கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 22

Wednesday, February 1, 2017

கோமலும் கொரியன் பேய்களும் எபிசோட் ஒரு மரண யோக எமகண்டத்துல பயங்கரமா ஸ்டார்ட் ஆச்சு. கிம் ஜீங் ஜா இதுவரைக்கும் டோரண்ட்ல வராத, கோடம்பாக்கம் காப்பி அடிக்காத பேய் பட கலக்‌ஷனை கோமலுக்கு தந்து எபிசோடுக்கு ரிப்பன் வெட்டி வச்சான். கோமல் பயபக்தியோட அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கிட்டு வந்து,  ரூம்ல சாமி பக்கத்துல வச்சு கும்பிட்டான்.

“சாமி சாமி.. இந்த ஹார்ட் டிஸ்க்ல இருக்கற படத்துல இருந்து ஒரு அருமையான பேய் கதை எனக்கு கிடைச்சு, நான் அத படமா பண்ணி அது பேய் ஹிட் ஆகி ராட்சச கலக்‌ஷன் கொட்டி நான் டெரரான டைரக்டர் ஆகணும்”னு வேண்டிக்கிட்டு பயபக்தியா திருநீறு எடுத்து பூசிக்கிட்டான். கோமல் வேண்டுனதை பார்த்து, போட்டோல இருந்த சாமி காண்டானது கோமலுக்கு தெரியாது. 

கோமல் ஹார்ட் டிஸ்க்க எடுத்து மறுபடியும் பேய்த்தனமா படம் பார்க்க ஆரம்பிச்சான். அந்த சீன்ல கட் பண்ணி 15 நாட்களுக்கு பிறகுன்னு ஒரு கார்டு போட்டு ஓப்பன் பண்ணா..  ஒரு கோயில்ல கோமல் சங்கிலியால கட்டப்பட்டு வெறித்தனமா நின்னுட்டு இருந்தான். மொட்ட ராஜேந்திரனுக்கு நெத்தில பட்டை போட்டா எப்படி இருப்பாரோ, அந்த மாதிரி கெட்டப்ல எதிர்ல சாமியார் ஒருத்தர் கையில சாட்டைய வச்சுகிட்டு கொலைவெறியா நின்னுட்டு இருந்தாரு. கோமல் அவர பார்க்க,  சாட்டைய ஓங்கி சுளீர்ன்னு கோமல் முதுகுல பொளீர்ன்னு ஒரு அடிச்சு “இந்த பையன விட்டு போவியா மாட்டியா?” சாமியார் கோபமா கேட்க கோமல் “ஜீ வாச்சுவா” அப்படின்னு கொரியன் பாஷைல ஏதோ சொன்னான்.  

அப்படியே கட் பண்ணி, 2 நாட்களுக்கு முன் அப்படின்னு இன்னொரு கார்டு போட்டு ப்ளாஷ்பேக் போனா, கோமல் ரூம்ல சீன் ஓப்பன் ஆச்சு. நடுரூம்ல கண்ணெல்லாம் சிவந்து தலை எல்லாம் கலைஞ்சு கோமல் டெரரா குந்தவெச்சு உட்கார்ந்து இருந்தான். சுத்தி இருந்த ரூம் மேட்ஸ் அவனை பார்க்க.. கோமல் அவன் பாட்டுக்கு “சூவானா… திபொக்கொ.. ஆ ச்சூபா.. சூஸ்ஸ் சுஸ் வா” அப்படின்னு கொரிய பாஷைல கத்திட்டு இருந்தான். ரூம்மேட்ஸ் மிரண்டுபோய் கோமல்கிட்ட பேச முயற்சி பண்ண, கோமல் அவங்ககிட்ட திரும்பவும் கொரிய பாஷைல ஏதோ சொன்னான். 

கடந்த 15 நாளா கோமல் ராத்திரி பகல் பார்க்காம கண்ணு முழிச்சு கொரியன் பேய் படங்களா பார்த்து பார்த்து, கிட்டத்தட்ட கொரியன் பேயாவே மாறிட்டான்னு சம்பவத்த எடிட்டர் கிஷோர் திலீப் மாஸ்டருக்கு போன்ல விளக்கி சொல்லிட்டு இருந்தான். “நான் கால் பண்ணப்ப கூட அவன் எதோ புரியாத பாஷைல  சந்திரமுகி மாதிரி பேசுனாண்டி, எனக்கு பயமா இருக்கு”ன்னு பவித்ரா தன் பங்குக்கு பிரண்ட்ஸ்கிட்ட புலம்பிட்டு இருந்தா. விஷயம் கேள்விப்பட்டு அருண் தன்னோட மூணு கொரியன் ரூம் மேட்ஸ கூட்டிக்கிட்டு வந்து கோமலை பார்த்தான். 

கோமல் பேசுனத கேட்டு கிம் ஜூங் மிரண்டுபோய் “இது கமால் குமால் இல்லே.. சியோ ஜீம் ஜா, கொரியால லீலுயான் வில்லேஜ்ல இருந்தவரு. அவருதான் இப்ப கமால் குமால் உடம்புல கோஸ்ட்டா வந்து இருக்காரு.. ஹிஸ் வொய்ப்ப சம் ரவுடிஸ் ரேப் பண்ணி கில் பன்ண்ட்டாங்க.. ஹீ வாண்ட்ஸ் டூ டேக் ரிவஞ்ச்” அப்படின்னு சப் டைட்டில் பண்ணி சம்பவத்த சொன்னான். எல்லாரும் மிரண்டுபோய் கோமலை பார்த்தாங்க. “உருவம் கோமல், உள்ள இருக்கறது சியோ ஜீம் ஜா. என்ன கொடுமை சரவணன் இது”ன்னு பீல் பண்ணிட்டே சியோ ஜீம் ஜா மேட்டர, தன்னோட ஜியோ சிம்ல இருந்து ப்ரீயா கால் பண்ணி விக்கிக்கு கிஷோர் சொன்னான். 

எல்லாரும் வந்து, பார்த்து, பேசி, ஒரு முடிவுக்கு வந்து, கோமல அந்த சாமியார்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க. அங்க சாட்டைல அடி வாங்கி வாங்கி கோமல் ரத்த வெள்ளத்துல கிடந்தான். அப்பவும் அவன் வாய்ல இருந்து கொரியன் பாஷைதான் வந்துச்சு. “இன்னும் அவன் உடம்புல இருந்து அந்த ஜியோ சிம்காரன் போகல”ன்னு சாமியார் சொன்னாரு. 

ஒவ்வொரு டைம் அடிக்கும்போதும் ’இந்த பையன் உடம்ப விட்டு போவியா மாட்டியா’ன்னு அவர் தமிழ்ல கேட்டது, பாவம் உள்ள இருந்த சியோ ஜீம் ஜாவுக்கு புரியலங்கறது அந்த சாமியாருக்கு புரியல. இந்த நிலைமைல என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் யோசிக்கும்போது, திலீப் மாஸ்டர் ஒரு முடிவெடுத்து கோமல ஒரு மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போனாரு. 

கோமலை ஆராய்ச்சி பண்ணி பார்த்தார் அந்த டாக்டர். “அன்னியன் பட வியாதியும், சந்திரமுகி பட வியாதியும் ஒண்ணா வந்து இருக்குது. பேய்ப் படங்கள பார்த்து பார்த்து ஆழ்மனசுல அந்த கேரக்டர்ஸ் ஆழப்பதிஞ்சுட்டதனால, கோமல் தன்ன ஒரு கொரியன் பேயா பீல் பண்ணிக்கறாரு. அதனாலதான் இப்படி பேசிட்டு இருக்காரு”ன்னும் ரிப்போர்ட் சொன்னாரு. படத்துல வரவேண்டிய வியாதி எல்லாம் படம் எடுக்கறவனுக்கு வந்துடுச்சேன்னு திலீப் மாஸ்டர் பீல் பண்ணாரு. 

கோமலை ஒரு வாரத்துல குணப்படுத்தறதா சொல்லி ட்ரீட்மெண்ட்ட ஆரம்பிச்சாரு டாக்டர். சொன்ன மாதிரியே ஒரு வாரத்துல க்யூர் பண்ணாரு. கோமல் பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்தான். ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பும்போது, கொஞ்சம் மாத்திரையும் இனிமே வாழ்க்கைல நீ பேய்ப்படமே பார்க்கக்கூடாதுன்னு எச்சரிக்கையும் குடுத்து கோமல அனுப்பி வச்சாரு டாக்டர். 

நடந்த சம்பவத்த கோமல்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, அத கதையா பண்ணலாமான்னு சில அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் தங்களுக்குள்ள ஒரு ப்ளான போட்டுட்டு இருக்கும்போதே, கோமலோட கதை எழுதற எபிசோட் மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் ஆச்சு. ’பேய் படமே பார்க்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு, இதுல எங்க போய் பேய்ப் படம் எடுக்கறது. பேசாம வேற ஜானர் படம் பண்ணு’ன்னு எல்லாரும் அட்வைஸ் பண்ணத கேட்டு, கோமல் வேற ஜானர்ல கதை பண்ணலான்னு முடிவு பண்ணான். 

காமெடி, ஆக்‌ஷன், லவ் இந்த மூணுல எந்த ஜானர்ல படம் பண்றதுன்னு மறுபடியும் யோசிக்க ஆளாளுக்கு ஒண்ணு சொன்னாங்க. பவித்ரா கால் பண்ணி, ’நீ பேசாம லவ் ஸ்டோரி எழுது, கெளதம் மேனனுக்கு அப்புறம் தமிழ்சினிமால லவ் மூவிஸ் உன்னாலதான் பண்ண முடியும்’னு அவ பங்குக்கு ஐடியா குடுக்க.. கோமல் அந்த செகண்ட் ’விண்ணை தாண்டி வருவாயா’ படத்த தாண்டி பேர் வர்ற மாதிரி ஒரு காதல் கதைய எழுதி அத படமா பண்ணம்னு முடிவு பண்ணான். முடிவு பண்ண அடுத்த செகண்ட், லவ் ஸ்டோரியா தேட ஆரம்பிச்சான். “மை சஸ்ஸி கேர்ள் பாரு, 500 டேஸ் ஆப் சம்மர் பாரு, பிபோர் சன்ரைஸ் பாரு, தி நோட்புக் பாரு”ன்னு ஆளாளுக்கு மறுபடியும் ரெப்ரன்ஸ் சொல்ல ஆரம்பிச்சாங்க. கோமல் ஹார்ட் டிஸ்க்ல இருந்த பேய்ங்கள எல்லாம் பார்மேட் பண்ணி அழிச்சுட்டு, காதலை ஹார்ட் டிஸ்க்ல சேகரிக்க ஆரம்பிச்சான். 4 ஹார்ட் டிஸ்க்ல 8 டிபிக்கு லவ் மூவிஸ், புல்லா லவ் மூவிஸ். ’ஹார்ட் டிஸ்க்கே லவ் பீல்ல ஹார்ட்டீன் சேப்ல மாறிடும் போல’ன்னு சொல்ற அளவுக்கு லவ்வ 1 எம்.பி கூட ஸ்பேஸ் விடாம ஸ்டோர் பண்ணான். 

அடுத்த ஒரு மாசம், கோமல் காதல்லதான் பல்லு விளக்குனான். காதலதான் காபியா குடிச்சான். காதல்லதான் குளிச்சான். காதலதான் பிரேக் பாஸ்ட், லன்ச், டின்னரா சாப்பிட்டான். காதலை மட்டுமே கண்ல பாத்தான். இப்ப அவன் உலகம் உருண்டை வடிவத்துல இருந்து ஹார்ட்டீன் சேப்புக்கு மாறிடுச்சு. பவித்ராவுக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ஐ லவ் யூ மெசேஜ்ஸ், முத்தங்கள்னு காதலாகி கசிஞ்சு உருகுனான். 

அந்த பீல்லயே உட்கார்ந்து கதைய எழுத ஆரம்பிச்சான். பார்த்த படங்கள்ள இருந்து எதையும் சுடாம, அந்த படங்களோட பீல மட்டும் எடுத்துக்கிட்டு தனக்கு புடிச்ச மாதிரி எழுதுனான். உண்மையாவே கதை நல்லா பார்ம் ஆச்சு. 2 மாசத்துல கதைய மொத்தமா டயலாக்கோட எழுதி முடிச்சுட்டு, முதல்ல பவித்ராகிட்ட சொன்னான். அவ கதைய கேட்டுட்டு “சூப்பரா இருக்குடா… நிறைய சீன்ஸ் நீ நம்ம லவ்ல இருந்து எடுத்து வெச்சிருக்க.. ஒழுங்கா ஸ்டோரின்னு என் பேரும் போடு”ன்னு சொல்ல கோமலுக்கு தன் கதை மேல நம்பிக்கை வந்துச்சு. 

ஸ்கிரிப்ட எடுத்துட்டு போய் திலீப் மாஸ்டர்கிட்ட குடுத்து படிக்க சொன்னான். அவரு படிச்சுட்டு “டேய் .. செமையா இருக்கு.. கன்பார்ம் ஹிட்.. உனக்கு ரொமான்ஸ் ஜானர் செமையா வருது.. தேவையில்லாம பேய்ப்படம் பண்றன்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டியேடா”ன்னு திட்டுனாரு. கோமல் அவருகிட்ட புரொடியூசர் ரெபர் பண்ண சொல்லி கேட்டான். உடனே ஒரு புரொடியூசர்கிட்ட மாஸ்டர் பேச, அவரு 15 நாள் கழிச்சு அப்பாயின்மெண்ட் குடுத்தாரு. கோமல் தன்னோட முதல் மீட்டிங்குக்கு தயார் ஆனான். 

ஒரு கதை பண்றத விட, அந்த கதைய ஒரு புரொடியூசரையோ இல்ல ஹீரோவையோ புடிச்சு, அவங்களுக்கு அத சொல்லி ஓக்கே பண்றது இருக்கே! அது பல்லுல கடிச்சு பரங்கிமலைய இழுக்கற மாதிரி படா பேஜாரான வேலை. சாதாரணமா ஒரு மீட்டிங் வாங்கறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடும். கோமலுக்கு நாக்கு, கிட்னி , ஹார்ட் எல்லாம் வெளில தள்ளுற அளவுக்கு இனி வர்ற நாட்கள் இருக்க போகுதுங்கற விஷயம் அப்ப அவனுக்கு தெரியாது. அவன் அந்த புரொடியூசர் மீட்டிங்க எதிர்நோக்கி சந்தோஷமா  வெயிட் பண்ணிட்டு இருந்தான். 15 நாட்களுக்கு பிறகு..

கோமலின் கலைப்பயணம் தொடரும்…

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles