கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம் 18

Thursday, December 1, 2016

புது டைரக்‌ஷன் டீமோட டீக்கடைல வந்து நின்னான் கோமல். விக்கி எல்லாருக்கும் டீ சொல்லிட்டே, சிகரெட் பாக்கெட்ட எடுத்து நீட்டுனான். அஸிஸ்டெண்ட்ஸ் ஆளுக்கொரு தம் எடுக்க , கோமல் “வேணாம் விக்கி.. நான் அதிகமா சிகரெட் குடிக்க மாட்டன்”னு சொல்ல, விக்கி உடனே “ப்ரோ அடிப்பீங்கள்ல.. இப்ப அடிங்க..” என்று சிகரெட்டை நீட்ட, கோமலுக்கு ஒரு செகண்ட் கன்ப்யூஷன்.

டைரக்டர் முன்னாடி தம் அடிக்கறது மகாபாவம்னும் கருட புராணத்துல அதுக்கு கொதிக்கற எண்ணெய் சட்டில போடுவாங்கன்னும் சொல்லப்பட்டு இருக்கற கோலிவுட்ல, டைரக்டரே தம்ம குடுத்து அடிக்கச் சொல்லும்போது, கோமலுக்கு லைட்டா ஜெர்க் ஆச்சு. அவன் யோசிக்கும்போதே மத்த அஸிஸ்டெண்ட்ஸ் தம்ம பத்த வச்சு டீய உறிஞ்சு குடிக்க, கோமல் டக்குன்னு ஒரு தம்ம எடுத்து பத்த வெச்சான். 

டீய குடிச்சுட்டே விக்கி “ஸ்டோரி டிஸ்கஸ் பண்ணனும் எங்க போலாம்”னு கேட்க, உடனே கோமல் “பாண்டிச்சேரில போய் ரூம் போட்டுடலாம்”னு சொன்னான். விக்கி ஒரு செகண்ட் யோசிச்சுட்டு “இந்த ரூம் போட்டு டிஸ்கஸ் பண்றது எல்லாம் வேஸ்ட் ப்ரோ.. நாம ஒண்ணு பண்ணலாம். ஜாலியா கார் எடுத்துட்டு அப்படியே கேரளா போய்ட்டு, அங்க இருந்து பெங்களூர் போய் அங்க இருந்து கோவா போலாம். கோவால பிலிம் பெஸ்டிவல் நடக்குது. அப்படியே பிலிம் பெஸ்டிவல் அட்டெண்ட் பண்ணிட்டு சென்னை வந்துடலாம்”னு சொன்னான். உடனே மத்த அஸிஸ்டெண்ட்ஸ் “செம்ம ப்ளான் ட்யூட்”னு சொன்னாங்க. 

கோமல் மட்டும் ”கார்ல இப்படி ரவுண்டு அடிச்சுட்டே இருந்தா ஸ்டோரி டிஸ்கஷன் எப்ப பண்றது”ன்னு கேட்டான். “கார்ல போகும்போது பண்ணலாம் ப்ரோ” என்று விக்கி கேஷுவலா சொன்னான். கோமல் மைண்ட் வாய்ஸ்ல ’ரூம் போட்டு டிஸ்கஸ் பண்ணுவாங்க.. ஊர் ஊரா தெருத்தெருவா சுத்தி டிஸ்கஸ் பண்ணலான்னு சொல்றானுங்களே, இது சரியா வருமா’ன்னு யோசிச்சுட்டே தன்னோட சந்தேகத்த  கேள்வியா கேட்க.. “வரும் ப்ரோ”ன்னு விக்கி சொன்னான்.

ரூமுக்கு வந்தும் கூட, கோமலுக்கு கொஞ்சம் குழப்பமாவே இருந்தது. ’இவனுங்க என்ன அமேசான் காடுகள்ள இருந்து வந்த அரிய வகை டீமா இருக்கானுங்க. கார்ல போயிட்டே எப்படி ஸ்டோரி டிஸ்கஸ் பண்றது’ன்னு யோசிச்சான். தன்னோட சந்தேகத்தை பவித்ராகிட்ட போன் அடிச்சு கேட்டான். “நீ கார்ல போ, இல்ல கடல்ல நீந்திட்டு போ. எனக்கு அதெல்லாம் தெரியாது. சொன்ன டெட்லைன்ல ஆடி காரோட வந்து நில்லு” சொல்லிட்டு பவித்ரா போனை கட் பண்ண.. கோமலுக்கு ’என்னா வாழ்க்கைடா இது’ன்னு தோணுச்சு. 

கட் பண்ணா, ஒரு இன்னோவா கார்ல கோமல் தன்னோட லக்கேஜை ஏத்திட்டு இருந்தான். விக்கி யாருகிட்டயோ போன்ல “நோ ப்ளான்ஸ் மச்சி.. அப்படியே போறோம்.. 15 நாள் ஆகலாம்.. 20 நாள் ஆகலாம்.. ஆனா வரும்போது கதையோட வருவோம்”னு பேசிட்டு இருந்தான். கோமலுக்கு நம்பிக்கையே இல்ல. எப்படி? இந்தமாதிரி ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணமுடியும்னு அவனுக்குள்ள ஒரு கேள்வி ரன்னிங்லயே இருந்துச்சு. விக்கி வந்து உட்கார கார் கிளம்புச்சு. கார் ஶ்ரீபெரும்புதூர் டோல்கேட் தாண்டுனதும், “ட்யூட், இங்க லெப்ட்ல ஒரு டாஸ்மாக் இருக்கும். செம்ம பார் செட்டப் . இங்கயே ஸ்டார்ட் பண்ணிடலாமா?” விக்கியோட அஸிஸ்டெண்ட் விஷால் கேட்க ,விக்கி உடனே “ஓக்கே ட்யூட்”னு சொல்ல.. கார் ஒயின்ஷாப் வாசல்ல போய் நின்னுச்சு. 

கயிறு கட்டில் எல்லாம் போட்டு பாரே வித்தியாசமா இருந்துது. டிரைவர் தவிர எல்லாரும் ஒரு கட்டில்ல ரவுண்டு கட்டி உட்கார்ந்தாங்க. விஷால் எல்லாருக்கும் என்ன சரக்கு வேணும்னு கேட்டுட்டே வர, ’நான் குடிக்க மாட்டன்’னு சொன்னான் கோமல். விக்கி ஆச்சர்யம் ஆகி “ப்ரோ லைட்டா பியர் அடிங்க”ன்னு சொல்லிப் பார்த்தான். கோமல் ’முடியவே முடியாது’ன்னு சொல்லிட்டான். அவங்க எல்லாரும் சேர்ந்து வற்புறுத்தும்போது, கோமல் மனசுல சபலம்கற சாத்தான் நாக்க தொங்க போட்டுட்டு எதிர்ல இருக்கற  பீர் பாட்டிலையே பார்த்துச்சு. ஆனா கோமல் அந்த சாத்தான ஜெயிச்சு, குடிக்க மாட்டேன்னு உறுதியா நின்னான். அவனோட மனஉறுதிய பாராட்டி, விக்கி அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் சைட் டிஷ் ஆர்டர் பண்ணான். 

ரெண்டு ரவுண்டு போனதும் விக்கி ஸ்கிரிப்ட் பத்தி பேச ஆரம்பிக்க, கொஞ்சம் நேரம் ஜாலியா டிஸ்கஷன் போச்சு. விக்கி ஒரு சீன் சொல்ல, “ட்யூட் கேவலமா இருக்கு இந்த சீன்” அப்படின்னு சொன்னான் ஹரிஷ். கோமலுக்கு இதெல்லாம் புதுசா இருந்துது. கோமல் வாயே திறக்கல. அவங்க பேசறத மட்டும் உன்னிப்பா கேட்டுட்டு இருந்தான். 

அவங்க ஸ்டோரிய பத்தி பேச ஆரம்பிச்சு, பிரண்டோட கேர்ள்பிரண்ட் பத்தி எல்லாம் பேசி முடிச்சு திரும்ப ஸ்டோரிக்குள்ள வர்றதுக்குள்ள, மொத்தம் 17 பீர் காலி ஆகி இருந்தது. ஒரு மணி நேரம் கழிச்சு, ஒருவழியா வெளிய வந்தாங்க. இன்னொரு பத்து பீர் வாங்கி கார்ல போட்டுட்டு கிளம்புனாங்க. கார்லயும் பீர் அடிச்சுட்டே கதைய பத்தி பேசிட்டு வந்தாங்க. கோமல் இப்ப கொஞ்சம் அவங்ககூட அடாப்ட் ஆகி, அவனும் தோணறத பேச ஆரம்பிச்சான். 

கார் வேலூர் தாண்டும்போது, அரவிந்த் “ட்யூட் லஞ்ச் ப்ளான் என்ன”ன்னு கேட்க.. விக்கி உடனே ’ஆம்பூர் ஸ்டார் பிரியாணி போயிடலாம்’னு சொன்னான். அதுக்கப்புறம் கதைய விட்டுட்டு, ’சிட்டில எங்க எங்க நல்ல பிரியாணி கிடைக்கும்’னு பேச ஆரம்பிச்சாங்க. பிரியாணி சாப்பிடறதுல அவங்களுக்கு இருந்த ஆழ்ந்த அறிவை பார்க்கும்போது கோமலுக்கு ஆச்சர்யமா இருந்தது. அந்த டாபிக் முடியும்போது, கார் ஆம்பூர் ஸ்டார் பிரியாணில வந்து நின்னுச்சு. 

பிரியாணி சாப்பிடும்போது, “இண்டர்வல் ப்ளாக்ல ஹீரோ பிரச்சனைல மாட்டற சீன வைப்பமா? ஸ்டார் பிரியாணில பிரியாணி சாப்பிடும்போது ஒரு பிரச்சனை ஆகுது. அப்ப ஹீரோ என்ன பண்றான்னா..” என்று விஷால் சொல்லிட்டு இருக்கும்போதே “டேய்.. அதான் வெங்கட்பிரபு சார் ஆல்ரெடி இத வெச்சு பிரியாணின்னு ஒரு படம் எடுத்துட்டாரு இல்ல?”ன்னு விக்கி  கேட்க.. “எப்ப ட்யூட்.. நான் அந்த படம் பாக்கலயே” என்று விஷால் சொல்ல.. “உலக சினிமாவையே பாத்தா பத்தாது ட்யூட். கொஞ்சம் உள்ளூர் சினிமாவும் பாருங்க”ன்னு ஷரீஷ் சொன்னான். “மச்சி.. கிரியேட்டிவ் கிளாஷ்.. நானும் வெங்கட் பிரபுவும் ஒரேமாதிரி யோசிக்கறோம் இல்ல?”ன்னு விஷால் கேட்க.. எல்லாரும் அவனை ஒருமுறை முறைச்சாங்க. அதுக்கப்புறம் சாப்பிட்டு முடிக்கறவரைக்கும், விஷாலை கதறக்கதற கலாய்ச்சாங்க. கோமலுக்கு டைம் வேஸ்ட் பண்ற மாதிரி ஒரு பீல் இருந்தாலும் அமைதியா இருந்தான். 

கார் மறுபடியும் கிளம்புச்சு. கிருஷ்ணகிரில ஒரு ஒயின்ஷாப், சேலம் தாண்டி ஒரு ஒயின்ஷாப். அவிநாசி பக்கத்துல ஒரு ஒயின்ஷாப்னு கார் நின்னு நின்னு கோயம்புத்தூர நெருங்கும்போது நைட்டு எட்டு மணி ஆகி இருந்துச்சு. இன்னும் ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணா, கேரளாவுக்குள்ள என்ட்ரி ஆகலான்னு பேசிட்டு இருக்கும்போதே ஹரிஷ் “மச்சி.. நாம ஏன் இந்த ரூட்ல கேரளா போகணும். டாப் சிலிப் போலாம். அங்க இருந்து அதிரப்பள்ளி பால்ஸ் போயிட்டு அப்படியே கேரளாக்குள்ள போயிடலாம்”னு சொல்ல.. விக்கி உடனே “செம்ம ஐடியா, அண்ணே அப்படியே வண்டிய திருப்பிட்டு பொள்ளாச்சி போய் டாப் சிலிப் போங்க”ன்னு சொல்ல.. கோமலும் ட்ரைவரும் ஒருத்தரை ஒருத்தர் இனம்புரியாத ஒரு பயத்தோட பார்த்துக்கிட்டாங்க. அதுக்குள்ள விஷால் “டாப் சிலிப்ல என் பிரண்ட் ரிசார்ட் இருக்கு.. நாம அங்க ஸ்டே பண்ணிட்டு, காலைல அதிரப்பள்ளி போலாம்”னு சொன்னான். 

’இவனுங்க திடீர்ன்னு ஏர்போர்ட் போய், அங்க இருந்து சைனா போலாம்னு கூட ப்ளான் பண்ணுவானுங்க போல இருக்கே.. நல்ல வேளை நம்மகிட்ட பாஸ்போர்ட் இல்ல’ன்னு கோமல் யோசிக்கும்போதே கார் டாப் சிலிப் நோக்கி திரும்புச்சு. 

கட் பண்ணா, நைட் பதினொரு மணிக்கு கார் டாப் சிலிப்ல வந்து நின்னுச்சு. காலைல இருந்து ட்ராவல் பண்றதானால, கோமல் நல்லா தூங்கிட்டு இருந்தான். ஹரிஷ் அவனை எழுப்புனான். எந்திரிச்சு பார்த்தா, கார் ஒரு நடுக்காட்டுக்குள்ள நின்னுட்டு இருந்துச்சு. சுத்தியும் இருட்டு. பசி வேற வயித்துல ஆசிட் அடிக்க , கோமல் காரை விட்டு இறங்கி விஷால்கிட்ட “நாம ரிசார்ட்டுக்கு வந்துட்டமா”ன்னு கேட்டான். “ரிசார்ட் புல்லா இருக்காம் ப்ரோ, அதனால நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம். நாம எல்லாரும் இன்னிக்கு நைட்டு காட்டுக்குள்ளயே ஸ்டே பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்”னு சொல்ல.. கோமலுக்கு ஒரு செகண்ட் கோபம் எரிமலை மாதிரி கொந்தளிச்சு வந்துச்சு. அதை அடக்கிட்டு, “அதெல்லாம் ரிஸ்க்கு ப்ரோ… நாம எங்காவதுபோய் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கலாம்”னு சொன்னான். உடனே விக்கி “ப்ரோ… இதெல்லாம் செம்ம எக்ஸ்பீரியன்ஸ், ஜாலியா வாங்க. ட்ரைவர் அண்ணன் வேணுன்னா கார்ல தூங்கட்டும்”னு சொன்னான். 

வேற வழி இல்லாம, கோமல் அவங்க கூட காட்டுக்குள்ள நுழைஞ்சான். தாராபுரம் ஏரியாங்கறதானால கோமலுக்கு பக்கத்துல இருந்த டாப் சிலிப் பத்தி நல்லாவே தெரியும். யானை, புலி ,கரடின்னு பல மிருகங்கள் நடமாட்டம் இருக்கற ஏரியா அது. கோமல் பயத்தோட அவங்க கூட நடந்துக்கிட்டு இருந்தான். ஒரு இடத்துல 5 பேரும் திரும்ப.. எல்லோர் முகத்துலயும் ஷாக் ரியாக்‌ஷன். பார்த்தா, எதிர்ல ஒரு பெரிய யானை கூட்டமே நின்னுட்டு இருந்துச்சு. கோமலுக்கு ஒரு செகண்ட் அடிவயிறு கலங்கி, உடனே ’ஆய்’ போகணுங்கற அவசர கால சூழ்நிலை உண்டாச்சு. அந்த நேரத்துல எக்ஸ்ட்ரா ஷாக் வேற உண்டாச்சு. அந்த யானைக் கூட்டம் இவங்கள நோக்கி வர ஆரம்பிச்சது. கோமலின் கலைப்பயணம் தொடரும்… 

- சந்துரு 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles