கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 15

Saturday, October 15, 2016

ஒயின்ஷாப்ல மட்டையாகி கிடந்த கோமல் போதை தெளிஞ்சு கண்ணு முழிச்சு பார்க்கும்போது, கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல ப்ளாட்பார்ம்ல படுத்துக் கிடந்தான். வெயில் சுளீர்னு அடிச்சுது. அவன் பக்கத்துல, ஒரு நாய் இவனையே பார்த்துட்டு படுத்து இருந்துச்சு. கோமலுக்கு ஒரு செகண்ட் ஒண்ணும் புரியல. “இப்ப நான் எங்க இருக்கேன்” அப்படின்னு அவனுக்கு அவனே கேட்டுகிட்டான்.

பக்கத்துல படுத்து இருந்த நாய், அவனைப் பார்த்து லைட்டா ஸ்மைல் பண்ணுச்சு. கோமல் அதை முறைச்சுட்டே திரும்பிப் பார்த்தா காந்திபுரம் பஸ் நிலையம் . கோயம்புத்தூர்னு ஒரு போர்டு இருந்துச்சு. கோமல் அதைப் பார்த்ததும், குழப்பத்தோட உச்சத்துக்கே போனான். 

‘வடபழனி சூர்யா ஒயின்ஷாப்ல இருந்து எப்படி நான் கோயம்புத்தூர்க்கு வந்தேன்’னு யோசிச்சு பார்த்தான். ஒண்ணுமே புரியலை. ’தேவதாஸ் மாதிரி இப்படி ப்ளாட்பார்ம்ல நாய் கூட ஏன் படுத்து இருக்கேன்’னு யோசிச்சான், அதுவும் புரியலை. டக்குன்னு எந்திரிச்சு, அங்கிருந்த டீக்கடைக்கு வந்தான். கொஞ்சம் தண்ணி வாங்கி மூஞ்சிய கழுவிட்டு, ஒரு டீ சொல்லிட்டு அங்கிருந்த வாட்ச்ல டைம் பார்த்தா மணி 10. மாஸ்டர் டீ போட்டுட்டு இருக்கும்போது, பேண்ட் பாக்கெட்ல கையை விட்டு தேடிப் பார்த்தான். பர்ஸ் இல்ல. போனும் ஒரு 10 ரூபா நோட்டும் மட்டுந்தான் இருந்துச்சு. போனை செக் பண்ணா, பவித்ரா நம்பர்ல இருந்து 250 மிஸ்ட் கால் வந்து இருந்துச்சு. அதுக்குள்ள டீ வர , ’இவ எதுக்கு இத்தனை டைம் கால் பண்ணி இருக்கா’ன்னு யோசிச்சுட்டே டீயை குடிச்சுட்டு பாக்கெட்ல இருந்த ஒரே பத்து ரூபாய எடுத்துக் குடுத்தான். மீதி 2 ரூபாய டீக்கடை அண்ணாச்சி குடுத்தாரு. 

இப்ப கோமல் கையில 2 ரூபாயும், அவன் போனும்தான் இருந்துச்சு. போனை எடுத்து, கடைசியா பவித்ராகிட்ட இருந்து எத்தனை மணிக்கு கால் வந்திருக்குன்னு பார்த்தான். விடியக்காலைல மூணு மணிக்கு கால் பண்ணி, 13 நிமிஷம் 53 செகண்ட் பேசி இருக்கான்னு தெரிஞ்சுது. அதுக்கு முன்னாடி கால் ஹிஸ்டரிய செக் பண்ணா, நைட்டு 11 மணில இருந்து  மூணு மணிக்குள்ள 17 டைம் போன்ல பேசி இருந்தது தெரிய, கோமலுக்கு குடிச்ச டீ குடலுக்குள்ள பாய்ஸன் மாதிரி ஒரு மரண பயத்தை உண்டாக்குச்சு. 

என்ன நடந்துச்சு? பவித்ரா ஏன் என் கூட இவ்ளோ டைம் போன்ல பேசி இருக்கா? நான் எப்படி கோயம்புத்தூர் வந்தேன்? கோமல் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தான். ’ஒரு வேளை ஹேங்க் ஓவர் பார்ட் 4 கதை இதுவாதான் இருக்குமோ’ன்னு யோசிச்சான். அதைக் கண்டுபுடிக்கறதுக்கு முன்னாடி முதல்ல இங்க இருந்து போக பஸ்க்கு காசு ரெடி பண்ணணும்னு முடிவு பண்ணி, கோயம்புத்தூர்ல வொர்க் பண்ணிட்டு இருக்கற அவன் சித்தப்பா பையனுக்கு போன் அடிச்சான். ”ஸாரி.. நோ பேலன்ஸ்.. ப்ளீஸ் ரீசார்ஜ்”ன்னு ஒரு அழகான பொண்ணு வாய்ஸ் கேட்டுச்சு. கோமல் அசிங்கமா அந்த பொண்ணை திட்டிட்டே எக்ஸ்ட்ரா பேலன்ஸ் லோன் போடலாம்னு முடிவு பண்ணான். லோன் அப்படின்னு டைப் பண்ணி, மெசேஜ் அனுப்பிச்சான். உடனே “ஸாரி.. நீங்கள் ஆல்ரெடி இந்த லோனை வாங்கி விட்டீர்கள்”னு இன்ஸ்டண்டா ரிப்ளை வந்துச்சு. 

போதைல ஏர்டெல்காரங்கிட்ட எல்லாம் பேலன்ஸ் லோன் வாங்கினதை நினைச்சு கோமல் பப்பி ஷேமா பீல் பண்ணிட்டே, கஸ்டமர் கேருக்கு போன் அடிச்சான். 5 நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணதுக்கு அப்புறம், ஒரு பொண்ணு “வணக்கம்.. நான் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்”னு கேட்க, தான் கோயம்புத்தூர்ல மாட்டிக்கிட்டு இருக்கற டிராஜிடிய கொஞ்சம் டீடெய்லா சொல்லி, உடனே ’10 ரூபாய்க்கு டாப்அப் லோன் வேணும்’னு கேட்டான். அதுக்கு அந்த பொண்ணு “ஸாரி சார்.. நீங்க ஏற்கனவே ஒரு டைம் அத ஆக்டிவேட் பண்ணிட்டீங்க. திரும்ப பண்ணமுடியாது“ அப்படின்னு அன்பா சொல்லுச்சு. 

கோமல் ”ப்ளீஸ் என் சிச்சுவேஷன புரிஞ்சுக்குங்க”ன்னு குழந்தை மாதிரி அடம்புடிச்சு பாத்தான். அந்த பொண்ணு ஒரே டயலாக்க திரும்ப திரும்ப அன்பா சொல்லிட்டே இருந்துது. கோமல் கடுப்பாகி “சரிங்க.. நீங்க லோன் தர வேணாம்.. என் சித்தப்பா பையன் நம்பர் தர்றன்.. அவனுக்கு போன போட்டு, நான் காந்திபுரம் பஸ்ஸ்டாண்டுல கொங்கு புரோட்டா கடை வாசல்லயே நிக்கறன்னு சொல்லி கொஞ்சம் வரச் சொல்லுங்க”ன்னு ஒரு பணிவான வேண்டுகோள் வெச்சான். ”ஸாரி சார்.. இந்த சேவை எல்லாம் நாங்க செய்யமாட்டோம்”ன்னு சொல்லிட்டு போனை வச்சுடுச்சு. கோமல் கோபமா, “கேர் இல்லாத கஸ்டமர் கேர்”ன்னு திட்டிட்டு, அடுத்து என்ன பண்ணலான்னு  திங்க் பண்ணான்.

கால் பண்ணதான முடியாது. மெசேஜ் பண்ணலாம்ன்னு தோண, சித்தப்பா பையனுக்கு ’ப்ளீஸ் கால்..’ன்னு ஒரு மெசேஜ் அனுப்புனான். பத்தரை மணிக்கு  அனுப்புன மெசேஜை பார்த்துட்டு, அவன் 11 மணிக்கு போன் அடிச்சான். கோமல் அவன்கிட்ட விசயத்தைச் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிஷம் சித்தப்பா பையன் கோமல் முன்னாடி ஆஜர் ஆனான். கோமலுக்கு 4 பரோட்டா வாங்கி குடுத்து, ரூமுக்கு கூட்டிட்டு போய் குளிக்க வச்சு, கையில 1000 ரூபாய் பணத்தையும் குடுத்து அனுப்பி வச்சான்.

கோமல் முதல் வேலையா போனை ரீசார்ஜ் பண்ணி, பவித்ராவுக்கு போன் அடிச்சான். அவ போனை எடுக்ககை. தொடர்ந்து எழுபத்து ஏழாவது டைம் ட்ரை பண்ணும்போது, பவித்ரா போனை எடுத்து கோபமா “எதுக்கு போன் பண்ண.. அதான் நமக்குள்ள ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்ட இல்ல.. நான் அவ்ளோ டைம் போன் பண்ணியும் நீ போன எடுக்கல இல்ல.. இப்ப எதுக்கு பண்ற? விட்ரு.. இனி நீ யாரோ, நான் யாரோ..” அப்படின்னு மூச்சு உடாம பேசி முடிக்க.. கோமல் அவகிட்ட “அதெல்லாம் இருக்கட்டும்.. நைட்டு நீ என்கிட்ட என்ன பேசுன? நான் எப்படி கோயம்புத்தூர் வந்தன்”னு ஒரே கேள்விதான் கேட்டான். அதுக்கு பவித்ரா “உன் பிரண்டு கிஷோர போன் பண்ணி கேளு”ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டா. 

கோமல் உடனே கிஷோருக்கு போன் அடிக்க.. கிஷோர் போன அட்டெண்ட் பண்ணதும், “என்ன நண்பா.. பவித்ரா அப்பாவ தூக்கிட்டீங்களா”ன்னு ஒரு கேள்விய கேட்டான். கோமல் குழப்பமாக, ”என்னடா சொல்ற.. அவங்கப்பாவ ஏண்டா நான் தூக்கணும்? என்ன நடந்துச்சு”ன்னு கேட்டான். 

கிஷோர் சொல்லச் சொல்ல.. சீன் அப்படியே, சூர்யா ஒயின்ஷாப்ல நைட்டு 11 மணில ஓப்பன் ஆச்சு. கோமல் அங்க மட்டையாகிக் கிடக்க, போனை உடைச்ச பவித்ரா அவங்கப்பா போன்ல சிம் போட்டு மறுபடியும் கால் பண்ண.. அதே பார் அட்டெண்டர் போன அட்டெண்ட் பண்ணி ”கோமல் இன்னும் எழுந்திரிக்கல”ன்னு சொன்னாரு. பவித்ரா டென்ஷனாகி “அவன் மூஞ்சில ஆசிட்ட ஊத்தியாவது எழுப்புங்க”ன்னு சொல்ல.. பார் அட்டெண்டர் உடனே ஒரு குடம் தண்ணிய கோமல் மூஞ்சில ஊத்தி, ஒரு வழியா கோமல எழுப்பி போனை அவன்கிட்ட குடுத்தாரு. ”ஏண்டா குடிச்ச”ன்னு பவித்ரா கேட்க.. கோமல் புல் போதைல பேசறது யார்ன்னு கூட தெரியாம “ஹலோ.. யார் பேசறது”ன்னு ஒரே டயலாக்க 10 தடவ திருப்பி திருப்பி உளற.. அந்த செகண்ட் ரெண்டு பேருக்கும் போன்ல பைட் ஸ்டார்ட் ஆச்சு. 

”சண்டை போட்டு போட்டு உனக்கு அடிச்ச போதை எல்லாம் தெளிய, நீ எனக்கு போன் பண்ணி வரச் சொன்ன.. நான் வந்ததுக்கு அப்புறம், நாம ரெண்டு பேரும் கோயம்பேடு போய் ப்ளாக்ல சரக்கு வாங்கிட்டுவந்து அடிச்சோம். அப்ப உன் ஆள் மறுபடியும் போன் அடிச்சா, டென்ஷன்ல நாம மறுபடியும் போய் சரக்கு வாங்கிட்டு வந்து அடிச்சோம். ஒரு பாயிண்ட்ல உன் ஆள் ஏதோ சொல்ல, ’என்னடி, உங்கப்பன் பெரிய இவனா.. இப்பவே கிளம்பி வர்றண்டி.. உங்கப்பன தூக்கறண்டி’ன்னு சொல்லிட்டே, நீ அந்த வழியா வந்த கோயம்புத்தூர் பஸ்ல ஏறிட்ட. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு உனக்குத்தான் தெரியும்னு ப்ளாஷ்பேக்கை சொல்லி முடிச்சான். 

’போதைல பவித்ரா தூக்க வந்து இருந்தா கூட ஓகே. அவங்கப்பன ஏண்டா தூக்க வந்தன்’னு போனை கட் பண்ணிட்டு கோமல் யோசிச்சான். ’பிரச்சனைய நானே பில்லி சூனியம் வச்சு வர வச்சிருக்கேன். என் காதலுக்கு நானே சங்கு ஊதிட்டன் போல இருக்கேன்’னு பீல் பண்ணிட்டே, கோமல் பவித்ராவுக்கு போன் அடிச்சான். பவித்ரா போனை அட்டெண்ட் பண்ணதும், கோமல் போன்லயே கால்ல விழுந்தான். நடுரோட்ல அவன் கெஞ்சுனதை பார்த்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தவங்களே கண் கலங்கிட்டாங்க. அதுல ஒரு ஆன்ட்டி, வாணி ராணி பார்த்து கூட அவ்ளோ அழுது இருக்குமான்னு தெரியாது. சும்மா கதறி கதறி அழுதாங்க. போன்ல இருந்த மொத்த பேலன்ஸ் போனாலும், பவித்ராவுக்கு கோமல் மேல இருந்த எக்ஸ்ட்ரீம் கோபத்தை அது பேலன்ஸ் பண்ணுச்சு. ஒரு வழியா பவித்ரா சமாதானம் ஆகி, அவனை உடனே கிளம்பி தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொல்ல, கோமல் சந்தோஷமா கிளம்புனான்.  

கட் பண்ணா, கோமல் தாராபுரம் பஸ் ஸ்டாண்டுல பவித்ரா முன்னாடி நின்னுட்டு இருந்தான். “நைட்டு பெரிய இவன் மாதிரி எங்கப்பாவ தூக்கறன்னு கிளம்பி வந்த, அப்புறம் ஏன் வரல”ன்னு கேட்க.. கோமல் பாவமா மூஞ்சிய வெச்சுட்டு “அதுக்குள்ள என் பர்ஸ யாரோ தூக்கிட்டாங்க செல்லம்… பஸ்க்கு காசு இல்ல , அதான் வரல”ன்னு சொல்ல.. பவித்ரா செல்லமா அவனை முறைச்சுட்டே “இனிமே ஜென்மத்துக்கும் குடிக்கவே மாட்டன்னு என் தலை மேல சத்தியம் பண்ணு”ன்னு பவித்ரா கேட்க , கோமல் அவ தலைல அடிச்சு சத்தியம் பண்ணி நைட்டு பண்ண பாவத்த கழுவி எறிஞ்சான். 

பவித்ரா அவனுக்கு வழக்கம்போல பொறி உருண்டை வாங்கி குடுக்க, ரெண்டு பேரும் சந்தோஷமா பஸ் ஸ்டாண்டுல பொறி உருண்டை சாப்பிட்டுட்டு இருக்கும் போது, கோமலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து கால் வந்துச்சு. போனை அட்டெண்ட் பண்ணதும், எதிர்முனைல பவித்ராவோட அப்பா “ஏண்டா.. உன் பொண்ண லவ் பண்றன்.. காலைல வர்றன்.. உன்னையும் தூக்கறன்.. உன் பொண்ணையும் தூக்கறன்னு போன் பண்ணி சொன்னே! இன்னும் ஆளை காணோம். நான் உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கன். எப்ப வருவ? ஐ யம் வெயிட்டிங்” அப்படின்னு சொல்ல.. கோமல் ஷாக் ஆகி, பவித்ராவை பார்த்தான்.  கோமலின் கலைப் பயணம் தொடரும்...  

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles