கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 20

Saturday, December 31, 2016

கஞ்சா அடிச்ச எபெக்ட்ல, கோமலுக்கு டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் எல்லாம் காதுக்குள்ளயே கேட்க ஆரம்பிச்சுது. ஒரு பத்து செகண்ட் கண்ண மூடி அப்படியே உட்கார்ந்தான். இப்ப அவன் வலது காதுல, தூரத்துல ஒரு வண்டு கத்தற சத்தம் கேட்டுச்சு. மூளை அதை அனலைஸ் பண்ணி 14 மீட்டர் 13 அடி தூரத்துல அந்த வண்டு கத்துதுன்னு கோமலுக்கு புள்ளி விவரம் சொல்லுச்சு.

அதே சமயம் மேல ரூம்ல ஓடிட்டு இருந்த டிவில இருந்து வந்த ஹிந்தி பாட்டோட இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் எல்லாம் தனித்தனியா பிரிஞ்சு, அவன் காது பக்கத்துல சிம்பொனி வாசிக்கற மாதிரி துல்லியமா கேட்டுச்சு.  பாத்ரூம் டேப்ல ஒழுகிட்டு இருந்த தண்ணியோட சத்தம் இடது காதுல 23 அடி தூரத்துல கேட்டுச்சு.இன்னொரு பக்கம் மச்சான் அந்த சிகரெட்ட குடுன்னு விஷால் கேட்ட வார்த்தை சுவத்துல பட்டு மோதி “மச்ச்ச்சான்ன்ன்ன் அந்ததத சிகரெட்ட்ட்ட குடுட்ட்ட்டா”ன்னு ஸ்லோமோஷன்ல நடு மண்டைக்குள்ள கேட்டுச்சு. 

 

கோமல் டக்குன்னு கண்ண தொறந்தான். இப்ப எதுவுமே கேட்கல. மேல ஓடிட்டு இருந்த பேன் சத்தம் மட்டும் கர்க் ..கர்க்னு கேட்டுச்சு. கோமல் மறுபடியும் கண்ண மூடுனான். இப்ப “சின்னம்மா சின்னம்மா”ன்னு ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு தமிழ்நாட்டு பக்கம் பாடிட்டு இருந்தது அவனுக்கு கேட்டுச்சு. ஷாக் ஆன கோமல் கண்ண தொறந்தான். விக்கி சிரிச்சுக்கிட்டே “உங்களுக்கும் சின்னம்மான்னுதான் கேட்டுச்சா.. எனக்கும் அப்படித்தான் கேட்டுச்சு”ன்னு சொன்னான். உடனே சிகரெட்ட வாங்கி,  கோமல் இன்னொரு இழு இழுத்தான். 

 

கட் பண்ணா.. பீச்ல கோமல் அங்க வந்திருந்த பாரினர் கூட பிரெஞ்ச்ல எதோ டீப்பா பேசிட்டு இருந்தான். பிரெஞ்ச் பேச பிரெஞ்ச் மொழி தெரியணும்னு அவசியம் இல்ல அப்படிங்கறத கோமல் எல்லாருக்கும் உணர்த்துன தருணம் அது. அந்த விவாதத்தோட முடிவுல, அந்த பிரெஞ்ச் சிட்டிசன் பாண்டிச்சேரிய பிரான்ஸ் ஆதிக்கம் பண்ணது தப்புங்கறத ஒத்துக்கிட்டு பிரான்ஸ் சார்பா மன்னிப்பு கேட்டுட்டு போனாரு. 

 

அவரு போனதும் கோமல் எதிர்ல தெரிஞ்ச கடலை பாத்தான். கடலுக்கு மேல தெரிஞ்ச நிலாவ பாத்தான். அடுத்த செகண்ட் கோமல் வெறும் ஷார்ட்ஸ் , டீசர்ட் போட்டுக்கிட்டு நிலாவுல கால வெச்சு இறங்குனான். அங்க அவனோட பாட்டி வடை சுட்டுட்டு இருக்கறத பார்த்ததும், கோமலுக்கு கோபமா வந்துச்சு. “கிழவி எத்தன தடவ கேட்டு இருப்பன்.. ஒரு காபி வெச்சு குடுத்து இருப்பியா, இங்க வந்து யாருக்கு வடை சுட்டுட்டு இருக்கே”ன்னு கேட்டான். பாட்டி டென்ஷன் ஆகி எண்ணெய் சட்டிய எடுத்து அவன் மேல ஊத்த.. அதுல இருந்து எஸ்கேப் ஆக அப்படியே நிலாவுல இருந்து குதிச்சான். 

 

இப்ப அவன் லேண்ட் ஆனது செவ்வாய் கிரகத்துல.. நாசா விஞ்ஞானிகள் 40 வருஷமா கஷ்டப்பட்டு போக முடியாத இடத்துக்கு, கோமல் இழுத்த நாலு இழுப்பு கஞ்சா கூட்டிட்டு போச்சு. செவ்வாய் கிரகத்துல கோமல் நடக்க ஆரம்பிச்சான். ஒரு நாலு ஸ்டெப் வெச்சு இருப்பான். திடீர்னு ஒரு பள்ளம் வர, அப்படியே அதுல விழுந்தான். அதுதான் இண்டர்செல்லர்ல கிறிஸ்டோபர் நோலன் சொன்ன ப்ளாக் ஹோல்ன்னு கோமலுக்கு புரிஞ்சுது. 

 

10 நிமிஷம் அதுல ட்ராவல் பண்ணி செவ்வாய்ல இருந்து 4 லட்சம் கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருந்த அவதார் படத்துல வர்ற பண்டோரா கிரகத்துல விழுந்தான். இப்ப கண்ணு முழிச்சா, அவன் முன்னாடி அவதார் ஹீரோயின் நெய்த்ரி நின்னுட்டு இருந்தா. கோமல் அவளை பார்க்க, அவ உடனே அவனை இழுத்து தன்னோட ராட்சச பறவை மேல பின்னாடி உட்கார வெச்சுக்கிட்டு மின்னல் வேகத்துல பறக்க ஆரம்பிச்சா. கோமல் திரும்பி பார்க்க, பின்னாடி வில்லனோட ஆட்கள் துரத்திட்டு இருந்தாங்க. ஒளியின் வேகத்த விட கொஞ்சம் கம்மியான ஸ்பீட்ல அந்த சேஸ் பரபரப்பா போயிட்டு இருக்கும்போதே, கோமல் பேலன்ஸ் பண்ண முடியாம அந்த ராட்சச பறவைல இருந்து தவறி விழுந்தான். அவன் கீழ போறத பார்த்து, ’கோமல்’னு நெய்த்ரி கத்திட்டே பறவைய கீழ் நோக்கி செலுத்த, கோமல் அப்படியே காத்த கிழிச்சுட்டு கீழ வந்துட்டே அவள பாத்தான். 

 

இப்ப நெய்த்ரி உருவத்துல அவனுக்கு பவித்ரா தெரிஞ்சா. கோமல் கண்ணுல இருந்து 5 சொட்டு கண்ணீர் கீழ சிந்தி விண்வெளில அப்படியே மிதக்க ஆரம்பிச்சுது. கோமல் இப்ப பூமில வந்து ஒரு பரங்கிமலையில இருக்கற பாறை மேல மோதி தெறிச்ச அடுத்த செகண்ட் கோவால கோமல் கண்ணு முழிச்சான். எதிர்ல அரவிந்த் ஒரு கடலை பர்பி வச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்தான். 

 

“ப்ரோ.. என்ன வேற உலகத்துக்கு போயிட்டீங்க போல இருக்கு.. பர்பி சாப்பிடுங்க, காம்பினேஷன் செமையா இருக்கும்”னு சொல்லி குடுத்தான். கோமல் பர்பி சாப்பிட்டான். அவனுக்கு இன்னும் தெளியாம, எதிர்ல இருந்த பெயிண்டிங்ல மயில் டான்ஸ் ஆடற மாதிரி தெரிஞ்சுது. கண்ணை மூடி தூங்க ஆரம்பிக்க, வெளியில மழை சோன்னு பெய்யற மாதிரி சத்தம் கேட்டுட்டே இருந்துது. அப்படியே தூங்கிப் போனான். 

 

அடுத்த நாள் எல்லாரும் சென்னை கிளம்புனாங்க. இனிமே கஞ்சா அடிக்கக்கூடாதுங்கற முடிவோட கோவா பார்டரை தாண்டுனான் கோமல். பெங்களூர் வழியா, எல்லோரும் சென்னை வந்து சேர்ந்தாங்க. அடுத்த நாள் ஆபீஸ் போனா, விக்கி ஜாலியா பேசுன விசயங்கள கதையா மாத்தி இருந்தான். கதைய கேட்கும்போது, கோமலுக்கு பெருசா திருப்தி இல்லாம இருந்துச்சு. “விக்கி ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்கு.. கதைய இன்னும் நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு, அப்புறம் ஷூட்டிங் போலாம்”னு சொன்னான். விக்கி உடனே “ப்ரோ.. இதுதான் என் ஸ்டைல், கண்டிப்பா வொர்க்அவுட் ஆகும் பாருங்க”ன்னு சொன்னான். 

 

ஷூட்டிங் ஸ்டார்ட் ஆச்சு. கண்ணன் படத்தோட ஷூட்டிங்குக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம். அங்க எல்லாமே சீரியஸா இருக்கும். இங்க எல்லாருமே கூலா, ஜாலியா வேலை பார்த்தாங்க. விக்கி டென்ஷனே இல்லாம, ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ஷூட் பண்ணிட்டு இருந்தான். இவனுங்க டிஸ்கஷன்லதான் கூத்தடிச்சானுங்கன்னு பார்த்தா, ஷூட்டிங்லயும் அப்படித்தான் இருக்கானுங்கன்னு கொஞ்சம் டென்ஷன் ஆனான் கோமல். ’சின்ன பசங்க மெச்சூரிட்டி இல்லாம ஏதோ பண்றாங்க, அதுக்கு ஒரு மடையன் கோடிக்கணக்குல பணத்த போடறானே’ன்னு கோமல் நினைச்சான். ஆரம்பத்துல இருந்தே, இந்த படம் கண்டிப்பா ஓடாதுங்ற மனநிலைலயே வேலை பார்த்தான் கோமல். ஆனா, ஒரு விசயம் கோமலுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துது. திலீப் மாஸ்டர் சொன்னதை விட படம் வேகமா முடிஞ்சுது. 55 நாள் சொன்ன விக்கி, 46 நாள்ல படத்த முடிச்சுட்டான். போஸ்ட் புரொடக்‌ஷன் எல்லாம் சேர்த்து 4 மாசத்துல படம் ரிலீஸுக்கு ரெடி ஆகிடுச்சு. 

 

விக்கி கேங் ரொம்ப நம்பிக்கையா இருந்தாங்க. க்யூப்ல படம் பார்த்த கோமல், கண்டிப்பா இந்த படம் ஓடாதுன்னு முடிவு பண்ணான். ஆனா, யாருகிட்டயும் தன்னோட கருத்த அவன் ஷேர் பண்ணிக்கல. சொன்னா மனம் வருத்தப்படுவாங்கன்னு விட்டுட்டான். பவித்ராகிட்ட மட்டும் சொன்னான். அதுக்கு அவ, “படம் ஓடுமோ.. நீ ஓடுவியோ.. அதெல்லாம் எனக்கு தெரியாது, சொன்ன டைம்ல ஆடி காரோட வந்து நில்லு”ன்னு சொல்லி போனை வச்சுட்டா. கோமலுக்கு டெட்லைன் ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்த படம் நல்லா ஓடுனா கூட, இந்த படத்துல வேலை பார்த்தேன்னு சொல்லி ஈஸியா புரொடியூசர் புடிச்சுடலாம். ’இதுவும் வெளங்க போறது இல்ல.. என்ன பண்ணப்போற கோமல்’னு அவனுக்கு அவனே கேள்வி கேட்டுட்டான். பதில் தெரியாததனால, அந்த கேள்விய சாய்ஸ்ல விட்டுட்டு ரிலீஸுக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சான். 

 

கட் பண்ணா.. அந்த வெள்ளிக் கிழமை வந்தது. படம் ரிலீஸ். கோமல் ஜட்ஜ்மெண்ட்ல கொள்ளி வெச்ச வெள்ளியா மாறுச்சு அந்த நாள். யெஸ்.. படம் சூப்பர் ஹிட்.. மீடியா , ஆடியன்ஸ்னு எல்லோரும் தூக்கி வெச்சு கொண்டாட ஆரம்பிச்சாங்க. கோமல் கஞ்சா அடிக்காமலேயே கஞ்சா அடிச்ச மாதிரி ஆனான். ’என்னடா இது, செமையா ஓடும்னு நினைக்கற படம் ஓடல.. ஓடவே ஓடாதுன்னு நினைக்கற படம் பிச்சுக்கிட்டு ஓடுது’ன்னு கன்ப்யூஸ் ஆனான். பவித்ரா வேற போன் பண்ணி, “உனக்கு எது ஓடும் ஓடாதுன்னே தெரில.. உன்ன கட்டிட்டா வாழ்க்கை ஒழுங்கா ஓடுமான்னு தெரியலயே”ன்னு வெறுப்பேத்திட்டு போனை வச்சா. அம்மாவா தெரிஞ்ச சினிமா, கோமலுக்கு சின்னம்மாவா தெரிஞ்ச மொமண்ட் அது. கோமல் புரிஞ்சுக்கிட்டான். விக்கிய பார்த்து வாழ்த்து சொன்னான். “ப்ரோ.. எல்லாம் டீம் வொர்க் ப்ரோ.. இந்த சக்ஸஸ்ல உங்களுக்கும் பங்கு இருக்கு. தாங்க்ஸ் ப்ரோ”ன்னு சொல்லி ஒரு ஐபோனை கிப்டா குடுத்தான் விக்கி. சின்னப்பையனா நினைச்ச விக்கிய பெரிய மனுஷனா உணர்ந்த மொமண்ட்டா அது மாறுச்சு.  

 

விக்கி அடுத்த படத்துக்கு உடனே அட்வான்ஸ் வாங்குனான். கோமலை வொர்க் பண்ண சொல்லி கேட்க, அவன் தனியா படம் பண்ண போறதா சொன்னான். விக்கி வாழ்த்து சொல்லி சந்தோஷமா அனுப்பி வெச்சான். கோமல் நேரா திலீப் மாஸ்டர்கிட்ட வந்து விசயத்த சொன்னான். இன்னும் ஒன்றரை வருஷந்தான் இருக்குன்னு ஆடி கார் மேட்டர ஞாபகப்படுத்துனான். திலீப் மாஸ்டர் அவன்கிட்ட “நீ கதை பண்ணிட்டு வா. நான் உன்ன எந்த புரொடியூசர்கிட்ட வேணாலும் உட்கார வைக்கிறன்”னு சொன்னார். ஒரு மாசத்துல ஒரு வருஷம் ஓடற மாதிரி ஒரு அற்புதமான கதையோட வர்றதா சொல்லிட்டு கிளம்புனான் கோமல். 

 

கட் பண்ணா.. கோமல் கையில பேப்பர், பேனாவோட செம்மொழி பூங்கா பெஞ்சுல உட்கார்ந்து இருந்தான். என்ன கதை எழுதப்போறோம்? காமெடியா, லவ்வா, ஆக்‌ஷனா? எதுவுமே தெரியாம பேப்பர்ல ஒரு பிள்ளையார் சுழி போட்டு, புராஜக்ட் நம்பர் 1 அப்படின்னு கீழ டைட்டில் போட்டு, அதுக்கு கீழ அண்டர்லைன் பண்ணான். அதுக்கு கீழ என்ன எழுதப் போறான்னு வெள்ளை பேப்பரே ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு. கோமல் ரொம்ப நேரம் யோசிச்சு பார்த்தான்.. எதுவுமே வரல. லைட்டா பசி மட்டும் வந்துச்சு. நேரா போய் டீக்கடைல சுடச்சுட பஜ்ஜி வாங்கி அந்த வெள்ளை பேப்பர்ல எண்ணெய புழிஞ்சு திங்க ஆரம்பிச்சான். ’இதுதான் உன் பர்ஸ்ட் புராஜ்க்ட்டா’ன்னு வெள்ளை பேப்பர் வெறியா கோமலை பார்த்துச்சு. கோமல் பஜ்ஜில இருக்கற மிளகாய கடிச்சு தின்னுட்டு இருந்த அந்த செகண்ட், அவன் மனசுல ஒரு கதை உதிச்சுது. கோமலின் கலைப் பயணம் தொடரும்... 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles