கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 27

Friday, April 28, 2017

அடப் பாவி உனக்கு சரக்கடிக்க கம்பெனி குடுக்கறதுக்காக ஆடி கார் வெச்சு கடத்திட்டு வந்திருக்கியே ..நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. .. நீ எவ்ளோ குடிச்சாலும் உனக்கு போதையே வராதுன்னு கோமல் மனசுக்குள்ளயே தண்ணி பார்ட்டிக்கு சாபம் விட்டான். தண்ணி பார்ட்டி கோமல பார்த்து சிரிச்சுக்கிட்டே “கோமல் தம்பி ஞ்நான் குடிக்கறதுக்காக உங்கள தூக்கிட்டு வரச் சொல்லல.

உங்களுக்கு அட்வான்ஸ் குடுத்து படம் ஆரம்பிக்கறதுக்குத்தான் தூக்கிட்டு வரச் சொன்னன். நான் போன் அடிச்சா நீங்க எடுக்கவே இல்ல” அவரு சொல்ல சொல்ல கோமலுக்கு பயம் போய் அப்படியே அவர் மேல பாசம் வர ஆரம்பிச்சுது. “என் தங்கச்சி பையன் படம் புரொடியூஸ் பண்ணனுன்னு ஆசைப்பட்டான் .. படம் எடுத்தா முதல் படம் கோமல் தம்பிய வெச்சுதான் எடுக்கணுன்னு அவன்கிட்ட நான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டன். நான் சொன்னா கேப்பான் ..ஏன்னா படத்துக்கு பைனான்ஸ் நாந்தான பண்றன்” சொல்லிட்டு தண்ணி பார்ட்டி ஹாஹஹான்னு நம்பியார் மாதிரி சிரிச்சாரு. கோமல் அப்படியே தொப்புன்னு அவரு கால்ல விழுந்தான். சார் ..நாய் மாதிரி அலைஞ்சேன் எங்கயும் வாய்ப்பு கிடைக்கல.. இப்படி ஆடிக் கார் வெச்சு கடத்திட்டு வந்து படம் பண்ண சான்ஸ் தர்றீங்களே நீங்க தெய்வம் சார்” கோமல் பிம்பிலிக்கி பிலாப்பின்னு பயங்கரமா பீலிங் காட்டுனான். 

“சதீஷ் இவந்தான் உன் புரொடியூசர்” தண்ணி பார்ட்டி அங்க இருக்கற தங்கச்சி பையன அறிமுகப்படுத்தி வைச்சாரு. சதீஷ் ஒரு லட்ச ரூபாயை எடுத்து கோமல் கையில அட்வான்ஸா குடுத்து “ மாமா சொல்லிட்டாரு நீங்கதான் டைரக்டர் ..நாம படம் பண்றோம்ன்னு சொல்ல கோமலுக்கு கண்ணீரே கண்ணீரே சந்தோஷக் கண்ணீரே பாட்டும் கண்ல ஆனந்தக் கண்ணீரும் ஒரே சமயத்துல வந்துச்சு. 
தம்பி ..எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு ..நீ நினைச்ச மாதிரி படம் எடு.. அதுக்கு என்ன வேணுமோ அத சதீஷ் பண்ணித் தருவான். கோமலுக்கு அப்ப “கண்ணா லட்டு .ஜிலேபி , பாசந்தி, மைசூர்பாக், பாயசம் எல்லாம் இப்பவே தின்ன ஆசையான்னு யாரோ கேக்கற மாதிரி இருந்துது. கிட்னாப் சீன் இப்படி அந்தர்பல்டி அடிச்சு கோமல் வாழ்க்கைல லைட்டு ஏத்தற சீனா மாறும்ன்னு கோமல் இல்ல எழுதிட்டு இருக்கற நானே யோசிக்கல . கோமல் சந்தோஷமா வெளிய வந்தான். லீலா பேலஸ் ரிசப்ஷன்ல இருந்த அதே “அக்காவ” பாத்து சந்தோஷமா “கோமல் ஹேப்பிக்கா” அப்படின்னு சொல்லிட்டு வெளில வந்தான். அக்கா ஆங்கிரி பேர்ட் மாதிரி முறைச்சத கோமல் பாக்கல. 

கட் பண்ணா அன்னிக்கு நைட் புல்லா கோமல் போன்ல நடந்தத நண்பர்கள், உற்றார், உறவினர்கள் எல்லாருக்கும் நடந்த சம்பவத்தையும் அவனுக்கு படம் கிடைச்ச அந்த அற்புத சீனையும் விளக்கி சொல்லிட்டு இருந்தான். பவித்ராவும் கோமலும் மறுபடியும் சமாதானம் ஆகி முத்தம்ங்கற பேர்ல போனை எச்சி ஆக்குனாங்க. கோமல் சந்தோஷத்துல ரூம்ல கிடந்த கிடார எடுத்து சங்கீதமே வாசிச்சான். அவன் வாசிச்சத மட்டும் இளையராஜா கேட்டு இருந்தாருன்னா அன்னிக்கு நைட் அங்க ஒரு கொலை விழுந்து இருக்கும். நல்ல வேளை அவரு கேட்கல. கோமலுக்கு புல் நைட் தூக்கம் வரல. காலைல எந்திரிச்சு காளிகாம்பாள் கோவில் போயிட்டு வந்து கோமல் புரொடியூசர் சதீஷை மீட் பண்ண அவரு ஆபிஸ்க்கு போனான். சதீஷ் கோமலுக்கு தனி ஆபிஸ் போட்டு குடுத்தாரு. படத்துக்கான வேலைகள் பரபரன்னு ஆரம்பிச்சுது. கோமல் பைட் மாஸ்டர் திலீப்ப தவிர எல்லா டெக்னீஷியனையும் புதுசா அறிமுகம்படுத்துனான். ஹீரோ யாருன்னு மறுபடியும் டாக் வந்தப்போ புரொடியூசர் கோமல்கிட்ட கதைக்கு யாரு செட் ஆவாங்களோ அவங்கள நீங்களே செலக்ட் பண்ணுங்கன்னு சொன்னாரு. கோமல் நிறைய ஹீரோஸ்கிட்ட கதை சொன்னான். கதை புடிச்சாலும் கால்சீட் டேட் பிரச்சனையா இருந்துச்சு. தனுஷ் கூட கதைய கேட்டுட்டு ஒரு வருஷம் வெயிட் பண்ணா பண்றதா சொன்னாரு. கோமல் யோசிச்சான். பவித்ரா அவங்கப்பா குடுத்த டெட்லைன் கண்ணுக்கு முன்னாடி கரைஞ்சுட்டு இருந்துச்சு. ஹீரோவுக்காக வெயிட் பண்ணலாமா வேணாமான்னு குழம்பி கடைசியா கதைதான் ஹீரோன்னு தைரியமா முடிவெடுத்து புது ஹீரோவ வெச்சு படத்த ஆரம்பிக்க முடிவு செஞ்சான். சதீஷ் கோமலோட முடிவுக்கு முழு சுதந்திரம் குடுத்தாரு. 

கோமல் படத்துக்கு ஹீரோவ செலக்ட் பண்ண உங்களில் யார் அடுத்த அஜித்குமார்? அப்படின்னு ஒரு விளம்பரம் குடுத்தாங்க. அடுத்த நாள் ஆடிஷசனுக்கு மட்டும் ஒரு 10 ஆயிரம் பேர் வந்து சேர்ந்தாங்க. என்னடா இது தல அஜித்துக்கு வந்த சோதனைன்னு நினைச்சுட்டே கோமல் வந்தவங்கள பார்த்தான். அந்த 10 ஆயிரம் பேர்ல ஏற்கனவே சில படத்துல அப்பா ரோல் சித்தப்பா ரோல் மாமா ரோல் பண்ண சில புள்ளிகளும் இருந்தாங்க . கோமல் கோபத்துல அவங்கள ரோடு ரோலர்ல மட்டுந்தான் வெச்சு ரோல் பண்ணல ..மத்தப்படி எல்லாமே செஞ்சு அனுப்பி வெச்சான். கோமல் வந்த குட்டி தலைங்களுக்கு சில பல சோதனைகள் , நடிப்பு எக்ஸாம்கள் எல்லாம் வெச்சு தேறாதவங்கள எல்லாம் அனுப்பிட்டு கடைசியா 10 பேர ஷார்ட் லிஸ்ட் பண்ணான். அந்த பத்து பேர்ல இருந்து பெஸ்ட்டா பர்பார்ம் பண்ண சேதுவ ஹீரோவா செலக்ட் பண்ணான். ஹீரோயினா ஏற்கனவே இரண்டு படத்துல நடிச்சுட்டு இருந்த ஸ்வேதாவ பிக்ஸ் பண்ணான்.

ஹீரோ , ஹீரோயின் செலக்ட் ஆனதும் படத்தோட ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பா ஸ்டார்ட் ஆச்சு. கோமலோட கதை சிட்டில நடக்கறதனால ஒரு ஷெட்யூல் ஷூட் சென்னைலயும் , இன்னொரு ஷெட்யூல் ஷூட்டிங்க பாண்டிச்சேரிலயும் வெச்சுக்க ப்ளான் பண்ணுனாங்க. சென்னைல டே டைம்ல சிட்டிக்குள்ள ரோட்ல எல்லாம் ஷூட் பண்ண பர்மிஷன் கிடைக்காதுங்கறதுனால வீடு , காபி ஷாப் இந்த மாதிரி இருக்கற லொக்கேஷன்ஸ் மட்டும் இங்க ஷூட் பண்ணிட்டு ரோடு சம்பந்தமான சீன்ஸ் எல்லாம் பாண்டிச்சேரில ஷூட் பண்ண கோமல் முடிவு பண்ணான். 

பாண்டிச்சேரில எந்த நேரத்துல வேணாலும் எங்க வேணாலும் கேமரா வெக்கலாங்கறதனால பெரும்பாலும் தமிழ் சினிமாவோட ஷூட்டிங் எல்லாம் அங்கதான் போய்ட்டு இருக்குது. நீ என் புள்ளையே இல்லடான்னு அப்பா ஹீரோ கழுத்த புடிச்ச வெளில தள்ளற ஷாட்ட சென்னைல எதோ ஒரு வீட்டுல எடுத்து இருப்பாங்க.. ஹீரோ தடுமாறி வந்து வீட்டுக்கு வெளில ரோட்ல விழறத பாண்டிச்சேரில எதாவது ஒரு தெருவுல எடுத்து இருப்பாங்க . படம் பாக்கும் போது நமக்கு அது தெரியவே தெரியாது. இந்த மாதிரி கிடைக்காத சில லொக்கேஷன மேட்ச் பண்ணி எடுக்கறதுக்கு வேற இடத்துக்கு போறது வழக்கமா நடக்கற விஷயம்தான். ஆனா அதுலயும் சில காமெடி நடக்கறது உண்டு . சில டைரக்டர்ஸ் பாண்டிச்சேரிய மேட்ச் பண்ண பாங்காக்குக்கும் , பொள்ளாச்சிய மேட்ச் பண்ண போலந்துக்கும் போவாங்க, போன படத்துல பிரிட்டன் போனோமா? அப்ப இந்த படத்துல அமெரிக்கா போலாம்ன்னு யோசிச்சு சீன் எழுதற சில இயக்குனர்களும் உண்டு . ஆனால் நம்ம கோமல் கதைக்கு நியாயமா எந்த லொக்கேஷன் வேணுமோ அதுக்கு நியாயமா லொக்கேஷன் பார்த்தான். 

லொக்கேஷன் தேடலோட முதல் கட்டம் பாண்டிச்சேரில நடந்துச்சு. பாண்டிச்சேரி பேமஸான லொக்கேஷன் மேனேஜர்ஸ் குமரன், பாண்டி ரவி ரெண்டு பேரையுமே கோமலுக்கு தெரியும். புரொடக்ஷன்ல குமரன டிக் அடிச்சதால கோமல் குமரன் கூட லொக்கேஷன் பாக்க கிளம்புனான்.
 
கோமல் கேட்ட மாதிரி குமரன் நிறைய லொக்கேஷன் காட்டுனாரு. சில இடம் கோமலுக்கு புடிச்சு இருந்துது ..சில இடம் புடிக்கல. இன்னும் பெட்டரா இன்னும் பெட்டரான்னு கோமல் பண்ண டார்ச்சர்ல குமரன் பாவம் நொந்து நூடுல்ஸ் ஆகி அதுக்கப்புறம் பாஸ்தாவே ஆனாரு. கோமல் சார் இதுக்கு மேல பாக்க பாண்டிச்சேரில சிஎம் வீடுதான் இருக்கு ..அங்க ஷூட்டிங் பர்மிஷன் தரமாட்டாங்கன்னு குமரன் சொன்னதுக்கு அப்புறந்தான் கோமல் தன்னோட லொக்கேஷன் தேடுதல் வேட்டைய நிறுத்துனான். 

லொக்கேஷன் தேடுதல் முடிஞ்சதும் ஷூட்டிங்கான மற்ற சின்ன சின்ன ஆர்டிஸ்ட் செலக்ஷன் எல்லாம் நடந்துச்சு. கோமல் மறக்காம தன்னோட ஸ்போக்கன் இங்கிலீஷ் புரபசர கூப்பிட்டு ஒரு ரோல் குடுத்தான். அவரு  இங்கிலீஷ்லயே கோமல வாழ்த்தி ஒரு கவிதை எழுதி குடுத்தாரு. சுத்தமா புரியலன்னாலும் கோமல் அத படிச்சுட்டு ரொம்ப நல்லா இருக்கு சார்ன்னு தேங்க்ஸ் சொன்னான்.  மற்ற ஆர்டிஸ்ட் செலக்ஷன் எல்லாம் முடிஞ்சதும் ஒரு சுபயோக சுப தினத்துல ஷூட்டிங்க்குக்கு தேதி குறிச்சாங்க. கோமல் முதல் நாள் படப்பிடிப்புக்கான அந்த நாள நோக்கி படபடப்போட காத்திருந்தான். 

அந்த நாளும் வந்துச்சு. “காதலிக்க நேரமில்லை”  எழுத்து இயக்கம் கோமல்குமார் தினத்தந்தி பேப்பர்ல இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்ன்னு விளம்பரம் வந்து இருந்துச்சு. ஏற்கனவே ஹிட் அடிச்ச டைட்டில் கதைக்கு பொருத்தமா இருக்கும்ன்னு பீல் பண்ணி கோமல் அந்த டைட்டிலையே வெச்சான். பவித்ராவோட அப்பா அந்த விளம்பரத்த பாத்துட்டு கொஞ்சம் சந்தோஷமா ஸ்மைல் பண்ணாரு. பவித்ரா வழக்கம் போல அர்ச்சனை பண்ணி பிரசாதத்தையும், வாழ்த்தையும் வாட்ஸ் அப் பண்ணி வெச்சா. கண்ணனும் , விக்கியும் நேர்ல வந்து வாழ்த்துனாங்க. கோனேரிப்பட்டியே கோமல பத்தி பெருமையா பேசுச்சு. அப்பாவும் அம்மாவும் போன் பண்ணி நல்லா பண்ணுடான்னு சந்தோஷமா சொன்னாங்க.  ஒரு சின்ன பூஜையோட ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. பர்ஸ்ட் ஷாட் ஹீரோ டீக்கடைல டீக்குடிச்சுட்டே எதிர்ல நிக்கற ஹீரோயின ரொமாண்டிக்கா பாக்கணும். சேது ரெடியா நின்னான். கோமல் சேதுவுக்கு சொல்லி குடுத்துட்டு வந்து உட்கார கேமரா மேன் பிரேம் பிக்ஸ் பண்ணிட்டு  கோமல்கிட்ட ரெடின்னு சொன்னாரு. கோமல் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து இருந்தான். மைக்க கையில எடுத்து கேமரா அப்படின்னு சொன்னதும் கேமரா ரெக்கார்ட் பட்டன கேமரா ஆபரேட்டர் அழுத்திட்டு “ரோலிங்ன்னு” சொல்ல கோமல் மைக்ல கம்பீரமா “ஆக்ஷன்” அப்படின்னு சொல்ல.. கோமலோட கனவுகள் அந்த மொமண்ட்ல இருந்து நிஜங்களா ரெக்கார்ட் ஆக ஆரம்பிச்சுது.

(கோமலின் கலைப் பயணம் தொடரும்)

-சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles