தேடிக் கண்டடைந்து புத்தகங்களை படியுங்கள்! எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன்

Friday, January 13, 2017

'பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்', 'நர்ஸ்துதி காலம்', 'யானைச் சவாரி', 'ஆகாயப் பந்தல்', 'விரல் நந்தனம்', 'காலம் விரித்த குடை' என 80க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழுக்குத் தந்தவர் எஸ்.சங்கரநாராயணன். வாசகர்களுக்குப் புரியும் வண்ணம், பிறமொழி நூல்களையும் தமிழில் மொழிபெயர்ப்பவர். தொடர்ந்து 35 ஆண்டுகளாக இலக்கியப்பணி செய்து வருபவர். 40-வது சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி, சங்கர நாரயணனைப் பேட்டி கண்டோம்!

நவீன தமிழ் இலக்கியச்சூழலில், பதிப்பிக்கப்படும் புதிய படைப்புகளில் ஒரு புத்தகம் கூட விற்பனையாவதில்லை என்று விமர்சனங்கள் வருகிறதே?

"பொதுவாக, ஒரு புத்தகம் கூட விற்கவில்லை என்று பதிப்பாளர்கள் சொல்லும்போது, அதை எழுத்தாளர்கள் கடந்து தான் வர வேண்டியுள்ளது. எங்கே எழுத்தாளர் ராயல்டி கேட்டுவிடுவாரோ என்று பதிப்பாளர்களுக்குப் பயம். அதேசமயத்தில் 'நம்ம புஸ்தகத்தைப் போட்டு, பப்ளிஷர் கார், வீடு வாங்கிட்டாரு. எல்லாம் நம்ம எழுதியதால் தான்' என்று எழுத்தாளருக்கும் ஆதங்கம் இருக்கவே செய்கிறது. இவை இரண்டுமே உண்மையில்லை. பெரிய அளவில் புத்தகங்கள் விற்கவும் இல்லை; அதே சமயத்தில் விற்காமலும் இல்லை. பதிப்புச் செலவுகள் எல்லாம் போக, ராயல்டி கொடுக்கிற அளவிற்கு விற்பனை இல்லை என்பதே உண்மை. எல்லாவற்றுக்கும் பட்ஜெட் போடுகிற மக்களிடம், புத்தகங்கள் வாங்க இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்கிற எந்த திட்டமும் இல்லை. இவைதான் காரணமேயன்றி, வேறொன்றும் இல்லை!"

 

நோபல் பரிசு பெற்ற 'பார்வை தொலைத்தவர்கள்' நூலை, தமிழுக்கு மொழிப்பெயர்த்த அனுபவம் எப்படியிருந்தது?

"போர்த்துகீசிய நாவலான 'பிளைன்ட்னெஸ்' நாவலை படித்து முடித்தவுடனே, அதனை தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நாவலின் ஆசிரியர் ஒரு புள்ளி போல கதையைத் தொடங்கி, பின் அகண்ட வானமாக விரித்துச் சென்றிருந்தார். அவருடைய சொற்நடையும், உத்தியும், ரொம்ப சிக்கலான மொழியும் எனக்குப் பிடித்திருந்தது. பத்தியே பிரிக்க மாட்டார். மூன்று, நான்கு பக்கங்களுக்குப் பிறகே ஒரு பத்தி முடியும். இதையெல்லாம் ஒரு பாணியாகவே அவர் பின்பற்றி இருந்தார். படிக்கும்போது, இதை நம்மால் மொழிபெயர்க்க முடியாது என்றுதான் நினைத்தேன். இறுதியாக, அந்த நாவலை ஆங்கிலத்தில் ஒருவர் மொழிபெயர்த்திருக்கிறார் என்று தெரிந்தபோது, இதை ஏன் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடாது என்று தோன்றியது. அதன்பிறகு, அதனை சவாலாக எடுத்துக்கொண்டு தான் மொழிபெயர்த்தேன். கடந்த புத்தகக் காட்சியில் 'பார்வை தொலைத்தவர்கள்' நாவல் அதிகமான வாசகர்களைச் சென்றடைந்தது!"

 

எந்தெந்த மொழிகளில் உங்களது படைப்புகள் வெளியாகி உள்ளன?

"மலையாளம், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன!"

 

எழுத்தாளர் ஓ. ஹென்றியைக் கொண்டாடி வருகிறீர்களே?

"உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஓ.ஹென்றி மிகவும் முக்கியமானவர். அவருக்கென்று தனி பாணி உண்டு. அவர் கதையில் போடும் முடிச்சுகள், கதையை நகர்த்திச் செல்லும் விதம், கதையின் முடிவில் அவர் தரும் பரவசம் அளப்பரியது. ஆகவேதான், அவருடைய பெரும்பான்மையான படைப்புகள் திரைப்படங்களாகி உள்ளன. சார்லி சாப்ளின் பாதிப்பு இல்லாமல் எப்படி ஒரு சினிமா உருவாகிவிட முடியாதோ, அதேபோல ஹென்றியின் பாதிப்பு இல்லாமலும் சினிமா எடுத்துவிட முடியாது. வாசகனின் ஆர்வம் குன்றாமல் எழுதக்கூடியவர். அவரை மீறி நாம் எழுதிவிட முடியாத அளவிற்கு, தன் எழுத்தில் ஆளுமை செலுத்தியவர். அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்விதமாக எனது சிறுகதைகளில் சிலவற்றை தொகுத்து, "நன்றி ஓ ஹென்றி" என்று வெளியிட்டுள்ளேன்!"

 

வருடந்தோறும்  'இருவாட்சி' மலர் கொண்டுவருகிறீர்களே?

" 'இருவாட்சி' என்பது சிறுபத்திரிகை சாயலில் உள்ள ஒரு ஆண்டு மலர். அதில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி, பிரசுரிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி, பொங்கல் திருநாளைக் கொண்டாடும் விதமாகவும் அது வெளியாகும். இந்த ஆண்டு எட்டாவது தொகுதி வெளியாகி உள்ளது. என்னுடைய படைப்புகளிலேயே அதிகமாக விற்பனை ஆவது 'இருவாட்சி' தொகுதிதான்!"

 

40-வது புத்தகக் காட்சியை ஒட்டி, வாசகர்களுக்கு எந்த புத்தகங்களை சிபாரிசு செய்வீர்கள்?

"எனக்கு எந்த புத்தகம் பிடிக்குமோ, அது உங்களுக்குப் பிடிக்காது. உங்களுக்குப் பிடித்த எழுத்து, எனக்குப் பிடிக்காமல் போகலாம். அதுதான் வாழ்வின், எழுத்தின் சுவராஸ்யமே. ஆகவேதான் ஆயிரக்கணக்கான படைப்புகள் எழுதப்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். எனவே, தேடிக் கண்டடைந்து புத்தகங்களைப் படியுங்கள் என்பதே என் ஆலோசனை!"அறிவுரையாக அல்லாமல், அக்கறையாகப் பேசும் ஒரு தகப்பனைப் போலத் தொனிக்கிறது சங்கர நாராயணனின் வார்த்தைகள்..

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles