டு. 

கோமலோட ஷுட்டிங் ஆரம்பிச்சதுல இருந்து இது எல்லாமே ஸ்டார்ட் ஆயிடுச்சு. பொதுவா ஒரு படத்தோட இயக்குனரத்தான் “கேப்டன் ஆப் தி ஷிப்” அப்படின்னு சொல்லுவாங்க. சினிமாவ பொறுத்தவரைக்கும் இயக்குனர்கள் மூழ்கிட்டு இருக்கற டைட்டானிக் ஷிப்போட கேப்டன் மாதிரி பரபரப்பாவே இருப்பாங்க. ஏன்னா சுத்தி அவர டென்ஷன் ஏத்தற சம்பவங்கள் காலைல சூரியன் உதிக்கற மாதிரி அதுபாட்டுக்கு உதிச்சுட்டே இருக்கும். இதுக்கு நடுவுல நாம எழுதுன கதைய படமா எடுத்து முடிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளி மூக்கு வழியா வந்துடும். 

கோமலுக்கு முதல் ஷெட்யூல்லயே இதெல்லாம் ஆரம்பிச்சிடுச்சு. தி.நகர் ரங்கநாதன் தெருவுல ஞாயிற்றுக் கிழமை ஹீரோவும், ஹீரோயினும் ஷாப்பிங் போறாங்க . அங்க கூட்டத்துல நடக்கும் போது ஒருத்தன் ஹீரோயின் மேல இடிச்ச்சுடறான். ஹீரோ உடனே அவன அடிக்க துரத்தறான். அவன் கூட்டத்துக்குள்ள பூந்து ஓடற மாதிரி சீன். அத ரெங்கநாதன் தெரு மாதிரி இருக்கற செட்ல அடுத்த நாள் ஷுட் பண்றதா ப்ளான். அதுக்கு 100 ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வேணும்ன்னு கோமல் முன்னாடி நாள் நைட்டே தெளிவா புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட சொல்லிட்டான். அடுத்த நாள் காலைல வந்து பாத்தா மொத்தமே 35 பேர்தான் இருக்காங்க. என்னடான்னு பாத்தா , புரொடக்ஷன் மேனேஜர் பட்ஜெட்ல மிச்சம் பண்றதா பீல் பண்ணிட்டு 100 பேருக்கு பதிலா 50 பேர்தான் லிஸ்ட்டே குடுத்து இருக்காரு. அந்த 50 பேர்ல 35 பேர கூட்டிட்டு வந்துட்டு ஐ§னியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜன்ட் மொத்தமா 50 பேர் வந்துட்டாங்கன்னு கணக்கு சொல்லி இருக்காரு. இப்படி ஆளாளுக்கு சொதப்பி கோமல கொலைவெறியாக்கிட்டு கூலா பொங்கல் சாப்பிட போய்ட்டாங்க. இதுக்காக ஷுட்டிங்க கேன்சலா பண்ண முடியும் . கடைசியா கோமல் கூட்டமான ரங்கநாதன் தெருவுக்கு பதிலா ஒரு வீக் டேஸ்ல கூட்டமே இல்லாத ரெங்கநாதன் தெருவுல காலைல 10 மணிக்கு ஹீரோவும் , ஹீரோயினும் ஷாப்பிங் பண்ண வர்றாங்கன்னு மாத்தி , முன்னாடி பின்னாடி டயலாக்க அட்ஜஸ்ட் பண்ணி காம்ப்ரமைஸோட அந்த சீன எடுத்து முடிச்சான். சினிமால இந்த காம்ப்ரமைஸ் இருக்கே அது நீங்க நினைச்ச பாக்க முடியாத அளவுக்கு இருக்கும். கேட்ட லொக்கேஷன் கிடைக்கலன்னு காம்ப்ரைமஸ், கேட்ட ஆர்ட்டிஸ்ட் கிடைக்கலன்னு காம்ப்ரமைஸ், கேட்ட எக்யூப்மெண்ட்ஸ் கிடைக்கலன்னு காம்ப்ரமைஸ், ஹீரோவுக்கு மாஸ் ஏத்தணுன்னு காம்ப்ரமைஸ், புரொடியூசருக்கு நல்லா ஒரு கிளாமர் சாங் வேணும்ன்னு காம்ப்ரமைஸ், இப்படி காம்ப்ரமைஸ் பண்ணி பண்ணி கடைசில நீங்க எடுக்க நினைச்ச படம் ஒண்ணா இருக்கும். கடைசில ரிலீஸ் ஆகறது வேற ஒண்ணா இருக்கும். 

எல்லா படத்துக்கும் இதே நிலமைதான் சொல்லல, பெரும்பாலான படங்கள்ல இந்த காம்ப்ரமைஸ் அப்படிங்கற விஷயம் கண்டிப்பா இருக்கு. சில படங்கள படம் எடுக்கற இயக்குனருக்கு தெரியாம புரொடியூசரே எடிட் பண்ணி ரிலீஸ் பண்ற கொடுமை எல்லாம் வேற இருக்கும். கோமலுக்கு இந்த அளவுக்கு டார்ச்சர் இல்லன்னாலும் சினிமாவில் தவிர்க்கவே முடியாத அடிப்படை டார்ச்சர்ஸ் இருந்துட்டுதான் இருந்துது. ஒரு பக்கம் “சார்.. மேடம்க்கு ஜுஸ் கேட்டா புரொடக்ஷன்ல ரொம்ப லேட்டா குடுக்கறாங்கன்னு ஹீரோயினோட அஸிஸ்டெண்ட் வந்து கோமல்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவான். இந்த பக்கம் திரும்புனா “கோமல்.. கேமராவுக்கு வண்டியே இன்னும் போகலயாம் .. அப்புறம் கால்ஷீட் எக்ஸ்ட்ரா போச்சுன்னா என்ன திட்டாதீங்கன்னு கேமராமேன் சொல்லுவாரு. அந்த பிரச்சனைய சால்வ் பண்ணிட்டு  திரும்புனா “சார்.. புராப்பர்ட்டிஸ் வாங்கறதுக்கு காசு தர மாட்டங்கறாங்க ..அப்புறம் ப்ரேம் எம்ப்ட்டியா இருக்கும் எங்கள திட்டக் கூடாதுன்னு ஆர்ட் அஸிஸ்டெண்ட் வந்து சொல்லுவாரு. அத சால்வ் பண்ண புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட பேசுனா “சார்.. ஆல்ரெடி இந்த ஷெட்யூல் பட்ஜெட் ஓவரா போயிட்டு இருக்கு .. ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல எக்கசக்கமா காசு போகுது சார்.. நீங்கதான் கண்ட்ரோல் பண்ணனுன்னு கோமலுக்கு பிரச்சனைய பூமராங் பண்ணிவிட்டு மேனேஜர் போயிடுவாரு. கோமல் அந்த டென்ஷன்ல இருக்கும் போதே “ சார்..நாளைக்கு நாசர் சார் டேட் இல்லியாம் .. இன்னிக்கே அந்த சீனையும் எடுத்து முடிச்சுட சொல்றாங்க.. இன்னிக்கு எடுக்கலன்னா லொக்கேஷனும் திரும்ப கிடைக்காதாம்”  அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவன் பங்குக்கு ஒரு பிரச்சனைய கொளுத்தி போட்டுட்டு எரிஞ்சுட்டு இருக்கற கோமல் மனசுல எரிசாராயத்த ஊத்திட்டு போவான். அத அணைச்சு கோமல் கூலாகும் போது பவித்ரா போன் பண்ணி ஏன் காலைல குட்மார்னிங் மெசேஜ் அனுப்பலன்னு அவ பங்குக்கு ஒரு அணுகுண்டு போடுவா. அப்ப கோமல யார் பாத்தாலும் “யார் பெற்ற மகனோ ..பாவம் யார் பெற்ற மகனோன்னு “ சோக பாட்ட கண்டிப்பா பாடுவாங்க. 

இத்தன பிரச்சனைகளுக்கு மத்தில நாம நினைச்ச மாதிரி ஒரு படம் எடுக்கறதே சாதனைதான். கோமலுக்கு இந்த பிரச்சனைகள், சின்ன சின்ன காம்ப்ரமைஸ் இருந்தாலும் புரொடியூசர் அவனுக்கு சப்போர்ட்டா அமைஞ்சதால படம் ஓரளவுக்கு அவன் எதிர்பார்த்த மாதிரி வந்துட்டு இருந்துச்சு. 23 நாள் முதல் ஷெட்யூல் முடிஞ்சு 10 நாள் பிரேக் விட்டாங்க. இப்ப எல்லாமே டிஜிட்டல் ஆயிட்டதனால படம் எடுக்க எடுக்க ஸ்பாட்லயே எடிட் பண்றவங்க கூட உண்டு. கோமல் ஸ்பாட் எடிட் வேணான்னு சொல்லிட்டான். அன்னன்னிக்கு ஷுட் முடிஞ்சதும் புட்டேஜ் கன்வெர்ட் ஆகி எடிட்டருக்கு போயிடும். அந்த 23 நாளும் எடுத்த புட்டேஜ எடிட்டர் கிஷோர் ஆர்டர் பண்ணி ஆல்ரெடி எடிட் பண்ணி வெச்சிருந்தான் . கோமல் தன் டீமோட உட்கார்ந்து எடிட் பண்ணி இருந்த சீன் எல்லாத்தையும் பாத்தான். அவனுக்கு அவன் எதிர்பார்த்த மாதிரி வந்திருக்குன்னு பீல் வந்துச்சு. கிஷோர் சில சீன்ஸ் ரொம்ப இழுக்குதுன்னு கோமல்கிட்ட சொன்னான். கோமல் கரெக்டா இருக்குன்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் பயங்கர ஆர்க்யுமெண்ட் போச்சு. கடைசியா மொத்த படமும் முடிஞ்சதுக்கப்புறம் பாக்கலாம் ..அப்பவும் இழுக்கற மாதிரி தெரிஞ்சுதுன்னா ட்ரிம் பண்ணிடலான்னு கோமல் சொன்னான். 

பொதுவா ஒரு படம் நல்லா வர்றதுக்கு காரணம் அந்த படத்தோட டைரக்டர் மட்டும் காரணம் கிடையாது. அந்த படத்துல வொர்க் பண்ற டெக்னீஷியன்ஸ் பங்கும் மிகப்பெரியதா இருக்கும். ஒரு படத்துக்கு சரியான டெக்னீஷியன் மட்டும் அமைஞ்சா அந்த படம் ஒரு டைரக்டர் நினைச்சத விட சூப்பரா வந்துடும். கோமல் எல்லா டெக்னீஷியனையும் புதுசா அறிமுகப்படுத்துனாலும் எல்லாமே திறமைசாலிங்களா இருந்தாங்க. ஷுட்டிங் ஸ்பாட்ல கோமல் சில இடங்கள்ள தடுமாறும் போது கேமராமேன் “மச்சான் ..அத இப்படி பண்ணிக்கலாண்டான்னு ஈஸியா வேலைய முடிச்சுட்டு போயிடுவாரு. எடிட்டிங்க்ல கிஷோர் கூட கோமல் எனக்கு இதான் வேணுன்னு சண்டை போட்டாலும் ரெண்டு பேருமே ஈகோ இல்லாம வேலை பாத்தாங்க. விஷயம் சரியா இருந்தா யார் சொன்னாலும் ஈகோ இல்லாம ஏத்துகணுங்கற மனப்பக்குவம் கோமல்கிட்டயும் அவன் டீம்கிட்டயும் இருந்துச்சு. நான் எடுக்கறதுதான் சினிமான்னு என்னிக்கு ஒரு டைரக்டர் நினைக்கறாரோ அப்பவே அவருக்கு அவரே ஆப்பு வெச்சுக்க தயார் ஆகிட்டார்ன்னுதான் அர்த்தம். சினிமாவ பொறுத்தவரைக்கும் ஒரு படம் நல்லா இல்லன்னா டைரக்டரதான் கேவலமா திட்டுவாங்க. அதே சமயம் ஒரு படம் நல்லா இருந்துச்சுன்னா படத்துல வேலை பார்த்த அத்தனை பேரோட உழைப்புக்கும் சேர்த்து அதே டைரக்டரதான் பாராட்டுவாங்க. கோமல் இதெல்லாம் தெளிவா உணர்ந்து இருந்தான்.

முதல் ஷெட்யூல் பிரேக்ல அடுத்த ஷெட்யூல் ஷுட்டிங்கான வேலைகள் பரபரப்பா நடந்துச்சு. அடுத்த ஷெட்யூல்ல பைட் சீன்ஸ் எடுக்கறதனால கோமல் திலீப் மாஸ்டர் கூட உட்கார்ந்து பைட்ட எப்படி எடுக்கறதுன்னு டிஸ்கஸ் பண்ணான். சில இங்கிலீஷ் பட டிவிடிக்கள குடுத்து மாஸ்டர் ..எனக்கு இந்த பைட் இருக்கணுன்னு கோமல் சொன்னான். யூ டூ கோமல்ன்னு மாஸ்டர் அவன முறைச்சுட்டே “கோமல் ..எனக்கு ரெப்ரன்ஸ் எல்லாம் வேணாம்.. என்ன பீல்ன்னு சொல்லு ..அத விட உனக்கு நல்லா எடுத்து தர்றன்னு சொன்னாரு. கோமல் அவரு மேல நம்பிக்கை வெச்சு ரெப்ரன்ஸ் டிவிடிய தூக்கி போட்டான். 10 நாள் பிரேக் முடிஞ்சு அடுத்த நாள் காலைல ஷுட்டிங்ன்னா நைட்டு செம்ம மழை. காலைல 5 மணிக்கு புரொடக்ஷன் மேனேஜர் போன் அடிச்சு “சார்.. இன்னிக்கு ஷுட்டிங் கேன்சல்ன்னாரு . ஏன் ..சார் ? கோமல் குழப்பமா கேட்டான். மேனேஜர் “நாம போட்டு வெச்சு இருந்த செட் எல்லாம் மழைல அடிச்சுட்டு போயிச்சு சார்ன்னு சொன்னாரு. கோமல் நொந்து போனான். மறுபடியும் அந்த செட்ட ரெடி பண்றதுக்கு 5 நாள் ஆச்சு. 5 நாள் கழிச்சு ஒரு வழியா ஷுட்டிங் ஆரம்பிச்சுது. முதல் நாளே பைட் சீன். ஹீரோ பறந்து வந்து ஒரு ஜன்னல் வழியா குதிக்கற மாதிரி ஷாட் . திலீப் மாஸ்டர் ஹீரோவுக்கு ரோப் எல்லாம் கட்டி ரிகர்சல் பாத்துட்டு டேக் போலான்னு சொன்னாரு. ஹீரோ மாடில இருந்து குதிச்சதும் , பைட் மாஸ்டர் அஸிஸ்டெண்ட்ஸ் கரெக்டா ரோப்ப இழுத்து அவர ஜன்னல்கிட்ட லேண்ட் பண்ணனும். திலீப் மாஸ்டர் ஸ்டார்ட் கேமரா சொன்னதும் .. ரோலிங்ன்னு கேமரா ஆபரேட்டர்கிட்ட இருந்து சத்தம் வந்துச்சு .. திலீப் “ஆக்ஷன்” அப்படின்னு கத்துனதும் ஹீரோ மேல இருந்து குதிச்சாரு. ஸ்டண்ட் அஸிஸ்டெண்ட்ஸ் கரெக்டா ரோப்ப இழுத்தாங்க . அப்ப யாரும் எதிர்பாராம ஒரு விஷயம் நடந்துச்சு. ஹீரோ இடுப்புல கட்டி இருந்த கயிறு கட் ஆகி , அப்படியே பறந்து வந்து அங்க இருந்த கிரேன் மேல மோதி கீழ விழுந்தாரு. கோமல் அதிர்ச்சியோட எழுந்து அவர நோக்கி ஓடி வந்தான். 

கோமலின் கலைப்பயணம் தொடரும். 

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles