இன்ஸ்டா காதல்! தொடர்கிறது புதிய தேடல்!!

Wednesday, March 15, 2017

சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வரும் ஒரு மியூசிக் வீடியோ ‘இன்ஸ்ட்டா காதல்’. இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள புதுவிதமான ஓலியும் ஒளியும் இணைந்து, பல நெட்டிசன்களின் ரசனையைக் கட்டியிழுத்திருக்கிறது. இந்த வைரல் ஹிட் பற்றி கேட்கலாமே என்று, ‘இன்ஸ்டா காதல்’ மன்னர்கள் ஏ.டி.ராம் மற்றும் ஏ.டி.பகத் இருவரையும் தொடர்பு கொண்டோம். “எங்களை இன்டர்வியூ எடுக்கப்போறீங்களா பாஸ்? இன்ப அதிர்ச்சியா இருக்கு” என்றவாறே பேச முன்வந்தனர் இருவரும். 

முதலில் பேசத் தொடங்கினார் ராம். “பள்ளிக்கூடத்துல படிச்சிட்டு இருக்கும்பொழுது பெஞ்சுல தாளம் தட்டிட்டு இருப்பேன். இதை, எங்க அப்பாகிட்டே சொன்னேன். அதுக்கப்புறம் அவரு, நான் ஹார்மோனியம் வாசித்து பழக ஏற்பாடு செஞ்சாரு. அப்படியே, இசையோட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். மதுரை இசைக்கல்லூரியில இசைத்துறையில் முதுகலை பட்டம் வாங்கினேன். அதோட, நம்ம பாரம்பரிய இசைக்கருவிகளான மிருதங்கத்தையும் வீணையையும் வாசிக்கப் பழகியிருக்கேன். 

மெல்லிசையோ, மேற்கத்திய இசையோ, அதை நல்லா புரிஞ்சுகிட்டு வெளிப்படுத்த கிளாசிக்கல் மியூசிக் கத்துக்கிட்டுதான் ஆகணும். டிரினிட்டி மியூசிக் காலேஜ்ல, மேற்கத்திய இசை பற்றியும் கத்துக்கிட்டேன். இதனால பாடல் கம்போஸ் செய்யும்பொழுது, நம்முடைய பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காம இசையமைக்க முடியுது. அதோட, நம்ம இளசுகளை கவர்வதற்கான மேற்கத்திய இசையையும் நல்லா மிக்ஸ் செஞ்சு அவங்களுக்கு பிடித்த மாதிரி கொடுக்க முடியுது” என்று தனது இசை பற்றி விவரித்தார் ராம். 

அவர் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார் தம்பி பகத். “எங்க அண்ணன் இசைக்கான பார்முலாவை கஷ்டப்பட்டு கத்துக்கிட்டாரு. அதை அவரு பிராக்டீஸ் செய்யும்போது, நான் சுலபமாக பிடிச்சுக்கிட்டேன். என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோரும், நான் பெரிய பாடகனாகத்தான் வருவேன்னு நினைச்சாங்க. ஆனால், நான் ஒளிப்பதிவாளர் ஆயிட்டேன். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிட்டு, என் நண்பன் மூலமாக ராஜீவ்மேனன்கிட்ட சேர்ந்தேன். அப்படியே, அவர்கிட்ட ஒளிப்பதிவு நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். இப்போ, அவரோட மைன்ட்ஸ்க்ரீன் இன்ஸ்டிட்யூட்ல விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறேன்”என்று தன்னைப் பற்றிச் சிறு அறிமுகம் கொடுத்தவரிடம், “அது என்னங்க, இன்ஸ்டாகிராம் மாதிரி ‘இன்ஸ்டா காதலி'ன்னு ஒரு வார்த்தை” என்றோம். 

“ ‘கடல்’ திரைப்படத்துல கேமரா அசிஸ்டண்டா பணியாற்றிட்டு இருந்தப்போ, இடைவேளையில் ரிலாக்ஸேஷனுக்காக சில வரிகளை எழுதுவேன். எழுதத் தொடங்கும்பொழுது, பேஸ்புக் காதல்னு தான் ஆரம்பிச்சேன். இதுக்காக, முகநூல்ல ஒரு பக்கத்தையே கிரியேட் செய்ய நினைச்சேன். ஆனால் ‘பேஸ்புக் காதல்'ன்னு ஒரு பக்கத்தைத் தொடங்க முடியல. அதுக்காக வரிகளை மாத்தி யோசிச்சு ‘இன்ஸ்டா காதலி'ன்னு  மாத்தினேன்.

பொழுதுபோக்குக்காக எழுதுறதால, என்னால ட்யூனுக்கு ஏற்ற மாதிரி வரிகளை எழுத முடியலை. வரிகளுக்கு ஏற்ற மாதிரி, எங்க அண்ணன் ட்யூன் போட்டாருன்னு தான் சொல்லணும். அதை என்னோட நண்பர்கள், மாணவர்கள்கிட்ட போட்டு காட்டினேன். எல்லோருக்கும் என்னோட வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதனால, நானே களத்துல இறங்கிட்டேன்” என்கிறார் பகத். 

இசையும் பாடலும் ஒன்றான கணத்தை விவரித்தார் ராம். “பாடலை ரிக்கார்ட் செய்றதுக்கு நல்ல ஸ்டூடியோவை முதல்ல தேர்ந்தெடுத்தோம். நல்ல வெஸ்டர்ன் நோட்ஸையும் மிக்ஸ் செஞ்சோம். பகத் வாய்ஸ் இயல்பாகவே யுவன்ஷங்கர் ராஜா மாதிரி இருந்துச்சு. அது, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிடுச்சு; கூடுதல் பலமாகிடுச்சு” என்றவரிடம், இன்ஸ்டா காதலில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிக் கேட்டோம்.

“என்கூட நிகிதா காந்தின்னு ஒருத்தங்க பாடியிருப்பாங்க. அவங்களைத் தவிர, எல்லோரும் புதுசுதான்.என்னோட மாணவன் அஜய் இதுல ஒளிப்பதிவு செஞ்சிருக்கார், ரொம்ப திறமைசாலி, அவரோட திறமைகளை ஏதாவது ஒரு வாய்ப்பு மூலமாக வெளிக்கொண்டு வரணும்னு ரொம்ப நாளாக நினைச்சிட்டு இருந்தேன், இப்போதான் அமைஞ்சிருக்கு. அதேபோல, இயக்குனர் நமன் ரொம்ப புத்திசாலி. 

இதை முழுக்கமுழுக்க பெங்களூர்ல தான் படம் பிடிச்சோம். ஏன்னா, நீங்க எந்த மாதிரியான இடமா மனசுல நினைச்சுப் பார்த்தாலும், பெங்களூர் அதையே பிரதிபலிக்கும். அதாவது, சென்னைன்னு நினைப்பீங்க, அதையே பீல் பண்ணுவீங்க; அதுக்கேத்த மாதிரி தெரியும். மும்பைன்னு நினைச்சுப் பார்த்தாலும், அப்படியே தான் இருக்கும். 

இந்த வீடியோவை, நாங்க இரண்டு மொழிகள்ல தயார் செஞ்சிருக்கோம் . தமிழ், தெலுங்கு இரண்டையும் ஒரே நேரத்துலதான் ரிலீஸ் பண்ணோம். தெலுங்குலயும் நல்ல வரவேற்பு. நிறைய ஆந்திரா மாணவர்கள் இருந்தாங்க; அவங்கதான் இந்த ஆல்பத்தை தெலுங்குலயும் செய்யச் சொல்லி ஊக்குவிச்சாங்க. தெலுங்குல, ‘இன்ஸ்டா பிரேமா' பாடல் வரிகளை மதுநந்தன் ரொம்ப பிரமாதமா எழுதியிருந்தாரு. அவரை இதுவரைக்கும் நாங்க நேர்ல சந்திச்சது கிடையாது. இனிமேல்தான், அவரைப் போய் பார்த்து வெற்றியைக் கொண்டாடலாம்னு இருக்கோம்”என்று பேசி முடித்தார் பகத். 

அதனைத் தொடர்ந்து, மனம் வாசகர்களுக்காக ‘இன்ஸ்டா காதலி' பாடலை அவர் பாடத் தொடங்க, அதற்கேற்றவாறு இசைக்கத் தொடங்கினார் ராம். பாடலோடு இணைந்து, காலத்தைப் போல நாமும் கரைந்தோம். 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles