கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 23

Thursday, February 16, 2017

ஆய கலைகள்ல 65 -வது கலையா ஒரு புரொடியூசருக்கு கதை சொல்றதையும் சேர்க்கணும். ஏன்னா ஒரு நல்ல கதைய சொல்லும்போது கேவலமா சொல்லி மொக்க வாங்கறவங்களும் உண்டு; ஒரு மொக்க கதைய சொல்லும்போது மிரட்டலா சொல்லி சான்ஸ் வாங்கறவங்களும் உண்டு.

சின்ன வயசுல எங்க ஆயா எல்லாம் அசால்ட்டா கதை சொல்லி இருக்கு, இத போய் ஆய கலைகள் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கறீங்களேன்னு நினைக்காதீங்க. கதை சொல்றது உண்மையிலயே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ரெண்டரை மணி நேரம் நாம படமா பார்க்கறத ஒரு புரொடியூசர்கிட்ட ரெண்டு மணி நேரம் வாய்லயே சொல்லி அந்த பீலுக்கு அவங்கள கூட்டிட்டு போகணும். சிம்பிளா சொல்லனும்னா, வாய்லயே வடை சுட்டு அத அவங்கள டேஸ்ட் பண்ண வெக்கணும். 

இந்த இடத்துல கதை கேக்கற புரொடியூசர்ஸ் பத்தி ஒரு சின்ன முன் அறிமுகம் குடுத்துடறேன். தமிழ் சினிமாவ பொறுத்தவரைக்கும் ஸ்கிரிப்ட படிச்சு ஓக்கே பண்ற புரொடியூசர்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி. எல்லாரும் கதைய கேட்டுதான் செலக்ட் பண்ணுவாங்க. இதுல முதல் கேட்டகிரி புரொடியூசர்ஸ் போன் எல்லாம் சைலண்ட் மோட்ல போட்டுட்டு டீ , காபி எல்லாம் குடுத்து உபசரிச்சு ரொம்ப மரியாதையா கதை கேப்பாங்க. இவங்ககிட்ட நாம பொறுமையா ரெண்டு மணி நேரம் டென்ஷன் இல்லாம கதை சொல்லலாம். 

செகண்ட் கேட்டகிரி புரொடியூசர்ஸ் இருக்காங்களே, அவங்ககிட்ட கதை சொல்றதுதான் கடவுள் நமக்கு குடுக்கறதுலயே மிகப்பெரிய கஷ்டம். ”சார் ஓப்பன் பண்ணா அப்படி”ன்னு நாம கதைய ஆரம்பிக்கும்போதே, அவங்க சிப்ஸ், முறுக்குன்னு எதையாவது ஓப்பன் பண்ணி வாயில போட்டு மெல்லுவாங்க. அதை பார்க்கும்போது நம்ம வாய்ல கதை வர்றதுக்கு பதிலா எச்சில் ஊறும். அதையும் பொறுத்துக்கிட்டு கதைய சொல்ல ஆரம்பிக்கும்போதே போன் அடிக்கும். எடுத்து மச்சினிக்கு நலங்கு வெக்கற மேட்டர்ல இருந்து சின்னம்மா கூவாத்தூர் ரிசார்ட்டுக்கு போனது வரைக்கும் பேசிட்டு போன் கட் பண்ணிட்டு, ”ம்ம்ம்..சொல்லுங்க” அப்படின்னு சொல்லுவாங்க , நாம மறுபடியும் கதைய ஆரம்பிச்சு ஒரு ப்ளோவுல போகும்போது மறுபடியும் போன் அடிக்கும்.

இப்படி ரெண்டு மணி நேரம் கதை சொல்றதுக்குள்ள, ஒரு ரெண்டாயிரம் போன் அட்டெண்ட் பேசிட்டு நடுவுல நம்ம கதைய கேப்பாங்க. ரெண்டு மணி நேரத்துல சொல்ற கதைய நாம சொல்லி முடிக்கும்போது ஏழு, எட்டு மணி நேரம் ஆகி இருக்கும். இத்தனைக்கும் நடுவுல நாம சொல்ற கதைய கேட்டு, அவங்களுக்கு புரிஞ்சு, அந்த கதைய புடிக்கணுன்னா நாம போன ஜென்மத்துல பொறந்துதுல இருந்தே புண்ணியமா பண்ணி இருக்கணும். 

சரி இவங்கதான் இப்படின்னா இன்னும் சில பேர் இருக்காங்க. கதை கேக்க ஆரம்பிக்கும்போது தூங்கி, இண்டர்வெல்ல எந்திரிச்சு, டீ குடிச்சுட்டு மறுபடியும் தூங்கிடுவாங்க. அவங்க தூங்குனாலும் நாம நிறுத்தாம கதை சொல்லணும். நிறுத்துனா கண்ணு முழிச்சு, ”ஏன் .. நிறுத்துட்டீங்க.. கண்டினீயூ” அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் கண்ண மூடிடுவாங்க. நம்ம சொல்ற கதைதான் அவங்களுக்கு தாலாட்டு போல! , ஒரு கதை சொல்லும்போது எதிர்ல கேக்கறவங்க குடுக்கற ரெஸ்பான்ஸ், ரியாக்‌ஷன்ஸ் வெச்சுதான் நமக்கு எனர்ஜியே வரும். ஒரு காமெடி சீன் சொல்லி அவங்க சிரிச்சா, நாம இன்னும் பெட்டரா கதை சொல்லுவோம். எந்த ரியாக்‌ஷனும் காட்டாம அப்படியே நரசிம்மராவ் மாதிரி உட்கார்ந்து இருந்தா, சொல்றத கூட ஒழுங்கா சொல்ல முடியாம சொதப்பிடுவோம். 

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கதை சொன்னா அதை அவங்க புரிஞ்சுக்கறது இருக்கே! அய்யோ ராமா.. அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க? நீங்க அலைபாயுதே மாதிரி ஒரு கதை சொன்னா, ”நல்லா இருக்கு.. ஆனா இதுல தங்கச்சி செண்டிமெண்டே இல்லையே”ம்பாங்க. நீங்க பாசமலர் மாதிரி கதை சொன்னா, ”இதுல பாகிஸ்தான் தீவிரவாதியே வரலயே”ன்னு சொல்லுவாங்க. இதுக்கு நடுவுல அவங்களோட கருத்துக்கள வேற சொல்லி, நீங்க ஏற்கனவே பண்ணி வெச்சிருக்கற லட்ட பூந்தியாக்கி உங்கள கன்ப்யூஸ் ஆக்கி கலவரத்த உண்டு பண்ணிடுவாங்க. நாம சொல்ற கதையையும் அதோட பீலிங்கையும் அப்படியே புரிஞ்சுக்கிட்டு செலக்ட் பண்றது சில புரொடியூசர்ஸ் மட்டுந்தான். 

இப்படி கடினமான சவால்கள் நிறைந்த ஸ்டோரி நரேஷனுக்கு கோமல் முழுமையா தயார் ஆகி நின்னான். திலீப் மாஸ்டர் மூலமா ஒரு புரொடியூசர்கிட்ட கோமல் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டான். அவரும் அடுத்த வாரம் மீட் பண்ணலான்னு சொல்ல, கோமல் அந்த ஒரு வாரமும் கனவுலயே மிதந்துட்டு இருந்தான். 

இன்செப்ஷன் ஸ்டைல்ல கோமலோட கனவுக்குள்ள நுழைஞ்சு பார்த்தப்ப, அந்த கனவு பாகுபலிய விட பிரம்ம்மாண்டாமா இருந்துது. கோமல் போய் அந்த புரொடியூசர்கிட்ட கதை சொல்றான், அவரு உடனே எந்திரிச்சு கட்டிபிடிச்சு அஞ்சு லட்சத்த அட்வான்ஸா குடுக்கறாரு. அடுத்த நாளே படம் பூஜை. சிவகார்த்திகேயன் ஹீரோ , அலியாபட் ஹீரோயின்னு பெரிய காம்பினேஷன்ல படம் ஸ்டார்ட் ஆகுது. கதை ரொம்ப புடிச்சு போனதனால, சிவகார்த்திகேயன் வீட்டுக்கு கூட போகாம ஆபிஸ்லயே தங்கி நடிச்சு குடுக்கறாரு. அஞ்சே மாசத்துல படம் முடிஞ்சு ரிலீஸ். படம் பம்பர் ஹிட். மொத்த உலகமும் யார்றா இந்த கோமல்னு திரும்பி பார்க்குது. 

ரஜினி, கமல் , அர்னால்டு , பிராட் பிட் எல்லாம் கோமல் படத்துல நடிக்க விருப்பம் தெரிவிக்கறாங்க. 100வது நாள் விழாவுல, ஐ லவ் யூ கோமல்ன்னு ஸ்டேஜ்லயே புரபோஸ் பண்ணுது அலியா பட். அங்க கண்கலங்க கோமல் மைக் புடிச்சு “இன்னிக்கு நீங்க எல்லாரும் என்னை தூக்கி வெச்சு கொண்டாடுலாம்.. ஆனா இன்னிக்கு இங்க நான் இருக்கன்னா, அதுக்கு காரணம் என் பவித்ரா”ன்னு எமோஷனலா பேச.. கூட்டத்துல இருக்கற பவித்ரா கைய காட்ட, எல்லாரும் திரும்பி பார்க்கறாங்க, அங்க பவித்ரா கண்ல கண்ணீரோட ஒரு ஓரமா நின்னுட்டு இருக்கா . மொத்தமும் கூட்டமும் கைதட்டுது. 

அலியா பட் லவ் பெயிலியர்ல அழுதுக்கிட்டே நிக்குது. சிவகார்த்திகேயன் அங்கயே கோமலுக்கு ஆடி கார பரிசா குடுக்கறாரு. கோமல் அந்த கார்ல பவித்ரா கூட்டிட்டுப்போய் அவங்கப்பாவ பாக்கறான். அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் முடியுது. கட் பண்ணா, ஸ்ட்ரெயிட்டா பர்ஸ்ட் நைட் ரூம். பவித்ரா பால் சொம்போட உள்ள வர்றா, கோமல் சந்தோஷமா எந்திரிச்சு அவள கட்டிபிடிக்க போகும்போது அந்த கனவு அப்படியே கட் ஆகி கோமல் கண்ணு முழிக்கிறான். 

ச்ச்சை ..இந்த பர்ஸ்ட் நைட் சீன் முடிஞ்சு கனவு கலைஞ்சு இருக்கக்கூடாதான்னு நீங்க பீல் பண்ற மாதிரியே கோமலும் பீல் பண்ணான். இப்படி கனவுகளோடயே அந்த ஒரு வாரமும் ஓடுச்சு. ஒரு வாரத்துக்கு அப்புறம், சொன்ன தேதில கோமல் புரொடியூசருக்கு கால் பண்ணான். “கொஞ்சம் வேலையா இருக்கன். வர்ற சண்டே மீட் பண்ணலாம்”ன்னு சொல்லி போன வெச்சுட்டாரு. கோமலுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்தாலும், இன்னும் ஒரு வாரந்தான வெயிட் பண்ணுவோம்ன்னு வெயிட் பண்ணான். மறுபடியும் ஒரு வாரம் கனவுலயே போச்சு. 

அடுத்த சண்டே கால் பண்ணா, அந்த புரொடியூசர் நெக்ஸ்ட் சண்டே அப்படின்னு சொன்னாரு. இப்படியே 5 சண்டே போயிடுச்சு. விட்டா கோமலுக்கும் அந்த புரொடியூசருக்கும் சண்டை வரும்ங்கற நிலைமைல, ஒரு சண்டே அவரு கூப்பிட்டாரு. கோமல் உடனே கிளம்பி அவரு ஆபிஸ் போய் சேர்ந்தான். முதல்முறையா ஒரு புரொடியூசர்கிட்ட கதை சொல்ல போறோம்.கடவுளே எல்லாம் சூப்பரா முடியனும்னு, ரொம்ப நாளா கண்டுக்காம விட்டு வச்சிருந்த கடவுள்கிட்ட எல்லாம் உறவ மறுபடியும் புதுப்பிச்சுக்கிட்டான். 

அரை மணி நேரமா கோமல் வெயிட் பண்ணிட்டு இருந்தான். உள்ளுக்குள்ள அவனுக்கு லைட்டா அல்லு விட்டுச்சு. படபடப்பா உணர்ந்தான். அப்ப பார்த்து “சார் ..உங்கள உள்ள கூப்பிடறாரு” அப்படின்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. கோமல் எந்திரிச்சு உள்ள போனான். புரொடியூசர் கூலா உட்கார்ந்து நியூஸ் சேனல் பாத்துட்டு இருந்தாரு. கோமல் மரியாதையா அவருக்கு வணக்கும் வெச்சுட்டு உட்கார்ந்தான். எடுத்ததும் அவரு கேட்ட முதல் கேள்வி “எவ்ள நேரம் தம்பி கதை சொல்லுவ?” என்று கேட்க, கோமல் உடனே “சார்.. ரெண்டு மணி நேரம் சொல்லுவன்னு” சொன்னான். “அவ்ளோ நேரம் எல்லாம் கேக்க முடியாது. 10 நிமிஷத்துல ஷார்ட்டா கதைய சொல்லு”ன்னு புரொடியூசர் சொன்னாரு. அதைக் கேட்டதும் குழப்பத்துல குரல்வளைல இருந்து பேச்சே வரல. ரெண்டு மணி நேர கதைய எப்படி ஷார்ட்டா 10 நிமிஷத்துல சொல்றதுன்னு புரியாம குழம்பிப்போய், சொல்ல வந்த கதைய ரொம்ப சொதப்பலா சொல்லி முடிச்சான். இதான் கதையாங்கற மாதிரி பார்த்துட்டு, போயிட்டு வாங்க தம்பின்னு புரொடியூசர் அவன அனுப்பி வெச்சாரு, 

கோமல் வெளிய வந்ததும் திலீப் மாஸ்டருக்கு போன் அடிச்சு “மாஸ்டர்.. திடீர்ன்னு அவரு 10 நிமிஷத்துல கதை சொல்ல சொல்லி சொல்லிட்டாரு மாஸ்டர். அதனால சொதப்பிட்டன் மாஸ்டர்”னு மேட்டர சொன்னான். அப்ப மாஸ்டர் அவன் மண்டைல ஏறுற மாதிரி ஒரு விஷயத்தை சொன்னாரு. “உனக்காவது 10 நிமிஷம் குடுத்தாங்க .தமிழன் படத்தோட டைரக்டர் புரொடியூசர்கிட்ட கதை சொல்ல போகும்போது ஒரே நிமிஷந்தான் குடுத்தாங்க. அப்ப கூட அவரு புத்திசாலித்தனமா “ஒரு தறுதல எப்படி இந்தியாவோட தபால் தலைல இடம்புடிக்கறான்! இதான் சார் கதைன்னு ஸ்மார்ட்டா சொல்லி இருக்காரு. உடனே ஓக்கே பண்ணிட்டாங்க. விஜய் சார வெச்சு படமும் பண்ணிட்டாரு. அதனால கதைய ரெண்டு நிமிஷத்துல சொல்லச் சொன்னா கூட நீ ரெடியா இருக்கணும்”னு அட்வைஸ் பண்ணாரு. 

Ok அப்படிங்கற ரெண்டெழுத்து வார்த்தையவே வெறும் K அப்படின்னு சுருக்கி யூஸ் பண்ற காலத்துல, நாமளும் அதுக்கு தயாரா இருக்கனும்னு கோமல் அதுக்கும் தன்னை தயார்படுத்திக்கிட்டான். அடுத்தடுத்து 13 மீட்டிங். எல்லாமே பெயிலியர். உங்க டீயில் நிறமில்லை, நிறமிருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் திடமில்லைங்கற மாதிரி ஆளாளுக்கு கதைல ஒரு கருத்து சொன்னாங்க. கோமலுக்கு கதை மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. “இதெல்லாம் ஒரு கதையான்னு அம்பது, அறுபது புரொடியூசர் ரிஜக்ட் பண்ண கதைதான் சூப்பர்ஹிட் படமா ஓடி இருக்கு. உன் மேல நம்பிக்கை வை. உன் கதை மேல நம்பிக்கை வை”ன்னு திலீப் மாஸ்டர் அவன் மண்டைல ஏறுற மாதிரி மறுபடியும் ஒரு விஷயம் சொன்னாரு. கோமல் மனசுல அணைஞ்சு கிடந்த நம்பிக்கை விளக்கு மறுபடியும் லைட்டா திரிய தூண்டிவிட்ட மாதிரி எரிய ஆரம்பிச்சுது.  எனர்ஜி ட்ரிங்க் அடிச்ச மாதிரி எனர்ஜியோட “கோடம்பாக்கம் புரொடியூசர்ஸ்.. ரெடியா இருங்க.. இனி இந்த கோமலோட அட்டாக் அதிரடியா இருக்கும்”னு கோமல் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் மனசுக்குள்ளயே ஒரு வார்னிங் குடுத்துட்டு வேட்டைக்கு தயார் ஆனான்.கோமலின் கலைப்பயணம் தொடரும்... 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles