கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 16

Monday, October 31, 2016

’ஐ யாம் வெயிட்டிங்’னு பவித்ராவோட அப்பா போன்ல சொன்னதைக் கேட்டு குலைநடுங்குனாலும், அதை வெளிய காட்டிக்காம “ஐ யம் ஆன் தி வே சார்..”னு கொஞ்சம் குழறலா பதில் சொல்லிட்டு போனை வச்சான் கோமல். பவித்ராகிட்ட விஷயத்தைச் சொல்ல, அவ இன்ஸ்டண்டா மயக்கம் போட்டு கீழ விழுந்தா. அடுத்த செகண்ட் ரெண்டு பேரையும் சுத்தி கூட்டம் கூட, ஒருத்தர் சோடா வாங்கி பவித்ரா மூஞ்சில அடிச்சாரு.

பவித்ரா அப்படியே லைட்டா கண்ணு முழிச்சு பார்க்க, அங்க இருந்த ஒருத்தன் “இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே வாந்தி எடுக்க வெச்சுடறானுங்க”ன்னு கூட்டத்துல கோவிந்தா போட.. சுத்தி நின்னவங்க எல்லாம் ரெண்டு பேரையும் அவதார் கிரகத்துல இருந்து வந்த அபூர்வ ஜந்துக்கள் மாதிரி பார்த்தாங்க. கோமல் அந்த கும்பல்ல இருந்து பவித்ராவ எஸ்கேப் பண்ணி, பின்னாடி இருந்த ஐயங்கார் பேக்கரிக்குள்ள கூட்டிட்டு வந்தான். 

நடந்த களேபரத்துல, பவித்ரா மூஞ்சி பாவம் காலைலயே கட்டிங் அடிச்ச குடிகாரன் மாதிரி கலகலத்துப்போய் இருந்தது. “எங்கப்பாவுக்கு ஏண்டா போன் பண்ண? நான் இன்னிக்கு செத்தன். பேசாம இருந்து, என் எழவுக்கு பார்த்துட்டுப் போயிடு..“ பவித்ரா பயங்கர பயத்தோட சொல்ல.. “நான் எங்கடி வர்றது.. அதுக்கு முன்னாடி எனக்கு பாடை கட்டிடுவான் போல இருக்கே உங்கப்பன்”னு கோமல் தன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டான். இருந்தாலும், அந்த சிச்சுவேஷன்ல எங்க தான் அழுது அந்த சோகம் பவித்ராவையும் தாக்கிடுமோன்னு நினைச்சு, கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டான். 

”இப்ப என்ன பண்ணப்போறோம்? நான்லாம் வீட்டுக்கு போக முடியாது.. பேசாம இப்படியே சென்னைக்கு ஓடிப்போயிடலாமா?” பவித்ரா படபடப்பா கேட்க, கோமல் யோசிச்சான். “வாழ்க்கைல சில முடிவுகள நாம செய்வோம்.. சில முடிவுகள் நம்மள செஞ்சுரும்” அப்படின்னு யோசிச்சு கோமல் ஒரு முடிவு செஞ்சான். பவித்ராவை பார்த்து, “பவி.. நான் ஓடி ஒளியப்போறது இல்ல.. நேரா உங்கப்பா முன்னால போய் நெஞ்ச நிமிர்த்தி, ’நான் உங்க பொண்ண தூக்க வரல.. கேட்க வந்திருக்கன். அவ என்ன லவ் பண்றா.. நான் அவள லவ் பண்றன்.. கல்யாணம் பண்ணி வெக்க முடியுமா? முடியாதா’ன்னு கேக்க போறன்.” கோமல் சொல்லச் சொல்ல, பவித்ரா அவனோட தைரியத்தைப் பார்த்து “நிஜமாதான் சொல்றியா”ன்னு கற்றது தமிழ் அஞ்சலி பாப்பா மாதிரி அப்பாவியா கேட்க, கோமல் ’யெஸ்’ன்னு அழுத்தமா தலை ஆட்டுனான். 

கட் பண்ணா, ரெண்டு பேரும் பவித்ரா அப்பா முன்னாடி அவங்களோட ரைஸ் மில்ல நின்னுட்டு இருந்தாங்க. பவித்ராவோட அப்பா பார்க்க, பழைய வில்லன் செந்தாமரை மாதிரியே இருந்தாரு. அவரு கண்ண உருட்டி உருட்டி, ”என் பொண்ண கழுதைக்கோ.. சாப்ட்வேர் இன்ஜினியருக்கோ.. கல்யாணம் பண்ணி வெச்சாலும் வெப்பனே ஒழிய.. உனக்கு கட்டி வெக்க மாட்டன்”னு பழைய வில்லன் டயலாக்கை பேசி முடிச்சாரு. அடுத்த செகண்ட் கோமல் அண்ணாமலை ரஜினியா மாறி அவர பார்த்து, “நான் இப்ப டம்மி பீஸா இருக்கறதுதான உங்க பிரச்சனை.. இந்த நாள் உங்க அஞ்சு ரூபா டைரில குறிச்சு வெச்சுக்குங்க. இன்னும் ரெண்டு வருஷத்துல உங்கள விட பணம், பேர், புகழ் சம்பாதிச்சு.. கெத்தா இதே இடத்துல ஆடி கார்ல வந்து இறங்கி உங்க பொண்ண கேக்கறன்.  அப்ப எனக்கு உங்க பொண்ண குடுங்க.. அப்படி நான் வரல, உங்க பொண்ண நீங்க அமெரிக்க மாப்பிள்ளைக்கே கட்டி வெச்சுடுங்க” அப்படின்னு கோமல் வீரமா வசனம் பேசி தொடையை தட்டி திரும்பி ஸ்லோமோஷன்ல வாக் பண்ண ஆரம்பிச்சான். 

பவித்ராவோட அப்பா, பவித்ரா, அங்க நெல்லு அரைக்க வந்த ரெண்டு பாட்டி எல்லாரும் வாயை ’ஆ’ன்னு தொறந்து கோமலையே பார்த்தாங்க. இப்படி ஒரு சம்பவம் நடக்கும்ன்னு தெரிஞ்சு இருந்தா, அனிருத் ஆர்மோனிய பொட்டிய தூக்கிட்டு வந்து ஆன் தி ஸ்பாட்ல பில்டப்பா மாஸ் RR போட்டிருப்பாரு. அது நடக்காதனால, கோமல் காக்கா கத்தற சத்தத்துலயே ஸ்லோமோஷன்ல ரைஸ் மில்ல விட்டு வெளியே போனான்.

வெளில வந்ததும், கோமலுக்கு எங்க போறதுன்னு ஒரே குழப்பம். சவால் விட்டுட்டு வந்த வேகத்தோட அப்படியே நடக்க ஆரம்பிச்சான்.. “ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே..” பாட்டு அங்க எதோ ஒரு வீட்ல ஓடிட்டு இருந்துச்சு. கோமல் அப்படியே அதே பீலோட நடந்து தாராபுரம் பஸ் ஸ்டாண்டே வந்துட்டான். அங்க ஒரு கடையில வாழைக்காய் பஜ்ஜி போட்டுட்டு இருந்தாங்க. நடந்து வந்த டயர்ட்ல கோமல் ரெண்டு பஜ்ஜிய வாங்கி பேப்பர்ல எண்ணெய் புழிஞ்சான். கையில வந்த எண்ணெய வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு தலைல தேய்ச்சுட்டே பஜ்ஜி சாப்பிட ஆரம்பிச்சான். 

சாப்பிடும்போது, எண்ணெய் பிழிஞ்ச பேப்பரை பாத்தான். அதுல சனிப்பெயர்ச்சி பலன்கள் போட்டு இருந்துச்சு. கோமல் அவனோட சிம்ம ராசிக்கு என்ன போட்டு இருக்குன்னு பார்த்தான். நூத்துக்கு நாப்பது மார்க் குடுத்திருந்தாங்க. உள்ள படிச்சு பார்த்தா, கோமலுக்கு ரெண்டு வருஷத்துல ரெண்டாயிரம் கண்டம் இருக்குன்னு போட்டு இருந்தான். அவசரப்பட்டு ஆவேசமா பேசிட்டு வந்துட்டமோன்னு, அவனுக்குள்ள ஒரு நடுக்கம் வந்துச்சு. பவித்ராவ மைண்ட்ல கொண்டுவந்து பார்த்தான். அடுத்த செகண்ட், அந்த பேப்பரையும் அவன் மனசுல வந்த பயத்தையும் தூக்கி குப்பை தொட்டில போட்டான். 

சென்னைக்கு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணி பஸ்ஸ தேடும்போது, அங்க கோனேரிப்பட்டி போற மினி பஸ் நின்னுட்டு இருந்துச்சு. கோமல் மனசுல லைட்டா ஒரு தடுமாற்றம். அப்பா அம்மாவ பார்த்து ரொம்ப மாசம் ஆயிடுச்சு. போய் ஒரு எட்டு பாத்துட்டு போயிடலாமான்னு யோசிச்சான். கடைசியா அவங்கம்மா விளக்கமாற எடுத்துட்டு துரத்துனது ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்பா மூஞ்சி அனகோண்டா மாதிரி அவன் முன்னாடி குளோஸ் அப்ல வந்து நின்னுச்சு. கோமல் கன்ப்யூஸ் ஆகி, இன்னொரு பஜ்ஜி சாப்பிட்டான்.

பஜ்ஜி சாப்பிட்டதும் மனசு கொஞ்சம் தெளிவாச்சு. மைண்ட் கொஞ்சம் பிரஷ் ஆச்சு. அப்பா, அம்மாவ பார்க்கணும். ஆனா நான் பார்க்கறத அவங்க பார்த்துடக்கூடாதுன்னு முடிவு பண்ணான். மினிபஸ்ல ஏறி ஊர் முனைல இருக்கற தண்ணி டேங்க் பக்கத்துல இறங்குனான். இறங்குனதும் தண்ணி டேங்க் மேல ஏறிப்போய் படுத்துட்டான். இருட்டறதுக்காக கோமல் வெயிட் பண்ணிட்டே டேங்க் உச்சில படுத்து இருந்தான். அவ்ளோ உயரத்துல இருந்து பார்க்கும்போது மொத்த ஊரும் தெரிஞ்சுது. நாலு தெரு தள்ளி இருக்கற அவன் வீடு கூட லைட்டா தெரிஞ்சுது. அப்படியே பார்த்துட்டே ஊர் புள்ளையார் கோவில பாத்தான். நாலு பேரு உட்கார்ந்து தாயம் விளையாடிட்டு இருந்தாங்க. ’ச்சை.. இந்த மாதிரி ரெஸ்பான்ஸிபிலிட்டி இல்லாத சிட்டிசன்ஸ்தான் நம்ம நாட்டோட வளர்ச்சியவே கெடுக்கறாங்க’ன்னு அவனுக்குள்ள முணுமுணுத்துக்கிட்டான். 

’1000 அடி ஆழ்துளை குழாய்ல கிடக்கற நம்ம வாழ்க்கை ரெண்டு வருஷத்துல இந்த டேங்க் உயரத்துக்கு வரணும், பவித்ராவ கல்யாணம் பண்ணனும். இதே தண்ணி டேங்க் பக்கத்துல, இந்த டேங்க விட உயரமா வீடு கட்டணும்’னு கோமல் யோசிச்சுட்டே படுத்து இருந்தான். சவால் விட்டுட்டு வந்த டயர்ட்ல, பாவம் அப்படியே தூங்கிட்டான். 

எந்திரிச்சு பார்த்தா, மணி மிட் நைட் ரெண்டு. கோமலுக்கு கொலைப்பசி. டேங்க்ல இருந்து கொஞ்சம் தண்ணி மொண்டு குடிச்சான். மூஞ்சில கர்ச்சீப் கட்டிட்டு, கீழ இறங்கி நேரா வீட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சான். தெருவுல இருந்த ரெண்டு மூணு நாய்ங்க லைட்டா குலைக்க ஆரம்பிச்சுது. கோமல் கர்ச்சீப்ப அவுத்து மூஞ்சிய காட்னதும், “அட இவனா “ அப்படிங்கற மாதிரி பாத்துட்டே, எல்லாம் சைலண்ட் மோடுக்கு போய் தூங்க ஆரம்பிச்சதுங்க. கோமல் கொஞ்சம் நிம்மதியா வீடு வந்து சேர்ந்தான். 

வாசல்லயே அப்பா கட்டில போட்டு படுத்திருந்தாரு. கோமல் அவர் பக்கத்துல போய் நின்னுட்டு, மூஞ்சிய ரெண்டு நிமிஷம் உத்து பார்த்தான்.  மனுசன் என்னதான் காறி துப்புனாலும், ஸ்கூல் படிக்கும்போது டெய்லியும் எலந்த மிட்டாய் வாங்க எட்டணா காசு குடுத்தது எல்லாம் கோமலுக்கு மைண்ட்ல வந்து..  எமோஷன்ல அது கண்ணீரா மாறி ஒரு சொட்டு கண்ணீர் அப்படியே ஸ்லோமோஷன்ல தரைல விழுந்துச்சு. கோமல் கண்ணை துடைச்சுட்டே திண்ணைல படுத்து இருந்த அம்மாவ பார்த்தான். அம்மா சும்மா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாங்க. அதே எமோஷனல் பீலோட,அம்மா கால லைட்டா தொட்டு, “அம்மா நான் போட்ட சவால்ல ஜெயிக்கணும்.. என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க..”ன்னு  மானசீகமா ஒரு ஆசி வாங்குனான். 

சில எமோஷனல் நிமிடங்களுக்கு பிறகு, கோமல் கிளம்பலாம்னு முடிவு பண்ணி திரும்பும்போது, மறுபடியும் வயிறு “டேய்.. நைட்டு நீ டிபனே துண்ணலடா”ன்னு அவனுக்கு ஞாபகப்படுத்துச்சு. கோமல் யோசிச்சான். அம்மா நைட்டு பண்ணது எப்படியும் மிச்சம் இருக்கும். லைட்டா சாப்பிட்டு போயிடலான்னு நினைச்சு,  சைலண்டா கிச்சனுக்குள்ள நுழைஞ்சான். உள்ள லைட்ட போட்டு பார்த்தா, எல்லா குண்டாவும் பளபளன்னு வெலக்கி வெச்சு இருந்தது. 

’அம்மா.. என்னம்மா ஆச்சு உங்களுக்கு? ஏம்மா, எதுவும் மிச்சம் வெக்காம கழுவி வெச்சீங்க’ன்னு அவனுக்குள்ள ஒரு கவிதை சொல்லிட்டே கிச்சன்ல தேடுனான். ஒரு நூடுல்ஸ் பாக்கெட் இருந்துச்சு. நூடுல்ஸ் பண்ண 2 மினிட்ஸ்.. சாப்பிட 3 மினிட்ஸ்.. 5 மினிட்ஸ்ல வேலைய முடிச்சுட்டு கிளம்பிடலான்னு நினைச்சு நூடுல்ஸ் பண்ணி சாப்பிட்டான். 

மிட் நைட் மசாலா பார்க்கற டைம்ல நூடுல்ஸ் பண்ணி சாப்பிட்டதால, கோமலுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் ஓய்வு தேவைப்பட்டுச்சு. கோமல் கிச்சன்லயே உட்கார்ந்தான்; அப்படியே தூங்கிட்டான்.

கட் பண்ணா, காலைல 5 மணி. பால் கறக்க எந்திரிச்ச அப்பா தண்ணி குடிக்கலான்னு கிச்சனுக்குள்ள வந்து பார்த்தா.. கோமல் குறட்டைவிட்டு தூங்கிட்டு இருந்தான். பக்கத்துல அவன் சாப்பிட்ட நூடுல்ஸ் ப்ளேட் இருந்துச்சு. கோமல் திரும்பிப் படுத்து இருந்ததால, அப்பாவுக்கு அவன் மூஞ்சி தெரியல. ’எவனோ களவாணிப்பய வீடு பூந்து திருட பார்த்து இருக்கா’ன்னு நினைச்சுட்டு, அப்பா சைலண்டா வெளிய வந்தாரு. ஒரு நல்ல விறகுக்கட்டையா பார்த்து எடுத்துட்டு வந்து, படுத்திருந்த கோமல் முதுகுல ஓங்கி ’பொளீர்’ன்னு இடி மாதிரி ஒரு அடிய இறக்குனாரு. கோமல் ’ஆஆஆஆஆஆஆ..’ன்னு வலியில கதறுனான். அவன் கதறல் டால்பி அட்மாஸ் எபெக்ட்ல ரணகளமா கேட்க.. கோனேரிப்பட்டியே அடுத்த செகண்ட் அவன் வீட்டு வாசல்ல நின்னுச்சு! 

கோமலின் கலைப்பயணம் தொடரும்...   

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles