கவிதைகள் சொல்லவா - விதையின் பனிக்குடம் நெக்குவிடுகிற காலம் (கவிஞர் சக்தி)

Wednesday, November 15, 2017

ஷக்தி எனும் பெயரில் கவிதைகள் எழுதி வருபவர் சக்திவேல் புருஷோத்தமன்.  புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையாளரான இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டிக்கு அருகில் பள்ளங்கோவில் கிராமத்தில் வசிக்கிறார்.  இறுதி கட்ட புற்றுநோய் பாதிப்பால் சிரமப்படும் மக்களுக்காக உதவ அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

நெடுந்தூர அட்வஞ்சர் ட்ரிப் எனும் பைக் பயணங்கள் மேற்கொள்வதும். புகைப்படங்கள் எடுப்பதும் இவரது பொழுதுபோக்கு. ‘மரநாய்’ எனும் கவிதைத் தொகுதியை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

 

நிலத்தின் பித்த வெடிப்புகள் மீது ஏர்க்கால்

அதிஉன்னத அனுபவத்திற்கு காத்து கிடக்கையில்

உழவுக்கிழவன் பேரானந்தப்பாடலை பாடுகிறான்

சனிமூலை நோக்கி நீளும் கோடுகளுக்குப்பால்

ஒரு மகரந்த சர்ப்பமாய் நெகிழும் நிலம்.

 

எனது நிலங்களுக்குள்ளிருந்து எந்தப் படலங்களையோ

எடுத்துக்கொள்ளுங்கள்

என் ஆண்மை மடிந்துவிடும்

வாயுக்களை உட்கவர்ந்து அகற்றி விடுங்கள்

என் மார்புகூட்டு ஈரல் தீப்பிணியில் தீயும்

கனிவுடன் அடியாழ நீர்மத்தை உறிஞ்சி விடுங்கள்

என் முகுளம் வன்மத்தில் முறியட்டும்

கொள்ளை நோய் பீடித்த நிலம் போல

எங்களைத்தூர வாரி வீசுங்கள்

பருவங்களும் மடிந்து வெறித்து குமுறும்

என் விழிகளை ஓர்முறை பார்த்துக்கொள்ளுங்கள்

பிறகு என் இதயத்தில் கல்லுளியை சொருகலாம்.

 

பசியின் சாயல் ஒன்றடுத்து ஒன்றாய்

ஒரு வளத்தை உருவாக்கியது

வெற்று வயல்களை திரும்பியும் பார்ப்பதில்லை காளைகள்

கனிவு ஏதுமற்ற கடவுளிடம் யாசித்தேன்

வனம் சாம்பலாகும் படி ஒரு மழை

குறுகிய துயரங்களை துடைத்தழித்த மழை

இனி தாழிட எதுவும் மீதமின்றி துடைத்தாயிற்று

தாழிடப்படும் கதவுகள் யாவும் காமத்தின் பொருட்டல்ல.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles