கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 14

Friday, September 30, 2016

படம் சுமார்னு பவித்ரா சொன்னது கூட கோமலுக்கு கோபத்தை கிரியேட் பண்ணலை. அடுத்ததா, ”இந்த சீன ஏன் இப்படி வெச்சீங்க”ன்னு கேட்டதுதான் கோமலுக்குள்ள கோபத்த உண்டு பண்ணி, பாவம் அவன் போனை உடைக்க வச்சுது. ”சனியனே! உனக்கு கோபம்னா, நீ எங்காவது போய் விழ வேண்டியதுதானே? என்ன ஏண்டா போட்டு இப்படி உடைச்சே”ங்கற மாதிரி பார்ட்பார்ட்டா சிதறிக் கிடந்த செல்போன் கோமலைப் பார்த்து மைண்ட் வாய்ஸ்ல திட்டுச்சு.

கோபம் போனதும், கோமல் வடிவேலு ஸ்டைல்ல “வட போச்சேங்க”ற மாதிரி போன் போச்சேன்னு பீல் பண்ணான். அப்படியேபோய், 4000 ரூபாய்க்கு ஒரு புது போன் வாங்குனான். கோபத்தின் விலை 4000 ரூபாய்னு, அவனுக்கு அவனே சொல்லிக்கிட்டான். 

 

கண்ணனோட படத்தை, அவரேகூட அவ்ளோ டைம் பார்த்து இருக்கமாட்டாரு. ஆனா கோமல் பார்த்தான். தினமும் சிட்டில இருக்கற ரெண்டு மூணு தியேட்டருக்குப் போயிடுவான். மார்னிங் ஷோல ஆரம்பிச்சு, ஈவ்னிங் ஷோ வரைக்கும் படத்தைப் பார்ப்பான். அப்புறம், நேரா ஒயின்ஷாப் போய் சரக்கு வாங்கிட்டு ரூமுக்கு வந்துடுவான். “ஏண்ணே.. ஏன்..? நம்ம படம் நல்லாதாண்ணே இருக்கு! இன்னிக்கு பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல பார்க்குறேன். ஆடியன்ஸ் அவ்ளோ ரெஸ்பான்ஸ் குடுக்கறாங்க. நம்ம காமெடி சீனுக்கு, பக்கத்துல உட்கார்ந்து இருந்தவன் விழுந்து விழுந்து சிரிச்சாண்ணே.. அந்த சாவு சீனுக்கு, பின்னாடி உட்கார்ந்து இருந்தவரு கரகரன்னு அழுதுட்டாரு தெரியுமா? பாப்கார்ன் வாங்கும்போது கூட, ஒருத்தர் போன்ல படம் நல்லா இருக்குன்னுதாண்ணே சொன்னாரு. அப்புறம் ஏண்ணே, நம்ம படம் சுமார்னு சொல்றாங்க?” கண்ணன் கூட சரக்கடிச்சுட்டே, கோமல் டெய்லியும் இப்படிக் கேள்வியா கேட்டான். கண்ணனுக்கு படம் ஓடாத கவலைய விட, இவனுக்குப் பதில் சொல்றது பெரிய கவலையா இருந்துச்சு. ’படம் முடியறவரைக்கும் குடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்குனதுக்கு பதிலா, அடுத்த ஜென்மத்துல கூட குடிக்கக்கூடாதுன்னு அட்வான்ஸா சத்தியம் வாங்கி இருக்கலாமோ’ன்னு கண்ணன் பீல் பண்ணினாரு. 

 

’வாட் இஸ் சினிமா? என்ன எடுத்தா படம் ஓடும்? இது சினிமால இருக்கற யாருக்குமே புரியாத ஒரு தங்கமலை ரகசியம். ஏழு கடல் ஏழு மலை தாண்டிப்போய் அந்த ரகசியத்த தெரிஞ்சுக்கிட்டு வந்து, இதுவரைக்கும் ஹிட்டு மட்டுமே குடுத்த டைரக்டர் இங்க யாரும் இல்லை. நயன்தாரான்னு நினைச்சு எடுக்கறது, ஆடியன்ஸ்க்கு நயன்தாராவோடா ஆயா மாதிரி கூட தெரியலாம். அதனால இந்தப் படம் ஓடும், ஓடாதுன்னு யாராலயும் 100% ஜட்ஜ் பண்ண முடியாது’ங்கற ஒரு பெரிய பாடத்தை கோமல் புரிஞ்சுக்கவே இல்லை. ”நாங்க கரெக்டாதான் படம் எடுத்தோம். ஆனா ஆடியன்ஸ்க்கு புடிக்கல, காரணம் என்ன”ன்னு ஏலியன்ஸை தவிர மத்த எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்த்தான் கோமல். 

 

இதுக்கு நடுவுல, ஒரு நாள் நைட்டு கோமல் புல் சரக்கை போட்டுட்டு பேமஸான ஒரு யூட்யுப் சினிமா விமர்சகரோட விமர்சனத்தைப் பார்த்தான். விமர்சனம் பண்ணவன் காமெடியா ரிவ்யூ பண்றேங்கற பேர்ல, நல்லா இருந்த விசயத்தைக் கூட மொக்கைன்னு கழுவிகழுவி ஊத்த.. கோமல் கொலைவெறி ஆனான். ”இவனுங்கதாண்ணே, இவனுங்கதான் நம்ம படத்த ஓட உடாம பண்றானுங்க. நல்லா இருக்கறத கூட கலாய்க்கறான் பாருண்ணா”ன்னு கத்திட்டே, ரிவ்யூ பண்ணவனுக்கு போன் போட்டான்.

 

எதிர்முனைல போனை அட்டெண்ட் பண்ணதும், கோமல் கொலைவெறி கொண்ட கோட்டா சீனிவாசராவா மாறுனான். “உங்களுக்கு எல்லாம் என்ன ’பீப்’டா தெரியும். சினிமாவ விமர்சனம் பண்றதுக்கு, நீ என்ன பெரிய பீப்பா.. பீப்.. பீப்.. பீப்.. பீப்ன்னு ஒரு ரெண்டாயிரம் கெட்ட வார்த்தைல திட்டினான். “த்தா.. அந்த வீடியோவ நீ டெலீட் பண்ணல.. நாளைக்கே உன்னை தூக்கறண்டா”ன்னு கோமல் படுபயங்கரமா மிரட்டிட்டு போனை வச்சான். அடுத்த செகண்டே, போதைல அப்படியே மட்டையாகி தூங்கிட்டான். 

 

நைட்டு 12 மணி,கோமல் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தான். ரூமுக்கு வெளியே, ஏதோ அல்கொய்தா தலைவனைப் புடிக்க அண்டர்கவர் ஆபரேஷன்ல வந்தமாதிரி 5 போலீஸ்காரங்க ’அலர்ட்’டா நின்னுட்டு இருந்தாங்க. ஒரு போலீஸ்காரன் இன்னொரு போலீஸ்காரனுக்கு கண்ணை காட்ட, அவரு உடனே ரூம் கதவை ஓங்கி உதைச்சு திறக்க தயார் ஆனாரு. அந்த சமயத்துல, லாக் பண்ணாம இருந்த கதவு காத்துக்கு தானா திறந்துச்சு. உள்ளே கோமல் தூங்கிட்டு இருந்தது தெரிஞ்சுது. போலீஸ் டீம் உள்ளே நுழைஞ்சாங்க. ஒரு போலீஸ்காரன் கோமலை எழுப்ப, போதைல தடுமாறி எந்திரிச்சு உட்கார்ந்தான். உடனே போலீஸ்காரரு “டேய்.. நீ போன்ல கொலை மிரட்டல் விட்டியாமே.. என்ன வெட்டிடுவியா”ன்னு கேட்டாரு. கோமல் புல் மப்புல “எவனா இருந்தாலும் வெட்டுவன்… எவனா இருந்தாலும் வெட்டுவன்...”னு உளறிக் கொட்ட.. கட் பண்ணா, விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல கோமல் உட்கார வைக்கப்பட்டிருந்தான். 

 

அடுத்தநாள் காலை தினத்தந்தில “சினிமாவை விமர்சனம் செய்தவருக்கு கொலை மிரட்டல், உதவி இயக்குனர் கைது” அப்படின்னு கோமல் போட்டோவோட நியூஸ் வந்திருந்துச்சு. பக்கத்துலயே நாலு சுமாரான மூஞ்சிங்க போட்டோவை போட்டு, அழகிகள் கைதுன்னு வேற நியூஸ் போட்டிருந்தாங்க. இன்னொரு பேப்பர்ல “ரிவ்யூ போட்டால் எவனா இருந்தாலும் வெட்டுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்த உதவி இயக்குனர் கைதுன்னு வந்திருந்தது. அதுல இருந்த போட்டோல, கோமல் சிரிச்சுக்கிட்டு இருந்தான்.

 

கோமல் கைது ஆன விஷயம் கேட்டு, கோடம்பாக்கமே கொந்தளிச்சுது. டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போராளிகள் எல்லாம் தங்களோட வன்மையான கண்டனத்தை தெரிவிச்சுட்டு, கூலா காலிபிளவர் பக்கோடா சாப்பிடப் போயிட்டாங்க. சில இயக்குனர்கள் கூட கண்டனம் தெரிவிச்சு இருந்தாங்க. அண்ணன் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப், தன்னோட பார்ச்சூனர் கார்ல புலி மாதிரி பாய்ஞ்சுவந்து விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேசன்ல நின்னாரு. அவரு வந்த வேகத்தைப் பார்த்ததும், ’கேப்டன் பிரபாகரன்ல கேப்டன் போலீஸ் ஸ்டேஷனையே அடிச்சு நொறுக்குன மாதிரி  மொத்த ஸ்டேஷனையும் அடிச்சு நொறுக்கிடுவாரோ’ன்னு கோமல் பயந்தான். 

 

இந்த சமயம் பார்த்து, போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலயே கேப்டன் வீடு இருக்கறது வேற கோமலுக்கு ஞாபகம் வந்துச்சு. “மக்களே இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? கோமல் என்ன தப்பு பண்ணான்.. ஆங்..! இந்த ஒயர் வேற சுத்திக்கிச்சு”ன்னு கேப்டன் ஒயரை கையில புடிச்சுட்டு பேசற மாதிரி கோமல் மைண்ட்ல இமாஜினேஷன் போயிட்டு இருந்தது. அப்போ, ஸ்டண்ட் மாஸ்டர் வாய்ஸ் அவனோட இமாஜினேஷன்ல வந்து இடிச்சு நின்னுது.

 

கோமல் திரும்பிப் பார்த்தான் . ஸ்டண்ட் மாஸ்டர் இன்ஸ்பெக்டர்கிட்ட “அவன் என் தம்பிய்யா.. அவன தூக்கி உள்ள வெக்கற அளவுக்கு உங்களுக்கெல்லாம் தைரியம் வந்துடுச்சா”ன்னு கத்திட்டு இருந்தாரு. ’அம்மா பெத்து இருந்தா கூட இப்படி ஒரு அண்ணன பெத்து இருக்க மாட்டங்க’ன்னு நினைச்சு கோமல் கண்ல லேசா கண்ணீர் வழிஞ்சது. அவன் மைண்ட்ல, பேக்ரவுண்ட்ல ’லாலா.. லாலா.. லாலலா..’ன்னு வானத்தை போல ரீ ரிக்கார்டிங் வேற ஓடுச்சு. ஆக்‌ஷன்ல எமோஷன் கலந்த அந்த சீன்லயே, கோமல் போலீஸ் ஸ்டேஷனை இடிச்சுட்டு  ஸ்டண்ட் மாஸ்டருக்கு அந்த இடத்துலயே கோயில் கட்டலாமான்னு யோசிச்சான். 

 

அதுக்குள்ள ஸ்டண்ட் மாஸ்டர் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி முடிக்க, கூடவே வந்த அட்வகேட் ஜாமின் மனுவை கொடுக்க, அடுத்த செகண்ட் கோமல் கெத்தா வெளில வந்தான். வெளில வரும்போது பார்த்தா, டைரக்டர் யூனியன்ல இருந்து கொஞ்சம் பேரு, அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கொஞ்சம் பேருன்னு எல்லாரும் ஓடி வந்து கோமலை தூக்க.. அந்த செகண்ட் கோமல் அப்படியே நாயகன் கமலா மாறுனான். 

 

”தலைவா! அவன எல்லாம் எதிர்த்து கேட்க ஆள் இல்லன்னு இஷ்டத்துக்கு ரிவ்யூ பண்ணிட்டு இருந்தான். நீ மிரட்டுன மிரட்டுல பாரு, இனி அடங்கி நிப்பான்”னு ஒரு குரல் அந்த கூட்டத்துல ஒலிக்க, நாயகன் கமல்ல இருந்து கோமல் தமிழ் சினிமாவை ரட்சிக்க வந்த ரட்சகரா மாறுனான். 

 

அண்ணாமலை படத்துல ரஜினி ஒரே பாட்டுல பணக்காரன் ஆன மாதிரி, கோமல் ஒரே சம்பவத்துல பேமஸ் ஆனான். ’கிடாரில சசிக்குமார் பண்ண சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா இருந்துச்சு’ன்னு கோடம்பாக்கம் தனக்குள்ள பேசிக்கிச்சு. கண்ணன் மட்டும், ’எதுக்குடா இப்படி லூஸூ மாதிரி பண்ண’ன்னு கோமலை திட்டுனாரு. ரட்சகரா மாறுன கோமலுக்கு, அந்த அர்ச்சனை எல்லாம் காதுல விழவே இல்ல. ஜாலியா சரக்கடிக்கலாம்னு கிளம்பி ஒயின்ஷாப் போனான். அதிசயமா, சேல்ஸ்மேன் கூலா பீர் குடுத்தான். பார் அட்டெண்டர் பவ்யமா சைட் டிஷ் குடுத்தான். வழக்கமா வர்ற ஒயின்ஷாப்தான், ஆனா இன்னிக்கு மரியாதை ஜாஸ்தியா இருந்துச்சு. அதை ரசிச்சுக்கிட்டே, கோமல் பீர் குடிக்க ஆரம்பிச்சான். 

 

ஒரு பீர் முடியும் போது, பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. போனை எடுத்ததும், “நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? டைரக்டர் ஆகணுன்னு போனியா, இல்ல ரவுடி ஆகணுன்னு போனியா? போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய் பேப்பர் வரைக்கும் பேரே நாறிக் கிடக்குது. என்ன எப்படி, எங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணி குடுப்பாரு? அவ்ளோதான் முடிஞ்சு போச்சு.. இனி நீ யாரோ, நான் யாரோ.. நமக்குள்ள ஒண்ணும் இல்ல”ன்னு நான்ஸ்டாப்பா பவித்ரா கத்தி முடிக்க, கோமல் கூலா “ஏய்.. இப்ப எதுக்கு டென்ஷன் ஆகற?”ன்னு பதில் சொல்லிட்டு இருக்கும்போதே கால் கட் ஆகி இருந்துச்சு. கோமல் திரும்ப பவித்ரா நம்பருக்கு ட்ரை பண்ணா, ஸ்விட்ச் ஆப்னு வந்துச்சு. 6 பீர் அடிச்சு 5 மணி நேரம் ட்ரை பண்ணியும், பவித்ரா நம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருக்க, கோபத்துல ஏழாவது பீர் வாங்கி அடிச்சுட்டு ஒயின்ஷாப்லயே மட்டையானான் கோமல். மட்டையான மறுநிமிஷம், பவித்ராகிட்ட இருந்து போன் வந்துச்சு. பார் அட்டெண்டர் போன எடுத்து “மேடம்! உங்க ஹஸ்பண்டா இவரு.. புல்லா குடிச்சுட்டு பார்லயே மட்டையாயிட்டாரு, கொஞ்சம் வந்து கூட்டிட்டு போறீங்களா”ன்னு கேட்டார். இதைக்கேட்டதும், பவித்ராவோட போன் தரைல மோதி சில்லு சில்லா உடைஞ்சுது.. கோமலின் கலைப்பயணம் தொடரும்.

- சந்துரு 

மேலும் படிக்க:

கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 13
கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 12
கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 11

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles