கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 17

Tuesday, November 15, 2016

கோமல் அலறுன சத்தம் கேட்ட மொத்த ஜனமும் வீட்டின் முன்னால் நிற்க, அம்மா ஓடிவந்து கோமலை மடி மேல படுக்க வச்சுட்டு, அவன பார்த்து ”ஏண்டா கோமலு.. போனவாரம் கூட நாலு சோன் பப்டிய சக்கரை டப்பாக்குள்ள போட்டு வெச்சு இருந்தன்.. நீதான் வந்து தின்னுட்டு போனியா”ன்னு கொஞ்சம் கோபமா கேட்க, கோமல் வலியில துடிச்சுக்கிட்டே ஒரு முறை முறைச்சான்.

அப்பா கையில இருந்த விறகுக் கட்டைய கீழ போடாம, ’அத தின்னது நானு.. திட்டு வாங்கறது நீ, மகிழ்ச்சி!’ அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சாரு. 

 

கட் பண்ணா, கோமல் அடி வாங்குன இடத்துல மவுண்ட் எவரெஸ்ட் உயரத்துக்கு முதுகு வீங்கி இருந்துச்சு. அம்மா அதுக்கு மருந்து பூசிட்டு இருந்தாங்க. அப்பா அவன பார்த்து, “பெரிய டைரக்டர் ஆகிட்டுதான் திரும்ப வருவன்னு வாய் கிழிய பேசிட்டு போனாரு துரை.. இப்ப என்ன சொந்த வீட்லயே சோறு திருடி திங்கற நிலமைக்கு வந்துட்டாரா?” என்று நக்கலா கேட்க, கோமல் உடனே அம்மாவை பார்த்து “அம்மா நான் நூடுல்ஸ்தான் தின்னன்.. சோறு இல்ல”ன்னு சொன்னான்.  “எதோ தின்ன இல்ல.. சீக்கிரம் கிளம்பற வழிய பாரு”, அப்பா சொல்லிட்டு விறகுக்கட்டையோட வெளிய போனாரு. 

 

கோமல் வீங்குன முதுகோட கட்டில்ல படுத்து இருந்தான். ஊர் மக்கள் எல்லாம் பாட்ஷா பாய பார்க்க வந்த மாதிரி வரிசையா வந்து கைக்கு முத்தம் குடுக்கறதுக்கு பதிலா, முதுகுல இருந்த மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்த தொட்டு பார்த்துட்டு போனாங்க. கோமல் தன்னோட நிலமைய நினைச்சு பீல் பண்ணிக்கிட்டே, பவித்ராவுக்கு போன் அடிச்சு நடந்த சம்பவத்த ஒரு ஹரி பட டீஸர் மாதிரி பாஸ்ட்டா சொல்லி முடிச்சான். பவித்ரா உடனே பீல் பண்ணிட்டே, “ரொம்ப.. வீங்கிடுச்சாடா.. அத கொஞ்சம் செல்பி எடுத்து அனுப்பேன்..” சொல்லி முடிக்கறதுக்குள்ள கோமல் போன ’கட்’ பண்ணிட்டான். ’சவால் விட்டுட்டு வந்த முத நாளே முதுகு வீங்கி படுத்து இருக்கன்.. பீல் பண்ணாம செல்பி அனுப்ப சொல்லுது எரும’ன்னு கோமல் கடுப்பானான். 

 

சம்பவம் நடந்து ரெண்டு நாள் முடிஞ்சிருந்தது. கோமல் முதுகுல இருந்த வீக்கம் எல்லாம் காவிரி மாதிரி வத்திப்போய் ப்ளாட்டா மாறிடுச்சு. கோமல் இப்ப கிளம்பறதுக்கு தயார் ஆனான். அம்மாகிட்ட விசயத்த சொல்ல, பெத்த பாசத்துக்கு அவங்க ஒரு 1000 ரூபாய கையில குடுத்து “இனிமேலாவது புத்தியா பொழைச்சுக்கடா கோமல்”னு சொல்லி அனுப்புச்சாங்க. கோமல் பஸ் ஏற போக, அப்பா பெட்டிக்கடைல உட்கார்ந்து பீடி குடிச்சுட்டே “டேய்.. இன்னொரு தடவ நடுராத்திரில வந்து சட்டிய உருட்டுன.. அடுத்து உலக்கைலதான் அடி உழுவும் பாத்துக்க”ன்னு ஒரு வார்னிங் குடுத்து அனுப்புனாரு. 

 

கோமல் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தான். பவித்ரா அங்க அவன மீட் பண்ணி, வழக்கம் போல பொறி உருண்டை வாங்கி சாப்பிட்டுட்டு “கோமல் ரெண்டு வருஷத்துல ஆல்ரெடி ரெண்டு நாள் வேஸ்ட்டா போச்சு.. டோண்ட் வேஸ்ட் டைம்.. உன்னோட கவுண்டவுன் ஆல்ரெடி ஸ்டார்ட் ஆகி ஓடிட்டு இருக்கு.. நீ பாட்டுக்கு கவுண்டமணி காமெடி பாத்துட்டு ஜாலியா இருந்துடாத, வர்ற ஆடி இல்லாம அடுத்த ஆடில நீ ஆடி கார்ல வந்து இறங்குவ.. நாம ஆவணி மாசம் கல்யாணம் பண்றோம், ஓக்கே!” அப்படின்னு பவித்ரா வேகமா சொல்லி முடிக்க, அதே வேகத்தோட கோமல் ’தம்ப்ஸ் அப்’ காட்டிட்டு பஸ் ஏறுனான். பஸ் கிளம்புச்சு. இப்ப கோமல் கண்ல ஒரு பயர் தெரிஞ்சுது. பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருந்தவன், அந்த பயர்லயே பீடி பத்த வெச்சுக்கிட்டான். 

 

80 கிலோ மீட்டர் ஸ்பீட்ல பஸ் போயிட்டு இருந்துச்சு. கோமலுக்கு அதுவே ரொம்ப ஸ்லோவா பீல் ஆச்சு. ’லைப்புக்கு கவுண்டவுன் ஓடிட்டு இருக்கு.. இந்த ட்ரைவர் என்னடான்னா இவ்ளோ ஸ்லோவா வண்டி ஓட்டிட்டு இருக்கா’ன்னு டென்ஷன் ஆனான். நேரா ட்ரைவர்கிட்ட போய் “அண்ணே.. என் லைப்ல இனி வர்ற ஒவ்வொரு நாளும்.. ஏன் ஒவ்வொரு நொடியும் ரொம்ப முக்கியம். ஏன்னா, அதுலதான் நான் என் ப்யூச்சர செதுக்கணும், அதனால கொஞ்சம் பாஸ்ட்டா போங்க”ன்னு சொல்ல ட்ரைவர் அவன முறைச்சிக்கிட்டே, “தம்பி.. பஸ்ல பிரேக் இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு இருக்கு… பாஸ்ட்டா போனா மொத்தமா மேல போயிடுவ, பரவாயில்லயா?”ன்னு நக்கலா கேட்க, கோமல் சைலண்டா வந்து சீட்ல உட்கார்ந்தான். 

 

கோமலுக்கு அவன தவிர இந்த உலகத்துல எல்லாமே ஸ்லோமோஷன்ல போற மாதிரி பீல் ஆச்சு. அவன வெறுப்பேத்தற மாதிரி, பஸ் இப்ப ஒரு ரோட்டோர ஹோட்டல்ல வந்து நின்னுச்சு. கண்டக்டர் எல்லாரையும் பார்த்து, “பஸ் ஒரு 20 நிமிஷம் நிக்கும்.. டீ, காபி , டிபன் சாப்பிடறவங்க எல்லாம் சாப்பிட்டுக்குங்க”ன்னு சொன்னாரு. கோமல் டென்ஷன் ஆகி “அண்ணே… எல்லாம் வீட்லயே சாப்பிட்டுட்டு வந்துட்டாங்க.. நீங்க பஸ்ஸ எடுக்க சொல்லுங்க”ன்னு சொல்ல, கண்டக்டர் அவன முறைச்சுட்டே இறங்கி போயிட்டாரு. ரெண்டு வருஷத்துல இருவது நிமிஷம் இப்படி வேஸ்ட்டா போறத நினைச்சு கோமல் கொலவெறி ஆனான். அந்த ஆதங்கத்துல பக்கத்துல உட்கார்ந்து இருந்த ஒரு பெருசுகிட்ட, “என்ன தாத்தா இது… இவ்ளோ பொறுப்பில்லாம இருக்காங்க.. லைப்ல 20 நிமிஷம் வேஸ்ட்டு தாத்தா”ன்னு கோமல் சொல்ல.. அவரு திரும்பி, “ஏண்டா தம்பி.. நீ என்ன ஆறு மாசத்துலயே அவசரமா பொறந்துட்டியா.. இவ்ளோ அவசரப்படற… அப்படி டைம வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு நினைக்கறவன் ஏரோப்ளேன் புடிச்சு போக வேண்டியதுதான? எதுக்கு பஸ்ல வந்து எங்கள சாவடிக்கற”ன்னு கேட்டாரு. கோமல் அதுக்கப்புறம் வாயே தொறக்கல. 

 

அரை மணி நேரம் கழிச்சு பஸ் கிளம்புச்சு. கிருஷ்ணகிரிய தாண்டும்போது, பஸ் பஞ்சர் ஆக கோமல் நொந்து போனான். காலம் இப்ப அவன் கண்ணுக்கு முன்னாடி ஒலியின் வேகத்த விட வேகமா போயிட்டு இருந்துச்சு. ஆனா பஞ்சம் ஒட்டற வேலை நத்தை வேகத்துல நடந்துட்டு இருந்துச்சு. 3 மணிக்கு பஞ்சர் ஆன பஸ்ஸ காலைல 8 மணிக்கு பஞ்சர் ஒட்டி மத்தியானம் ரெண்டு மணிக்கு கொண்டுவந்து கோயம்பேட்ல இறக்கிவிட்டாங்க. 

 

கட் பண்ணா, கோமல் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் முன்னாடி உட்கார்ந்து இருந்தான். மாஸ்டர்கிட்ட நடந்த எல்லா மேட்டரையும் சொல்லி முடிக்க, மாஸ்டர் அவன பார்த்து “விட்டதே விட்ட, அது ஏண்டா ஆடி கார்ன்னு சவால் விட்ட? ஒரு ஹோண்டா சிட்டி.. ஐ20.. அந்த ரேஞ்சுக்கு விட்டிருந்தா, கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும் இல்ல”ன்னு கேட்க, கோமல் உடனே “மாஸ்டர் ஒரு வேகத்துல பேசிட்டன். இந்த சவால்ல நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்”னு வேண்டுகோள் வச்சான். ஸ்டண்ட் மாஸ்டர் கொஞ்சம் யோசிச்சுட்டு, “கண்ணன் மறுபடியும் படம் பண்ண கொஞ்சம் டைம் ஆகும். இப்ப எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் படம் ஆரம்பிக்கிறான். 6 மாசத்துல படம் முடிஞ்சுடும். நீ அதுல வொர்க் பண்ணு. அது முடிஞ்சதும் தனியா படம் பண்ண ட்ரை பண்ணு”ன்னு அட்வைஸ் குடுத்தாரு. கோமல் யோசிச்சு பார்த்துட்டு, ’ஓக்கே’ன்னு சொன்னான்.

 

கட் பண்ணா, மாஸ்டர் சொன்ன அந்த டைரக்டர் ஆபிஸ்க்குள்ள நுழைஞ்சான் கோமல். ஹால்ல யாரும் இல்லாம இருக்க, கோமல் உள்ள எட்டிப்பார்த்தான். உள்ள இருந்து அனிருத் மாதிரி உருவத்துல, ஒல்லியா பாக்கறதுக்கு கொஞ்சம் தம்மாதூண்டு பையனா ஒருத்தன் வெளில வந்தான். 

 

அந்த பையன பாத்ததும் கோமல் “தம்பி.. டைரக்டர் விக்கிய பார்க்கணும்”ன்னு சொல்ல.. உடனே அந்த பையன் “நாந்தான் விக்கி”ன்னு சொன்னான். கோமல் ஒரு செகண்ட் ஜெர்க் ஆனான். ’ப்ளஸ் டூ படிக்கற பையன் மாதிரி இருக்கான்.. இவன் எப்படி டைரக்டர்’ அப்படின்னு யோசிச்சுட்டே, சமாளிப்பா ”சார்.. உங்கள பாக்கதான் வந்தன். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் அனுப்புனாரு”ன்னு சொன்னான். 

 

உடனே விக்கி “ஓ.. எனக்கு கால் பண்ணாரு.. நீங்கதானா பிரதர் அது?” விக்கி கேஷுவலா கேட்க.. உடனே கோமல் “ஆமா சார் “ அப்படின்னு அழுத்தமா சொன்னான். “நான் உங்கள விட சின்ன பையந்தான். நீங்க என்ன விக்கின்னே கூப்பிடலாம்”ன்னு விக்கி சொல்ல… கோமல் அந்த இடத்துலயே, ’விக்கி விக்கி’ அழுதான். விக்கி பதறிப்போய் “பிரதர்.. என்னாச்சு”ன்னு கேட்க, கோமல் கண்ணை தொடைச்சுட்டே “நீங்க வயசுல சின்ன பையனா இருந்தாலும், குணத்துல எங்கயோ போயிட்டீங்க”ன்னு சொன்னான். விக்கி “பிரதர்.. எதுக்கு இந்த பீலிங்க்ஸ்.. வாங்க ஜாலியா வொர்க் பண்ணுங்க”ன்னு சொல்லி, அவன் டீமுக்கு கோமலை அறிமுகப்படுத்தி வெச்சான். எல்லாருமே இருபது, இருபத்து மூணு வயசு பசங்க. அங்க, கோமல்தான் வயசான ஆளா பீல் பண்ணான். 

 

’பார்க்கறதுக்கு போன்ல செல்பி எடுக்கற காலேஜ் பசங்க மாதிரி இருக்கானுங்க. இவங்க எல்லாம் சேர்ந்து படம் எடுப்பாங்களா?  நாம தப்பான இடத்துல வந்து மாட்டிட்டமோ’ன்னு பீல் பண்ணிட்டு இருக்கும்போதே, டீம்ல இருந்த ஒரு பையன் “ட்யூட்… கமான்.. லெட்ஸ் கோ பார் டீ “அப்படின்னு சொல்லி தோள்ல கை போட்டான். அந்த செகண்ட்ல இருந்து கோமல் லைப்ல புது அத்தியாயம் தொடங்குச்சு. கோமலின் கலைப்பயணம் தொடரும்..

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles