அனைவரும் அஞ்சலகக் கணக்குக்கு மாறுவோம்! நடிகர் ஆரி வேண்டுகோள்!

Friday, March 24, 2017

வங்கிகளின் சேவைக் கட்டண அறிவிப்பை எதிர்த்து, திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் சில நாட்களுக்கு முன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள் பலரின் கவனத்தை ஈர்த்த இப்போராட்டத்தினைத் தொடர்ந்து, வரும் மார்ச் 25ம் தேதி கேரளாவிலுள்ள  எர்ணாகுளத்தில் ஆரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இது குறித்து நடிகர் ஆரி பேசும்போது,
"பெருநகரங்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூபாய் 5,000 வைப்புத் தொகையும், நகரத்தில் இருப்பவர்கள் ரூபாய் 3,000 வைப்புத் தொகையும், கிராமத்தில் இருப்பவர்கள் ரூபாய் 1,000 வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஏ.டி.எம் மிஷினில் பணம் வைப்பு செய்தாலும், எடுத்தாலும் வங்கிக் கணக்கின் இருப்பில் பணம் இல்லாவிட்டாலும் பணத்தை பிடித்தம் செய்வோம் என்று வங்கிகள் அறிவித்துள்ள அதிரடிச் சட்டத்தினால் சாமானிய மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்.

இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? இதை நாம் தீர்க்கவும் வேண்டாமா? வெறும் ரூபாய் 50ல் இந்தியன் அஞ்சல் வங்கியில் கணக்கைத் தொடங்கி  ஏ.டி.எம். இல் கட்டணம் ஏதுமின்றி பணம் பெற்றுக் கொள்வதுடன், அபராதம் இன்றி பணப்பரிமாற்றம் செய்யலாம். இதை மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு நடந்த போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அஞ்சலகக் கணக்கில் ஒரு நாளைக்கு ரூபாய் 40,000 வரையில் பணத்தினை எடுக்கலாம். அதேவேளையில், ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 10 பேர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் 10 லட்சம் வரை அனுப்பலாம். அத்துடன் ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையும் தொடங்கப்பட உள்ளது. மேலும், ரூபாய் 500 ரூபாய் இருப்பு இருந்தால் காசோலை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் இத்திட்டத்தால் பயன்பெறலாம். எனவே அனைவரும் அஞ்சலகக் கணக்குக்கு மாறுவோம்!" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles