கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 24

Wednesday, March 15, 2017

கோமல் தன்னோட புரொடியூசர் வேட்டையை, அமெரிக்கா அல்கொய்தா மேல நடத்தற அட்டாக் மாதிரி மிரட்டலா இருக்கணும்னு முடிவு பண்ணான். உங்களில் யார் கோமலின் புரொடியூசர்ன்னு விஜய் டிவில ஒரு ஷோ நடத்தலாமான்னு கூட அவன் மூளை நோட்டிபிகேஷன் குடுத்துச்சு. கோமல் அத நிராகரிச்சுட்டு மற்ற வழிகள்ல இறங்குனான்.

முதல் வேலையா ஆங்கிலோ இண்டியன் அப்பா அம்மாக்கு பிறந்த டோனிங்கற பிரண்டு மூலமா, “டியர் சார்னு ஆரம்பிச்சு நல்ல கதை வெச்சிருக்கேன், உங்களிடம் அதை சொல்ல வேண்டும். உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு ஒதுக்குங்கள், நன்றி” அப்படின்னு அழகான தமிழ்ல இருந்த வாக்கியத்த கிராமர் மிஸ்டேக் இல்லாத இங்கிலீஷ்க்கு மாத்துனான். அந்த மெசேஜை ஏவிஎம் சரவணன் சார்ல இருந்து எதிர்த்த வீட்ல இருந்த பிளம்பர் சரவணன் வரைக்கும் அனுப்பி வச்சான். அதோட அட்டாக்க நிறுத்தாம தெரிஞ்ச கேமராமேன், புரொடக்‌ஷன் மேனேஜர், ஆர்ட் டைரக்டர்ன்னு எல்லாருக்கும் கால் பண்ணி, மெசேஜ் பண்ணி தன்னோட தேடுதல் வேட்டைய விளக்கி சொன்னான். கோமல் அனுப்புன மெசேஜ்ல ஒண்ணு பி.சி.ஶ்ரீராம்க்கு போக “Who is this idiot? இவன் ஏன் எனக்கு மெசேஜ் பண்றான்”னு டென்ஷனா அவரு அஸிஸ்டெண்ட்ஸ்கிட்ட கத்திட்டு இருந்தது கோமலுக்கு தெரியாது. 

அதே சமயம் லவ் புரபோஸ் பண்ணிட்டு ரிப்ளைக்கு காத்திருக்கற அவஸ்தையோட கோமல் காத்துட்டு இருந்தான். வாட்ஸ்அப்ல அவன் அனுப்புன மெசேஜ் ப்ளூ டிக்ல வந்ததும், ரிப்ளை பண்ணாத தயாரிப்பாளர்களுக்கு இன்ஸ்டண்டா போன் அடிச்சான். சில பேர் அவங்களே கால் பண்றதா சொன்னாங்க. சில பேர் இப்ப படம் புரொடியூஸ் பண்ணலன்னு போனை வச்சாங்க. ஆனா இந்த சம்பவம் நடந்த நாலு நாள் கழிச்சு ஒரே ஒரு புரொடியூசர் மட்டும் “கம் அண்ட் மீட் மீ அட் 3.30 லீலா பேலஸ் ஹோட்டல் - ரூம் நம்பர் 344 அப்படி”ன்னு ரிப்ளை அனுப்புனாரு. 

கோமலுக்கு அந்த மெசேஜை பார்த்ததும், சிறகு முளைத்து வானில் பறக்க வேண்டும் போல ஒரு பீல் இருந்தது. விட்டா, லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அப்படியே பறந்து போயிடற மாதிரி கூட யோசிச்சான். ஆனா யதார்த்தம் ஓங்கி செவுல்லயே அறைஞ்சு அவன ஷேர் ஆட்டோல போக வெச்சுது. கதைய நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு, வடபழனி முருகன் கோயில்ல முருக பெருமானுக்கு ஒரு மூன்று ரூபாய அன்பளிப்பா குடுத்துட்டு பவித்ராகிட்ட ஆல் தி பெஸ்ட் வாங்கிட்டு லீலா பேலஸ் வாசல்ல வந்து இறங்குனான். 

அந்த பேலஸ பார்த்ததும், நம்மள உள்ள விடுவானுங்களான்னு ஒரு சின்ன தயக்கம் இருந்தாலும் கோமல் நம்பிக்கையோட வலது காலை எடுத்து வச்சான். உள்ள போனதும் ரிசப்ஷன்ல இருந்த அழகு தேவதைகிட்ட போய் “அக்கா..ரூம் நெம்பர் 344 எங்க இருக்கு”ன்னு கேட்க,  அது ஏண்டா என்ன பாத்து இந்த கேள்விய கேட்டன்னு கொலைவெறில முறைச்சுட்டே, “மூணாவது ப்ளோர்ல இருக்கு தம்பி”ன்னு கடுப்பா பதில் சொல்லுச்சு. கோமல் லிப்ட்ல ஏறுனான். 

லிப்ட் மூணாவது மாடிக்கு போறதுக்குள்ள, அவனோட கற்பனைல கோமல் வாழ்க்கைல உயரமா கண்ணுக்கு தெரியாத தூரம் போய் இருந்தான். லிப்ட் நிக்க வெளில வந்து ரூம் நெம்பர் 344 கண்டுபுடிச்சு காலிங்பெல்ல அழுத்திட்டு படபடப்பா நின்னான். கதவ திறக்க, அவனுக்கு சொர்க்க வாசலே திறக்கற மாதிரி இருந்துது. எதிர்ல பார்த்தா கடவுளுக்கு பதிலா நான் கடவுள் ராஜேந்திரன் மாதிரி ஒருத்தர் நின்னுட்டு இருந்தாரு. அவர பார்த்ததும் கோமல் வணக்கம் சொல்லி மூன்றரை மணிக்கு வரச்சொன்ன விஷயத்த சொன்னான். பதட்டத்துல வாய்ஸ்க்கு பதிலா வர்தா புயல்தான் வந்துது. அந்த புரொடியூசர் கோமல் சொன்னத புரிஞ்சுட்டு, உள்ள வா தம்பின்னு சிக்னல் காட்ட கோமல் உள்ள நுழைஞ்சான். 

லீலா பேலஸ்லயே காஸ்ட்லியான அந்த சூட் ரூம்ல நுழைஞ்சதும், கோமல் ஒரு செகண்ட் பிரமிப்பாகி பாஸ்போர்ட் இல்லாமயே பாரினுக்கு போன மாதிரி பீல் ஆனான். அங்க இருந்த டேபிள்ல பாதி காலி ஆன பிளாக் லேபில் விஸ்கி பாட்டிலும் ஒரு பாண்டியன் ஊறுகா பாக்கெட்டும் இருந்துச்சு. அத பாத்ததும் கோமலோட ஷெர்லாக் ஹோம்ஸ் மூளை இந்த புரொடியூசர் ஒரு திடீர் பணக்காரர்ங்கற விஷயத்த கன்பார்ம் பண்ணுச்சு. 

கோமல் பவ்யமா நின்னான். “அவரு உட்காரு தம்பி"ன்னு ஓமக்குச்சி நரசிம்மன் வாய்ஸ்ல உத்தரவா சொன்னாரு. என்னடா இது மொட்ட ராஜேந்திரன் உருவத்துக்கு செட்டே ஆகாத வாய்ஸா இருக்கேன்னு யோசிச்சுட்டே கோமல் உட்கார்ந்தான். எதிர்ல இருந்த சோபாவுல உட்கார்ந்த அந்த புரொடியூசர் கோமல பார்த்து “ஒரு கட்டிங் போடறியா தம்பி”ன்னு கேட்டாரு. கதை சொல்ல வந்தா கட்டிங் போடறியான்னு கேக்கறாரேன்னு கோமல் கன்ப்யூஸ் ஆனான். 

அதை வெளிய காட்டிக்காம, “இல்ல சார் …பழக்கம் இல்ல”ன்னு பவ்யமா பதில் சொன்னான். அவரு எதுவும் சொல்லாம ஒரு ரவுண்டு அடிச்சாரு. கோமல் பேக்ல வெச்சிருந்த ஸ்கிரிப்ட் புக்க கையில எடுத்தான். அவரு அத கவனிக்காம ஊறுகாய நக்கிட்டு இருந்தாரு. கோமல் ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னு புரியாம அந்த ரூமை ஒரு பார்வை பார்த்தான். பெட்டு மேல ஒரு பட்டாபட்டி டவுசர் கிடந்தது. கோமலோட ஷெர்லாக் ஹோம்ஸ் மூளை மறுபடியும் அனலைஸ் பண்றதுக்கு முன்னாடி அவரு “தம்பி.. கூச்சப்படாத ஒரு கட்டிங் போடு.. எதாவது சாப்பிட ஆர்டர் பண்றன்”னு சொன்னாரு. கோமல் மறுபடியும் மறுப்பு தெரிவிச்சுட்டு “சார் ..கதை சொல்லவா”ன்னு கேட்டான். 

அவரு பதில் சொல்லாம எந்திரிச்சு பாத்ரூம் போனாரு. கோமலுக்கு இப்ப லீலா பேலஸ், கான்ஜீரிங் வீடு மாதிரி கலவரத்த உண்டு பண்ணுச்சு. வெளிய காட்டிக்காம உட்கார்ந்து இருந்தான். நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நான் இங்கு மாட்டிக்கொண்டாலேன்னு பாட்டெல்லாம் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைச்சது. 

கதவ தொறந்துட்டு அவரு எதிர்ல வந்து உட்கார்ந்தாரு. பாத்ரூம்ல தண்ணி கொட்டற சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. கோமல் “சார்.. தண்ணி” அப்படின்னு இழுத்தான். “அடிப்பா.. நாந்தான் அடிக்க சொன்னனே! இல்ல சார்.. பாத்ரூம்ல தண்ணி கொட்டுது”ன்னு கோமல் சொன்னான். “அய்யோ.. மறந்துட்டன் தம்பி.. போய் அதக் கொஞ்சம் ஆப் பண்ணிட்டு வா”ன்னு சொன்னாரு. கோமல் ஆப் பண்ணிட்டு வந்து, “சார்.. கதைய சொல்லவா”ன்னு கேட்டான். 

நிமிர்ந்து அவன பாத்தவர், “தம்பி.. தப்பா நினைச்சுக்காத.. நான் படம் எல்லாம் பண்ணப் போறது இல்ல.. மினிஸ்டர பாக்க வந்திருந்தன். இங்க தங்க வேண்டியதாயிடுச்சு. எனக்கு எப்பவும் தனியா சரக்கடிக்க புடிக்காது. கம்பெனிக்கு யாருக்காவது போன் அடிக்கலான்னு பார்த்தா, நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் பிஸி. அப்பதான் நீ அனுப்புன மெசேஜ் நியாபகத்துக்கு வந்துது. அதான் உன்ன கூப்பிட்டன். நீ என்னடான்னா குடிக்க மாட்டன்னு சொல்லிட்ட! ரொம்ப வருத்தமா இருக்கு தம்பி”ன்னு பீல் பண்ணாரு. 

கோமலுக்கு அப்ப வந்த கொலைவெறிக்கு, எதிர்ல இருந்த சரக்கு பாட்டில எடுத்து அவரு வயித்துல சொருகணும் போல இருந்துச்சு. புழல் ஜெயிலையும் அதுல போடற சாப்பாட்டையும் மனசுல நினைச்சு பார்த்துட்டு அந்த முடிவ கைவிட்டான். ஸ்கிரிப்ட் புக்க மறுபடியும் பேக்ல வெச்சுட்டு வேகமா எந்திரிச்சான். அவரு உடனே “தம்பி.. டென்சனாயிட்டன்னு நினைக்கறன் மன்னிச்சுக்கப்பா”ன்னு சொல்லிட்டே அஞ்சாறு ரெண்டாயிரம் ரூபாய் நோட்ட அவன் கையில திணிச்சுட்டு, “வந்ததுக்கு சும்மா செலவுக்கு வெச்சுக்கப்பா”ன்னு சொன்னாரு. 

கோமல் அந்த காச அப்படியே டேபிள் மேல போட்டுட்டு திரும்பி பார்க்காம நடந்தான். லீலா பேலஸ் விட்டு வெளில வரும்போது கோமல் கண்ல இருந்து கண்ணீர் துளியும் வெளிய வந்துச்சு. அன்னிக்கு அவன் அழுத அழுகைல கூவத்துல 2 டிஎம்சி தண்ணி அதிகமா போனது கோமலுக்கே தெரியாது. அழுது முடிச்சதும், முதல் வேலையா அந்த புரொடியூசர் நம்பர டெலீட் பண்ணான். 

அடுத்த நாள் காலைல திலீப் மாஸ்டர பார்த்து, நடந்தத சொல்லி மறுபடியும் கண்ணீர் விட்டான். அவரு அவனுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கைய கொஞ்சம் டாப் அப் பண்ணி அனுப்பிவிட்டாரு. பவித்ராவும் தன் பங்குக்கு கொஞ்சம் டாப் அப் பண்ணி விட ,கோமல் மறுபடியும் களம் இறங்குனான். தன் முயற்சில சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனா கோமல் மறுபடியும் படையெடுக்க ஆரம்பிச்சான். 

ஒரு அம்பது , அறுபது புரொடியூசர்கிட்ட கதை சொல்லி இருப்பான். சில பேர் இதெல்லாம் கதையாங்கற மாதிரி பார்த்தாங்க. சில பேர் கதை நல்லா இருக்கு ஆனா பட்ஜெட் அதிகமா இருக்குன்னாங்க. இன்னும் சில பேர், நீங்க ஒரு நல்ல ஹீரோகிட்ட கதை சொல்லி டேட் வாங்கிட்டு வாங்க நாம பண்ணலான்னு சொன்னாங்க. போற போக்க பாத்தா ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மாதிரி ஆயிரம் கதை சொல்லிய அபூர்வ கோமலா மாறிடுவமோன்னு கோமல் பயந்தான். 

அப்பதான் ஒருநாள் ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர் மூலமா ஒரு புது புரொடியூசருக்கு கதை சொல்ற வாய்ப்பு வந்துச்சு. கோமலுக்கு எல்லாமே பழகி இருந்ததனால அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போய் கதை சொன்னான். கதை கேக்கற வரைக்கும் மூஞ்சில ரியாக்‌ஷனே காட்டாம உட்கார்ந்த இருந்த புரொடியூசர் கதைய கேட்டு முடிச்சதும் எதுவும் சொல்லாம எந்திரிச்சு உள்ள ரூமுக்கு போக, கோமல் பத்தோட ஒண்ணு பதிணொன்னு அத்தோட இதுவும் ஒண்ணுன்னு முடிவு பண்ணி எந்திரிச்சான். அப்போ உள்ள இருந்துவந்த அந்த புரொடியூசர் ஒரு 500 ரூபா நோட்டு கட்டோட வந்து “தம்பி.. உங்க கதை ரொம்ப புடிச்சுருக்கு. உடனே ஆரம்பிக்கறோம் .இந்தாங்க அட்வான்ஸ் அம்பது ஆயிரம்”ன்னு கையில குடுத்தாரு. கோமலுக்கு சந்தோசத்துல பேச்சு மூச்சு வராம போனாலும், கை மட்டும் அந்த அம்பாதாயிரத்த கரெக்டா வாங்கி பாக்கெட்ல வெச்சுது. “வர்ற வெள்ளிக்கிழமையே ஆபிஸ் போடறோம் தம்பி”ன்னு புரொடியூசர் சொல்ல, கோமல் அப்படியே அவர் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி நன்றின்னு ஆனந்த கண்ணீர் மல்க சொன்னான். 

வெளிய வந்ததும் கோமல் முதல் வேலையா பவித்ராவுக்கும் திலீப் மாஸ்டருக்கும் போன் அடிச்சு விஷயத்த சொன்னான். அன்னிக்கு அவன் ஆனந்த கண்ணீர்ல விட்ட கண்ணீராலயும் கூவத்துல ஒரு ரெண்டு டிஎம்சி தண்ணி எக்ஸ்ட்ராவா போச்சு. அன்னிக்கு நைட் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் ஆதித்யால செம்ம பார்ட்டி வெச்சான். அம்பது ஆயிரத்துல பார்ட்டிக்கே பத்தாயிரம் செலவாச்சு. ஆனா அடுத்து நடக்கப்போற டிவிஸ்ட்டு தெரியாம கோமல் ஹேப்பி அண்ணாச்சின்னு போதைல பிரண்ட்ஸ் எல்லாரும் பீல் பண்ணாங்க. ஆனா அவன் எழுதுன ஸ்க்ரீன்ப்ளேவ விட பெரிய டிவிஸ்ட்டோட விதி அவனுக்கு அடுத்த எபிசோட்ல வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு. 

கோமலின் கலைப்பயணம் தொடரும்...

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles