இலக்கிய குழுக்களிடையே சண்டை அவசியம்தான்!- எழுத்தாளர் அமிர்தம் சூர்யா

Thursday, June 15, 2017

நவீன இலக்கியவாதி அமிர்தம் சூர்யா. கவிஞர், எழுத்தாளர், ஓவியர், விமர்சகர், பேச்சாளர் என்று பன்முக திறமை கொண்டவர். ‘உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை’, ‘பகுதி நேர கடவுளின் நாட்குறிப்பேடு’ , ‘வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்’ ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. ‘கடவுளை கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத் தொகுப்பு அவரது ஆக்கங்களில் முக்கியமானது.

‘திருப்பூர் தமிழ் சங்க விருது’, ‘எழுச்சி அறக்கட்டளை விருது’ உள்பட பல பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர். கவிதை, எழுத்து, சமூகம் என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றின் ஒருபகுதி இங்கே...
 
“அடிப்படையில நான் ஒரு பழமைவாதி. எல்லாமே மாயை என்கிற சிந்தனையை எப்போதுமே நான் என்னோட ஆழ்மனசுக்குள்ள வச்சுக்கிட்டே இருப்பேன். காலத்தை மீறி நாம எதுவுமே செய்ய முடியாது. அது நினைச்சா, ஒருத்தனை உச்சாணிக் கொம்பிலோ அல்லது அதள பாதாளத்திலோ தள்ள நேரிடும் என்பதுதான் நிதர்சனம். அதுனால, நான் யாரையும் பார்த்து வியப்பதும் இல்லை, தாழ்வாக நினைப்பதும் இல்லை. கடவுளோட படைப்பு ஒவ்வொண்ணும் தனித்துவம் வாய்ந்தது. யாருமே அடுத்தவங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. இந்தப் பழமையான சித்தாந்தம் தான் எனக்கு பல நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது.
 
இலக்கியக் குழுக்களுக்கு இடையே சண்டை அவசியம் தான். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். உதாரணமாக, ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு பல கிளைகள் வெவ்வேறு விதமாக இருக்கும்.  எத்தனை கிளைகள் பிரிகிறதோ, அத்தனை அளவு, அந்த மரம் விசாலமாகிறது. ஒற்றை சிந்தனையை மட்டுமே வைத்து எதையுமே, சாத்தியப் படுத்தி விடமுடியாது.  
 
‘திராவிட கழகம்’ பல கிளை கட்சிகளாக பிரிந்த காரணத்தை யோசித்தால், அவர்களுக்குள் இருந்த கொள்கை மற்றும் சிந்தனை மாற்றம் தான் என்பது புலப்படும். இதேபோல இலக்கியவாதிக்குள்ளும், சிந்தனை மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். கம்யூனிச  சித்தாந்தம், தலித் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர், சாதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருப்பார்கள். அதோடு, கவிதைகளிலேயே ஹைக்கூ, ரியலிஸம், மாடர்ன், போஸ்ட் மாடர்ன்  என்று பலவிதமான கவிதைகள் இருக்கிறது. 
 
கவிதைகளோடு தன்மைகள் மாறும்பொழுது,  இலக்கியவாதிகளின் சிந்தனைகள், மாறுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.  எனவே, இலக்கிய குழுக்கள் தனித்தனி குழுக்களாக, இயங்குவதை தவிர்க்க முடியாது. எனவே, அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகள் வரவேற்கத்தக்கதே ஒழிய, கேலிக்குரியதோ அல்லது கொச்சைப்படுத்தலுக்கு உரியதோ அல்ல. நியாயமானதே. இலக்கிய குழுக்களிடையே விவாதம், சச்சரவுகள் இருக்கும்; இருக்க வேண்டும்!
 
என்னுடைய இளமைக்காலம் ஒரு குடிசை வீட்டில் யதார்த்தமாக இருந்தது. அதாவது, என்னைச் சுற்றி இருந்த மக்கள் மிகவும் எளிமையானவர்களாக இருந்தார்கள். இப்பொழுது, வாழ்க்கைத் தரம் முன்னேறி வசதி வாய்ப்பு வந்தாலும்,  நான் பார்த்த அந்த யதார்த்த மனிதர்களை என்னால் இப்பொழுது எங்கேயும் பார்க்க முடியவில்லை. என்னுடைய, அந்த வட சென்னை  வாழ்க்கையை, பதிவு செய்ய வேண்டும் என்று வெகு நாட்களாய் ஒரு ஆசை மனசுக்குள் வட்டமிட்டுக்கொண்டே இருக்கிறது. விரைவில், அது சார்ந்த நாவலை நான் வெளியிடப் போகிறேன்!” என்றார் அமிர்தம் சூர்யா. அவரைப் பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. தனியார் தொண்டு நிறுவனங்களின் துணையோடு சுமார் எட்டு கார்ப்பரேஷன் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு பயிலும் மாணவர்களைக் கொண்டே குழந்தை இலக்கிய நூல் ஒன்றை படைத்ததுள்ளார் என்பதுதான் அது!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles