புதுமைகள் செய்ய உகந்த இடம் கோலிவுட் தான்- எழுத்தாளர் சுபா

Sunday, October 15, 2017

நவீன இலக்கியம், உலக சினிமா, ஆன்மீகம், பயணம், பல்சுவை என எதுகுறித்தும் எப்போதும் விவாதிக்கலாம் எழுத்தாளர் சுபாவிடம். விரல்நுனியில் அத்தனை தகவல்களையும் வைத்துக்கொண்டு, சுவாரஸ்யமாக எழுத்தைப்போலவே பேசவும் செய்வார்.

மனம் இதழில் அவர் எழுதி வரும் தொடர்களே அதற்கு சாட்சி. கோலிவுட்டில் பிஸியாக இயங்கி வரும் கதாசிரியரும் கூட. தீபாவளிக்கு அவர்  அளித்த சிறப்பு நேர்காணல் இது!

நவீன இலக்கிய உலகில் கால்பதிப்பதற்கு யார் தூண்டுகோலாக இருந்தார்கள்?

“பள்ளிக்கூட வயதிலேயே அறிமுகமான பொது நூலகங்கள். அங்கு நாங்கள் படிப்பதற்காகவே எழுதப்பட்டதுபோல் காத்திருந்த ஆயிரக்கணக்கான அற்புதப் புத்தகங்கள். அவற்றின் மூலம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட படைப்பாளிகளின் நூறாயிரம் அனுபவங்கள். தமிழை வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கற்றுத்தந்த சிறப்பான தமிழாசிரியர்கள்!”.

சினிமா, ஆன்மீகம், பயணம் என பல்சுவையிலும் கலக்குகிறீர்களே?

“கதை எழுதுவதை விட்டுவிட்டீர்களே? எழுத்தை நேசிக்க ஆரம்பித்தபிறகு, எல்லாவற்றையும் ரசனையோடு எழுதிப் பார்ப்பது  இயல்பாகிவிட்டது.

சினிமா ஒரு கூட்டு முயற்சி. இயக்குநரில் ஆரம்பித்து தியேட்டரில் படம் ஓட்டுபவர் வரை அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது. சினிமாவுக்கு எழுதும்போது, ஓர் அணிலின் பங்களிப்பாக, அதே சமயம் அழுத்தமாகக் கொடுக்க முனைகிறோம். சினிமாவில் மற்றவருடன் இயைந்து இயங்குவது நட்பை மேலோங்கச் செய்கிறது. பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் பக்குவத்தைப் பட்டை தீட்டுகின்றன. ஆன்மிகத்தில் திளைக்கும்போது, பரவசம் பொங்கி முட்டுகிறது. கதை எழுதுகையில் கற்பனைச் சிறகுகளை வேண்டுமட்டும் விரிக்க முடிகிறது.”

உங்களுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்? ஏன்?

“பட்டியல் மிகப் பெரியதாயிற்றே.. மாதிரிக்கு மூன்று நான்கு பேர் மட்டும் இங்கே..

தமிழை எளிமையாக வளப்படுத்தித் தந்ததற்காக.. மகாகவி சுப்ரமணிய பாரதியார்!  

மண் வாசத்துக்காக, அலட்சியமாக வந்துவிழும் வார்த்தைகளுக்காக.. தி. ஜானகிராமன்

மனித நேசிப்புக்காக, பற்பல அடுக்குகள் கீழே உள்ளவர்கள் பற்றியும் எழுதுவதற்கு விஷயங்கள் உள்ளன என்று புரிய வைத்ததற்காக.. ஜெயகாந்தன்!

தமிழைச் சுருக்கி, அழகாக்கி அலங்காரமாகத் தர முடியும் என்று அறிய வைத்ததற்காக.. சுஜாதா!

இன்னும் நாங்கள் படித்த உலகளாவிய எத்தனையோ எழுத்தாளர்களும் ஏதோ ஒரு விதத்தில் எங்களுள் தாக்கத்தையும், எழுதும் தாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.”

 தமிழ் சினிமாவில் திரைக்கதையாசிரியர்களுக்கான பங்கு எந்தளவிற்கு உள்ளது?

“சினிமாவில் பல புதுமைகள் செய்து பார்க்கும் ஆரோக்கிய சூழல் தமிழில்தான் முன்னணியில் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். நடிகர் முகங்களுக்காக மட்டும் தியேட்டர் போவோர் குறைந்து, உள்ளடக்கம் சிறப்பாக இருக்கிறதா என்று கேட்கும் ரசிகர்களின் கண்ணோட்டம் திசை மாறியிருக்கிறது. அதனாலேயே இங்கே திரைக்கதை சிறப்பாக அமையவேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது. சிறப்பானதைக் கொடுத்தால் தேடிவருவார்கள் என்று புரிந்துகொண்ட திரைக்கதாசிரியர்கள் கடுமையான உழைப்பைத் தர முன்வந்துள்ளார்கள்.”   

இயக்குநர் கே.வி.ஆனந்த் உடனான நட்பு குறித்து?

“நிருபர்களாகவும், புகைப்படக் கலைஞராகவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நட்பு அது. திரைத்துறையில் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை மீட்டுத் தந்தவர் எங்கள் நண்பர் கேவி. ஆனந்த். கதை விவாதம் போது மட்டும், சில விஷயங்களில் முரண்படுவோம். வார்த்தைகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வோம். பக்குவமடைந்த நட்பு என்பதால், யாருக்கும் காயமிராது. தனிப்பட்ட ஈகோவைத் தள்ளிவைத்துவிட்டு, கதைக்கு நியாயமானதை மனமுவந்து ஒருமனதாக ஏற்போம். மற்றபடி அன்பும், நேசமும், சந்தோஷமும், சிரிப்புமாக எங்கள் நட்பு தொடர்கிறது. தொடரும்!”.  

சுபாவின் எழுத்துப் பயணத்தில் மறக்கவே முடியாத சம்பவம் எது?

“பல இடங்களில் பல முறை சொல்லிவிட்டோம். விருதுநகர் மாவட்டத்தில் ஆவுடையாபுரம் என்ற ஊரில் தொழிற்சாலைக் கழிவுகள் கலந்த கௌசிக நதியிலிருந்து மொண்டு குடித்த ஊர் மக்கள் அனைவரும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். தீர விசாரித்து எழுதி, ‘கல்கி’யில் கே.வி. ஆனந்தின் புகைப்பத்துடன் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட வைத்தோம். கட்டுரை, சுப்ரீம் கோர்ட்டின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ஊர் மக்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை என்றைக்கும் நன்றியுடன் மறக்க இயலாது!.”

வாழ்வு நிறைவை தந்திருக்கிறதா?

“பள்ளி வயதிலிருந்து ஆசைப்பட்டது என்ன? எழுத்தாளனாக வேண்டும் என்று. அது வாய்த்துவிட்டது. அன்பான மனைவி, பிரியமான உறவினர்கள், பெருமை தரும் குழந்தைகள், என்று நேசிப்பும், நேயமும்கொண்ட குடும்பம் அமைந்துவிட்டது. இனம், ஜாதி, குலம், கோத்திரம் என்று பிரித்துப் பார்க்காமல் கூடும் நல்ல நட்பு எங்கும் கிடைத்துள்ளது.  இனிமேலும் யாருக்கும் தீங்கு நினைக்காமல், ஆரோக்கியமாக மிச்ச நாட்களையும் வாழ அருள் கிடைக்கும் என்ற பூரண நம்பிக்கையும் இருக்கையில், வாழ்க்கையில் நிறைவுக்கு ஏது குறைச்சல்? ஆனந்தமாக இருக்கிறோம்!.”  

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles