கோனேரிப்பட்டி to கோடம்பாக்கம் - 25

Friday, March 31, 2017

கோமல்கிட்ட சொன்ன மாதிரியே வெள்ளிக்கிழமை பூஜை எல்லாம் போட்டு அமர்க்களமா ஆபிஸ்போட்டு குடுத்தாரு தயாரிப்பாளர் நரசிம்மராவ். பூஜைக்கு திலீப் மாஸ்டர், கண்ணன், விக்கின்னு கோமலோட சினிமா குருக்கள் அத்தனை பேரும் வந்து வாழ்த்து சொல்லிட்டு போனாங்க.கோமல்அப்பாவுக்கு போன் பண்ணி படம் பண்ண போறத பெருமையா சொல்ல, அவங்கப்பா கேஷுவலா “நீ என்னத்தயோ பண்ணு ..

மூணு வேளையும் நல்லா தின்னு..வீட்டுப் பக்கம் மட்டும் வந்திராத..விளக்குமாறு பிஞ்சுரும்ன்னாரு. இவருக்கு எல்லாம் ஆடி கார்ல போய் இறங்குனாதான் நம்ம ரேஞ்ச் புரியும்ன்னு கோமல் மனச தேத்திக்கிட்டான். பவித்ரா தாராபுரம் அம்மன் கோவில்ல போய் கோமல் பேர்ல அர்ச்சனை பண்ணி விபூதியையும், அம்மனோட அருளையும் வாட்ஸ் அப்ல அனுப்பி வெச்சா, கோமல் அந்த மெசேஜ தொட்டுக் கும்பிட்டுட்டே பவித்ராவுக்கு தாங்க்ஸ் செல்லம்ன்னு ரிப்ளை அனுப்புனான். 

கோமலுக்குன்னு ஆபிஸ்ல தனி ரூம் ரெடியா இருந்துது. கோமல உள்ள கூட்டிட்டு போய் தனி மரியாதையோட தயாரிப்பாளர் உட்கார வெச்சாரு. மாணிக்கமா இருந்தவன் அந்த சேர்ல உட்கார்ந்ததும் பாட்ஷாவா மாறுன மாதிரி கோமல் அந்த மொமண்ட் உணர்ந்தான். இனி நீ போற பாதை சிங்கப் பாதைன்னு சம்பந்தம் இல்லாம சிவாஜி பட டயலாக் எல்லாம் மைண்ட்ல வந்துட்டு  போச்சு. அன்னிக்கு புல்லா கோமல் அந்த சேர விட்டு எழுந்திரிக்கவே இல்ல. மத்தியானம் லஞ்ச் கூட அதுல உட்கார்ந்தே சாப்பிட்டான். இதுக்கு நடுவுல பாளையங்கோட்டை பக்கத்துல இருந்து மயில்வாகனமுன்னு ஒரு தம்பி கோமல்கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்து சினிமால தன்னோட  கேரியருக்கு பிள்ளையார் சுழி போட்ட வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் வேற நடந்தது. ஆக்சுலா தம்பி மயில்வாகணத்த பத்தி நாம இன்னொரு 36 எபிசோட் எழுதலாம். முதல்ல கோமல் கதைய  முடிச்சுடுவோம்.

ஆபிஸ் போட்டு ஒரு வாரம் ஆகி இருந்துச்சு. கோமல் தன் டீமோட பரபரப்பா கதை விவாதம் நடத்திட்டு இருந்தான். கோஹினூர் வைரத்த கூட அப்படி பட்ட தீட்டி இருக்க மாட்டாங்க . கோமலோட அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் டீம் கதைய சும்மா தீட்டு தீட்டுன்னு தீட்டுனதுல கதையே டயமண்ட் மாதிரி ஜொலிச்சுது. இதுக்கு நடுவுல ஸ்கிரிப்ட் டாக்டர்ஸ்ன்னு ரெண்டு பேரு வந்து கோமல் கதைய பார்ட் பார்ட்டா பிரிச்சு பாத்து உள்ள ஈரல், கிட்னி, இதயம் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணி எல்லாம் கரெக்டா இருக்குன்னு ரிப்போர்ட் குடுத்துட்டு போனாங்க.

இந்த சம்பவங்கள் நடந்துட்டு இருந்த ஒரு வாரமும் தயாரிப்பாளர் நரசிம்மராவ் ஆபிஸ் பக்கம் வரவே இல்ல . ஆனா ஆபிஸ்ல கோமலுக்கு கவனிப்பு மட்டும் பலமா இருந்துச்சு. கோமல் யோசிச்சு டயர்டா ஆகும் போது காஷ்மீர் ஹனி போட்டு க்ரீன் டீ ரெடியா இருக்கும். கோமல் லஞ்ச் அப்படின்னு வாய தொறக்கறதுக்கு முன்னாடியே ஆசிப் பிரியாணில இருந்து பிரியாணி , தலப்பாகட்டில இருந்து பெப்பர் சிக்கன்,  ஜுனியர் குப்பண்ணால இருந்து பிச்சு போட்ட கோழி , சரவண பவன்ல இருந்து கொஞ்சம் தயிர்சாதம்ன்னு ராஜ உபசாரம் ரெடியா இருக்கும். கோமல் ஆபிஸ் வர்றதுக்கு போறதுக்கும் ட்ரைவரோட தனி இன்னோவா கார் வேற இன்னொரு பக்கம் ரெடியா இருக்கும். இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைக்க என்ன தவம் செய்தனை கோமல்குமார்ன்னு மணிரத்னமே பொறாமை படற மாதிரி ஒரு வாழ்க்கைய கோமல் வாழ்ந்துட்டு இருந்தான்.

ஒரு வாரம் கழிச்சு ஒரு நாள் தயாரிப்பாளர் நரசிம்மராவ் ஆபிஸ் வந்தாரு. கோமல் அவருகிட்ட கதை இப்ப ரொம்ப அழகா வந்திருக்கறதாவும், தியேட்டர்ல சும்மா கிழி கிழின்னு கிழிச்சுடலான்னும் சந்தோஷமா சொன்னான். இதக்கேட்டதும் பேரு நரசிம்மராவா இருந்தாலும் அந்த மனுசன் நல்லா சிரிச்சு சிரிச்சு சந்தோஷமா கோமல்கிட்ட பேசுனாரு. பேசி முடிச்சுட்டு கிளம்பும் போது “கதை எல்லாம் ஓக்கே ..ஹீரோ யாருன்னு சீக்கிரம் பிக்ஸ் பண்ணி வைங்க தம்பி ..அடுத்த வாரத்துல பேசி அட்வான்ஸ் குடுத்துடலாம்ன்னு ஒரு வார்த்தைய சொல்லிட்டு கிளம்புனாரு.

கட் பண்ணா கோமல் தன் டீமோட படத்துக்கு யார ஹீரோவா போடலாம்ன்னு டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சான். கோமல் தன்னோட சாய்ஸா சிவகார்த்திகேயன சொன்னான். சிவா எல்லாம் மூணு வருஷத்துக்கு லைன் அப் வெச்சு இருக்காப்ல கிட்ட நெருங்ககூட முடியாதுன்னு புரொடக்‌ஷன் மேனேஜர் சொன்னாரு. அடுத்த ஆப்ஷனா தனுஷ் அப்படின்னு சொல்ல “தனுஷ் எல்லாம் இப்ப மாஸ் படம் பண்றாரு .. லவ் சப்ஜக்ட் எல்லாம் பண்ண மாட்டாருன்னு” புல் ஸ்டாப் வெச்சாங்க.

அடுத்து சிம்பு அப்படின்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள கோமல் “டேய்.. நான் இன்னும் ஒரு வருஷத்துல படம் எடுத்து ரிலீஸ் பண்ணி அது ஓடி ஆடி கார் வாங்கிட்டு போய் என் ஆள பாக்கணும்.. அதுக்கே வேட்டு வெக்க பாக்கறியேன்னு பதறுனான். அடுத்து ஜீ.வி.பிரகாஷ்ல இருந்து சில்வஸ்டர் ஸ்டோலன் வரைக்கும் ஆப்ஷன் பேச ஆரம்பிச்சாங்க. தலயும், தளபதியும் கேரக்டருக்கு

செட் ஆகமாட்டாங்கன்னு ரிஜக்ட் ஆனாங்க. சல்மான் கான் கொஞ்சம் மெச்சூர்டா இருப்பாருன்னு ரிஜக்ட் ஆனாரு. துல்கர் சல்மான் தமிழ்ல மலையாள வாடை அடிக்கும்ன்னு ரிஜக்ட் ஆனாரு. டாம் க்ரூஸ்ஸும் , பிராட் பிட்டும் சம்பளம் பெருசா கேப்பாங்கன்னு லிஸ்ட்ல இருந்து வெளில போனாங்க. இப்படி பேசிப் பேசி கடைசியா சந்தானம், ஜீ.வி.பிரகாஷ், ஆர்யா , ஜீவா, இவங்க நாலு பேரையும் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சாங்க.

நாலு நாள் கழிச்சு நரசிம்மராவ் மறுபடியும் வந்தாரு. கோமல் அவருகிட்ட ஹீரோ ஆப்ஷன்ஸ் லிஸ்ட்ட நீட்டுனான். வாங்கி பாத்தவரு ..இவருக்கு மார்க்கெட் இல்ல .. இவருக்கு ஹைட்டு இல்ல .. இவருக்கு குடுக்கற அளவுக்கு நம்மளுக்கு பட்ஜெட் இல்லன்னு வரிசையா காரணம் சொல்லி நாலு பேரையும் ரிஜக்ட் பண்ணாரு. கோமல் கொஞ்சம் அப்செட் ஆனாலும் இன்னும் ஆப்ஷன் பாக்கறதா சொன்னான். மறுபடியும் அலசி ஆராய்ஞ்சதுல அதர்வா, கௌதம் கார்த்திக், நானி, நிவின்பாலி இவங்க நாலு பேரையும் ஷார்ட் லிஸ்ட் பண்ணாங்க. அந்த லிஸ்ட்ட நரசிம்மராவ்கிட்ட குடுத்தா அவரு அந்த பேப்பர்ல பாவ் பஜ்ஜி வெச்சு தின்னுட்டே அந்த லிஸ்ட்டையும் ரிஜக்ட் பண்ணாரு. “சார்..நீங்களே ஒரு நல்ல ஆப்ஷன் சொல்லுங்க ..நாங்க எல்லாமே யோசிச்சுட்டோம்” கோமல் குழம்பி போய் சொன்னான். திங்கட்கிழமை சொல்றன்னு நரசிம்மராவ் சொல்லிட்ட போனாரு. நடுவுல வந்த சனிக்கிழமையும், ஞாயித்துக் கிழமையும் கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னாருங்கற மாதிரியே கோமல் யோசிச்சுட்டு உட்கார்ந்திருந்தான்.

திங்கட்கிழமை வந்துச்சு. நரசிம்மராவும் காலைல ஷார்ப்பா 10 மணிக்கு ஆபிஸ் வந்தாரு. கோமல் அவருகிட்ட “யாரு சார்? பைனல் பண்ணீட்டீங்களா? ஆர்வமா கேட்டான். அவரு கொஞ்ச நேரம் யோசிச்சு பாத்துட்டு “தம்பி ..உங்க கதைய நல்லா ஓட்டிப்பாத்தன். கதை அழகா அழுத்தமா இருக்குது. இந்த கதைய ஒரு பேமஸ் ஹீரோ பண்ணா அந்த கேரக்டர் மக்கள் மனசுல நிக்கவே நிக்காது. எனக்கு தெரிஞ்சு ஒரு புதுமுகம் பண்ணா நல்லா இருக்கும்ன்னு தோணுதுன்னாரு” .

கோமலுக்கு அதுல பெருசா உடன்பாடு இல்லன்னாலும் அரைகுறையா “பண்ணலாம் சார்.. நான் வேணும்ன்னா ஆடிஷன் வெச்சு நல்ல நடிக்கற ஒரு நாலஞ்சு பேர செலக்ட் பண்றேன்..அதுல இருந்து பைனல் பண்ணிக்கலாம் சார்” கோமல் பொறுமையா சொன்னான். நரசிம்மராவ் சிரிச்சுக்கிட்டே “எதுக்கு தம்பி ..உங்களுக்கு சிரமம். .நானே ஒரு பையன செலக்ட் பண்ணிட்டன்.. பையன் பேரு கோவிந்தராவ் . அப்பா பேரு நரசிம்மராவ்” அப்படின்னு சொன்னாரு. அதக்கேட்டதும் கோமல் ஆணி அடிக்கறதுக்கு ஆதார் கார்ட புரூப்பா காட்ட சொன்ன மாதிரி பேயறைஞ்சு போய் நின்னான். அவனோட ரியாக்‌ஷன புரிஞ்சுக்கிட்டு “தம்பி..என் பையன் அப்படிங்கறதுனால சொல்லல...நிஜமாவே அவன் நல்லா நடிப்பான். நீங்க வேணுன்னா போட்டோ பாருங்க” நரசிம்மராவ் போட்டோவ எடுத்து குடுத்தாரு. கோமல் அந்த போட்டோவ வாங்கி பார்த்தான். நடிச்சா

ஹீரோதான் சார்ன்னு சொன்ன கேரக்டரோட கொஞ்சம் பெட்டர் வெர்ஷனா கோவிந்தராவ் தெரிஞ்சான். கோமல் பொறுக்க முடியாம “சார்..இவரு எப்படி சார் கதைக்கு செட் ஆவாரு..பாக்க பழம் மாதிரி இருக்காரு... நாம என்ன பஞ்சாமிர்தமா பண்றோம்..படம் எடுக்கறோம் சார்” கோபமா சொல்ல , நரசிம்மராவ் டென்ஷன் ஆகி “என் பையன பழம்ங்கறியா? அவந்தான் இந்த படத்தோட ஹீரோ .. அதுக்குத்தான் இந்த படத்தையே எடுக்கறன். ஓகேன்னா படத்த எடு .. இல்ல அட்வான்ஸ திருப்பி குடுத்துட்டு போயிட்டே இருன்னாரு. இத எதிர்பார்க்காத கோமல் யோசிச்சு சொல்றதா சொல்லிட்டு வெளில வந்தான்.

முதல்ல மாஸ்டருக்கு போன் அடிச்சு விஷயத்த சொல்ல , அவரு வேணாம்ன்னு சொன்னாரு. அடுத்தடுத்து எல்லா தரப்புல இருந்தும் பலத்த எதிர்ப்பும் , முதல் படம்ன்னு காம்ப்ரமைஸ் ஆகாதன்னு அட்வைஸும் கிடைச்சுது. கோமல் அவன ஹீரோவா போட முடியாதுங்கற தன்னோட முடிவுல உறுதியா நின்னான். இது தெரிஞ்சதும் முதல்ல க்ரீன் டீ வித் காஷ்மீர் ஹனி நின்னுச்சு.

அடுத்து தலப்பாகட்டி பிரியாணி வெறும் தக்காளி சாதமா மாறுச்சு. ஆனாலும் கோமல் தன்னோட முடிவ மாத்திக்கல. எடுத்த முடிவுல உறுதியா நின்னான். “என் பையன வெச்சு பண்ணலன்னா நீ படமே பண்ண வேணாம் ..வாங்குன அட்வான்ஸ திருப்பி குடுத்துட்டு போயிட்டே இரு” நரசிம்மராவ் கோபமா சொன்னாரு. பார்ட்டி ..ட்ரஸ், புது போனுன்னு அட்வான்ஸ் 50 ஆயிரம் ஐஸ்க்ரீமா கரைஞ்சு பதினேழாயிரந்தான் கையில இருந்துச்சு. மீதி முப்பத்து மூணாயிரத்த தெரிஞ்ச மேனேஜர்கிட்ட மூன்று ரூபா வட்டிக்கு கடன் வாங்கி அட்வான்ஸ திருப்பி குடுத்துட்டு கோமல் வெளில வந்தான்.

வெளில வந்ததும் டீக்கடைல போய் நின்னு டீ குடிக்கலாம்ன்னு கோமல் பாக்கெட்ல கையவிட்டு பாத்தான். ஒரே ஒரு ரூபாதான் இருந்துச்சு. சிவாஜில ரஜினி இந்த மாதிரி ஒரு ரூபாயோட ரோட்ல நின்னதுக்கு அப்புறந்தான் சிங்கப் பாதைல இறங்குனாரு. ஆனா நாம என்னடான்னா சிங்கப்பாதைல இருந்து இப்படி ஒரு ரூபாயோட தெருவுல வந்து நின்னுட்டோம். நமக்கு மட்டும் ஏன் ஸ்க்ரீன் ப்ளே ஆர்டர் இப்படி ரிவர்ஸ்ல இருக்குன்னு கோமல் நொந்துபோய் நின்னான். டீக்கடை எப்.எம்ல “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” பாட்டு பாடுச்சு. கோமல் காது வழியா “நம்பிக்கை” மறுபடியும் கோமல் ரத்தத்துல கலக்க ஆரம்பிச்சுது. இனி என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ..ஒவ்வொரு நொடியும் நானா செதுக்க போறண்டான்னு கோமல் முடிவு பண்ணான்.

(கோமலின் கலைப்பயணம் தொடரும் )

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles