வெள்ளித்திரைதான் எங்க லட்சியம்!! உற்சாகத்தில் நீந்தும் ஜம்ப்கட் யூத்ஸ்!

Tuesday, January 31, 2017

தற்பொழுது திரைப்படங்களைவிட, மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கக்கூடியது  யூடியுப்  வீடியோஸ். ஐந்து மணி நேரமாக இருந்த சினிமா சுருங்கி 3 மணி நேரம் என்றாகி, இப்போது 2:00 மணி நேரம் என்ற கால அளவுக்குக் கரைந்துவிட்டது. ஆன்லைன் என்கிற டிஜிட்டல் ஜன்னலின் மூலம், நாம் உலகத்தின் எல்லா திசைகளிலும் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, சமீபகாலமாக இளசுகளின் ஆட்டோ பிளேலிஸ்டில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகிவிட்டது யூட்யுப் வீடியோக்கள். 

விதவிதமான வீடியோக்கள் வெளியானாலும், ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை அதிகக் கவனத்தைப் பெறூகின்றன. அந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கும் ஜம்ப் கட்ஸ் யூடியுப் சேனலுக்கு தனித்த இடம் உண்டு. இதன் பின்னணியில் பெரிய டீம் இருக்கும்போல என்று எதிர்பார்த்தால், ‘இல்ல, நாங்க ரெண்டு பேர்தான்’ என்கின்றனர் நரேஷும் ஹரியும். இவர்கள் இருவருமே, சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர்கள். படிப்பை முடித்த கையோடு, ஜம்ப்கட்ஸ் நடிகராக ஹரியும் இயக்குனராக நரேஷும் உருமாறியிருக்கின்றனர். ஜல்லிகட்டு தொடர்பான வீடியோவின் வழியாக சமீபத்தில் கவனம் ஈர்த்த இருவரையும், சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நிகழ்ந்த நேரத்தில் சந்தித்தோம். 

 

வழக்கம் போல கேள்விகளுடன் நாம் சென்றதும், “என்னங்க காலேஜ்ல தான் கேள்வித்தாள் கொடுத்து டார்ச்சர் செஞ்சாங்க. நீங்க கூடவா பாஸ்” என்றார்  ஜம்ப் கட்ஸ் நரேஷ். கேள்விகளை ஒருமுறை படித்துவிட்டு, “நாங்களே எங்களுக்குள் இந்த கேள்விகளைக் கேட்டு, நம்ம ஆடியன்ஸுக்கு பதில் சொல்கிறோம்” என்று தங்களுடைய ஸ்டைலில் அரட்டையைத் தொடங்கினார்கள்.

 

“படத்தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் தான் ஜம்ப் கட்ஸ். அதையே எங்க யூட்யூப் சேனலுக்கு பெயரா வச்சுட்டோம். நாட்டுல சுடச்சுட நடக்குற விஷயம், எங்க மைண்ட்ல வர்ற ஏதாவது கான்செப்ட், இப்படி மாத்தி மாத்தி ஷூட் பண்ணிட்டு இருப்போம். காலேஜ்ல ஹால் டிக்கெட் வாங்குறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு ஒரு சின்ன கான்செப்ட் எடுத்துகிட்டு, ரியலா கேமராவை ஒளிச்சுவச்சு ஷூட் செஞ்சோம். அந்த வீடியோ ரொம்ப நல்லா வந்துச்சு. ஓவரநைட்ல, அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அதோட எங்க ஜம்ப் காட்ஸ் நடிகர் ஹரிக்கு முகநூல்ல பேன் பேஜ் ஆரம்பிச்சுட்டாங்க.இதெல்லாம் நாங்க எதிர்பார்க்காத வரவேற்பு”என்றார் நரேஷ்.

 

“ ‘வார்தா புயல்’ வந்த சமயத்துல அதைப்பற்றி வீடியோ எடுத்தோம். மூன்றே மணி நேரத்துல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி ஷூட் பண்ணிட்டோம். எடிட் கூட முடிச்சிட்டோம். ஆனா இன்டர்நெட் கனெக்‌ஷன் இல்லாததால, அப்லோட் செய்ய நேரம் எடுத்துச்சு.

 

ஹரிக்கு நல்லா கேமரா ஹாண்டில் செய்ய தெரியும். அதனால பிரேம் செட் பண்ணிட்டு, என்கிட்டே கொடுத்துடுவான். நான் முழுக்க படப்பிடிப்பு செஞ்சுடுவேன். எங்களுக்கான செலவே, இவனுக்கு நிறையா ஷர்ட் வாங்குறதுதான். மற்றபடி, வேற ஒண்ணும் பெருசா செலவழிக்குறது கிடையாது. அதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணுறது இல்லை. நாங்களே எங்களுக்குள்ள டர்ன் போட்டுக்கிட்டு, மாத்தி மாத்தி எடிட் செய்வோம். ஓவர்நைட் கண் முழிச்சு ஒரு வீடியோவை முடிச்சிடுவோம். 

 

எங்களைப் பொறுத்தவரைக்கும், கடின உழைப்புதான் வெற்றியைத் தட்டிப்பறிக்கறதுக்கு ஒரே வழி. சினிமாவுல வேலை பார்க்கணும்னு ரெண்டு பேருக்குமே ரொம்ப ஆசை. இன்னும் நாங்க எந்த இயக்குனர்கிட்டயும் போயிட்டு உதவியாளரா வேலை செய்யல. ஆனால், கூடிய சீக்கிரம் வெள்ளித்திரையில் எங்களோட திரைப்படத்தை பார்ப்பீங்க” என்று உறுதியாகச் சொல்லும் இந்த இளைஞர்களின் கண்களில் தெரிகிறது வெற்றிக்கான தேடல்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles