குழந்தைகளை காட்டுச் செடிபோல வளர்க்கணும்! கவிஞர் செல்வி ராமச்சந்திரன்  

Monday, May 15, 2017

“ஒரு தாய் என்கிற ரோல்தான் இன்றைய பெண்களுக்கு சவாலாக இருக்குன்னு நினைக்கிறேன். அலுவலக வேலையோ, வீட்டு வேலையோ அல்லது எழுத்தாளராக பணியாற்றுவதோ, இது எதுவுமே எனக்குச் சிரமமாக தெரியவில்லை. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கவனத்தை அந்தந்த நேரத்தில் அவங்களுக்கு கட்டாயம் நாம கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான், நம்மளோட வாழ்க்கை முறையை புரிஞ்சுகிட்டு அவங்களும், நம்மளோட சேர்ந்தே பயணிப்பாங்க...”

என்று தன்னுடைய எட்டு வயது மகள் அம்முவைப் பற்றி, முதன்முறையாக பொதுவெளியில் மனம் திறக்கிறார் கவிஞர் செல்வி ராமச்சந்திரன். கவிஞர், இதழாசிரியர் என்று பன்முகம் கொண்டவரை சந்தித்தோம்.

 

கவிஞரான நீங்கள், அம்முவைப் பற்றிய கவிதை தொகுப்பு எழுத வாய்ப்பு உள்ளதா?

“ஏற்கனவே மனுஷ்ய புத்திரன், அம்முவைப் பற்றி நிறையவே எழுதிட்டாரு. அதை ஒரு தொகுப்பாகவே நாம கொண்டு வரலாம். அவரை விட அம்முவோட நான்தான் அதிக நேரம் செலவிடறேன். அவர் எழுதினதைத் தாண்டி இன்னும் அம்முவைப் பற்றி பேச நிறைய இருக்கு. அதை ஒரு படைப்பா கொண்டு வரணும்னு இருக்கேன்.”

 

அம்முவின் உலகத்தில் நீங்கள் எப்படி? 

“ நான் தனி ஆளாக இருக்கும்பொழுது, அதிகமாக பயணம் செஞ்சதில்லை. எனக்கென்று ஒரு வட்டம், அதுக்குள்ளேதான் நான் இருந்துக்குவேன். அம்மு வந்த பிறகு, நான் அதிகமான பயணங்களை மேற்கொள்ள ஆரம்பிச்சேன். ஏன்னா, அவளுக்கு பயணம் ரொம்ப பிடிக்கும். இரவில் ரயில் பயணம் மேற்கொள்ளும்பொழுது, வெளியே தென்படுகிற நிலா, மரங்கள், இப்படி எல்லாத்தையும் ரசிச்சிக்கிட்டு வருவா. அவை எல்லாவற்றையும் பார்த்தால் அவளுக்கு என்ன தோணுதுன்னு, சொல்லிட்டே இருப்பா. குழந்தைகளோட உலகமே தனி. நாமும் அவர்களோடு சேர்ந்து குழந்தையா மாறி ரசித்தால்தான் அது என்னன்னு நமக்குத் தெரியும்.”

 

பிள்ளை வளர்ப்பு குறித்து இன்று பல புத்தகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஒரு பதிப்பாசிரியராக, இந்த புத்தகங்கள், ஒருவருக்கு எந்த அளவில் உதவும் என்று கூறமுடியுமா?

“ஒவ்வொரு குழந்தையும், வெவ்வேறு உலகம். ஒரு குழந்தையைப்போல் இன்னொரு குழந்தை இருப்பதில்லை. அவர்களுக்கென்று, ஒரு விருப்பு, வெறுப்பு என்று இருக்கிறது. இது போன்ற புத்தகங்கள், வெறும் வழிகாட்டியாக செயல் படுமே ஒழிய, இதனை நாம் பின்பற்ற முடியாது.”

 

பெற்றோர்கள், தங்கள் ஆசைகளை, தன் குழந்தைகளின் மீது திணிப்பது சரியான போக்கு என்கிறீர்களா?

“என்னைப்பொறுத்தவரை இது தவறு என்றுதான் சொல்லுவேன்.  குழந்தைகளை, அவர்கள், இயல்பிலேயே வளரவிடுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அவர்களை நல்ல வழியில் செதுக்கும். என்னைக் கூட, என் நண்பர்கள் சிலர் “என்னங்க! "நீங்க உங்க பிள்ளைகளை காட்டுச் செடியைப் போல வளர்க்குறீங்க?” என்று கேட்பார்கள். எனக்கு பிள்ளைகளை ரோஜா செடியைப்போல உரமிட்டு, எந்நேரமும் கண்காணித்து வளர்ப்பதில் சிறிதும் விருப்பமில்லை. குழந்தைகள், அவர்கள் இயல்பில் வளர்வதுதான் அவர்களுக்கும் நல்லது.”

 

பள்ளிக்கூடத்தில், குழந்தைகளின், நடவடிக்கைகளை பெற்றோர்கள் அறிய வேண்டியது அவசியம் தானா?

“கண்டிப்பா அவசியம்தாங்க. பள்ளிக்கூடங்கள்ல வெவ்வேறு சூழல்ல இருந்து பிள்ளைகள் வருவாங்க. ஒவ்வொருத்தரோட எண்ணங்கள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில குழந்தைகள் வீட்டில் அமைதியா இருப்பாங்க, ஸ்கூல்ல வால் தனம் செய்வாங்க. அம்மு ஸ்கூல்ல ரொம்ப அமைதியா, அவங்க நண்பர்கள் செய்யுறதை கூர்ந்து கவனிச்சு வீட்ல நடைமுறை படுத்துவா!. அதுதான் அம்முவோட ஸ்பெஷாலிட்டி!”

 

குட் டச்  பேட் டச் பற்றிய அறிவு இன்றைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அவசியம்?

“குட் டச் பேட் டச் சார்ந்த அறிவு இன்றைய சூழல்ல பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது ரொம்ப ரொம்ப அவசியம். பள்ளிக்கூடங்கள்ல, அதைப் பற்றிய படிப்பினைகள் இல்லைன்னுதான் நான் சொல்லுவேன்.

அதோட கார்ட்டூன் படங்களில் இடம்பெறும் வசனங்களை கவனிச்சீங்கன்னா ரொம்ப எதிர்மறையா இருக்கும். உதாரணத்துக்கு சொல்லணும்னா “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது”ன்னு   போன்ற வசனங்கள் எல்லாம் வரும். அதை கவனிச்சு, அம்மு என்கிட்டே பலமுறை அப்படி கேட்டு இருக்கா. உனக்கு மட்டுமில்லை இப்படி எல்லோருக்கும் நடக்கும்னு சொல்லி இருக்கேன். பெற்றோர்களாகிய நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சரியாக சொல்லி கொடுக்கணும்னு இல்லையா?!” என்று கொக்கி போட்டு, நம்மிடம் இருந்து விடைப்பெற்றுக்கொண்டார்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles