பள்ளி பிடிக்கவில்லை; பாட்டுதான் பிடிக்கிறது! விருப்பம் சொல்லும் பாடகி ஜோதி

Wednesday, March 15, 2017

"பள்ளிக்கூடம் போக பிடிக்கலை. அதனால, மியூசிக் காலேஜ்ல பதிமூணு வயசுல சேர்ந்தேன். இப்போ எனக்கு பதினாறு நடக்குது. கர்நாடக இசை படிக்கிறேன். இசை மேல ரொம்ப ஆர்வம் உண்டு. பாட்டு, கீ-போர்டு, வயலின், கச்சேரியில ஈடுபாடு அதிகம்" என்று சொல்லும் சிறுமி ஜோதி, சட்டென்று தன்னுடைய காந்தக் குரலால் றெக்க படத்தில் இடம்பெற்ற "கண்ணம்மா... கண்ணம்மா... அழகு பூஞ்சிலை!" என்ற பாடலைப் பாடத் தொடங்குகிறார்.

மாற்றுத்திறனாளியான ஜோதி, இப்போது சமூக வலைதளங்களில் வெகு பிரபலம். காரணம், அவர் பாடிய வீடியோ வைரல் ஹிட்டானது; அதனைப் பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது படத்தில் ஜோதிக்கு வாய்ப்பு அளித்தது தான். விரைவில் வெளியாக உள்ள 'அடங்காதே' படத்தில் முதன்முதலாகப் பாடியிருக்கிறார் ஜோதி. 

இதுபற்றி ஜோதியின் தாயார் கலைச்செல்வியிடம் பேசினோம்.

"நிறைய பிரச்சினைகளோட பிறந்த குழந்தை ஜோதி. நடக்கவோ, பார்க்கவோ முடியாது என்பதால், சின்ன சின்ன சப்தங்கள் கூட அவங்களை அட்ராக்ட் பண்ணும். காசு கீழே விழுந்தா கூட, அதைக் கூர்மையாக கவனிப்பாங்க. வீட்டுல இருக்கிற சின்ன சின்ன பொருட்களையெல்லாம் தரையில உருட்டிப்போட்டு, அதுல ஒரு இசையைக் கொண்டுவர முயற்சிப்பாங்க. அப்படிச் செய்யும்போது, அவங்களுக்குள்ள ஒரு அமைதி வர்றதையும் கவனிச்சேன். அது அவங்களை சந்தோஷமாகவும் வைத்திருந்ததால், இசையில் ஜோதியை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். அதற்கு, எனக்கு ஒன்பது வருடங்கள் தேவைப்பட்டுச்சு. 

இசையில் ஜோதிக்கு ஆர்வம் ஏற்பட்டவுடன், அவங்களே உட்கார்ந்து கேட்க ஆரம்பிச்சாங்க. பள்ளிக்கூடம் போவதில் ஜோதிக்கு ஆர்வம் இல்லை. அதனால, அவளை இசைக்கல்லூரியில் சேர்த்துவிடணும்னு முடிவு பண்ணேன். ஆனா, பதிமூணு வயசுல அவளுக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு யோசனையா இருந்துச்சு. கல்லூரியில் போய் கேட்டேன். ஒரு சின்ன இன்டர்வியூக்குப் பிறகு, அவளை சேர்த்துக்கிட்டாங்க. இசையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, அந்த இசையால் என்னுடைய குழந்தை சந்தோஷமாக இருக்கா என்பது மட்டும் தெரியும்!

முதல்ல ஜோதி, சந்தோஷமாக இருக்கணும்னு நினைச்சேன். ஸ்பெஷல் கேர் சைல்டு என்பதால் மற்ற குழந்தைகள் மாதிரி இருக்கிறது கஷ்டம். ஆனா, அவள் சின்னப் பொண்ணா இருக்கும்போதே, "இசையில ஜோதி பெரிய ஆளா வருவா"ன்னு நிறைய பேரு சொன்னாங்க. அது இன்றைக்கு சாத்தியமாயிருக்கு. உலகுக்கு எங்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சாருக்கும், ஜோதிக்கு இசை சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கும் இந்த இடத்தில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். 

என்னை மாதிரியே, எல்லா அம்மாக்களும் இருக்கணும்னு சொல்ல மாட்டேன். அவரவர் சூழல் எப்படியோ, அப்படித்தான் இருக்க முடியும். எல்லோரிடமும் நாங்க கேட்டுக்கொள்வது இதுதான். முதலில் எங்களை இந்த சமூகமும் எங்க குடும்பமும் ஏத்துக்கணும். வாழ்க்கையில் மிகப்பெரிய காயங்களைக் கடந்து வந்திருக்கிறோம். எங்களையும் மதியுங்க. எங்களுக்கும் விருப்பங்கள், ஏக்கங்கள் உண்டு. எங்களையும் ஒரு மனுஷியா பாருங்க. 

சாதாரண மனிதர்களுக்கு உள்ள அனைத்து ஆசைகளும் எங்களுக்கும் உண்டு. எங்களிடம் உள்ள சின்ன திறமையை அங்கீகரித்தால் போதும். கரடுமுரடான இந்த வாழ்க்கையைக் கடந்துவிடுவோம்!" சொல்லி முடிக்கும்முன்பே கலைச்செல்வியின் கண்களில் கண்ணீர் திரள்கிறது. அந்தக் கண்ணீரில் வாழ்வின் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. 

முழுக்க தாயாரின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த ஜோதி, இப்போது இசை உலகில் நுழைந்திருக்கிறார். சில நேரங்களில், சில மனிதர்கள் நம் வாழ்க்கையை மாற்றுவார்கள். ஜோதி, அந்த ரகம்!

-  கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles