உயிர்களிடத்தில் வேறுபாடுகள் கூடாது - கிருஷ்ணன் அருள்வாக்கு

Wednesday, August 24, 2016

நாராயணனின் முக்கியமான பத்து அவதாரங்களில், கிருஷ்ண அவதாரம் எப்போதுமே ஒருபடி உயர்ந்ததுதான். ஏனெனில், குழந்தையாக இருந்தபோது செய்த குறும்பு, கோகுலத்தில் சிறுவர்களுடன் கூத்தாடியது, கோபியர்களுடன் ராசலீலை புரிந்தது என்று சொல்லி மாளாது. அந்தக் கதையைக் கேட்போருக்கு, அவன் பிறந்த யுகத்தில் நாமும் பிறந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வராமல் இருக்குமா என்ன? 

சாதி, மத, இன வெறியைத் தொடர்ந்து பல சமூக அவலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில், அதற்கு எதிரான பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுத்தவர் பகவான் கிருஷ்ணர். அந்தப் பரமாத்மா பிறந்த நாளான இன்று, அவரைச் சற்று நினைவுகூர்வோமா?

 

“பாரதப் போர் முடிந்துவிட்டதும், கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு முடிசூட்டி விட்டு துவாரகைக்குத் திரும்பினார். அதன்பின், உதங்கர் எனும் முனிவரைக் கண்ணன் சந்திக்க நேர்ந்தது. மாமுனிவரான உதங்கர், கண்ணனின்பால் மிகுந்த கோபம் கொண்டிருந்தார். “கண்ணா, பாரதப் போரில் இரண்டு சேனையிலும்  எத்தனை உயிர்ச்சேதம். நீ நாராயணனின் அம்சம்தான். உன்னால் ஏன் இதைத் தடுக்க இயலவில்லை? இதைப் பற்றி முன்பே தெரியும்தானே? ஏன் இப்படிச் செய்தாய்? எனக்கு, உன்மேல் கடுங்கோபம் வருகிறது. உன்னைச் சபித்தாலும் தப்பில்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்று அழகிய மாயனிடம் அனல் கக்குகிறார் உதங்கர்.

 

அரவிந்த லோச்சனனான, தாமரை போன்றிருக்கும் அழகிய கண்களை உடைய  கண்ணன் அவரைச் சாந்தப்படுத்தினார். ’வரமளிக்கிறேன்’ என்று உதங்கருக்கு வாக்களிக்கிறார். அதன்படி, ’தண்ணீர் வேண்டும் என்று நினைத்தவுடன் உதங்கருக்கு, உடனே தண்ணீர் கிடைக்கும்’ என்று வரமளித்தான் கலியுக வரதன் கண்ணன். ஒருவர் கோபம் கொண்டு கடிந்தாலும், அவர்பால் திரும்பி கோபம் கொள்ளவில்லை. 

 

இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள், அடர்ந்த பாலைவனத்தில் தனியே சிக்கிக் கொண்டார் உதங்கர். அவருக்குப் பயங்கர தண்ணீர் தாகம். அப்போது, அங்கே வேடன் ஒருவன் திடீரென்று வந்தான். உதங்கரிடம், ’தண்ணீர் வேண்டுமா?’ என்று கேட்டவாறே, தனது தோல் பையில் இருக்கும் தண்ணீரைத் தர எண்ணினான். உதங்கருக்கு, ஏனோ அந்த வேடனைப் பிடிக்கவில்லை. ’அவன் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன்’ என்று, அவனிடம் தண்ணீர் வாங்கிப் பருக மறுத்தார். அதன்பின், அந்த வேடனும் அங்கிருந்து சென்றுவிட்டான். 

 

உடனே, அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் உதங்கர் முன் பிரசன்னமானார். “என்ன உதங்க மாமுனியே, இப்படி நீங்கள் அம்ருதத்தை வேண்டாம் என்று கூறலாமா?” என்றதும், அவர் மலங்க மலங்க விழித்தார். “என்ன சொல்கிறீர் வாசுதேவரே?” என்றார் கண்ணனிடம். “ ஆம் உதங்கரே! உம்மைத் தேடி வந்த வேடுவன் வேறு யாரும் அல்ல. அவன் தேவர்களின் அதிபதியான  தேவேந்திரன். அவன் கொண்டு வந்தது தேவாமிர்தம். அதைப்போய்,  நீர் வேண்டாம் என்று கூறி விட்டீரே” என்றதும், உதங்கர் அதிர்ந்தார். 

 

“உயிர்களிடத்தில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பது, மாமுனியான தங்களுக்குத் தெரியாதா? கடுமையான கோபத்தால், அறியாமை எனும் இருட்டுக்கு தள்ளப்பட்டீரே. ராஜ ரிஷிகளும் மாமுனிகளும் வேண்டும் வரமான, தேவாமிர்தத்தை தவற விட்டு விட்டீரே!” என்று கூறிவிட்டு மறைந்தார். உதங்கரும் தன் தவறை எண்ணி வெட்கித்தார். கிருஷ்ணன் தன் பக்தர்களுக்கு அருளிய வாழ்க்கைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று.

 

பகவான் கிருஷ்ணன், நள்ளிரவில் தேவகியின் மகனாக தோன்றினான். புருஷோத்தமனான அவன், தன்னுடைய ஜீவாத்மாக்களுக்கு கீதையின் வாயிலாக உபதேசித்து ஞான ஒளி ஏற்றினான். அவன் பிறந்த நாளான கோகுலாஷ்டமியன்று, அந்த விஷயங்களைப் பின்பற்றுவோம், நம் சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுப்போம், மோக்ஷத்தின் வழியை அடைவோம்! அதுவே, அந்தப் பரந்தாமன் வழிசெல்வோரின் உண்மையான பக்தியைப் பறைசாற்றும்.

 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles