கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 29

Wednesday, May 31, 2017

ஹீரோ கீழ விழுந்த அடுத்த செகண்ட் திலீப் மாஸ்டர் மின்னல் வேகத்துல வந்து அவர தூக்குனாரு, கோமல் ஓடி வந்து ஹீரோ தினேஷ பாக்க தினேஷ் வலில துடிச்சுட்டு இருந்தான். கட் பண்ணா ஹாஸ்பிட்டல்ல ஐசியூ வார்டு முன்னால கோமல் டென்ஷனோட நடந்துட்டு இருந்தான். சில சமயம் நாம எடுக்கற படத்துல இருக்கற ட்விஸ்ட்ட விட அந்தப் படத்த எடுக்கறதுல நிறைய ட்விஸ்ட் இருக்கும்.

“இடுப்புல எலும்பு உடைஞ்சு இருக்கறதால தினேஷ் மூணு மாசம் கண்டிப்பா பெட் ரெஸ்ட்ல இருக்கணும்’’னு டாக்டர் சொல்லிட்டாரு. பைட் மாஸ்டரோட அஸிஸ்டெண்ட் பண்ண ஒரு சின்ன தப்புனால மூணு மாசம் மறுபடியும் ஷீட்டிங்குக்கு பிரேக் விழுந்துச்சு. ஏற்கனவே வெந்து நொந்து நூடுல்ஸா இருக்கற கோமல மறுபடியும் தூக்கி ப்ரைடு ரைஸ் வறுக்கற வடச் சட்டில போட்டு வாழ்க்கை வறுத்து எடுத்துச்சு. பவித்ரா அவங்கப்பாவுக்கு பண்ணி குடுத்த சத்தியம் அனகோண்டா பாம்பு மாதிரி கோமல இறுக்கிட்டு இருந்துச்சு. 
 
புரொடியூசர் சதீஷ் வந்து பாத்துட்டு “விடுங்க கோமல். மூணு மாசந்தான! அவரு க்யூர் ஆனதும் ஆரம்பிச்சுடலாம்”னு நம்பிக்கையா சொல்லிட்டு போனாரு. ஊதாத பலூன் மாதிரி துவண்டு கிடந்த கோமலுக்கு அந்த வார்த்தைகள் லைட்டா காத்தடிச்சு அவன் நம்பிக்கைய பலூன் மாதிரி பறக்க விட்டுச்சு. 
 
ஆனா அதே சமயம் சுத்தி இருக்கற சிலர் அந்தப் பலூன்ல ஊசிய வெச்சு குத்தி உடைச்சு விட்டாங்க. “சார். இவ்ளோ பிரச்னை வருது. இந்தப் படத்த எடுக்கணுமா?”ன்னு ஒருத்தர் புரொடியூசர் சதீஷ்கிட்ட போட்டு விட்டாரு. “சார்.. அந்தப் பையன் 6 மாசம் ஆனாலும் எழுந்து நடக்கறதுக்கு சான்ஸே இல்ல. பேசாம இத ட்ராப் பண்ணிட்டு வேற புராஜ்க்ட் ஆரம்பிங்க?”ன்னு இன்னொரு அல்லக்கை அட்வைஸ் குடுத்தாரு. “ஏம்ப்பா.. இப்ப சினிமா இருக்கற நிலைமைல ஒரு நியூ பேஸ வெச்சு இவ்ளோ நாள் ஒரு படத்த எடுத்தா எப்படி விளங்கும். வட்டிக் கணக்கு போட்டா ! வர்ற காசு அதுக்கே பத்தாது?”ன்னு மற்றுமொரு நலம் விரும்பி போற போக்குல ஒரு பொக்ரான் அணுகுண்ட போட்டுட்டு போனாரு. தெளிவான மனநிலைல இருந்த சதீஷ்க்கு ரெண்டு கட்டிங் விட்ட மாதிரி மைண்ட் கொஞ்சம் தடுமாறுச்சு. 
 
சினிமால இருக்கற பிரச்னைல இது ஒரு மிகப் பெரிய பிரச்னை. ஒரு புரொடியூசர சுத்தி இருக்கற அவரோட நலம் விரும்பிகள் அவருக்கு நல்லது பண்றதா நினைச்சு சொல்ற அட்வைஸே அந்த புரொடியூசர நடுத்தெருவுல நிக்க வெச்சிடும். யார் என்ன சொன்னாலும் நம்ம பண்ற புராஜெக்ட் மேல நம்பிக்கை வெச்சு வேலை பாத்தா கண்டிப்பா ஜெயிக்கலாம். ஆனா அத நிறைய பேர் இங்க யோசிக்கறதே இல்ல. சதீஷும் அதே நிலைமைலதான் இப்ப இருந்தாரு. ஆளாளுக்கு குழப்பி விட்டதுல கன்ப்யூஸ் ஆகி அடுத்த நாள் கோமல மீட்டிங் கூப்பிட்டாரு சதீஷ். எதுக்கு இந்த மீட்டிங்ன்னு தெரியாம குழப்பத்துல நைட் புல்லா தூங்காம கிடந்தான் கோமல். 
  
அடுத்த நாள் காலைல கோமல் சதீஷ அவரோட ஆபிஸ்ல போய் மீட் பண்ணான். அவன்கிட்ட “கோமல்.. எனக்கென்னவோ இது சரியா வராதுன்னு தோணுது. எல்லாரும் அததான் பீல் பண்றாங்க. செட்டு போட்டோம் மழை வந்து டேமேஜ் ஆயிச்சு. இப்ப என்னடான்னா ஹீரோக்கு இப்படி ஆயிடுச்சு. ஒரு மாதிரி நெகட்டிவா பீல் பண்றாங்க . ஸோ இத அப்படியே ட்ராப் பண்ணிடலாமான்னு யோசிக்கறன்” சதீஷ் தயக்கமா சொன்னாரு. கோமலுக்கு அந்த வார்த்தைகள் இடி மாதிரி இறங்குனாலும் அவன் அத வெளிக்காட்டிக்காம “அன்னக்கிளில இளையராஜா சார் அறிமுகம் ஆகும் போது எவ்ளோ தடங்கல் வந்துதுன்னு ஊருக்கே தெரியும். அப்ப பஞ்சு அருணாசலம் சார் மட்டும் அவர் மேல நம்பிக்கை வெச்சு அந்த வாய்ப்ப குடுத்தாரு. அவரும் உங்கள மாதிரி நெகடிவ்வா நினைச்சு இருந்தா இளையராஜா சாருக்கு அந்த வாய்ப்பு மட்டுந்தான் கிடைக்காம போய் இருக்கும். ஆனா அவரு கண்டிப்பா வேற ஒரு வாய்ப்புல அவர நிரூபிச்சு இருப்பாரு. ஆனா இளையராஜாங்கற இசை மேதைய அறிமுகப்படுத்துனது பஞ்சு அருணாசலம்ங்கற பெருமையும், வரலாறும் பஞ்சு சாருக்கு கிடைக்காம போய் இருக்கும்” கோமல் நிதானமா சொல்லி முடிச்சான். 
 
சதீஷ்க்கு அந்த வார்த்தைல இருந்த நியாயம் இந்த மே மாசம் சென்னைல அடிக்கற வெயில் மாதிரி சுளீர்ன்னு உறைச்சுது. “நீங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு கோமல்.. நான் கொஞ்சம் யோசிக்கணும். யோசிச்சுட்டு நைட்டு கால் பண்றன்” சதீஷ் சொல்ல, கோமல் அங்க இருந்து கிளம்பி வந்தான். 
 
கோமல் வெளிய வந்ததும் எதிர்ல இருந்த டீக்கடைல இருந்து “என்ன சொல்லப் போகிறாய்.. என்ன சொல்லப் போகிறாய்”ன்னு தல பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. கோமலுக்கு அது சிச்சுவேஷன் சாங் மாதிரி பீல் ஆச்சு. சதீஷ் என்ன சொல்ல போகிறார்?ன்னு கோமல் யோசிச்சான். அன்னிக்கு நைட் சதீஷ்கிட்ட இருந்து போன் வர்ற வரைக்கும் கோமல் கிட்டத்தட்ட அலியாபட் கிட்ட லவ்வ சொல்லிட்டு ரிசல்ட்டுக்கு வெயிட் பண்றவன் மாதிரியே ஒரு வித அவஸ்தைல இருந்தான். போன புல் சார்ஜ் போட்டு கையிலயே வெச்சு இருந்தான். நைட் 10 மணிக்கு அந்த அழைப்பு வந்துச்சு. ரிங் ஆன அடுத்த செகண்ட் கோமல் அட்டெண்ட் பண்ணான். எதிர்முனைல “கோமல் இன்னும் 10 வருஷம் ஆனாலும் சரி.. நான் இந்த படத்த எடுத்து ரிலீஸ் பண்றன். நீங்க நாளைல இருந்து வொர்க்க மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுங்க” சதீஷ் சொல்லி முடிச்சதும் கோமல் அலியா பட்டே லவ்வ ஓக்கே சொன்ன மாதிரி சந்தோசத்துல மிதந்தான். 
 
தினேஷ் கம்ப்ளீட்டா ரெக்கவர் ஆகி வர்றதுக்கு 3 மாசம் இருக்கு. இந்த மூணு மாசமும் நாம சும்மா இருக்க கூடாதுன்னு கோமல் ஒரு ப்ளான் பண்ணான். முதல் வேலையா அது வரைக்கும் எடுத்து இருந்த சீன் எல்லாம் பக்காவா எடிட் பண்ணி டம்மியா பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு அத அவன் டீமோட உட்கார்ந்து பார்த்தான். ஒரு சீன எழுதுனதுக்கு அப்புறம் அத ஸ்கிரிப்ட் பேப்பர்ல படிக்கும் போது இருக்கற பீலுக்கும், அத நடிகர்கள் நடிச்சு ஸ்கிரீன்ல பாக்கற பீலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சில சீன்ஸ் பேப்பர்ல சுமாரா இருக்கும் .ஆனா ஸ்கிரீன்ல செமையா இருக்கும். சில சீன்ஸ் ஸ்கிரிப்ட் பேப்பர்ல செமையா இருக்கு. ஆனா ஸ்கிரீன்ல ரொம்ப சுமாரா இருக்கும். கோமல் அத உட்கார்ந்து அனலைஸ் பண்ணான். 
 
அவனோட ஸ்கிரிப்ட் பேப்பர்ல நல்லா இருந்த சீன்ஸ்ல, சில சீன்ஸ் ஸ்கிரீன்ல ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆகி இருந்துச்சு. சில சீன்ஸ் அவன் எதிர்பார்த்த மாதிரி ஸ்கிரீன்ல வரல. கோமல் அத உட்கார்ந்து தன் டீமோட டிஸ்கஸ் பண்ணான். எந்த சீன்ல எது ப்ளஸா இருந்துச்சு. எந்த ஆர்ட்டிஸ்ட் பர்மாபன்ஸ் சீன எலிவேட் பண்ணுதுன்னு பாத்தான். அதுக்கு தகுந்த மாதிரி இனி ஷுட் பண்ண போற சீன்ஸ்ல சில கரெக்ஷன்ஸ பண்ணான். அந்த மூணு மாசத்த தடையா நினைக்காம தன்னோட ஸ்கிரிப்ட்ட மெருகேத்த கிடைச்ச டைமா கோமல் பாத்தான். கட் பண்ணா எக்ஸ்பிரஸ் வேகத்துல மூணு மாசம் முடிஞ்சு இருந்துது. தினேஷ் முழுமையா ரெக்கவர் ஆகி ஷீட்டிங் போக தயாரா ஜிம் போக ஆரம்பிச்சாரு. கோமல் அடுத்த ஷெட்யூலுக்கான ப்ளானிங்க செய்ய ஆரம்பிச்சான். 
 
அடுத்த ஒரு வாரத்துல மறுபடியும் ஷீட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. கோமல் முன்ன விட வேகமா, விவேகமா வேலை பார்த்தான். 28 நாள் போக வேண்டிய ஷீட்டிங் 23 நாள்ல முடிஞ்சுது. கடைசி நாள் ஷீட்டிங்ல பூசணிக்காய் உடைச்சாங்க. படத்தோட ஷீட்டிங் முடிஞ்சுதுன்னு ட்விட்டர், பேஸ்புக்ல எல்லாம் கோமல் தன் டீமோட போஸ் குடுத்தான். கட் பண்ணி ஓப்பன் பண்ணா படத்தோட போஸ்ட் புரொக்டக்ஷன் வேலைகள் ஸ்டார்ட் ஆச்சு. 
 
எடிட்டிங் வேலை பக்காவா முடிஞ்சதும் டப்பிங், பேக்ரவுண்ட் மியூசிக், சவுண்ட் எபெக்ட்ஸ்ன்னு எல்லா வேலையும் பரபரப்பா ஸ்டார்ட் ஆச்சு. கோமல் நிக்க நேரம் இல்லாம ஓட ஆரம்பிச்சான். ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கறத 72 மணி நேரமா மாத்தி வெச்சாக் கூட கோமலுக்கு நேரம் பத்தாதுங்கற அளவுக்கு பிஸியா இருந்தான். இப்படி பிஸியா ஓட ஓட படத்தோட வேலைகள் முடிஞ்சு படம் பர்ஸ்ட் காப்பி ரெடி ஆயிடுச்சு. ஆனா அதே சமயம் கோமலுக்கும், பவித்ராவுக்கும் நடுவுல ஒரு மெல்லிய கோடு மாதிரி சின்ன விரிசல் விழுந்துச்சு. கோட்டுக்கு இந்தப் பக்கம் கோமலும், கோட்டுக்கு அந்தப் பக்கம் பவித்ராவும் கோபமா முறுக்கிட்டு நின்னாங்க.
 
பிரச்னை என்னன்னா, படத்தோட போஸ்ட் புரொடக்ஷன் வேலை பிஸில கோமல் பவித்ராகிட்ட பேசற டைம் படிப்படியா குறைஞ்சுட்டே வந்து ஒரு கட்டத்துல ஜீரோவ தொட்டுச்சு. பவித்ரா பத்ரகாளியா மாறி கோமல்கிட்ட சண்டை போட ஆரம்பிச்சா. ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் வேலைல சேது விக்ரம் மாதிரி திரிஞ்ச கோமலுக்கு பவித்ராவோட டார்ச்சர் இன்னும் கடுப்பேத்துச்சு. பொண்ணுங்கள பொறுத்த வரைக்கும் பசங்க கொதிக்கற பாய்லர்ல தவறி விழுந்து தத்தளிச்சுட்டு இருந்தாக் கூட கேர்ள் ப்ரண்ட் கூட “10 நிமிஷம் போன்ல சாப்பிட்டியா.. பாத்ரூம் போனியா?”ன்னு கேட்டுடணும். கேட்கல, அதுக்கு அப்புறம் அவங்களோட அவதாரங்கள் 10 அந்நியன விட பயங்கரமா இருக்கும். இது புரியாம கோமல் வேலை, வேலைன்னு அதுலயே மூழ்கி கிடந்து பவித்ராகிட்ட வாங்கி கட்டிக்க ஆரம்பிச்சான். “நான் இவ்ளோ தூரம் கஷ்டப்படறதே அவளுக்காகத்தான்,  ஆனா அவளே என்ன புரிஞ்சுக்க மாட்டங்கறா”ன்னு கோமல் கொந்தளிச்சான். ரெண்டு பேரும் போன்ல இதப் பத்தி பேச ஆரம்பிச்சு போன் வெடிச்சு தெறிக்கற அளவுக்கு கோபமா வாய்க்கு பிரேக் போடாம பேசி பேசி பிரேக் அப் அப்படிங்கற நிலைமைல வந்து நின்னாங்க!. 

(கோமலின் கலைப்பயணம் தொடரும்)

- சந்துரு

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles