கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 30

Thursday, June 15, 2017

பவித்ராகிட்ட போன்ல பேசிட்டு வெச்சதும் “பிரேக் அப் ஆகாத காதலும் பிரேக் புடிக்காத காரும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல”ன்னு ஒரு பொன்மொழி கோமல் மனசுல வந்து தொலைஞ்சுச்சு, கோமல் பாவம் குழம்பி போனான். எனக்கு ஏன் இப்படி எல்லாம் மொக்க பொன்மொழி தோணுது. பவித்ரா கூட சண்டை போட்டுட்டு போன வெச்சா இப்படி எல்லாம் தோணுமான்னு யோசிச்சு பாத்தான். காதல் கவிதை எழுத வெக்கும்..

காதலி கடுப்புல எழுத வெப்பான்னு மறுபடியும் ஒரு பொன்மொழி தோணுச்சு. கோமல் உடனே யோசிக்கறத நிறுத்துனான். காதல பத்தி படம் எடுத்துட்டு இருக்கும் போது தன் காதலே புட்டுக்கறத அவனால ஏத்துக்க முடியல. எதாவது பண்ணி பவித்ரா கூட மறுபடியும் பெவிகால் போட்டு ஒட்டிக்கணுமுன்னு முடிவு பண்ணான். 
 
முடிவு பண்ண அடுத்த நொடி பவித்ராவுக்கு போன் அடிச்சான். பவித்ரா போன எடுக்கல. உடனே வாட்ஸ் அப்ல “என் காதல் என்னான்னு சொல்ல சொல்ல கோபமா வருது எங்க நான் ரொம்ப கோபப்பட்டு என் கோபம் உன்ன தாக்கிடுமோன்னு நினைக்கும் போது வர்தா புயல் மாதிரி வர்ற கோபம் கூட வலுவிழந்து சாந்தமா மாறிடுது. ப்ளீஸ் பவித்ரா என் கூட பேசு, இல்ல நான் ஆயிடுவன் லூஸூ”ன்னு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புனான். 
 
அதைக் கேட்டதும் கொலை வெறில இருந்த பவித்ராவுக்கு சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அடுத்த செகண்ட் கோமலுக்கு அவகிட்ட இருந்து போனும் வந்துச்சு. போன எடுத்ததும் கோமல் ஸாரி கேட்க.. பதிலுக்கு என் மேலதான் தப்புன்னு பவித்ரா ஸாரி கேட்க.. இல்ல என் மேலதான் தப்புன்னு கோமல் மறுபடியும் ஸாரி கேட்க, இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு கிடந்த காதல் இன்ஸ்டண்ட் குளுக்கோஸ் குடிச்ச மாதிரி எனர்ஜியா மறுபடியும் ஆக்டிவ் மோடுக்கு வந்துச்சு. 
 
நீ உடனே கிளம்பி சென்னை வா.. ரெண்டு நாள் என்கூட இருந்துட்டு அப்புறம் ஊருக்கு கிளம்பி போயிடுன்னு பவித்ராகிட்ட கோமல் சொன்னான். அடுத்த செகண்ட் “அசிங்கமா பேசறியேடா அயோக்கிய ராஸ்கல்.. என்ன அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சிட்டியா? நான் எல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணு க்ஷ, என்கிட்ட இந்த மாதிரி எல்லாம் எதிர்பார்க்காதன்னு பவித்ரா பொரிஞ்சு தள்ள , கோமலுக்கு அப்பத்தான் அவன் சொன்ன வார்த்தையோட வேற கோணம் புரிஞ்சுது. ச்ச்சே கேனத்தனமா பேசிட்டமோன்னு அவனுக்கு அவனே பீல் பண்ணிக்கிட்டான்.  
 
பவித்ராகிட்ட “பவி.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. நீ சென்னை வா.. ரெண்டு நாள் ஊர் சுத்தி பாத்துட்டு, லவ் பண்ணிட்டு திரும்பி போ, போன்லயே லவ் பண்ணி போரடிச்சுடுச்சு” கோமல் சொன்னதும் பவித்ராவுக்கும் அந்த ஐடியா புடிச்சு இருந்துது. ஆனா சென்னைக்கு போகணுன்னா அப்பா விட மாட்டாரு, ஏன்? எதுக்குன்னு ஒரு ஆயிரம் கேள்விகள் வரும்னு பவித்ரா யோசிச்சா. உடனே கோமல் “இதெல்லாம் ஒரு மேட்டரா.. படத்துக்கே கதை எழுதறன். இதுக்கு ஒரு ஸ்கிரிப்ட் எழுத மாட்டனா? போன வை நான் பாத்துக்கறன்”னு சொல்லி போன வெச்சான். 
 
அடுத்த நாள் சென்னைல இருக்கற ஒரு கம்பெனில இருந்து ரெண்டு நாள் பயிற்சி முகாம்ல கலந்துக்க சொல்லி பவித்ராவுக்கு லெட்டர் வந்துச்சு. லெட்டர பாத்த பவித்ரா அப்பா “நல்ல கம்பெனிம்மா.. கண்டிப்பா இந்த ட்ரெயினிங் நீ அட்டெண்ட் பண்ணனும்”ன்னு சொல்லி அவரே ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்து வழி அனுப்பி வெச்சாரு. பவித்ரா கோமலுக்கு கம்பெனி குடுக்க போறது பாவம் அவருக்கு தெரியாது. ட்ரெயின் ஏறுனதும் பவித்ரா கோமலுக்கு போன் அடிச்சு ட்ரெயின் ஏறிட்டன்னு விஷயத்த சொல்ல, கோமல் தல படத்துக்கு தமிழ்நாடு வெயிட் பண்ற மாதிரி வெயிட் பண்ணிட்டு இருந்தான். 
 
பவித்ராவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட நாலு விட்ட நாத்தனார் வீடு சென்னைல இருக்கறதனால பவித்ரா அங்கதான் ஸ்டே பண்ணனும்ன்னு அப்பா ஆல்ரெடி பிக்ஸ் பண்ணி இருந்தாரு. அதனால காலைல சென்னை வந்து இறங்குனதும், அந்த நாத்தனார் ஹஸ்பண்ட் வந்து பவித்ராவ கூட்டிட்டு போனாரு. ஆனா கோமல் பெரம்பூர் ஸ்டேஷன்ல ஏறுனதும், பவித்ராவ வெல்கம் பண்ணி சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறக்கி விட்டதும் பாவம் அந்த நாத்தனார் ஹஸ்பண்ட்டுக்கு தெரியாது. 
 
நாத்தனார் வீட்டுக்கு போன பவித்ரா காலைல 8 மணிக்கே ட்ரெயினிங்குன்னு சொல்லி அங்க இருந்து கிளம்ப, “ஊரு தெரியாத புள்ள.. போய் பஸ் வெச்சு விட்டுட்டு வாங்க”ன்னு நாத்தனார் சொல்ல , பாவம் நாத்தனார் ஹஸ்பண்ட் ஆபிஸ்க்கு 1 மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு பவித்ராவ பஸ் ஏத்திவிட்டாரு. பஸ் ஏறுன பவித்ரா அடுத்த ஸ்டாப்ல இறங்க, அங்க கோமல் பைக்கோட வெயிட் பண்ணிட்டு இருக்க ,பவித்ரா வந்து பைக்ல ஏற , அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் கவுதம் மேனன் படத்துல வர்ற மாதிரி ஒரே ரொமாண்டிக்கா இருந்துச்சு. 
 
பவித்ரா துப்பட்டாவ எடுத்து மூஞ்சிய மறைச்சு கட்டிக்கிட்டு, கோமல கட்டிப்பிடிச்சு உட்கார்ந்துட்டு வர, கோமல் பைக்க அலைபாயுதே மாதவன் பீல்ல ஓட்டிட்டு இருந்தான். முதல்ல ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிட உட்கார்ந்தாங்க. ஆர்டர் பண்ண எதையுமே கோமலும் பாக்கல, பவித்ராவும் பாக்கல. தட்டுல கொண்டு வந்து வெச்சத ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்கிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க. தட்டுல இட்லிக்கு பதிலா இரும்பு துண்ட வெச்சு இருந்தா கூட பாவம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்காது. அப்படி ஒரு லவ் பீல்ல ரெண்டு பேரும் இருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சு ஒரே ஜுஸ் கிளாஸ்ல ரெண்டு ஸ்ட்ரா போட்டு ரெண்டு பேரும் உறிஞ்சி குடிச்சாங்க. அங்க சாப்பிட்டுட்டு இருந்த ஒருத்தர் “எப்பதான் இந்த பார்முலாவ எல்லாம் விட்டு தொலைப்பாங்களோ”ன்னு அவருக்குள்ள அவரே பீல் பண்ணிட்டாரு. 
 
பிரேக் பாஸ்ட் முடிச்சதும், சத்யம் தியேட்டருக்கு போனாங்க. அந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்த ஒரு மொக்க படத்துக்கு கோமல் டிக்கெட் வாங்குனான். ரெண்டு பேரும் உள்ள போனாங்க. ஊர்ல இருக்கற மொக்க தியேட்டர்ல படம் பாத்த பவித்ராவுக்கு சத்யம் தியேட்டர் பிரமிப்பா தெரிஞ்சுது. படம் ஓட ஆரம்பிச்சது. கோமல பவித்ராவும், பவித்ரா கோமலும் பாத்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. கோமல் பவித்ராவோட கைய மட்டும் பிடிச்சிக்கிட்டான். இண்டர்வெல் விட்டது கூட தெரியாம உட்கார்ந்து இருக்க, பாத்ரூம் போக எந்திரிச்ச ஒருத்தர் “தம்பி..இண்டர்வெல் விட்டாச்சு.. கொஞ்ச நேரம் உங்க படத்துக்கு இடைவேளை விடு”ன்னு சொல்லிட்டு போனாரு. கோமல் போய் பாப்கார்ன், கோக் எல்லாம் வாங்கிட்டு வந்தான். 
 
மறுபடியும் படம் ஸ்டார்ட் ஆச்சு, பாப்கார்ன ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஊட்டிக்கிட்டே மறுபடியும் அதே லவ் மூடுக்கு போனாங்க. படம் முடிஞ்சு வெளில வந்ததும் கோமல் அவள லஞ்சுக்கு தலப்பாகட்டி பிரியாணிக்கு கூட்டிட்டு போனான். ரெண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டுட்டு முடிச்சாங்க. பவித்ரா ஏவிஎம். ஸ்டுடியோவ சுத்தி பாக்கணுன்னு ஆசைப்பட, அடுத்த ஷாட்ல ரெண்டு பேரும் ஏவிஎம்ல இருந்தாங்க. கோமல் அவளுக்கு எல்லாத்தையும் சுத்தி காட்டுனான். அங்க ஒரு ஷுட்டிங் நடந்துட்டு இருக்க பவித்ரா அதை பார்க்கும் போது டைரக்டர் ஆக்ஷன், கட் சொல்றதும் , ஹீரோ, ஹீரோயின் எல்லோரும் டைரக்டர்கிட்ட பயத்தோட பேசறதும் அவளுக்கு கோமல் மேல இன்னும் லவ்வ கூட்டுச்சு. தன் ஆளு செம்ம கெத்துன்னு அவளே பீல் பண்ணிட்டா.
 
கட் பண்ணா அடுத்த ஷாட்ல வள்ளுவர் கோட்டத்துல இருந்தாங்க. அதுக்கு அடுத்த ஷாட்ல அம்மா சமாதில இருந்தாங்க, அதுக்கு அடுத்த ஷாட்ல பெசண்ட் நகர் பீச்ல இருந்தாங்க.  பவித்ரா சந்தோஷமா அலைல கால் நனைச்சு விளையாட, கோமல் அத போட்டோ எடுத்தான். விளையாடி முடிச்சதும் ரெண்டு பேரும் ஜாலியா ஒரு போட்ட நோக்கி நடக்க அங்க ஆல்ரெடி இருந்த லவ்வர்ஸ் நடத்திட்டு இருந்த ரொமான்ஸ் எல்லாம் பாத்ததும் பவித்ராவுக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. “டேய்.. என்னடா.. இங்க இத்தனை பேரு பாக்கும்போதே இப்படி எல்லாம் பண்றாங்கன்னு? கோமல்கிட்ட கேட்க, அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காம வா” கோமல் சொல்லிட்டே ஒரு போட் பக்கத்துல அவள உட்கார வெச்சான். 
 
அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் சுண்டல் சாப்பிட்டாங்க. கைரேகை ஜோசியம் பாத்தாங்க. மணல்ல கோமல்குமார், பவித்ரான்னு எழுதி ஹார்ட்டின் போட்டு அம்பு விட்டாங்க. செல்பி எடுத்தாங்க, கைய பிடிச்சுட்டு காதலாகி கசிஞ்சுருகுனாங்க, கேப்ல சன் செட் ஆக லைட்டா இருட்ட ஆரம்பிச்சுது. நாத்தனார்கிட்ட இருந்து பவித்ராவுக்கு போன் வர, ரெண்டு பேரும் காதல்ங்கற மாய உலகத்துல இருந்து வெளில வந்து மவுண்ட் ரோட்ல பைக்ல போயிட்டு இருந்தாங்க. 
 
கோமல் அவள கொண்டு நாத்தனார் வீடு இருக்கற எக்மோர் ஏரியால ட்ராப் பண்ணிட்டு , பிரிய மனமில்லாம பிரிஞ்சு கிளம்பி வந்தான். 
 
(கோமலின் கலைப்பயணம் தொடரும்....) 

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles