சந்தோஷ தீபாவளி - சோம.ராமநாதன்

Sunday, October 15, 2017

பூலோகத்தில் மக்களுக்கு பல இன்னல்கள் தந்த நராகசூரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் வதம் செய்து, கொன்ற தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில், நாம் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்.

தீபாவளி இன்று மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படுகிறதா? சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பெருமைக்கான கொண்டாட்டமாகவே தீபாவளி மாறிவிட்டது என்பதே உண்மை!.

நம்முடைய சராசரி வருமானத்துக்கும் மீறி கடன்பட்டு தீபாவளியை கொண்டாடுகிறோம். தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி, வீட்டை நிரப்புகிறோம். உண்ண முடியாவிட்டாலும், நிறைய பலகாரங்களை செய்கிறோம். போதாதென்று பட்டாசுகளை வாங்கி குவிக்கின்றோம்.

நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பால், சாலைகள் சுருங்கி சிறு சிறு தெருக்களாகிவிட்டன. அங்கேதான் நாம் பட்டாசுகளை வெடிக்கிறோம். இதனால் ஒலி மாசுபாடுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்களுக்கு தொல்லைகள் தருகிறோம். பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. தீ விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பட்டாசில் வெடிப்பதால் அதில் உள்ள வெடிமருந்துகளின் வீரியம் 80 நாட்களுக்கு மண்ணில் அழியாமல் இருக்கும். மண்ணின் தன்மை கெடும். இதனால், மண்புழு போன்ற சிறு சிறு உயிர்கள் அழியும். மழை பெய்யும்போது அதனுடன் கலந்து ஏரி, குளம் போன்றவற்றில் சென்று சேரும். அதனால் வரும் பாதிப்பும், இறுதியில் நம்மையே வந்து சேரும்.

இதோ மேலும் சில புள்ளி விவரங்கள்!

2016 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு விற்பனை ரூ.1000 கோடிக்கு நடந்துள்ளது.

அதே வருடம் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால், சென்னையில் சேர்ந்த குப்பையின் அளவு 91 டன். இதை 1,120 துப்புரவு தொழிலாளர்களை கொண்டு அகற்ற, ஒரு வாரமானது.

125 டெசிபலுக்கு அதிகமான சப்தம் தரும் வெடிகளை வெடிக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், நாம் வெடிக்கும் ஆட்டம் பாம் & 145 டெசிபல், சரவெடி &142 டெசிபல். இதுபோன்ற  அளவுக்கு சப்தத்தை கேட்டால் காது கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

 

இதுவா மகிழ்ச்சி?

உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முடைய தேவையற்ற செலவுகளை குறைத்து, அந்தப் பணத்தை உணவாகவோ பொருளாகவோ மாற்றி முதியோர், ஆதரவற்றோர், உணவில்லாதோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு வழங்கலாம். அதுவே உண்மையான மகிழ்ச்சி. இன்று சிறுபான்மையினரால் செய்யப்படும் இத்தகைய உதவி, இனி எல்லோராலும் பின்பற்றப்பட்டால் அது வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டுதலாகவும், இயற்கையை காக்கவும் பயன்படும். அதுவே சந்தோஷ தீபாவளி!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles