கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 10

Saturday, July 30, 2016

எல்லோரும் கேம்பஸ் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து படுக்கும்போது, மணி 12 ஆகிவிட்டது. படம் கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கினார் கண்ணன். காலையில் எழுந்து அவர் மொபைலைப் பார்த்தார். புரொடியூசர் ஆபிஸில்  இருந்து, 15 மிஸ்ட் கால் வந்திருந்தது. கண்ணன் அலறி அடித்துக்கொண்டு, அந்த கம்பெனி மேனேஜருக்கு போன் அடித்தார். போனை எடுத்ததும், “கண்ணன் உடனே ஆபிஸ் வாங்க.. புரொடியூசர் உங்கள பார்க்கணும்னு சொன்னாரு” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்  மேனேஜர். 

கண்ணன் குழப்பத்துடன் அவசரமாகக் குளித்துவிட்டு கிளம்பினார். அப்போது கோமல் ரெடியாக நிற்பதைப் பார்த்து, அவனையும் கூட்டிக்கொண்டு புரொடியூசர் ஆபிஸூக்குச் சென்றார். இரண்டு பேரும் அந்த ஹாலில் இருந்த சோபாவில் கொஞ்சம் டென்ஷனுடன் உட்கார்ந்திருந்தார்கள். அதனை சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்தார் புரொடியூசர் ரத்னம். கோமல் மூஞ்சியைப் பார்த்ததும், அவருக்குள் கொலைவெறி ஏறியது. கோபத்துடன் இரண்டு பேரையும் உள்ளே வர சொன்னார். உள்ளே நுழைந்ததும் இரண்டு பேரும் ’வணக்கம்’ சொல்ல, புரொடியூசர் கோமல் கைகாட்டி “இந்த பையன் யாரு” என்று கண்ணனிடம் கேட்டார். 

 

”என் அஸிஸ்டெண்ட்தான் சார்.. புதுசா ஜாயின் பண்ணி இருக்கான்” என்று கண்ணன் சொல்ல, புரொடியூசர் ரத்னம் கோமலை முறைத்துப் பார்த்தார்.  கண்ணனைப் பார்த்து, “ நான் இந்த படம் பண்ணல கண்ணன். நீங்க வேற யாராவது புரொடியூசர் பாத்துக்குங்க” என்று சொல்ல, மெட்ரோ ட்ரெயின் தன் மீது பாய்ந்தது போல அதிர்ச்சியில் உறைந்து நின்றார் கண்ணன். கோமலுக்கும் அந்த வார்த்தை அதிர்ச்சியைத் தர, அவனும்  ஷாக் அடிச்ச சாமுராய் மாதிரி சரிந்து பார்த்தான். 

 

கண்ணில் லேசாகக் கண்ணீர் எட்டிப்பார்க்க, கண்ணன் கொஞ்சம் கலங்கிய குரலில், “என்ன சார் ஆச்சு? ஏன் பண்ணலன்னு சொல்றீங்க” என்று புரொடியூசரைப் பார்த்துக் கேட்டார்.

 

கோமலைக் கைகாட்டிய புரொடியூசர், “இந்தப் பையன் நேத்து என்ன பண்ணான்னு தெரியுமா?” என்று கேட்க, கண்ணன் கோமலைப் பார்த்துக் கொண்டே, “என்ன சார் பண்ணான்” என்று குழப்பத்துடன் திருப்பிக் கேட்டார். 

 

உடனே, இரவில் நடந்த சம்பவத்தை ஒரு ஷார்ட் பிளாஷ்பேக்காகச் சொல்லி முடித்தார் புரொடியூசர். அதைக் கேட்டதும், கண்ணன் கோபமாகத் திரும்பிப் பார்க்க, கோமலுக்குப் பயத்தில் கை, கால் எல்லாம் பிரபுதேவா ஸ்டைலில் பார்ட் பார்ட்டாக டான்ஸ் ஆட ஆரம்பித்தது . 

 

“நீ போதைல ரோட்ட ஒழுங்கா கிராஸ் பண்ணாததுக்கு, உன் அஸிஸ்டெண்ட் என் ஆடி காரை அட்டாக் பண்றான் . நீ அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸை கூட வெச்சிருக்கியா. இல்ல, ரவுடிப் பசங்கள கூட வெச்சிருக்கியா? உன்னை நம்பி எப்படி படம் தர்றது?”, புரொடியூசர் கோபமாகக் கண்ணனைப் பார்த்து கேட்டார். 

 

ரவுடி என்று சொன்னதைக் கேட்டதும், ’தன்னைப் போய் இப்படி தாவூத் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டாங்களே’ என்று கோமலுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அழுகையுடன், அப்படியே ரத்னம் காலில் விழுந்தான் கோமல்.

 

”சார்.. நீங்க நினைக்கற மாதிரி, நான் ரவுடி எல்லாம் இல்ல சார்… எட்டாவது படிக்கும்போதே, ரெண்டாவது படிக்கற பையன்கிட்ட அடி வாங்கியிருக்கேன். நேத்து தெரியாம போதைல எதோ பண்ணிட்டன் சார். என்னை மன்னிச்சுடுங்க. நான் பண்ண தப்புக்கு, கண்ணன் சாரை தண்டிச்சுடாதீங்க. நான் வேணும்னா, அவர்கிட்ட இருந்து வேலைய உட்டுப் போயிடறேன். ப்ளீஸ் சார்” என்று அழ.. அவனது கண்ணீர்  புரொடியூசர் காலில் பட்டு அவர் காலைக் கழுவியதும் இல்லாமல், அவன் பண்ண பாவத்தையும் கழுவிச் சென்றது. 

 

புரொடியூசர் கொஞ்சம் கோபம் தணிந்து, “இனிமே இப்படி நடக்காம பாத்துக்கங்க” என்ற எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தார். தான் பற்ற வைத்த நெருப்பை தானே அணைத்த சந்தோஷத்தில், கோமல் கொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தான். “டேய்! என் படம் முடியற வரைக்கும், நானே கம்பல் பண்ணாலும் நீ குடிக்க கூடாது. குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று கோமலிடம் கண்ணன் சத்தியம் வாங்கினார். 

 

அடுத்த நாள், ஆபிஸ் பூஜையுடன் கண்ணனின் படம் ஆரம்பமானது. அஸிஸ்டெண்ட் டைரக்டராக, கோமலின் சினிமா கேரியர் மறுபடியும் ஸ்டார்ட் ஆனது .  பவித்ராவுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னான் கோமல். பதிலுக்கு, வாட்ஸ் அப்பில் பத்து கிஸ் ஸ்மைலிகளை அனுப்பி வைத்தாள் பவித்ரா. ப்ரெஞ்ச் கிஸ்ஸை ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது போல, கோமல் அந்த முத்தத்தை எல்லாம் மனதில் ஸ்டோர் பண்ணி வைத்தான். அதனை, அவ்வப்போது எடுத்து தனக்குக் கொடுத்துக்கொண்டே, வேலை பார்க்க ஆரம்பித்தான். 

 

பொதுவாக, ஒரு சினிமா எடுப்பதில் பல கட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது ஸ்டோரி டிஸ்கஷன். ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு, இயக்குனருடன் இன்னும் சில துணை, இணை இயக்குனர்கள் உட்கார்ந்து பேசி.. பேசி.. அதனை சினிமாவுக்கு ஏற்ற மாதிரி முழுமையான கதையாக மாற்றுவதுதான் ஸ்டோரி டிஸ்கஷன். பெரும்பாலான படங்களின் டிஸ்கஷன், ஊட்டி மாதிரியான மலைப்பிரதேசங்களிலோ, இல்லை பாண்டிச்சேரியிலோ நடக்கும். 

 

டிஸ்கஸ் செய்வதற்கு எப்படி ஒரு கதையோட கரு முக்கியமோ, அதே மாதிரி சரக்கும் ரொம்ப முக்கியம். (பாண்டிச்சேரியில் பாதி விலையில் சரக்கு என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய அம்சம்). 

 

இரண்டு ரவுண்டு போட்டுவிட்டு காதல் கதை பேச ஆரம்பித்தால், ’அந்த குழந்தையே நீங்கதான் சார்’ என்கிற மாதிரி தொடங்கும் அந்தக் கதை, கடைசியில் ஆக்‌ஷன் கதையாக வந்து நிற்கும். இந்த மாதிரி டிஸ்கஷனில், கதையை விட அதிகமாக டிஸ்கஸ் செய்யப்படுவது மற்ற சினிமா பிரபலங்களின் பர்சனல் லைப் கதைகள்தான். குலேபகாவலி ஷீட்டிங்கில் ஹீரோயின் கிச்சடி சாப்பிட்டதில் இருந்து, புதிதாக வந்திருக்கும் ஹீரோயின் ஒரே கல்ப்பில் வோட்கா அடிப்பது வரை,  எல்லா கதைகளையும் பேசுவார்கள். லவ் சீன் பேச ஆரம்பித்து, விக்னேஷ்சிவன் - நயன்தாராவில் வந்து நிற்பார்கள். நல்ல ஆக்‌ஷன் சீன் பேச ஆரம்பித்தால், வம்பு நடிகர் பப்ல அடிதடி பண்ண சம்பவத்தில் மூழ்கிப்போவார்கள். இப்படிப் பல குவாட்டர், மேட்டர் கதைகளுக்கு மத்தியில், பேச வந்த கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி, அதனை ஒரு சினிமாவுக்கான கதையாக மாற்றுவதுதான் டிஸ்கஷன். பெரும்பாலான டிஸ்கஷன் இப்படித்தான் நடக்கும். 

 

டிஸ்கஷனைப் பொறுத்தவரைக்கும், நம்ம இயக்குனர்கள் மூன்று வகை. கதையை யாரிடமும் டிஸ்கஸ் பண்ணாமல், அவங்களே ரெடி பண்றவங்க முதல் வகை.  ஒரு கதையை ஓரளவுக்கு ரெடி பண்ணிட்டு, அதை மெருகேத்தறதுக்கும் மட்டும் டிஸ்கஷன் வைக்கறவங்க ரெண்டாவது வகை. ஒரு ஐடியாவை மட்டும் சொல்லி டிஸ்கஸன் பண்ணி பண்ணி, அடுத்தவங்களே வச்சே மொத்தக் கதையையும் ரெடி பண்ணிட்டு, எழுத்து - என்று வெட்கமே இல்லாமல் தன்னோட பேரை மட்டும் போட்டுக் கொள்பவர்கள் மூன்றாவது ரகம். 

 

இதில் கண்ணன் ரெண்டாவது வகை. பொதுவாக, முதல் பட இயக்குனர்கள் முடிந்தவரைக்கும் அவர்களின் கதையை அவர்களே எழுதிக்கொள்வார்கள். படம் கன்பார்ம் ஆனதும், அதை டிஸ்கஸ் செய்து மெருகேற்றிக் கொள்வார்கள். கண்ணனோட டிஸ்கஷனும் அப்படித்தான் பாண்டிச்சேரியில் ஸ்டார்ட் ஆனது. டைரக்‌ஷன் டீம் தவிர, டிஸ்கஷனுக்கு கண்ணனின் நண்பர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள். அதுல சுவாமின்னு ஒருத்தர், “கண்ணா, இது உன் பட டிஸ்கஷன். என்ன வேணுன்னு உனக்குத்தான் தெரியும். அதனால நாங்க எல்லாத்தையும் கொட்டிடறோம். நீ வேணுங்கறதை அள்ளிக்கோ” என்று வந்ததும் கண்ணனிடம் சொன்னார். அதைக் கேட்டதும், கோமல் அந்த சுவாமியை ’எதோ பெரிய ஆள் போல; என்று நினைத்துக் கொண்டான். 

 

டிஸ்கஷன் ஆரம்பித்து பத்து நாள் ஆனது. எல்லாரும் பேசறதை நோட்ஸ் எடுப்பது கோமலின் வேலை. ஆளாளுக்கு ஒரு சீன் சொல்ல, கண்ணன் நன்றாக இருந்ததை எடுத்துக் கொள்வார். அவருக்கு செட் ஆகவில்ல்லை என்றால், வேறு ஏதாவது சீன் சொல்லச் சொல்வார். சில நேரங்களில், கண்ணன் சொல்லும் சீனையே மொத்த டீமும் ’மொக்க’ என்று சொல்லிவிடுவார்கள். டிஸ்கஷன் டீம்ல  கதிர்னு ஒருத்தன் இருந்தான். முந்திய நாள் பார்த்த உலக சினிமாவில் இருந்த சீனை எல்லாம், அவனே யோசித்த மாதிரி அடுத்த நாள் டிஸ்கஷனில் சொல்வான். அதே படத்தைப் பார்த்தவர், ’இது இந்த படத்தோட சீனாச்சே’ என்றால், “ஓ ஆல்ரெடி வந்துடுச்சா.. பேரலல் தாட்” என்று உடனை சப்பைக்கட்டு கட்டுவான் கதிர். இவன் இப்படி என்றால், கோமல் மனதில் கோபுரமாக உயர்ந்து நின்ற சுவாமியோ, ஒரு சீன் கூட சொல்லவில்லை. யார் எது சொன்னாலும், ’இததான் நானும் நினைச்சேன். நீயே சொல்லிட்ட’ என்று ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார். கலகலப்பாகப் போய்க்கொண்டிருந்த டிஸ்கஷனில், அகிரா குலசேகரன் இருந்ததால், கோமல் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால், ஒரு கதை எப்படி உருவாகுது என்று சில அடிப்படை விசயங்கள் கோமலுக்குப் புரிய ஆரம்பித்தது. கதையும் கண்ணன் எதிர்பார்த்த மாதிரி, நன்றாக மெருகேறியது. 

 

ஒரு வழியாக டிஸ்கஷன் முடிந்து பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பும்போது, எல்லாரும் ஜாலியாக ஒரு பாரில் மது அருந்தினார்கள். கண்ணனிடம் சத்தியம் பண்ணிய காரணத்தால், கோமல் மட்டும் கொய்யாக்கா சாப்பிட்டுட்டுக் கொண்டிருந்தான். பேசிக்கொண்டு இருக்கும்போதே, “கதை நாம நினைச்ச மாதிரியே நல்ல படியா வந்துடுச்சு” என்று போதையில் பேசிக் கொண்டிருந்தார் சுவாமி. அந்த நேரம் பார்த்து, கோமலின் நாக்கில் ஏழரை எர்வாமாட்டின் மாதிரி உட்கார்ந்தது. டக்கென்று வாய்திறந்த கோமல், “அண்ணே! நீங்க முதல் நாள் வந்ததும் கொட்டறது எல்லாம் கொட்டறே. வேணுங்கறதை அள்ளிக்கன்னு சொன்னீங்க. ஆனா, கடைசி வரைக்கு நீங்க ஒண்ணுமே கொட்டலையே” என்றன். எல்லாரும் அதைக் கேட்டு சிரிக்க, போதையில் இருந்த சுவாமிக்கு பொசுக்கென்று கோபம் வந்து, பீர் பாட்டிலை எடுத்து டமால் என்று கோமல் தலையில் உடைக்க.. ரத்தம் தெறிக்க… அனைவரும் விக்கித்து நின்றனர். கோமலின் கலைப்பயணம் தொடரும்…. 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles