வெற்றி எனும் மந்திரம் - சோம. ராமநாதன்

Thursday, September 28, 2017

நம்முடைய வாழ்க்கை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் முற்றிலும் மாறிவிட்டது. இதன் விளைவாக நாம் பல சௌகர்யங்களை பெற்றுள்ளோம். அதனால் கிடைக்கும் சந்தோஷத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறோம்.

ஒவ்வொரு செயலிலும் வெற்றியையே எதிர்பார்த்தே பணியாற்றுகிறோம். வெற்றி எனும் பொருள் நம்மை பொருத்தவரை பணம் ஈட்டுவதே. ஆனால், அது மட்டுமே வெற்றியா?

தவழும் குழந்தை எழுந்து, நடக்க செய்யுமே அதுவும் கூட வெற்றி தான். மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் வெற்றி மாறுபடுகிறது. ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டு, நாம் தங்கம் பதக்கம் பெறுவது என்பது வெற்றிதான். ஆனால், அதற்கு முன்னோட்டமாக அதை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பது கூட வெற்றிதான்.

வெற்றி என்பது முயற்சிக்கு கிடைத்த பலன் என்கிறோம். நம்முடைய கனவை விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், இறுதியில் கிடைக்கும் பலனே வெற்றி என்பது நேற்றுவரை நமக்கு வேதவாக்காக இருந்து வந்தது. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

ஒருவேலையை இலகுவாக செய்தால் அதுதான் வெற்றி. ஆனால், பெரும்பாலும் ஒரு வேலையை அடுத்தவருக்கு தள்ளிவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் பலனை, நாம் பெறுவதே வெற்றி அல்லது ஸ்மார்ட் வொர்க் என பார்க்கப்படுகிறது. ஆனால், இது உண்மையான வெற்றி ஆகாது. ஸ்மார்ட் வொர்க் என்பது வேலையை இலகுவாக செய்வதே தவிர; தள்ளிவிடுவதல்ல!.

ஒருவர் தன்னுடைய லட்சியத்தை அடைவதை பெரிய வெற்றி எனலாம். அப்படியாக, ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றவர்களை பார்த்து, அவர்கள் செய்ததை அப்படியே காப்பி அடித்தாலும் வெற்றி கிட்டாது. மாறாக, அவர்கள் கடைபிடித்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு போன்றவற்றை பின்தொடர்ந்து, நம்முடைய சொந்தப் வழியில் முயற்சித்தால் வெற்றி உறுதி.

சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் ஆத்ம திருப்தி கூட வெற்றிதான். சின்ன சின்ன நீர்த்துளி சேர்ந்து சமுத்திரமாவது போல, சின்ன சின்ன வெற்றிகள் சேர்ந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கும்.  நம்முடைய ஒரு செயலால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பலன் கிடைத்தால் அது உண்மையான வெற்றி. அதுவே அனைவருக்கும் பயன்பட்டால் அதுதான் மிகப் பெரிய வெற்றி!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles