கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் - 9

Friday, July 29, 2016

கண்ணனோட போன் கால் அட்டெண்ட் பண்ணான் கோமல். ஹலோ கூட சொல்லாம, கோமல்கிட்ட “எங்கடா இருக்க” என்று கேட்டார் கண்ணன். “அண்ணா, நான் ஊருக்கு வந்துட்டேன்”, கோமல் கொஞ்சம் பயத்துடன் பதில் சொன்னான். “மயிரு.. அவன் மிரட்டுனா, நீ கிளம்பி போயிடுவியா ? போனை வெச்சுட்டு, முதல் வேலையா பஸ் புடிச்சு சென்னை வந்து சேரு”, கண்ணன் மிரட்டல் தொனியில் பேசினார். 
 

அதைக் கேட்டதும், கோமலுக்கு அகிரா குலசேகரன் மூஞ்சியும் அப்பா அடிக்கத் துரத்திய விளக்கமாறு காட்சியும் மனதில் வந்துபோனது. “இல்லண்ணா.. எனக்கும் சினிமாவுக்கும் செட் ஆகாது. நான் ஏதோ ஆர்வக்கோளாறுல வந்துட்டேன். என்ன விட்டுடுங்கண்ணா”, கோமல் அவசரமாகப் பதில் சொன்னான்.

 

“என்னடா செட் ஆகாது ? இங்க வர்றவங்க எல்லாம், பொறக்கும்போதே மணிரத்னமாவா பொறந்து வந்தாங்க? உன்கிட்ட ஆர்வம் இருக்கு. அடிப்படையான திறமையும் இருக்கு. உனக்குத் தேவை அனுபவந்தான். ஒரு ரெண்டு படத்துல வேலை பார்த்தா, அதுவும் கிடைச்சுடப் போகுது . நான் படம் கமிட் ஆயிட்டேன். இன்னிக்குத்தான் அட்வான்ஸ் குடுத்தாங்க, கிளம்பி வந்து ஒழுங்கா என்கூட வேலை பாரு” என்றார் கண்ணன். 

 

“அண்ணே வாழ்த்துக்கள்ண்ணே, வாழ்த்துக்கள்” என்று சந்தோஷத்துடன் கண்ணனுக்கு வாழ்த்து சொன்னான் கோமல். “இப்ப அந்த அகிராகிட்ட சொல்லுங்க. நான் வந்துட்டேன்னு சொல்லுங்க.. 24 மணி நேரத்துக்கு முன்னாடி இந்த கோமல் எப்படி கிளம்பிப் போனானோ, அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்க.. ஐ ஆம் ஆன் தி வே” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். 

 

கட் பண்ணா, வீட்டுல கோமல் மறுபடியும் துணியை பேக் செய்து கொண்டிருந்தான். “எங்கடா கிளம்பிட்ட” என்று அம்மா கேட்க, “அம்மா! போன தடவை சினிமால வாய்ப்பு தேடி போனன். இப்ப எனக்கு சினிமா குடுத்து இருக்கற வாய்ப்பை நோக்கி போறேன்” என்று சொன்னான்.  அடுத்த ஷாட்ல, அவனோட அம்மா அதே விளக்கமாறைக் கையில் வைத்துக்கொண்டு கோமலைத் துரத்த,  கோனேரிப்பட்டி தெருவுல ஹுசைன் போல்ட் மாதிரி ஓடிட்டு இருந்தான் கோமல். அவனோட அம்மாவும் விடாம பி.டி.உஷா ரேஞ்சுக்கு துரத்தி வந்தாங்க. பரபரப்பான இந்த சேஸ் கோமல் அங்க வந்த மினி பஸ்ல தாவி ஏறுனதும் முடிவுக்கு வந்தது. 

 

கோமல் மினி பஸ் புட்போர்டுல தொங்கியவாறே, தெருவில் விளக்கமாறுடன் நின்ற அம்மாவுக்கு டாட்டா சொல்லி நான்கு ப்ளையிங் கிஸ்ஸூம் குடுத்தான். பதிலுக்கு, அவனோட அம்மா ஏழெட்டு “பீப்” வார்த்தைகளை உதிர்த்தது காதில் விழுந்தது. 

 

கட் பண்ணா, கோமல் மறுபடியும் தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்தான். சென்னைக்கு 6 மணிக்குத்தான் பஸ் என்று தெரிந்தது. மணி மூன்றரைதான் ஆகியிருந்தது. ஓடி வந்ததில் பயங்கரமாகப் பசிக்கத் தொடங்க, அங்கிருந்த கடையில் பொறி உருண்டை வாங்கிக் கடித்தவாறே, பவித்ராவுக்கு போன் செய்தான். பவித்ரா போனை எடுத்ததும், “எதுக்கு போன் பண்ற” என்று கோபமாகக் கேட்டாள். உடனே, “ நான் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன். உன்னைப் பார்க்கணும்” என்றான். “எதுக்கு” என்றாள்  பவித்ரா கோபமாக. 

 

“நான் மறுபடியும் சென்னை கிளம்பறேன். போறதுக்கு முன்னாடி உன்னைப் பார்க்கணும். ப்ளீஸ் பவித்ரா” என்று கோமல் பீல் பண்ணிப் பேசினான். “நமக்குள்ள இனி ஒண்ணும் இல்ல, நான் ஏன் உன்னைப் பார்க்கணும்?”

 

“இன்னிக்கு வந்துட்டு நாளைக்கு  போறதுக்கு காதல் ஒண்ணும் காய்ச்சல் இல்ல பவித்ரா!  காதல் எய்ட்ஸ் மாதிரி.. ஒரு தடவ வந்தா திரும்பப் போகவே போகாது”, கோமல் ஒரு கேவலமான உதாரணத்தைச் சொல்ல, அவன் பேசுவதைக் கேட்க முடியாமல் பஸ்ஸ்டாண்டுக்கு வந்தாள் பவித்ரா.வந்ததும்,  கோமல் அவளுக்கு ஒரு பொறி உருண்டையைக் கொடுக்க, இரண்டு பேரும் அதைச் சாப்பிட்டுக்கொண்டே பொறி பறக்கப் பேசினார்கள். 

 

இறுதியில், பவித்ரா கோமலின் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, ‘காதலை கண்டினியூ பண்றேன்’ என்று ஒத்துக்கொண்டாள். அந்த சந்தோஷத்துடன் அவளை பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றான் கோமல். “நான் டைரக்டர் ஆகாம தாராபுரம் மண்ணை மிதிக்க மாட்டேன்” என்று அவளிடம் சத்தியம் செய்ய, பதிலுக்கு “நீ என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது” என்று பவித்ராவிடம் சேப்டிக்கு ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டான்.

 

அவனுக்கு இன்னும் நாலு பொறி உருண்டையும் ஒரு இங்க் பேனாவும் வாங்கிக்கொடுத்து வழி அனுப்பி வைத்தாள் பவித்ரா. பஸ் கிளம்ப, கோமல் அதே வெறியோட பொறி உருண்டை சாப்பிட்டுக் கொண்டே சென்னையை நோக்கி பயணத்தைத் தொடங்கினான். 

 

கட் பண்ணா, கோமல் கோயம்பேட்டில் இருந்தான். ஷேர் ஆட்டோ பிடித்து வடபழனி வந்து இறங்கியவன், கண்ணனுக்கு போன் செய்தான். அவர் அவனை சூர்யா ஹாஸ்பிடல் பக்கத்தில் இருந்த  ஒயின்ஷாப்புக்கு வரச் சொன்னார். ரூமுக்கு கூட போகாமல், நேராக அந்த ஒயின்ஷாப் பாருக்கு போனான் கோமல். 

 

அங்கே அவன் பார்த்த அந்த காட்சி, சுனாமி மாதிரி அதிர்ச்சியை ஒரு பேரலையா கொடுத்தது. கண்ணன், அகிரா குலசேகரன், கிஷோர்னு மொட்ட மாடியில் சரக்கடித்த கேங் அங்கே ஒன்றாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். ’கண்ணன் அகிரா கிளாஸ்ல சரக்கு ஊத்த , அகிரா கண்ணனுக்கு சைட் டிஷ் ஊட்ட’ என்று வானத்தைபோல விஜயகாந்த் பிரதர்ஸ் மாதிரி அவர்கள் இருந்ததை அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தான். 

 

’சூர்யா ஹாஸ்பிட்டல்ல நேத்து அட்மிட் ஆகி இருந்தவங்க, இன்னிக்கு அதே சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு அடுத்த பில்டிங்ல இருக்கற பார்ல ஒண்ணா சரக்கடிச்சுட்டு இருக்காங்களே’ என்று வாழ்க்கையின் விந்தையை கோமல் யோசிக்கும்போதே கண்ணன் அவனைப் பார்த்துவிட்டார். ”டேய்.. கோமல் என்னடா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க.. வாடா” என்று அவர் கூப்பிட,  கோமல் அகிராவைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே சென்று, அவர் பக்கத்தில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தான். அகிரா அவனைப் பார்த்து போதையில் சிரித்தார். கோமல் அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கும்போதே, கண்ணன் கோமலுக்கு பீர் ஆர்டர் செய்தார். ஏற்கனவே கற்றுக்கொண்ட அனுபவப் பாடத்தை யோசித்த கோமல், அவசரமாக “அண்ணா, எனக்கு சரக்கு வேணாம்” என்று சொன்னான் . 

 

”டேய்.. படம் கமிட் ஆனதுக்கு என் ட்ரீட்டு.. ஒழுங்கா குடி” என்று கண்ணன் அவனைக் குடிக்க வற்புறுத்தினார். கோமலுக்கு லைட்டா போதை ஏறும்போது, கண்ணன் படத்துல அகிராதான் கோ டைரக்டரா வொர்க் பண்ணப் போறார் என்ற விஷயத்தைச் சொன்னார் கண்ணன். கோமலுக்கு போதை எல்லாம் ஆட்டோமேட்டிக்கா தெளிந்தது. ’இவங்க அடிச்சுக்கிட்டத பார்த்தா அஞ்சு ஜென்மத்துக்கு பேசிக்க மாட்டாங்கன்னு நினைச்சா, இப்படி ஒண்ணா சரக்கடிச்சு நம்மள சாவடிக்கறானுங்களே’ என்று கோமல் குழப்பமாக யோசித்தான். 

 

அகிரா கோமலைப் பார்த்து, “கண்ணன் உன் கவிதை எல்லாம் காட்டுனான். கொஞ்சம் நல்லாதான் எழுதற. ஆனா கதை மட்டும் ஏண்டா இவ்வளவு கேவலமா யோசிக்கற. நிறைய படம் பாரு, அப்பதான் கதை எப்படி பண்ணம்னு நாலேட்ஜ் வரும்” என்றார். அகிரா நன்றாகப் பேசுவதைப் பார்த்து, கோமலின் பயம் தெளிந்தது. 

 

’ஆத்தா மகமாயி.. இந்த பார்ட்டி எந்த சண்டையும் இல்லாம நல்ல படியா முடியணும்’ என்று கோமல் கடவுளை வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக்கொண்டதாலேயோ என்னவோ, பார்ட்டி பிரச்சனை ஏதும் இல்லாமல் முடிந்தது. எல்லோரும் வெளியில் வந்தார்கள். 

 

கண்ணன் கேம்பஸ் ஹோட்டல்ல சாப்பிடலாம் என்று சொல்ல, ரோட்டைத் தாண்டிச் செல்வதற்காக எல்லோரும் நின்றார்கள். கண்ணன் போதையில் கொஞ்சம் ஓவராக தள்ளாட, கோமல் அவர் கையைப் பிடித்துக்கொண்டான். வரிசையாக வாகனங்கள் போய்க்கொண்டே இருக்க, ’ஒரு சின்ன கேப்ல கிராஸ் பண்ணிடலாம்’ன்னு எல்லாரும் நகர, கண்ணன் ரோட்டில் இரண்டு அடி எடுத்து வைக்கும் போது ஒரு ஆடி கார் அவரை இடிப்பதுபோல வந்து டக்கென்று பிரேக் அடித்து நின்றது. போதையில் அதையெல்லாம் கவனிக்காத கண்ணன் ரோட்டைக் கடந்து அந்த பக்கம் செல்ல,  கோமல் திரும்பி அந்த காரைப் பார்த்தான்.

 

ஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் கண்ணன் மேல மோதி இருக்கும் என்பதை யோசித்ததும், கோமலுக்கு கோபம் பீர் மாதிரி பொங்கி வந்தது. கையை ஓங்கி ஆடி காரின் பேனட்டில் டமாலென்று ஒரு குத்துவிட்டான் கோமல். “த்தா.. எங்க டைரக்டர் மேல கார ஏத்துவியா நீ… சாவடிச்சுடுவேன்” என்று சொல்லிக்கொண்டே ரோட்டைக் கடந்து சென்றான். 

 

அந்த ஆடி காரினுள் உட்கார்ந்து இருந்தவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.எஸ்.ரத்னம் என்பதும், கண்ணன் படத்தைத் தயாரிப்பது அவர்தான் என்பதும், அப்போது கோமலுக்குத் தெரியாது. கட் பண்ணா, அடுத்த நாள் நடக்கப்போற கலவரம் தெரியாம கோமல் கேம்பஸ் ஹோட்டலில் உட்கார்ந்து லெக் பீஸை கடித்து இழுத்துக் கொண்டிருந்தான். கோமலின் கலைப்பயணம் தொடரும் ..

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles