நான் ஒரு காஸ்ட்யூம் சைக்கோ! அதிரவைக்கும் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா

Friday, January 13, 2017

‘சினிமாவை காதலிக்கத் தொடங்கியதே விஜய் சாரால தான்’ என்று சொல்லும் காஸ்ட்யூம் டிசைனர் கம் ஸ்டைலிஸ்ட் சத்யா, இளையதளபதியின் தீவிர ரசிகர்களில் ஒருவர். ‘அவரைப் போலவே டான்ஸ் ஆடணும், அவரை மாதிரியே ட்ரெஸ் செய்யணும்’ என்பது போன்ற பல கனவுகளுடன் தேவிப்பட்டினத்திலிருந்து கிளம்பியவர். சென்னை வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து, தடைகள் பல கடந்து, தற்பொழுது இளைய தளபதியின் காஸ்ட்யூம் டிசைனராக உருமாறியிருக்கிறார். பொங்கல் விருந்தாக உலகமெங்கும் வெளியாகியிருக்கும் ‘பைரவா' படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் சத்யா தான். 
 

‘தான் டிசைன் செய்த ட்ரெஸ், தன்னுடைய தலைவனுக்கு எப்படியிருக்கிறது’ என்ற ஆவலோடு ரசிகர்களோடு ரசிகனாக காத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ‘பைரவா’ என்று கேட்டவுடனே, ‘இளைய தளபதியின் ‘பைரவா' காஸ்ட்யூமில் தான் பேட்டி கொடுப்பேன்’ என்றார். அவர் விருப்பப்படியே, நம்முன் வந்தமர்ந்தார். 

“இதுவரைக்கும் நான் கொண்டாடிய பொங்கல்ல என்னால மறக்க முடியாதது, இந்த வருஷம் கொண்டாடுற பொங்கல்தான். விஜய்யோட ரசிகனா, மனிதனா, காஸ்ட்யூம் டிசைனரா.. மூன்று விதத்துல அவரோட பணியாற்றிய படம் ‘பைரவா'. நான் காஸ்ட்யூம் டிசைனர்னு முடிவானதும், சில விஷயங்கள் கண்டிப்பா இருக்கணும்னு முடிவெடுத்தேன். அதாவது, ரெடிமேட் சூட் கொடுத்தோம்னா கூட, அதுல ஏதாவது கிரியேட்டிவிட்டியை கொண்டு வரணும்னு நினைச்சேன். 

‘பைரவா’ படத்துல விஜய் போடுற ஒவ்வொரு ட்ரெஸ்ஸும் யுனிக்கா இருக்கும். பர்ஸ்ட் லுக் போஸ்டர்ல ஒரு சூட் போட்டிருப்பாரு. அதோட ஃபிட் அவருக்கு ரொம்ப பிடிச்சுப்போய், ‘இதையே பாட்டு முழுக்க போட்டுக்கறேன்’னு சொன்னார். அதற்கு, ‘இந்த சூட்டை நீங்க ஃபாரின் சாங்குக்கு உபயோகப்படுத்திக்கலாம், இந்த பாடலுக்கு வேற காஸ்ட்யூம் ரெடி பண்ணிக்கலாம்’னு சொன்னதும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டாரு. “நில்லாயோ" பாடல்ல அவரு போட்டுட்டு வர்ற வேஷ்டி ரொம்ப விலை உயர்ந்தது. அதோட, அதுல அவரு உடுத்திட்டு வர்ற பட்டு சட்டையெல்லாம் பார்த்தீங்கன்னா பிளைனா இருக்காது. ஏதாவது பேட்டர்ன்ஸ் இருக்கும். அப்புறம் “பாப்பா” பாடல்ல பறக்கிற ஷர்ட் போட்டு இருப்பாரு. இதுல நாங்க டிசைன் செஞ்ச ஒவ்வொண்ணும் ஸ்பெஷலா இருக்கும். படத்தைப் பாருங்க, நான் சொல்றதெல்லாம் உங்களுக்கே தெரியும். இளைய தளபதி விஜய் ரசிகன்ங்கிறதால, அவரை ரசிச்சு ஸ்டைலிஷான உடைகளை கொடுத்திருக்கோம்.”

 

இளைய தளபதி விஜய் பற்றி..?

“நான் சினிமாவுக்கு வந்த காரணமே விஜய் தான். அவரோட படங்கள் பார்த்து ரசிச்சதுனால, சினிமா மேல ஆர்வம் வந்துச்சு. ‘தெறி’ படத்துல நான் எமி ஜாக்ஸனுக்கும் நைனிகாவுக்கும் தான் காஸ்ட்யூம் டிசைனாரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். சில காரணங்களால, அந்தப் படத்துல வர்ற கடைசி பாடலுக்கு விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செஞ்சேன். அதுல இண்டோ - வெஸ்டர்ன் லுக்ல பிரமாதமா இருந்தாரு. தொடர்ச்சியா “பைரவா படத்துல ஒர்க் பண்ணுறீங்களா நண்பா”ன்னு கேட்டாரு. ‘இதற்குதானே ஆசைப்பட்டேன்’ன்னு உடனே ஓகே சொல்லிட்டேன். அவருகூட பழகும்போதுதான் தெரிஞ்சுது, அவரு ரொம்ப பெருந்தன்மையான மனிதர்ன்னு. ஒரு பேட்டியில நான் அஜீத் சாரைப் பற்றி சொன்னதைப் படிச்சு, ரொம்ப நல்லா பேசி இருக்கேன்னு பாராட்டினார்.”

 

சினிமாவைப் பொறுத்தவரை விஜய், சிவகார்த்திகேயன் இருவருமே  இரு துருவங்கள். அவர்களுடன் பணியாற்றியதைக் குறித்து ?

“ஒரு திரைப்படத்துல காஸ்ட்யூம் டிசைனரா கமிட் ஆனதும், ஹீரோஸ் கூட சக பணியாளராக பழகமாட்டேன். அவங்களை என் கூடப்பிறந்தவங்களா பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அதுதான் எனக்கு கம்பர்ட்டபிளா இருக்கும். அதோட, நான் ஒரு காஸ்ட்யூம் சைக்கோ. வேலைன்னு வந்துட்டா எதையுமே பார்க்க மாட்டேன். நல்ல ரிசல்ட் வருவதற்காக, ராப்பகலா பணியாற்றிட்டு இருப்பேன். சிவகார்த்திகேயன் அண்ணனை எப்போதும் கலாய்ச்சிட்டே இருப்பேன். இதை ஏற்கனவே ரஜினி செஞ்சுட்டாரு அண்ணேன்னு சொல்லுவேன். பதிலுக்கு அவரு, இதெல்லாம் ஒரு சட்டையாடான்னு கேட்பாரு. படப்பிடிப்புல ரொம்ப கலகலப்பா இருக்கும், எதையும் ரொம்ப ஸ்போர்ட்டிவா எடுத்துப்பாரு. 

இதுக்கு நேரெதிர் விஜய். ஷாட் முடிஞ்சதும், அவரு ஏதோ ஒரு இடத்துக்கு போயி அமைதியா உட்கார்ந்துடுவாரு. ஆனால் என்கிட்டே அப்படியில்லை, ரொம்ப ஜாலியா பேசுவாரு. ஒருநாள்  ‘பைரவா’ படப்பிடிப்புல, டான்ஸ் ஷூட் செஞ்சுட்டு இருந்தாங்க. அவரோட ரசிகர் நான், தலைவன் டான்ஸை பார்க்காம இருந்தா எப்படின்னு மானிட்டர் பார்த்துட்டு இருந்தேன். அப்போ என் பின்னாடியே வந்தவர், “என்ன நல்லா ஆடியிருக்கேனா? உங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ சுமாரா ஆடியிருக்கேன்னு நினைக்குறேன்”னு சொன்னாரு. ஏன்னா ‘தெறி’ திரைப்படத்தோட நூறாவது நாள் விழாவில நான் செம்ம டான்ஸ் ஆடிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு, “ஒழுங்கா உண்மையை சொல்லு; சினிமாவுல நடிக்க தானே நீ வந்தே”ன்னு கேட்டாரு. நான் அப்படியே ஜெர்க் ஆகிட்டேன். “இல்லவே இல்லண்ணா.. நான் காஸ்ட்யூம் டிசைனர் ஆகத்தான் வந்தேன்”னு சொன்னேன். இந்த சம்பவத்தை ஞாபகம் வச்சுக்கிட்டு என்னை கிண்டல் செஞ்சாரு. அவர் எப்போதும் என்கிட்டேயே ஜாலியாகவே பழகுவாரு.”

 

சிவகார்த்திகேயனோடு பணியாற்றும்போது எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தது?

“ ‘ மான்கராத்தே’ படம் தான் என் கேரியர்ல முக்கியமான படம். கதாநாயகர்களோட அண்ணன் தம்பியாக பழகலாம்கற தெரிஞ்சுக்கிட்டதே, அந்தப் படத்துல அவர் கூட பணியாற்றியதால தான். இந்தப்படத்துல சிவகார்த்திகேயனோட லுக்ஸை நிறைய பேர் பாராட்டினாங்க, என் சம்பள உயர்ந்துச்சு, வெளி உலகத்துக்கு சத்யான்னு ஒருத்தனை தெரிஞ்சுச்சு. அதோட தொடர்ச்சியா எனக்கு ‘ரஜினி முருகன்' பட வாய்ப்பையும் கொடுத்தாரு. அந்தப் படத்துல அவருக்கு மட்டுமில்லை, கீர்த்தி சுரேஷுக்கும் நான்தான் காஸ்ட்யூம் டிசைன் செஞ்சேன். 

இந்தப் படத்துல அவரு போட்ட ஷர்ட் எல்லாமே, துணி எடுத்து தைச்சதுதான். ‘ராசாத்தி ராசாத்தி' பாட்டுல ஒரு சட்டை போட்டுட்டு வருவாரு. அதைப் பார்த்த உடனே  “சத்யா நீ வேணும்னா பாரு, இந்த சட்டை ரொம்ப பாப்புலர் ஆகிடும்”னு சொன்னாரு. அப்போ, அதை நான் பெருசா எடுத்துக்கலை. படம் வெளியாகி கொஞ்ச நாள் கழிச்சி, எனக்கொரு போட்டோ அனுப்பிச்சாரு. அதுல, ‘ரஜினி முருகன்’ சட்டைன்னு அதை வித்துட்டு இருந்தாங்க. அதைப் படிச்சதும், பெரிய அவார்ட் கிடைச்ச மாதிரி இருந்துச்சு. ஆடியன்ஸ் பல்ஸ் பார்குறதுல சிவகார்த்திகேயனை மிஞ்சமுடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். 

தொடர்ந்து ‘ரெமோ' படத்துல பணியாற்ற கேட்டாங்க. சில காரணங்களால, அதை மிஸ் பண்ணிட்டேன். இந்த நேர்காணல் மூலமாக, அதுக்காக அவருகிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புறேன்” என்றார் சத்யா. 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இளமை துள்ளலோடு அணுகுகிறார் சத்யா. வெற்றிப்பயணத்தில் அவரது கணக்கு தற்போது வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles