நாங்க நினைச்சதை மாபா பாண்டியராஜன் செய்தார்! ரகசியம் பகிரும் புட் சட்னி டீம்!! 

Wednesday, March 1, 2017

“ ‘பேட்மேன் சென்னையில பிறந்திருந்தா எப்படி இருந்திருக்கும்’ன்னு சும்மா ஜாலி வீடியோ எடுத்து யூட்யூப்ல வெளியிட்டது வைரலாக போச்சு. அப்போ நான், ராஜாராம், பாலாதான் ஸ்க்ரிப்ட் ஒர்க் செஞ்சோம். பெரிய லெவலா கொண்டுபோகணும்னு கல்ச்சர் மெஷின் என்ற வடஇந்திய மீடியா கம்பெனியோட எங்களை இணைச்சிகிட்டோம்.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, பெங்களூரைத்  தாண்டினாலே மதராசிதான். அதாவது சாம்பார்னு சொல்லுவாங்க. தென்னிந்தியாவுல நான்கு மாநிலங்கள் இருந்தாலும், அவங்க எல்லோரையும் பொதுப்படையாகத்தான் பார்க்குறாங்க. இது மாறணும்; நம்ப கலாச்சாரத்தையும் அவங்க தெளிவா புரிஞ்சிக்கணும்னு ஒரு ஐடியா வந்துச்சு.

கல்ச்சர் மெஷின் கம்பெனியோட சேர்ந்ததும், எங்க யூட்யூப் சேனலுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு மண்டையைப் பிச்சிட்டோம். எங்களுக்கு 'ஸ்ட்ரெஸ்’ வந்தாலே வடிவேலு, கவுண்டமணி காமெடி பார்க்க ஆரம்பிச்சிடுவோம். ஒரு தடவை எங்களுக்குள்ள விளையாட்டா ‘புட் சட்னி’ன்னு சொல்லிட்டு இருந்தோம். அட! இதையே பெயரா வச்சுடலாம்னு முடிவு செஞ்சு மும்பை ஆபீஸ்ல சொன்னோம். அவங்க ரொம்ப ஸ்டைலிஷா இருக்குன்னு சொல்லி அப்ரூவ் செஞ்சாங்க. எங்க முதல் வீடியோவான ‘பேட்மேன் சென்னையில பிறந்திருந்தா எப்படி இருந்திருக்கும்’ல, டெல்லிகணேஷ் ‘புட் சட்னியை சப்ஸ்கிரைப் செய்யுங்க’ன்னு ஆக்‌ஷனோட சொல்லி இருப்பாரு. அதுவே எங்களுக்கு சிக்னேச்சரா ஆகிடுச்சு” என்று புட் சட்னியின் முதல் புள்ளி பற்றி ‘டீடெய்ல்’ சொல்கிறார்கள் அஸ்வின், ராஜாராம், ராஜ்மோகன் மற்றும் பாலகுமாரன்.

தான் பார்த்துக் கொண்டிருந்த தொழில்நுட்ப வேலையை உதறிவிட்டு, தன்னுடைய இடம் இதுதான் என்று தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் கூட்டணி அமைத்த கதையை பாலகுமாரன் சுவாரசியமாகத் தொடங்க, அவரை இடைமறித்துப் பேச்சைத் தொடந்தார் ராஜாராம். “இந்த தடம் மூலமாக, நம்மளோட கலாச்சாரம்னு இல்லாம அரிதான விஷயங்கள், எல்லோரும் சொல்லத் தயங்குகிற விஷயங்களை எல்லாம் நையாண்டி கலந்து சொல்றோம். அது பெருவாரியான மக்களைப் போய்ச்சேருது. 

உதாரணத்துக்கு, இப்போ ஒரு விஷயத்தைப் பற்றி பரபரப்பா பேசிட்டு இருக்கோம்னு வச்சிக்கோங்க. அந்த விஷயத்தைப் பற்றி, ஒரு குழுவா எங்களுக்குள்ள பேசுவோம். அதுல வர்ற சில தனித்துவமான விஷயத்தை மட்டும் எடுத்துகிட்டு, அதைப் பதிவு செய்வோம். அப்படி நாங்க எடுத்ததுதான் காவேரி நதி பற்றிய வீடியோ. இதைப்பற்றி நான் சொல்றதை விட, ராஜ்மோகன் சொன்னாருன்னா சுவைபட இருக்கும்”என்று ராஜாராம் சொன்னதும், பேச்சு ராஜ்மோகனைச் சுற்றிச் சுழன்றது. 

“காவேரி பிரச்சனை பற்றி என்கிட்ட சில பாயிண்ட்ஸ் இருக்கு, அதை நான் பதிவு செய்ய விரும்பறேன்னு சொன்னேன். நான் சிம்பிளாக பேசிய வீடியோ நல்ல வைரலாகிடுச்சு. அதைத் தொடர்ந்து, ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தியைக் கண்டுபிடித்து, அவங்க கல் உடைத்து கூலி வேலை பார்க்குறாங்கன்னு பதிவு செஞ்சேன். அப்படிப் பதிவு செய்யும்பொழுது, அப்போதைய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். வீடியோவைப் பார்த்து அவர் கோபப்படுவாருன்னு பயந்தோம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கலை. ரொம்பப் பெருந்தன்மையா சாந்தியைக் கூப்பிட்டு, அவங்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுத்து, வேண்டிய உதவிகளைச் செஞ்சாரு பாண்டியராஜன். நாங்க செய்யணும்னு நினைச்சதும் இதுதான். அதனால, அது எங்களுக்கு ரொம்ப மனநிறைவாக இருந்துச்சு” என்று ஸ்க்ரிப்ட் இல்லாமல் உணர்ச்சி பொங்கப் பேசி முடித்தார் ராஜ்மோகன். 

அவரையடுத்து பேச்சைத் தொடர்ந்தார் புட் சட்னி டைரக்டர் அஸ்வின். “பதினைந்து வயசுல இருந்து 35 வயது வரை இருக்கும் இளைஞர்களை டார்கெட் வச்சு தான் எங்க யூட்யுப் தளத்தை இயக்கிட்டு வர்றோம். இன்னிக்கி இருக்குற இளைஞர்கள்கிட்ட நீங்க வளவளன்னு ஒரு விஷயத்தைப் பேச முடியாது. சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க. அவங்களுக்கு தொலைக்காட்சி பார்க்க நேரமே இல்லை. ஆன்லைனில் வரும் வீடியோக்களை மட்டும் பார்க்கிறாங்க. அதுவும், மேக்சிமம் ஆறு நிமிடத்துக்கு மேல இருக்குறதைப் பார்க்குறதே இல்லை. சமீபத்துல வந்த ஜல்லிக்கட்டு வீடியோவில் கூட, நடந்த சம்பவங்களை ஆராய்ச்சி செய்து, யாருக்கும் பயப்படாம, ஒரு பக்கமா நியாயம் பேசாம, நாங்க சொல்லி இருந்தது தான் மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கக் காரணம்.”

புட் சட்னி டீமின் வெற்றி ரகசியத்தைக் கேட்டதும், சட்டென்று ராஜாராமை நோக்கிக் கைகாட்டுகிறார் அஸ்வின். “நான் தென்னிந்தியா கலாச்சாரத்தை ஒட்டி ஒரு வீடியோ எடுத்தேன். அதுல கல்ச்சர் மெஷின் ஒரு பார்ட்டா இருந்தாங்க. அதுக்கு அப்புறம் நாங்க அவங்களோட இணைஞ்சு ‘புட் சட்னி’ ஆரம்பிச்சோம். எந்த நார்த் இந்தியன் கம்பெனியும் சவுத் இந்தியனை அடையாளப்படுத்த தயங்குவாங்க. ஆனால் அவங்க அப்படியில்லை. அதன் நிறுவனர்கள்ல ஒருவர் தமிழ் பற்று கொண்ட வெங்கட் பிரசாத். அவரு எங்களுக்குத் தேவையான தரமான டெக்னாலஜியை கொடுக்கறார். நாங்க, கலாச்சாரத்தோடு நல்ல க்ரியேட்டிவ்ஸைக் கொடுக்கறோம்" என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

எதிர்காலத்தில் திரைப்படம் எடுக்கும் திட்டம் உள்ளதா? என்றதும், “ஒரு திரைப்படம் எடுக்கணும்னா, பலவிதமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அது எங்க ஐடியா இல்லை. புட் சட்னியிலேயே, நாங்க வெப் சீரிஸ் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கோம். வெப் சீரிஸ் பொறுத்தவரை ஒவ்வொரு வீடியோவும் இருபது நிமிடங்கள் இருக்கணும்; குறைந்தது ஒரு சீசனுக்கு எட்டு எபிசோடுகளாவது செய்யணும். திரை நட்சத்திரங்களை வைத்து பத்து செஷன் எடுத்தோம்னா, அதுவே பெரிய சாதனை. எதிர்காலத்துல இன்னும் பல புதிய திட்டங்கள்  எல்லாம் வச்சிருக்கோம்;  கூடிய சீக்கிரம் பட்டையைக் கிளப்பப்போறோம்” என்று ஒருமித்த குரலோடு பதில் வந்தது. 

‘ஸிங் இன் த ரெய்ன்’ என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டே, புட் சட்னி ஏரியாவிலிருந்து ஜூட் விட்டோம்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles