கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 13

Thursday, September 15, 2016

கோமல் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டதா டாக்டர் சொன்னதைக் கேட்டதும், எல்லாருக்கும் ஷாக்கா இருந்துச்சு. தான் ஜாலியா பண்ண ஒரு விசயம் இவ்வளவு சீரியஸா வந்து முடியும்னு, ஸ்டண்ட் மாஸ்டருக்குத் தெரியாம போயிடுச்சு. ரொம்ப பீல் பண்ணியவர், “டாக்டர், எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்ல. நான் பணம் கட்டறேன். அவன க்யூர் பண்ணுங்க”ன்னு டாக்டர்கிட்ட சொன்னாரு.

டாக்டர் சிம்பிளா “எவ்வளவு காசு குடுத்தாலும், அவர் எந்திரிக்கறப்பதான் எந்திரிப்பாரு. அது 10 நிமிஷத்துல இருக்கலாம். இல்ல, 10 வருஷம் கூட ஆகலாம். எல்லாம் அவரு கையிலதான் இருக்கு”ன்னு மேல கையைக் காட்டி சொல்லிட்டு போயிட்டாரு. ஒரு வேளை 10 வருஷம் கோமாவுல இருந்து, அதுக்கப்புறம் ’கில்பில்’ படத்துல உமா துர்மன் பழிவாங்க வர்ற மாதிரி கையில கத்தியோட வந்து நின்னா என்ன பண்றதுன்னு, ஸ்டண்ட் மாஸ்டர் கொஞ்சம் பயமா யோசிச்சாரு. அவரு பயத்தை தூண்டற மாதிரி கோமல் ஆழ்ந்த அமைதியோட படுத்து இருந்தான். ஸ்டண்ட் மாஸ்டருக்கு, அவர் பார்த்த இங்கிலீஷ் பட சீன்லாம் மைண்ட்ல வந்து வயித்துல புளிய கரைச்சுது. 

 

கோமல் கோமா ஸ்டேஜ்க்கு போய் ரெண்டு நாள் ஆகி இருந்துச்சு. ஷூட்டிங் எல்லாம் பிரேக் விட்டுட்டு, கண்ணன் கோமல் பக்கத்துலயே இருந்தாரு. கூடவே ஸ்டண்ட் மாஸ்டரும் இருந்தாரு. கோமலுக்கு ட்யூப் வழியா சாப்பாடு ஊட்டறதெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டர்தான். மாஸ்டரு ரொம்ப பாவம். அவரு பெத்த புள்ளைக்கு கூட இப்படி ஊட்டி இருப்பாரான்னு தெரியலை. கோமலுக்கு சாப்பாடு ஊட்டி, அவன் உச்சா போனா க்ளீன் பண்ணி, வில்லன் ரோல்ல இருந்து அப்படியே டக்குன்னு தெய்வமா மாறி நின்னாரு மாஸ்டர். கோமல் விசயத்துல பண்ண உள்குத்து அவருக்குத்தான் தெரியுங்கறதால, மத்தவங்க அவர தெய்வ மாஸ்டரா பாத்தாங்க. வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டு, கோமல் காதுல போய் அப்பப்போ “கோமல், கண்ணு முழிச்சிடறா கண்ணா” அப்படின்னு கெஞ்சிக்கிட்டே இருந்தாரு மாஸ்டர். கோமல், அப்பதான் கொறட்ட விட்டு தூங்கிட்டு இருந்தான். 

 

இந்த ரெண்டு நாளும் பவித்ரா கோமலுக்கு போன் அடிச்சுட்டே இருந்தா. ஒவ்வொரு தடவையும் கண்ணன் போன் அட்டெண்ட் பண்ணி “அவன் தூங்கிட்டு இருக்காம்மா”ன்னு சொல்லிட்டே இருந்தாரு. ஒரு பாயிண்ட்ல பவித்ரா டென்ஷன் ஆகி, ”இப்ப அவன் மூஞ்சில ஆசிட் அடிச்சாவது எழுப்பி என்கிட்ட பேச வைங்க , இல்ல நடக்கறதே வேற”ன்னு மிரட்டலா சொல்ல, வேற வழி இல்லாம கண்ணன் பவித்ராகிட்ட உண்மைய சொன்னாரு. பவித்ரா பீல் பண்ணி கதறி அழ ஆரம்பிச்சா. கண்ணன் சொன்ன எதுவுமே, அவ காதுல விழல. பவித்ரா கதறிக் கதறி அழுதுட்டே இருந்தா. அவ அழற சத்தம் கண்ணன் போன்ல இருந்து லீக் ஆகி, கோமலோட காதுல நுழைஞ்சுது. (இந்த இடத்துல, நீங்க முதல் மரியாதை கிளைமாக்ஸ் சீனை இமாஜினேஷன் பண்ணிக்குங்க) ”கோமல்..கோமல்” அப்படின்னு பவித்ரா கதற கதற, அந்த வார்த்தை கோமல் காதுவழியா புகுந்து, கழுத்து வழியா மேல ஏறி, மூளைக்குள்ள போய் ரிப்பேர் ஆன பார்ட்ட சர்வீஸ் பண்ண,  அடுத்த செகண்ட் பவித்ராவை பர்ஸ்ட் டைம் பஸ்ல பார்த்ததுல இருந்து கடைசியா பொறி உருண்டை சாப்பிட்டுட்டு பஸ் ஏத்திவிட்டது வரைக்கும் அப்படியே கோமல் மூளைல ’ப்ளாஷ்பேக்’கா சர்ர்ன்னு ஓடி நின்னுச்சு. கோமல் டக்குன்னு கண்ணு முழிச்சான். 

 

டாக்டர் வந்து பாத்துட்டு “இட்ஸ் ஏ சூர்யா மெடிக்கல்ஸ் மிராக்கிள்”ன்னு சொன்னாரு. ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோசமா “இட்ஸ் ஏ இத்தாலி மூவி டிவிஸ்ட்”ன்னு சொன்னாரு. கண்ணன் தன் பங்குக்கு “இது லவ்வோட பவர், அந்த பவருக்கு முன்னாடி பவர் சோப் கூட நிக்காது”ன்னு சொன்னாரு. கோமல் ஐசியூ ரூம்லயே, சந்தோஷமா பவித்ராகிட்ட அஞ்சு மணி நேரம் கடலை போட்டான். 

 

மொக்க படத்துலயும் ஒரு நல்ல சீன் மாதிரி, இந்த கெட்ட சம்பவத்துலயும் கோமலுக்கு ஒரு நல்ல விசயம் நடந்துச்சு. எந்த ஸ்டண்ட் மாஸ்டர் கோமலுக்கு ஸ்கெட்ச் போட்டாரோ, அவரு இப்போ கோமலுக்கு உடன்பிறவா சகோதரர் மாதிரி ஆயிட்டாரு. ஆனதோட மட்டும் இல்லாம, ”உன்ன தமிழ்சினிமாவுல டைரக்டர் ஆக்கி காட்டறேன். உன் லவ்வுக்கு எதாவது பிரச்சனைன்னா கேப்டன், ஆக்‌ஷன் கிங், தளபதி, தல எல்லாரையும் கூட்டிட்டு வந்து செமையா ஒரு பைட் பண்ணி,  பவித்ராவ உன் கூட சேர்த்து வெக்கற”ன்னு கோமலுக்கு வாக்குறுதி குடுத்தாரு.  கோமல் கோமா ஸ்டேஜ்க்கு போனத நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டான். 

 

மறுபடியும் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. கோமல் முன்ன விட உற்சாகமா வேலை பார்க்க ஆரம்பிச்சான். 55 நாள்ல படம் முடிஞ்சு கடைசி நாள் பூசணிக்காய் உடைச்சாங்க. படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை ஸ்டார்ட் ஆச்சு. எல்லாரும் 2G வேகத்துல வேலை பார்த்தா, கோமல் 4G வேகத்துல வேலை பார்த்தான். எடிட்டிங், டப்பிங்ன்னு ஒவ்வொரு இடத்துலயும் ஒரு படம் எப்படி மாறுதுன்னு கோமல் பார்த்தான். சினிமாங்கற வித்தை, கோமலுக்கு லைட்டா புரிய ஆரம்பிச்சது. ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் பீட்டர் சாரை படத்துல ஒரு குட்டி ரோல்ல நடிக்க வெச்சதால, அவரு கோமலுக்கு கொஞ்சம் ஆங்கில அறிவ ஊட்டி விட்டிருந்தாரு. கோமல் உலக சினிமாவ சப் டைட்டிலோட பாத்து புரிஞ்சுக்கற ரேஞ்சுக்கு வந்து இருந்தான். 

 

கண்ணன் படம் ரெடி ஆச்சு. ரிலீஸ்க்கு முன்னாடி, கண்ணன் தன் டீமோட உட்கார்ந்து படத்த பார்த்தாரு. எல்லாருக்கும் படம் நல்லா வந்து இருக்குன்னு பீல் ஆச்சு. உதவி இயக்குனர்கள் லிஸ்ட்ல கோமல்குமார்ன்னு தன்னோட பேரைப் பார்த்ததும், பீலிங்ஸ் ஆப் இந்தியாவானான். கண்ணன் கால்ல விழுந்து ஆசிர்வாதம் எல்லாம் வாங்கி கண் கலங்குனான். 

 

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்! முந்தின நாள் நைட் கண்ணனுக்கு தூக்கமே வரல. நாளைக்கு ரிசல்ட் எப்படி இருக்கும்கற டென்ஷன்லயே தூங்காம இருந்தாரு. ”அண்ணா.. படத்த நாமதான் பாத்துட்டமே! சூப்பரா இருக்கு, கன்பார்மா ஹிட்டுதான். நிம்மதியா தூங்குங்க”ன்னு கோமல் அவருக்கு நம்பிக்கை குடுத்தான். ”நாம பண்றதுனால, நமக்கு நல்லா இருக்கற மாதிரிதாண்டா தெரியும். ஆனா படம் ரிலீஸ் ஆகி, மக்கள் ஏத்துக்கிட்டாதான் ஹிட்டு. இந்த மாதிரி ப்ரீவியூல பாத்து சூப்பரா இருக்குன்னு சொன்ன நிறைய படம் அட்டர் ப்ளாப் ஆகி இருக்கு. மொக்கையா இருக்குன்னு சொன்ன படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு. இங்க எல்லாமே ஆடியன்ஸ் கையிலதான் இருக்கு”ன்னு கண்ணன் தன்னோட அனுபவத்த சொன்னாரு. ஆனா, கோமல் மனசுக்குள்ள படம் கன்பார்மா ஹிட் ஆகும்னு தோணுச்சு. 

 

அடுத்த நாள் காலைல, கோமல் நேரத்துலயே குளிச்சு கோயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தான். படத்தோட பர்ஸ்ட் ஷோ பார்க்கறதுக்கு ரெடி ஆனான். கண்ணனும் மத்த டெக்னிஷயன்ஸூம் சத்யம் தியேட்டர்ல படம் பார்க்க, கோமலும் மத்த அஸிஸ்டெண்ட்ஸும் உதயம் தியேட்டர்ல படம் பார்த்தாங்க. பொதுவா ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, அதோட உண்மையான ரிசல்ட்ட தெரிஞ்சுக்க உதயம், காசி மாதிரி தியேட்டர்லதான் பார்ப்பாங்க. சத்யம் மாதிரி தியேட்டர்ல எல்லாம் வர்றது கொஞ்சம் ஏ கிளாஸ் ஆடியன்ஸ். அவங்களுக்கு புடிக்கற படம்  உதயம்ல பார்க்கற ஆடியன்ஸ்க்கு புடிக்காது. உதயம் தியேட்டர் ஆடியன்ஸ்க்கு புடிக்கறது, சத்யம் தியேட்டர் ஆடியன்ஸ்க்கு புடிக்காது. அதனாலதான் சினிமால ஏ, பி, சின்னு ஆடியன்ஸ மூணு டைப்பா பிரிச்சு வெச்சு இருக்காங்க. மூணு செண்டர்லயும் ஒரு படம் புடிச்சுதுன்னா, அந்த படந்தான் சூப்பர்டூப்பர் ஹிட் .

 

உதயம் தியேட்டர்ல படத்தோட பர்ஸ்ட் ஷோ ஸ்டார்ட் ஆச்சு. கோமல் டென்ஷனோட பார்க்க ஆரம்பிச்சான். அதே சமயம், பவித்ரா தமிழ் ராக்கர்ஸ்ல படம் ரிலீஸ் ஆயிடாச்சுன்னு தேடிட்டு இருந்தா. நன்றி எல்லாம் போட்டு முடிச்சு, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சுன்னு தம் அடிக்கறத பத்தி அட்வைஸ் பண்ண ஆரம்பிக்கும் போது, கோமலுக்கு டென்ஷன்ல அப்பவே தம் அடிக்கணும் போல இருந்துச்சு. டைட்டில்ல கோமல் பேர் வந்தபோது, அவன் கண்ல இருந்து கண்ணீர் வழிஞ்சு, அப்படியே ஓடி, ஸ்கிரீன் பக்கத்துல முன்னாடி சீட்ல உட்கார்ந்து இருந்த ஒருத்தன் காலை நனைச்சுது. அவன் திரும்பி கோபமா “எவண்டா பிஸ் அடிச்சது”ன்னு கோபமா பின்னாடி கத்திட்டு இருந்தான். 

 

படம் ஓட ஆரம்பிச்சது. ஏற்கனவே 1000 தடவை பார்த்திருந்தாலும், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸோட உட்கார்ந்து படத்த பார்க்கறது கோமலுக்கு புது அனுபவமா இருந்துச்சு. ரெண்டரை மணி நேரமும் ஆடியன்ஸோட ரியாக்‌ஷன்ஸ மட்டுந்தான் பார்த்துட்டு இருந்தான் கோமல். அவன் சிரிப்பாங்கன்னு நினைச்ச சில இடத்துல, ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் காட்டாம உட்கார்ந்து இருந்தாங்க. சில இடங்கள்ல, அவனே எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் குடுத்தாங்க . கண்ணன் சொன்னது, கோமல் மைண்ட்டுக்கு வந்துச்சு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்கறதை, அவன் உணர்ந்தான். படம் முடிஞ்சு வெளில வரும்போது, ”பர்ஸ்ட் ஹாப் ஓக்கே. செகண்ட் கொஞ்சம் இழுத்துடுச்சு. படம் சுமாருப்பா”ன்னு, காதுபட எல்லாரும் பேசிட்டு போறதைக் கேட்டான் கோமல். கோமலுக்கு, படத்துல பர்ஸ்ட் ஹாப்ப விட செகண்ட் ஹாப்தான் புடிச்சு இருந்துச்சு. ஆடியன்ஸ் ரிசல்ட் அப்படியே நேர் எதிரா இருக்கறத பார்த்து, அவன் கொஞ்சம் குழம்பிப் போனான். 

 

ரெண்டு ஷோ முடியும்போது பேஸ்புக், டிவிட்டர்னு எல்லாத்துலயும் படம் சுமார்னு ரிசல்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க. ’ரிவ்யூ பண்றோம்’ங்கற பேர்ல யூடியுப்ல சில விமர்சன புலிகள் வாய்க்கு வந்தத உளறி வெச்சாங்க. அதெல்லாம் பார்க்கும்போது, கோமலுக்கு கோபமா வந்துச்சு. ’கண்ணன் சார் இந்த படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு. இப்படி ஈஸியா கமெண்ட் பண்ணிட்டு போறாங்களே’ன்னு அவனுக்கு கொலவெறி ஆனான். அந்த சமயத்துல பவித்ரா வேற போன் பண்ணி “நெட்ல டவுன்லோட் பண்ணி படம் பார்த்தண்டா. உன் பேர் வந்தப்ப அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ஆனா படம் சுமார்தான். நீங்க ஏன் ஹீரோயின் கேரக்டர அப்படி காட்டுனீங்க. இப்படி பண்ணி இருக்கலாம் இல்ல”ன்னு அவ பங்குக்கு ஒரு ஆலோசனை சொன்னா. அதைக் கேட்டதும் கோமல் கடுப்பாகி, “உனக்கெல்லாம் சினிமாவ பத்தி என்ன தெரியும். நீ எல்லாம் அட்வைஸ் பண்றியா. ஒரு படம் எடுத்து பார் தெரியும்”னு கோபமா கத்திட்டே போனை தூக்கி சுவத்துல அடிக்க, அது சில்லு சில்லா உடைஞ்சு தெறிக்க…!கோமலின் கலைப்பயணம் தொடரும்... 

மேலும் படிக்க:
கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 12
கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 11
கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 10

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles