நான் ஒரு ஆர்கானிக் சினிமாட்டோகிராபர்! - ஒளிப்பதிவாளர் செழியன் 

Thursday, June 15, 2017

தமிழ் சினிமாவில் அபூர்வமாகவே ஒளிப்பதிவாளர்கள் வேறு சில துறைகளிலும் ஜொலிப்பது உண்டு. அப்படியான அபூர்வ ராகம் ஒளிப்பதிவாளர் செழியன். நவீன யதார்த்த சினிமா தமிழில் உருவாக காரணமானவர்களில் முக்கியமானவர். அவருடைய உலக சினிமா படைப்பு எப்போதும் நின்று பேசும். கவித்துமான ஒளிமொழியால் தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு உயிரூட்டியவர். நம்மிடம் மனம் திறந்தபோது...!
 
 

“ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் பள்ளி, கல்லூரி பருவம் என்பது மறக்க முடியாதது. அது ஒரு சந்தோஷமான, வசந்தமான காலம். அப்படி என்னுடைய சினிமா கேரியர்ல பொற்காலமா எதை நினைக்கிறேன்னா அது குருநாதர் பி.சி.ஸ்ரீராம் சாரோட இருந்த ஐந்து வருடங்கள் தான். படிக்கும்போதே ஒளிப்பதிவாளராக ஆகணும்கிற ஆசை எனக்குள்ளே இருந்தது. அதற்காக நிறைய புகைப்படங்களையெல்லாம் எடுத்தேன். அதைப் பார்த்த என்னோட நண்பர்கள், “நீ பி.சி. ஸ்ரீராம் சாரை போய்ப் பாரு...”ன்னு சொன்னாங்க. எனக்கு அவரை பார்ப்பது நோக்கமாக இருந்தாலும், எப்படி அவரை அணுகுவது என்கிற தயக்கம் இருந்தது!
 
பிறகு, ஒருவழியாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய தகுதியாக  நினைத்தது, நான் எடுத்திருந்த  புகைப்பட ஆல்பத்தை தான். அதை பி.சி.ஸ்ரீராம் சாரிடம் காட்டியபோது, அதைப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் ஒண்ணுமில்ல. சினிமாட்டோகிராபி என்பது வேற...” என்று சொன்னார். அதுவரை இதுதான் நாம் என்று நினைத்துக்கொண்டிருந்த என் பிம்பம் உடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அப்படிதான் அவர் சொன்னபோது உணர்ந்தேன். அதன்பின் “சினிமாட்டோகிராபி கற்கலாம் வா..” என சொல்லி, என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். 
 
ஊரிலிருந்து கிளம்பி நகரத்துக்கு வந்த ஒருத்தன் முதன்முதலாக ஷுட்டிங் பார்த்தால் எப்படி பரவசப்படுவானோ அப்படியாக முதல் நாள் ‘முகவரி’ படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தேன். அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருந்தது. பி.சி. சார் அழைத்து, “என் பக்கத்திலேயே இருங்க... உங்களை சுற்றி என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க...” என்றார். “முதல் பத்து நாளைக்கு கேமிராக்கு முன்னாடி நீங்க போகவே கூடாது...” என்று கண்டிஷனும் போட்டார். சரி சார் என்று சொல்லிவிட்டு அவர் பக்கத்திலேயே நின்றுகொண்டேன். ஆனாலும் ஸ்பாட்டில் “இதை எடுங்க அதை எடுங்க...” என்று சொல்லும்போது, நம்மால் கையை கட்டிக்கொண்டு ச்சும்மா இருக்க முடியாது இல்லையா? ஆனால், சார் சொல்லிட்டாரே என்பதற்காக என்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். 
 
மதிய உணவு இடைவேளையின்போது பி.சி.சார் ஒரு அறையில் இருந்தார். அப்போது மற்றொரு உதவியாளரிடம் “செழியனை கூப்பிடுங்க...” என்றதும், அடுத்த நிமிஷம் அவர் முன்னால் ஆஜரானேன். “மதியம் ஒரு ஷாட் இருக்கு. ஆர்ட்டிஸ்ட் ஏழு பேரு வரிசையா நிற்பாங்க. கேமிரா அஸிஸ்டெண்ட்டிடம் சொல்லி, ஷாட் ரெடி பண்ணிட்டு என்னை கூப்பிடுங்க...” என்றதும், நான் ஜெர்க்காகி விட்டேன். அது முதல் நாள் படப்பிடிப்பு. அப்போதுதான் நான் முதன்முதலாக பிலிம் கேமிராவையே பார்க்கிறேன். இது ஏதோ ஒரு விளையாட்டு மாதிரி தெரிகிறதே?ன்னு பலவாறாக மனசுக்குள் வார்த்தைகள் ஓடியது. ஆனாலும் மாஸ்டர் சொல்லிட்டார் என்பதால், கேமிரா அஸிஸ்டெண்ட்ஸை கூப்பிட்டு சொன்னதும் அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். 
 
ஏன்னா அந்தப் படத்தில் நான் ஒரு அப்ரண்டீஸ். “சார் சொன்னார்...” என்றதும் அவர் ஒ.கே. என்பது போல தலையாட்டிவிட்டு கேமிராவை கொண்டுவந்து ஒரு அறைக்குள் வைத்தார். அந்த கேமிராவில் 50 எம்.எம். லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. அந்த அறை சுமார் ஒரு பத்தடிக்கு பத்தடிதான் இருக்கும். அந்த அறையில் ஒரு பதினைந்து பேர் நின்றார்கள் என்றால் நீங்கள் ஒரு பதினைந்து அடியாவது பின்னால் போகணும். சுற்றிமுற்றும் பார்த்தேன். ஒரு அறை பூட்டியிருந்ததை கவனித்தேன். 
 
அடிப்படையில் எனக்கு லென்ஸ் பற்றி ஒரு புரிதல் இருந்தது. வைட், க்ளோஸ் என்றால் என்னவென்று தெரிந்து வைத்திருந்தேன். எனவே கேமிரா அஸிஸ்டென்டிடம் சொல்லி, “24 எம் எம்” லென்ஸை மாட்டச் சொன்னேன். பூட்டப்பட்டிருந்த அறையை திறக்க சொன்னால், அந்த வீட்டினுடைய ஹவுஸ் ஓனர் முடியாது என முரண்டு பிடித்தார். அவரிடம் கெஞ்சி அந்த அறையை திறந்தேன். இப்போது கேமிராவை அந்த அறையில் கொண்டு போய் வைத்து, வியூபைன்டர் வழியே பார்த்தால் காட்சி கச்சிதமாக இருந்தது. 
 
பின்னர் ஓடிப்போய் மாஸ்டரிடம், “சார் வைச்சிட்டேன் சார்...” என்றேன். நிமிர்ந்து பார்ததுவிட்டு எழுந்தவர் என் தோளில் மெதுவாக ரெண்டு தட்டு தட்டினார். அது ஒரு அப்ரிசேஷியன். அன்று அந்த ஷாட்டை அவர் எடுக்கவில்லை. கேமிராவை அங்கே வைக்கவும் இல்லை. அது பி.சி.சார் எனக்கு வைத்த ஒரு பரீட்சை, டெஸ்ட் அவ்வளவுதான். அப்போது ஒன்றை புரிந்து கொண்டேன். ஒரு மாஸ்டர் செய்வது என்னவென்றால் ஒரு கதவை திறக்க வைப்பதுதான். ஒரு ஜன்னலை திறந்து விடுவதுதான். இதுதான் உனக்கான இடம் என்று வழிகாட்டுவது தான்!” - சிலிர்ப்போடு முடித்தார் செழியன். அவர் பேச்சில் நெகிழ்ந்துவிட்டோம் நாங்கள்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles