கோடைகளை இனி எதிர்கொள்ளுமா நம் நகரங்கள் ?  - சிறப்புக் கட்டுரை 

Monday, May 15, 2017

ஆராய்ந்து பார்த்தால், மனித வரலாறும் உயிர்களின் பரிணாமங்களும் முழுக்க முழுக்க தட்பவெப்ப நிலையின் கட்டுப்பாட்டுக்கே உட்பட்டிருந்திருக்கின்றன. தட்பவெப்ப நிலையினாலேயே உயிர்கள் தோன்றின. உயிர்கள் அழியவும் செய்தன. தட்பவெப்பநிலை என்னும் அறிவியல் துறையின்கீழேதான் கோடை என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.  
 

மனித வரலாற்றில் போக்குவரத்து வாய்ப்புகள் குறைந்திருந்த முற்காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்தந்த இடத்திலேயே வாழத்தலைப்பட்டனர். மிகுந்த ஊக்கமும் வீரமும் துறவு நாட்டமும் உடையவர்கள்தாம் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லவே துணிவார்கள். அவ்வாறின்றிப் படையெடுத்துச் சென்றால்கூட திரும்பி வருவது கடினம்தான். செல்லுமிடத்தில் போர்த்தோல்வி கண்டாலோ, செல்லும் வழியில் இடரை எதிர்கொண்டு மடிந்தாலோ இஃதிரண்டும் இன்றிச் செல்லுமிடம் பிடித்துப்போய் அங்கேயே நிரந்தரமாய்த் தங்கிவிட்டாலோ எந்தப் படையும் கிளம்பிய இடத்திற்குத் திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் படையெடுப்புகளே குடியேற்றங்களை நிகழ்த்தின.  

ஆப்கானிஸ்தானிலிருந்து கிளம்பி வந்த பாபரின் படைகள் சிந்து கங்கைச் சமவெளி வளத்தைக் கண்டபின் திரும்பிச் செல்லவேயில்லை. இல்லாமை மட்டுமே மனிதர்களைச் செலுத்தவில்லை, இயற்கையும் மனிதர்களை விரட்டியது. மலையில் வாழ்பவர்கள் கீழிறங்க விரும்புவதில்லை. மருதநில மக்களுக்குக் காட்டு வாழ்க்கை தெரியாது. நெய்தலின் உப்புக்காற்றோடு வாழ்வதற்குப் பிற நிலத்தார் அறியார். இப்படி எல்லாமே சூழலியல் கட்டுகளோடுதான் இயங்குகின்றன. அவற்றுக்கேற்ற தகவமைப்புக்கு வந்துசேர நெடுங்காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தத் தகவமைப்பிலிருந்து வெளியேறி வேறொன்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாராலும் எளிதில் இயலாது.
 
வரலாற்றுக் காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த பேரரசு என்று ஐரோப்பியத்தின் உரோமானியப் பேரரசைச் சொல்கிறார்கள். பிற பகுதிகளில் பேரரசுகள் உருவாவதற்கும் முந்தி உரோமானியர்களும் கிரேக்கர்களும் ஞாலத்தை வலம் வந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு எது அத்தகைய உந்துகையைத் தந்தது என்றால் அதற்கு ஐரோப்பியத்தின் தட்பவெப்ப நிலையையும் காரணம் என்றே  கூறவேண்டும். 

தம்நாட்டைப்போல இயற்கைச் சூழல் நிலவும் நாடுகளை எல்லாம் அவர்கள் கைப்பற்றத் துணிந்தார்கள். அல்லது தம்நாட்டிற்கு நேர் எதிரான நிலவளங்கள் உடைய அண்டை நாடுகளையும் குறிவைத்தார்கள். எகிப்தின் நைல் நதி வளமும் அங்கே உருவான பாரோக்களின் பேரரசுகளும் மத்தியத் தரைக்கடலைப் போரதிர்வுகளால் ததும்பச் செய்தன. எகிப்துபோன்ற வளமான நாடுகளைத் தாண்டி ஆப்பிரிக்கக் கண்டத்தின் வேறு நிலப்பகுதிகளுக்கு அவர்கள் நுழைய முற்படவில்லை. ஏனென்றால் ஆப்பிரிக்கக் கண்டம் முழுக்கவே வெப்பக்காடுகளால் ஆனது. கொடுவிலங்குகள் உலவும் பரந்த கரடுமுரடு நிலம் அது. இருண்ட கண்டம் என்று ஆப்பிரிக்கக் கண்டம் அழைக்கப்பட்டதற்குக் காரணம் அதுதான். மனிதர்கள் அங்கங்கே தனித்தீவுகளாய் வாழ்ந்திருந்தார்கள். பிறநாட்டுப் படையெடுப்போ அவர்களுக்குள் பங்கீடோ... எதுவும் அவர்களோடு நிகழவில்லை. 

நவீனக் காலம் தொடங்குவதற்கு முந்திய இருபதாயிரம் ஆண்டுகளாக ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வாழ்நிலை என்றும் மாறாத ஒன்றாகவே இருந்தது. அதற்குக் காரணம் என்னவெனில் அங்கே நிலவிய நிலநடுக்கோட்டுக் கொடுவெய்யில்தான். அந்த வெப்பநிலையால்தான் ஆக்கிரமிப்பு வரலாற்றையுடைய ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்காவை எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், ஐரோப்பாவிற்கு இணையான தட்பவெப்பமிருந்த எல்லா நிலப்பரப்பின்மீதும் அவர்கள் படையெடுத்தார்கள். அலெக்சாண்டர் தானிருந்த இடத்திற்கு நேர் கிழக்காகப் படையெடுத்தபடி இந்தியா வரைக்குமே வந்து கைப்பற்றினான். புவிக்கோளத்தின் மேல்கீழாக நகர்ந்தால் ஒவ்வொரு நகர்வுக்குமிடையே தட்பவெப்ப நிலையில் பெருமாற்றம் நிகழ்வதைக் காணலாம். ஆனால், புவியில் கிழக்கு மேற்காக நகர்ந்தால் ஓரிடத்தில் நிகழும் தட்பவெப்பமே எங்கும் தொடரும். புதிய தட்பவெப்பச் சுழலுக்கு ஆட்படுவோர் உடனே நோய்த்தொற்றுக்கு ஆளாவர். 

ஐரோப்பாக் கண்டம் கிழக்கு மேற்காகப் பரந்திருக்கிறது. போரும் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்புமாய் அங்கே வரலாறு நிகழ்ந்தது. அமெரிக்க ஆப்பிரிக்கக் கண்டங்கள் புவிக்கோளத்தில் வடக்கு தெற்காக இருந்தமையால் அவை மனிதப் படையெடுப்புகளுக்குத் தப்பின. அந்தந்தப் பகுதிவாழ் உயிரினங்களோடு அக்கண்டங்கள் வரலாறெங்கும் அமைதியாய் விளங்கின. 

ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியபடி வந்தபோது அக்கண்டத்தின் தென்முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயர் வைத்தார்கள். அங்கேயே ஐரோப்பியக் குடியேற்றமும் நிகழ்ந்தது. ஐரோப்பா இருக்குமிடம்  எங்கே... தென்னாப்பிரிக்கா இருக்குமிடம் எங்கே ? ஆனால், தென்னாப்பிரிக்காவில்தான் ஐரோப்பியக் குடியேற்றம் மிகுந்து நிகழ்ந்தது. வரும்வழியிலுள்ள ஆப்பிரிக்கத் தேயங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு நன்னம்பிக்கை முனையில் குடியேறியதற்கு என்ன காரணம் ? அங்கே நிலவிய ஐரோப்பியத் தட்பவெப்ப நிலைதான் ஒரே காரணம். 

ஆங்கிலேயர்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்தபோது இவ்விடம் அருகிலுள்ள பழவேற்காட்டின் சதுப்புநிலத்தன்மையோடு குளிர்ந்த கடற்காற்றோடு கூவமும் அடையாறும் கடல்கலக்கும் கழிமுகமாக மரங்கள் அடர்ந்து இதக்குளிர் மிகுந்திருந்தது. அதனால்தான் இங்கே கோட்டை கட்டப்பட்டது. தாங்கவொண்ணாத வெப்பம் நிலவிய காரணத்தால்தான் கொடைமாவட்டங்கள் என்று தெலுங்கான நிஜாமிடம் ஆந்திர மாவட்டங்களைக் கையளித்துவிட்டு ஆங்கிலேயர்கள் தெறித்தோடினர். ஆனால், சென்னையை விரும்பி ஏற்றனர். ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய நிழன்மை உடைய காலநிலை நம் தமிழகத்தில் முற்காலத்தில் நிலவியிருக்கிறது. 

கோடையில் மட்டும் சற்றே வெப்பம் கூடியிருக்கையில் அப்போது திங்கள்முழுக்க விடுமுறை அறிவித்து உதகைக்குப் போய்விட்டனர். உதகை என்பது முழுக்க முழுக்க இலண்டன் தட்பவெப்ப நிலைதான். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்களுடைய கோடைக்காலத் தலைநகரம் சிம்லா என்றே கூறுவார்கள். இன்றும் அங்கே ஆட்சியக்கட்டடங்களைக் காணமுடியும். 

இத்தனை வரலாற்றுச் செய்திகளோடும் நான் கூற வருவது என்னவென்றால், தட்பவெப்ப நிலை என்பதே வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. மக்களை வாழச் செய்தது. இடம்பெயர்த்து. ஓரிடத்தில் நிலவும் குளிரும் வெப்பமுமே அவ்விடத்தில் அரசுச் சூழலை வருவிக்கிறது. அல்லது விடுவிக்கிறது. இதுநாள்வரை நம்நிலத்தில் நிலவிய குளிரான தன்மை தற்போதைய இயற்கைச் சீரழிவுப் போக்குகளால் மாறிவிட்டது. கோடையின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது. 

வீட்டுக்குள் குளிர்பதனம், சாலையில் குளிரூட்டியுள்ள மகிழுந்து, அலுவலகத்தில் குளிரூட்டம் என்ற நிலையில்தான் சென்னை போன்ற நகரங்களில் ஒருநாளை எதிர்கொள்ள முடியும். அந்நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது எப்போதைக்கும் உதவும் என்று கூறுதற்கில்லை. ஒருநாள் மின்சாரம் இல்லாவிட்டால் மனக்கோளாறு மிக்கவர்களாக ஆகிவிடுகிறோம். 

மரங்களை நடுவதில் யார்க்குமே அக்கறையில்லை. நட்டால்மட்டும் போதுமா ? தலைக்குமேல் வளரும்வரை தண்ணீர்விட்டு வளர்க்கவும் வேண்டும். இன்னும் என்னென்னவோ சீர்திருத்தங்களைச் செய்தால்தான் எதிர்காலக் கோடைகளையே எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால் கதிர்வீச்சினால் கைவிடப்பட்ட மேற்கத்திய நகரங்களைப்போல, கொடுங்கோடையால் முடங்கிவிடும் நகரங்களையே நாம் உருவாக்கியவர்களாவோம். இக்கட்டுரையின் வரிகளுக்கிடையே பதுங்கியுள்ள எச்சரிக்கையை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன். கோடையில் வியர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இக்கோடையை உணர்ந்து விழிக்கவும் வேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles