கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் -19

Friday, December 16, 2016

கோமல் யானைக்கூட்டத்தை பார்த்து நடுங்கிட்டு நிக்கும்போதே, யானைங்க வில்லனுங்கள அட்டாக் பண்ற ஹீரோ மாதிரி ஸ்டைலா அவங்கள நோக்கி வர ஆரம்பிச்சுது. கோமல் குலதெய்வத்த எல்லாம் வேண்டிக்கிட்டு நின்னான். பிரபுதேவா மாஸ்டர் டான்ஸ் மாதிரி, அவன் கால் மாடர்ன் ஸ்டெப்ஸ் எல்லாம் போட்டுச்சு. விக்கிய திரும்பி பார்த்தான்.

உடனே, ’அது நம்மள நோக்கிதான் வருது.. எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க’ன்னு குரல் குடுத்தான் ஹரிஷ். அடுத்த செகண்ட் உசைன் போல்ட் ரெக்கார்டை எல்லாம் பிரேக் பண்ற வேகத்துல கோமல் ஓட ஆரம்பிச்சான். 

விக்கி ஒரு பக்கம் ஓட, ஆளாளுக்கு ஒரு டைரக்‌ஷன்ல ஓடுனாங்க. துரத்த ஆரம்பிச்ச யானைக் கூட்டம் யாரை பாலோ பண்றதுங்கற கன்ப்யூஷன்ல கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு, திரும்பி வேற ரூட்ல போக ஆரம்பிச்சுது. 

ஒரு பள்ளத்த தாண்டி, அதுக்கு மேல ஓட முடியாம மூச்சு வாங்க நின்னான் கோமல். விட்டா ஹார்ட் எகிறி வெளில குதிச்சு ரன்னிங் ரேஸ் போற மாதிரி துடிச்சுது. கொஞ்சம் மூச்சு வாங்கி, கூட வந்தவங்கள எல்லாம் பீப் வார்த்தைல மனசுக்குள்ளயே திட்டி முடிச்சான். போனை எடுத்து டார்ச் லைட் ஆன் பண்ணி, எதிர்ல என்ன இருக்குன்னு கேஷுவலா பாத்தான். எதிர்ல கருப்பா ஒரு உருவம் நின்னுட்டு இருந்துச்சு. அது உடம்புல புஸு புஸூன்னு இருந்த முடிய பார்த்து, என்ன இதுன்னு கோமல் மூளை மைக்ரோ மில்லி செகண்ட்ல கண்டுபிடிச்சுது. ’யெஸ்.. இட்ஸ் ஏ கரடி..’, அவன் மூளை சொன்ன அடுத்த செகண்ட் கோமல் மறுபடியும் ஓட ஆரம்பிச்சான். 

'வாழ்க்கை யாரை, எங்க, எப்படி ஓட விடும்னு யாருக்கும் தெரியாது. அதுக்கு நாம தயாரா இருக்கமாங்கறதுதான் கேள்வி'ன்னு சிம்பு பேசுன டயலாக் எல்லாம் மைண்ட்ல வந்து வந்து போச்சு. கட் பண்ணா, கோமல் ஓடிட்டு இருந்தான். 

காட்டுல இருந்த காக்கா குருவி எல்லாம் அதிகாலை சுபவேளை அப்படிங்கறத உணர்ந்து லைட்டா குரல் குடுக்க ஆரம்பிச்சுது. கோமல் அதுக்கு மேல ஓட முடியாம ஒரு மரத்தடில உட்கார்ந்தான். ஓடி வந்த டயர்ட்ல, அவன அறியாம அப்படியே தூங்கிட்டான். 

கட் பண்ணா, காலைல 8.53-க்கு கண்ணு முழிச்சான். போனை எடுத்து பார்த்தா சிக்னல் சுத்தமா இல்ல. போன்ல இருந்த அப்ளிகேஷன யூஸ் பண்ணி, எது வடக்கு பக்கம்னு கண்டுபிடிச்சான். இப்ப அவன் மூளை வடக்கு பக்கம் போனா, கார் நிறுத்துன இடம் வந்துடும்ன்னு சொல்லுச்சு. அத பாலோ பண்ணி நடக்க ஆரம்பிச்சான்.  பசி வேற வயித்துல ஆசிட் அடிச்சுது. கோமல் பொறுத்துக்கிட்டு நடந்தான். இப்ப அவன் மனசுல டிஸ்கவரி சேனல்ல வர்ற பியர் கிரில்ஸ் மாதிரி உயிர் பிழைக்கும் போராட்டம் நடத்தற மாதிரி பீல் ஆச்சு. ஒரு வேளை நாமளும் பல்லி எல்லாம் புடிச்சு சாப்பிட வேண்டிய நிலமை வந்துடுமோன்னு யோசிச்சுட்டே நடந்தான். ஒரு மணி நேரம் நடந்து, ஒரு வழியா கோமல் கார் நிறுத்துன இடத்துக்கு வந்து சேர்ந்தான். 

கார் மட்டுந்தான் நின்னுட்டு இருந்தது, வேற யாரும் இல்ல. கார் ரன்னிங்ல இருக்க, காருக்குள்ள டிரைவர் ஏசி போட்டு ஜம்முன்னு தூங்கிட்டு இருந்தாரு. கோமல் அவரை எழுப்ப, அவர் எந்திரிச்சு விடிஞ்சுடுச்சான்னு கேட்டாரு. கோமல் டென்ஷனா நடந்ததைச் சொல்லி, ’யாரும் வரலயா’ன்னு கேட்டான். அவரு ’இல்ல’ன்னு சொல்ல, கோமல் போனை பார்த்தான். சிக்னல் லைட்டா கிடைச்சது. முதல்ல விக்கிக்கு போன் அடிச்சான் கோமல், ரீச் ஆகல.. அடுத்து ஹரிஷுக்கு அடிச்சான், ரீச் ஆகல.. அரவிந்த், விஷாலுக்கும் ரீச் ஆகல.. கோமல் காருக்குள்ள என்ன இருக்குன்னு பாத்தான். நைட்டு சரக்கடிக்க வாங்குன சைட் டிஷ் , ஒரு பிஸ்கட் பாக்கெட் மட்டும் இருந்துச்சு. கோமல் கொலைப் பசியில இருந்ததனால, அடுத்த அஞ்சாவது நிமிஷம் காருக்குள்ள இருந்ததெல்லாம் அவன் வயித்துக்குள்ள இருந்துச்சு. 

‘2 மணி வரைக்கும் பார்க்கலாம்.. அவனுங்க வரலன்னா, நாம கிளம்பி சென்னை போய்ட்டே இருக்கலாம்’ன்னு கோமல் ட்ரைவர்கிட்ட ஒரு ப்ளான் சொன்னான். நடந்தத எல்லாம் ஜெலுசில் குடிச்சா கூட ஜீரணிக்க முடியாதுன்னு அவனுக்கு தோணுச்சு. “என்ன பசங்க இவனுங்க.. இவ்ளோ விளையாட்டு புள்ளையா இருக்கானுங்க.. இவனுங்கள நம்பி எப்படின்னே அந்த புரொடியூசர் பணம் போடறாரு. எனக்கு ஒண்ணும் புரியலண்ணே” கோமல் மனசுல இருந்த ஆதங்கத்த எல்லாம் டிரைவர்கிட்ட கொட்டுனான். ’தம்பி.. சினிமால இதைவிட கிராக்குங்க எல்லாம் நிறைய இருக்கு .இதெல்லாம் சப்ப மேட்டரு’ன்னு டிரைவர் தன் அனுபவத்தைச் சொன்னாரு .

ஒரு வழியா 12 மணிக்கு 4 பேரும் வந்து சேர்ந்தாங்க. கோமலை பார்த்ததும், “ப்ரோ.. என்ன முன்னாடியே வந்துட்டீங்களா? நாங்க புலி எல்லாம் பாத்துட்டு வந்தோம்.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க ப்ரோ”ன்னு ஹரிஷ் சொல்ல.. “வாய மூட்றா.. அறிவு கெட்ட முட்டாள்.. நைட்டே செத்து இருப்பன் தெரியுமா.. உங்கள நம்பி வந்தன் பாரு.. என்ன செருப்பால அடிக்கணும். என்னை கொண்டுபோய் பொள்ளாச்சில விடுங்க.. நான் சென்னை கிளம்பறன்” என்று கோமல் கொலவெறியோட கத்த, 4 பேரும் மிரண்டு போனாங்க. விக்கி அவன் பீலிங்க்ஸை புரிஞ்சுட்டு ’ஸாரி’ சொன்னான். மத்தவங்க கொஞ்சம் கொஞ்சமா கோமலை சமாதானப்படுத்த, அவன் கோபம் குறையாம டென்ஷனாவே இருந்தான். வழியில ஒரு ஹோட்டல்ல நிறுத்தி பிரியாணி வாங்கி குடுத்ததும், கோமல் கோபம் கொஞ்சம் தணிஞ்சுது. 

“இனிமே இந்த மாதிரி அட்வெஞ்சர் எல்லாம் கிடையாது. பெங்களூர் போறோம்.. அங்க இருந்து கோவா போறோம்” என்று விக்கி சொல்ல, கோமல் ’ஓக்கே’ சொன்னான். டாப் சிலிப்ல இருந்து கேரளா போகாம, நைட் பதினோரு மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தாங்க. வந்ததும் ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு பேக் எல்லாம் வெச்சுட்டு, பரபரப்பா கிளம்பி கோமலை ஒரு பப்புக்கு கூட்டிட்டு போனாங்க. 

கோமல் வாழ்க்கைல முதல் முறையா பப்புக்குள்ள ’எண்ட்ரி’ ஆனான். உள்ள பார்த்தா, பசங்கள விட பொண்ணுங்கதான் ஜாஸ்தியா இருந்தாங்க. ”இதுங்க எல்லாம் குடிச்சுட்டு போனா வீட்ல மாட்டிக்காதா? பசங்ககிட்ட மட்டும் பொண்ணுங்க குடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கறாளுங்க… இந்த பொண்ணுங்ககிட்ட ஏன் லவ் பண்ற பசங்க சத்தியம் வாங்க மாட்டங்கிறாங்க”ன்னு கோமல் சரக்கடிக்காமயே என்னன்னவோ யோசிச்சான். விக்கி கேங் இவன ஒரு ஓரமா உட்கார வெச்சுட்டு, ஜாலியா சரக்கடிச்சுட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. ஹரிஷ் கோமல கூப்பிட, கோமல் முடியாதுன்னு சொல்லிட்டான். 

வருஷா வருஷம் ஊர்ல மாரியம்மன் கோயில் திருவிழா மஞ்ச நீர்ல பசங்களோட சேர்ந்து கோமல் டான்ஸ் ஆடியிருக்கான். ஆனா அங்க போட்ட ஸ்டெப்புக்கும் இங்க இவங்க போடற ஸ்டெப்புக்கும் சம்பந்தமே இல்லாததால, கோமல் அமைதியா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டே உட்கார்ந்து இருந்தான். பவித்ராவ தவிர யாரையும் சைட் அடிக்கக்கூடாதுன்னு மனசுல நினைச்சாலும், அங்க இருந்த பொண்ணுங்கள பார்க்கும்போது, கோமல் மனசு அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி தாவுச்சு. இருந்தாலும் கண்ட்ரோல் பண்ணிட்டு உட்கார்ந்து இருந்தான். 

பார்ட்டி முடிஞ்சு பப்ல இருந்து நைட்டு மூணு மணிக்கு வெளிய வந்தாங்க. அந்த டைம்ல எங்க பிரியாணி கிடைக்கும்னு தேடிப்போய் பிரியாணி சாப்பிட்டாங்க. கோமலுக்கு டைம் வேஸ்ட் ஆகற மாதிரி ஒரு பீல் இருந்தாலும், அந்த அனுபவம் புடிச்சு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட ஒட்டிக்க ஆரம்பிச்சான். 

அடுத்த நாள் காலைல கோவா கிளம்புனாங்க. கார்ல போக போக, கதைய பத்தி ஜாலியா பேச ஆரம்பிச்சாங்க. ஒரு அரை மணி நேரம் கூட பேசி இருக்க மாட்டாங்க. ரோட்ல ’டேக் டைவர்ஷன்’னு போர்டு இருந்தது. வண்டி டைவர்ட் ஆக டாபிக்கும் டைவர்ட் ஆகி, வேற எங்கயோ போய் எங்கயோ வந்து நிக்கும்போது கார் கோவாலயே வந்து நின்னுடுச்சு. ஏற்கனவே கோவா படம் பார்த்ததனால, கோமலுக்கு கோவா பத்தி ஒரு புரிதல் லைட்டா இருந்துச்சு. அதனால, கோவாவ கிட்டத்தட்ட கோனேரிப்பட்டி மாதிரிதான் பார்த்தான் கோமல். வந்த முதல் நாள் புல்லா சரக்கடிச்சாங்க. அடுத்த நாள் பிலிம் பெஸ்டிவல் ஸ்டார்ட் ஆச்சு. 

கோமல் ஆல்ரெடி மாரியம்மன் பெஸ்டிவல், கருப்புசாமி பெஸ்டிவல், பொங்கல் பெஸ்டிவல் எல்லாம் செலிபிரேட் பண்ணி இருந்தாலும் பிலிம் பெஸ்டிவல் அவனுக்கு கொஞ்சம் புதுசாதான் இருந்தது. பெஸ்டிவல்ல முதல் படமா ஒரு பிரெஞ்ச் படம் போட்டாங்க. படம் புல்லா பெட்ரூம் சீன் , கிஸ்ஸிங் சீனா இருந்தது. கோமல் கொஞ்சம் வெட்கப்பட்டாலும், கண்ண மூடாம கண்டு ரசிச்சான். அவனுக்கு டிப்ளமோ படிக்கும்போது காலேஜ் கட் அடிச்சுட்டு திருப்பூர் கல்யாணி தியேட்டர்ல ஷகிலா படம் பார்த்த நினைவுகள் எல்லாம் வந்துட்டு போச்சு. 

படம் முடிஞ்சு வெளில வந்ததும் “வாட் ஏ மூவி.. அந்த லாஸ்ட் பிரேம்ல ஒரு பீல் குடுத்தான் பாரு.. அமேஷிங்டா”ன்னு விக்கி சொல்ல சொல்ல.. கோமல் குழப்பமா “பாத்தது பிட்டு படம், இதுல என்ன இவனுங்க இவ்ளோ பில்டப்பா பேசறானுங்க”ன்னு யோசிச்சான். தன்னோட சந்தேகத்த வாய்விட்டு கேட்க, பொறுமையா அந்த படத்தோட கதைய பத்தியும் அதுல ஏன் அந்த மாதிரி பெட்ரூம் சீன்ஸ் வந்துச்சுங்கறதையும் விளக்கி சொன்னான் விக்கி. மேட்டர் படம்னு நினைச்சா, இதுல இவ்ளோ மேட்டர் இருக்கான்னு கோமல் அப்பதான் புரிஞ்சுக்கிட்டான்.

அடுத்தடுத்த நாட்கள்ல பெஸ்டிவல்ல பல உலக சினிமாக்களை கோமல் கண்டு களிச்சான். அந்த படங்கள பத்தி ஒவ்வொருத்தரும் பேசறத கேட்கும்போது, ’நமக்கும் சினிமாவுக்கும் செட் ஆகாதோ.. நாம அதுக்கு வொர்த் இல்லையோ’ன்னு மறுபடியும் கோமலுக்கு சந்தேகம் வந்துச்சு. ”ப்ரோ.. நம்ம ஊர்ல இந்த படத்த எல்லாம் ரிலீஸ் பண்ணா ரெண்டு ஷோ கூட ஓடாது. இது வேற,  நாம எடுக்க போற சினிமா வேற”ன்னு விக்கி சந்தேகத்த தெளிய வெச்சான். 

ஒவ்வொரு நாளும் பெஸ்டிவல் முடிஞ்சு வந்ததும் ஜாலியா சரக்கடிச்சுட்டே கதைய பத்தி பேசிப்பேசி, பெஸ்டிவல் முடியறதுக்குள்ள ’ஸ்கிரிப்ட் ரெடி’ங்கற ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க. கடைசி நாள் கிளம்பறதுக்கு முன்னாடி, ஒரு பார்ட்டி செலிபிரேட் பண்ணலான்னு முடிவு பண்ணி பீச் ரிசார்ட்டுக்கு போனாங்க. அங்க எல்லாரும் ஜாலியா சரக்கடிக்க, கோமல் சும்மா இருக்கறத பார்த்து, ஹரிஷ் அவனுக்கு ஒரு சிகரெட்ல கஞ்சாவ போட்டு குடுத்து அடிக்க சொன்னான். கோமல் மறுக்க, ஹரிஷ் “ப்ரோ.. தண்ணிதான அடிக்க மாட்டீங்க.. ஜாலியா நாலே நாலு இழுப்பு இழுங்க”ன்னு சொல்ல.. சபலத்துல சறுக்கி விழுந்த கோமல், அத வாங்கி நாலு இழுப்பு இழுத்தான். சரியா 10 நிமிஷம் கழிச்சு, கஞ்சா மூளைக்குள்ள போய் ஒரு புது உலகத்துக்கு அவனை கூட்டிட்டு போச்சு. கோமல் இப்ப கிறிஸ்டோபர் நோலனா மாறுனான். கோமலின் கலைப்பயணம் தொடரும்... 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles