மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி விரதம்!

Friday, August 12, 2016

உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டீர்களானால், உங்களுடைய வீட்டினில் மகாலக்ஷ்மி தாயார் குடிகொள்ள விரும்புவாள். நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களுக்குப் பின்னால், நம்முடைய மூதாதையர்கள் ஒரு அர்த்தத்தை ஒளித்து வைத்திருக்கின்றனர். அதிகாலை எழுந்து, சாணம் கரைத்து, வாசல் தெளிப்பதன் பின்னால் ஒரு உண்மை இருக்கிறது.

அது என்னவென்றால், ஓசோன் மண்டலம் அதிகாலையில் சுத்தமாக இருப்பதால், தூய்மையான காற்றைச் சுவாசிப்போம். வாசலில் தெளிக்கப்படும் சாணம், தீமை தரக்கூடிய கிருமிகளை நாசமாக்கும். இப்படி, ஒவ்வொரு அனுஷ்டானத்துக்குப் பின்னாலும் ஒரு தாத்பரியம் உள்ளது.

அஷ்டலட்சுமிகளுக்கு உகந்த அருகம்புல்லை, அந்த விக்ரஹம் மீது தூவி பூஜை செய்வது மிகவும் நல்லது. அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை துதி செய்து, அஷ்டாலக்ஷ்மியைப் போற்றிப் பாடலாம். வரலக்ஷ்மி விரதத்தன்று, நம் வீட்டிற்கு வரும் அனைத்துப் பெண்களும் அஷ்டலக்ஷ்மியின் சொரூபமே. இவர்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுப்பது மிகவும் நல்லது. 

நம் வீட்டுக்கு நம்முடைய மூதாதையரை எவ்வாறு மரியாதையுடன் அழைத்து பூஜை செய்ய வேண்டுமோ, அதேபோல் செய்ய வேண்டும். சந்தனத்தில் லக்ஷ்மி முகம் செய்து வழிபடலாம். வசதியுள்ளவர்கள் வெள்ளியினால் ஆன முகத்தை, பூஜையறையில் வைப்பர். அதன்பின் கலசத்தில் பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் மற்றும் புளி சேர்த்து, அந்தக் கலசத்தை பூஜையில் வைக்க வேண்டும். இதனால், நமக்கு அன்னபூரணியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்துடன், ஒன்பது வெற்றிலை, ஒன்பது பாக்கு மற்றும் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் சேர்க்க வேண்டும். ஆரத்தி எடுத்து பூஜை செய்ய வேண்டும். மறுநாள் அன்று, கலசத்தில் உள்ள அரிசியில் பொங்கல் செய்து, அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். 

சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை, மறுநாள் நீர்நிலையில் கரைக்க வேண்டும். இந்த விரதம் அனுஷ்டிப்பதால், மாங்கல்ய பலம் நிலைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. அதோடு, செல்வங்கள் பெருகி, மங்களகரமான வாழ்வு அமையும்.

வீட்டில் தனியாக பூஜை செய்ய வேண்டுமே என்று எண்ணுபவர்கள், அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று , வரலக்ஷ்மி விரதத்தில் கலந்து கொள்ளலாம். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இந்த வரலக்ஷ்மி பூஜையைச் சிறப்பாக செய்வர். உள்ளத் தூய்மையோடு, பிறருக்குத் தீங்கு எண்ணாமல் செய்யும் எந்தவொரு பூஜையும், கடவுளைச் சென்றடையும். வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று, நோய்  நொடியின்றி வாழ, மஹாலக்ஷ்மியை பக்தியுடன் பூஜிப்போம்..!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles