லைவ் மியூசிக் தான் எங்க ஸ்பெஷாலிட்டி அனுபவங்களைப் பகிரும் சாய் ராம் நாடகக் குழுவினர்

Friday, January 13, 2017

சாய் ராம் கிரியேஷன்ஸ், சென்னையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிவரும் நாடகக் குழு. இக்குழுவில் இடம்பெற்றவர்கள் எல்லோருக்கும், குறைந்த பட்சம் 40 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. நாடகத்துறையின் வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் இவர்களிடம் பொதிந்து கிடக்கிறது. அந்த பொக்கிஷத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டனர் சாய் ராம் கிரியேஷன்ஸை சேர்ந்தவர்கள். 

ஊர்கூடி தேர் இழுப்பது போலத்தான் ஒரு நாடகத்தை மேடை ஏற்றுவது. அதற்கு, குழுவில் இயங்கும் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். எந்த நட்சத்திர நடிகரும் இல்லாமல், தமிழகத்திலுள்ள பல ஊர்களில் தங்கள் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அதுபற்றிய தனது அனுபவங்களைப் பற்றி நம்மிடம் பேசினார் ஆர்கெஸ்ட்ரா வீனஸ் கிருஷ்ணன்.

“சமீபகாலமாக நாடகங்கள்ல லைவ் இசை யாருமே வாசிக்கறது கிடையாது. இதை நான் குற்றமா சொல்லலை. கால மாற்றத்தினால் வந்தது தான் இது. கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமா இந்த பீல்டுல இருக்கேன். சாய்ராம் கிரியேஷன்ஸ் ட்ரூப்ல, இப்பவும் லைவ் மியூசிக் தான். இவங்களோட நானும் ரிகர்சலுக்கு வந்துடுவேன். இப்பவும் அந்த ட்ரூப் பழமை மாறாமல் லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி நாடகங்கள் போட்டுட்டு வர்றாங்க. அந்தக் காலத்துல எல்லாம், நாடகத்தோட ரிகர்சல்ல இருந்து நாங்களும் ட்யூன் போட உட்கார்ந்திருவோம். ஒரு நாடகம் 200 தடவை மேடை ஏறிச்சுன்னா, அத்தனை தடவை நாங்களும் வந்து வாசிப்போம். ஒரு தடவை கூட, கொஞ்சமும் எங்களுக்கு தவறினதே இல்லை. அதோட ட்யூன் ரிக்கார்ட் செஞ்சு சிடி போட்டு ’பிளே’ செய்யவே மாட்டோம். எங்க ட்யூனோட க்யூவை பிடிச்சிக்கிட்டு கூட சில நேரங்கள்ல ஆர்டிஸ்டுகள் தங்களோட வசனத்தை ஞாபகம் வச்சுப்பாங்க.

ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்பறேன். முன்பெல்லாம் நல்ல மேடை நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அப்படி ஒருமுறை, அந்த நாடகத்தைப் பார்க்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரிதா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் எல்லாரும் வந்திருந்தாங்க, ஏன்னா, அவங்க தான் அந்தப் படத்துல கமிட் ஆகியிருந்தாங்க. நாடகம் முடிஞ்சதும், அவங்க எல்லோருக்கும் அவ்ளோ சந்தோஷம். 

எல்லாரும் எங்ககிட்ட வந்து, ’இந்த மாதிரி எங்களால நடிக்க முடியுமான்னு தெரியல’ன்னு பெருந்தன்மையான சொன்னாங்க. அதேபோல இசையமைப்பாளர் எம்.எஸ்.வி எங்க ஆர்கெஸ்டராகிட்ட வந்து, நீங்க ஐந்து பேர் வாசிச்சது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு, என்கிட்டே மொத்தமா ஐநூறு பேர் பணியாற்றிட்டு இருக்காங்க. நாங்க எல்லாரும் சேர்ந்தா கூட இந்த அளவுக்கு அவுட்புட் வருமான்னு தெரியலன்னு சொல்லி, எங்களை பாராட்டிவிட்டுப் போனார். அவ்வளவு பெரிய இசையமைப்பாளர், எங்ககிட்டே ரொம்ப எளிமையா நடந்துகிட்டதை எங்களால மறக்கவே முடியாது” என்றார். 

அவரைத் தொடர்ந்து, “மேடை நாடகத்துக்கு லைட்ஸ் ரொம்ப முக்கியம். சினிமாவைப் பொறுத்தவரை கேமரா கோணங்கள் மூலமா ஆடியன்ஸ் கேரக்டரை பார்ப்பாங்க. ஆனால், ஒரே மேடையில் கேரக்டர்கள் எல்லோரையும் பார்த்து, ஆடியன்ஸ் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் மேடையில் லைட்டிங் ரொம்பவே முக்கியம்” என்று பேசத் தொடங்கினார் சாய் ராம் குழுவில் லைட்டிங் இன்சார்ஜாக இருக்கும் கலைவாணர் கிருஷ்ணன்.

“நாடக ஒத்திகைல இருந்தே கூட, லைட்டிங் டிபார்ட்மென்ட் இருப்போம். நாங்களும் அவங்களுக்கு சில யோசனைகள் சொல்லுவோம். முன்பெல்லாம் நாடகத்துல கடவுள் வர்ற சீன்லாம் இருக்கும். அதுனால ஸ்டேஜ்ல அந்த மாதிரி செட்டப் இருக்கும். இப்போ அப்படியெல்லாம் கான்செப்ட் இல்லை. ஆனால், காலத்துக்கு கதைக்கு ஏற்ற மாதிரி நாங்களும் அப்டேட் செஞ்சுட்டு இருக்கோம்” என்று தனது கருத்தை முன்வைத்தார் கிருஷ்ணன். 

அதன்பிறகு, நாடகத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கதையமைப்பு பற்றி விளக்கினார் கதாசிரியர் ஸ்ரீனிவாசன்.

“அரசாங்க வேலையில இருந்து ஓய்வு பெற்றதும், நாடகங்களுக்கு கதை எழுத வந்தேன். தினசரியில வர்ற சம்பவங்களை வச்சுதான் கதை எழுதுவேன். எனக்கு காமெடி அவ்வளவா வராது. நான் எழுதும் கதையை இயக்குனர் ராஜராம்கிட்ட காட்டுவேன். அவரு சில திருத்தங்கள் செய்வாரு. அப்படித்தான் எங்களோட “காலங்கள் மாறும்” என்ற நாடகத்தை 2015ம் ஆண்டுல மேடை ஏற்றினோம். அதுக்கு நல்ல வரவேற்பு. இப்போ எங்க குழு மூலமா, நாங்க ‘பட்டாபிஷேகம்’ என்ற நாடகத்தை அரங்கேற்றிட்டு இருக்கோம். இதைத் திரைப்படமாக எடுக்க பிளான் பண்ணிட்டு இருக்கோம். எங்க குழுவில் இருக்குற இளம் நடிகர் சத்யா அதுக்கான முயற்சிகளை எடுத்திட்டு இருக்காரு” என்று குழுவினர் அனைவரும் பெருமைப்படும் விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீனிவாசன். 

சாய் ராம் கிரியேஷன்ஸில் இளம் நடிகர்களின் பங்களிப்பும் உண்டு. அவர்களில், மஜேஷ் என்ற கலைஞர் முக்கியமான வேடங்களில் கலக்கி வருகிறார்.  ’இளைஞர்கள் மத்தியில  நாடகத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கு’ என்று அவரிடம் கேட்டபோது, “இன்றைய இளைஞர்கள் இந்த விஷயத்துக்கு இரண்டு மாதிரியாக ரியாக்ட் செய்யுறாங்க. ’என்னடா, போயும் போயும் நாடகத்துலயா நடிச்சுட்டு இருக்கே’ன்னு ஒரு சில நண்பர்கள் கேலியா சொல்லுவாங்க. சில பேர் ’இது ரொம்ப நல்ல விஷயம். நீ சினிமாவுல நடிக்கணும்னு துடிப்பா இருக்கே. உனக்கு நடிப்புக்கான நல்ல நுழைவாயில்’னு சொல்லுவாங்க. அதோட சினிமா சான்ஸ் கேட்டு போகும்பொழுது, ’மேடை நாடகத்துல நடிக்கிறீங்களா’ன்னு ரொம்ப மரியாதையா நடத்துவாங்க. என்னோட ஆசை என்னன்னா, நாடகத்துக்கான வரவேற்பை மக்கள் மத்தியில பத்திரிகைகள் வளர்க்கணும். அப்பொழுதுதான் நல்ல நடிகர்கள் கிடைப்பாங்க” என்றார்.

நல்ல நாடகங்களின் மீது பத்திரிக்கையின் வெளிச்சம் படர்ந்தால் போதும். அந்தக் குழு வளர்வதோடு, நல்ல திறமைசாலிகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த நட்சத்திரங்களும் இல்லாமல், அமெச்சூர் ஆர்டிஸ்டுகளை வைத்து, வெற்றிகரமாக நாற்பது ஆண்டுகள் மேடை நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள் சாய் ராம் கிரியேஷன்ஸ் குழுவினர். அந்தக் குழுவில் மேலும் பல இளைஞர்கள் இணைந்து, நாடகத்தின் வீரியத்தை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles