திருடனா இருந்த நான்  இப்போ டாக்டராயிட்டேன்!   எழுத்தாளர் அஜயன்பாலா

Wednesday, May 31, 2017

அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர் அஜயன் பாலா. தமிழ் இலக்கியத்திற்கும், நவீன சினிமாவுக்கும் அவர் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது. தற்போது 'மைலாஞ்சி' எனும் படத்தின் மூலமாக இயக்குநராகவும் புரமோஷனாகியிருக்கிறார். எழுத்து, சினிமா பயணம் பற்றி நம்மிடம் மனம் திறந்தார். தமிழ் சினிமாவில் இன்று  சிறந்த படங்கள் உருவாவதற்கு  காரணமாக அமைந்தவர்களில் நீங்களும் ஒருவர். 'பை சைக்கிள் தீவ்ஸ்', 'மார்லன் பிராண்டோ' மொழிபெயர்ப்புகள் குறித்து?
 
 

"1947 ஆம் ஆண்டில் 'பை சைக்கிள் தீவ்ஸ்' படம் வெளியானது. அதை நான் 1997ஆம் ஆண்டில் தான்  பார்க்கிறேன். ஏறக்குறைய 50 வருடங்கள் கழித்தும் அந்தப் படம் எங்கோ ஒரு மூலையில் வாழும் என்னை பாதித்தது, உறங்க விடாமல் செய்தது. ஓர் இரவையே திருடிக் கொண்டது. அந்தப் படம் பார்த்துவிட்டு அறைக்கு நடந்தே திரும்பி வந்தேன். அப்போதெல்லாம் டி.வி.டி.க்கள் எல்லாம் கிடைக்காது. ‘டிக் டாக்’ போன்ற கடைகளில் கூட அத்தகைய படங்களை பார்க்க முடியாது. இத்தகைய சினிமாக்கள் புத்தக வடிவிலாவது எல்லோரையும் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் வசித்த பகுதியில் ஒரு லென்டிங் லைப்ரரி   இருந்தது.
 
ஒரு லென்டிங் லைப்ரரி இருந்தது. அங்கே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு எடுத்து, வாசிப்பேன். அப்படியாக, படம் பார்த்த ஒரு வாரத்தில் அந்த லைப்ரரியில் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ படத்தினுடைய புத்தகம் கிடைத்தது. அந்தப் புத்தகத்தை மெல்ல மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். 
 
என்னுடைய அறைக்கு வந்த கவிஞர் யூமா வாசுகி, இயக்குநர் ராம் போன்றவர்கள் கொடுத்த உற்சாகத்தில் 'பை சைக்கிள் தீவ்ஸ்' புத்தகமாக வெளியானது. அந்த நூலை மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட்டு, பேசினார். மிகப்பெரிய வரவேற்பை அந்தப் புத்தகம் பெற்றது!. அதேபோல, 'கனவுப்பட்டறை' பதிப்பகம் மூலமாக ‘மார்லன் பிராண்டோ’ புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் புத்தகமும் எனக்கு மிகவும் நிறைவை கொடுத்தது. 'மார்லன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதன்' என்பதையும் எனக்கு உணர்த்தியது!." என்றவரிடம், ‘உலக சினிமா வரலாறு (மௌனயுகம்)’ தமிழக அரசின் சிறந்த நூலூக்கான விருது பெற்றதே? என்றதும், "தமிழ் சினிமாவில் சினிமாவுக்கான பிரத்யேக மொழியை இப்போது பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். புதிய தொழில்நுட்ப வசதிகள் அவர்களுக்கு கைக்கொடுத்திருக்கின்றன. அவற்றின் பயனால் சிறந்த இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். ஆனால், முன்பு சினிமாவை வார்த்தைகளாலேயே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ‘பராசக்தி’, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற படங்கள் எல்லாம் வசனங்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டன. அவையெல்லாம் காட்சி மொழிக்கான இலக்கணங்களுக்கான படங்களாக இல்லை. 
 
எனவே, சினிமா எப்படி தோன்றியது? ஒவ்வொரு காட்சித் துண்டுகள் (ஷாட்ஸ்) எவ்வாறு உருவாக்கப்பட்டன? கதை சொல்லும் தன்மை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அப்படியான சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய இருந்தன. அவை, சினிமாவைக் காட்டிலும் ஆச்சர்யமூட்டுபவையாக இருந்தது. எனவே, இவை குறித்து எழுதலாம் என்று தோன்றியதன் விளைவாக, நிறைய ஆய்வு செய்து, ‘உலக சினிமா வரலாறு (மௌன யுகம்)’ நூலை எழுதினேன். அதற்கு பிரிட்டிஷ், அமெரிக்கன் லைப்ரரிகளை பயன்படுத்திக்கொண்டேன். குறிப்பாக ஆந்திரா பேங்க் பாலசுப்பிரமணியன் என்பவர் சினிமா குறித்த அரிய தகவல்களை தந்து உதவினார். இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம்  ‘உலக சினிமா (மறுமலர்ச்சி யுகம்)’ வெளியாகியுள்ளது. மூன்றாவது பாகத்தை தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்!" என்றார்.'சித்திரம் பேசுதடி', 'வால்மீகி', 'மதராசபட்டினம்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
 
"நடிப்பு தான் சினிமா என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டுமில்லை; பாரதிராஜா உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்த ரகசியம் அதுதான். திரையில் நம்மை பார்க்கணும் என்கிற ஆர்வம்தான். சிவாஜி கணேசன் - ஸ்ரீதேவி நடித்த 'விஸ்வரூபம்' படத்தை பார்த்த பிறகுதான் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஏன்னா, அப்போது சிவாஜிக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், அப்போதுதான் சினிமாவுக்குள் ஸ்ரீதேவி புதிதாக நுழைந்திருந்தார். ஆகவே, வயசானாலும் நடிக்கலாம் என்கிற ஆர்வமே சினிமாவை நோக்கி என்னை தள்ளியது. சினிமாவை அறிந்து கொண்ட பிறகுதான் 'இயக்குநர் தான் சினிமாவில் முக்கியமானவர்' என்பது  தெரிந்தது. பிறகே, உதவி இயக்குநராகி பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். 
 
ஒரு இயக்குநராக உருவாவதற்கான பாதையில் எனக்கு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. உலக சினிமா பரிச்சியம், தேர்ந்த ரசனை இவையெல்லாம் சேர்ந்து, கதாநாயக பிம்பம் இல்லாத, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டது. இதனால் வணிக சினிமாவுக்குள் என்னால் நுழைய முடியாமல் போனது. தொடர்ச்சியான முட்டுக்கட்டைகள் என்னை சோர்வடைய வைத்துவிட்டன. பிறகு, நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்படியாக, முதல் வாய்ப்பு தங்கர்பச்சான் இயக்கிய 'சொல்ல மறந்த கதை' படத்தில் அமைந்தது!. அதன்பிறகு, வாய்ப்புகள் எல்லாம் தானாக அமைந்தவைதான். பிறகு, 'சித்திரம் பேசுதடி' படத்தில் தாமஸ் என்கிற பாத்திரத்தில் நடித்தேன். 
 
என்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படமாக அது அமைந்தது. தொடர்ந்து திருடன், குடிகாரன் என நெகட்டிவ் கேரக்டரர்களாகவே எனக்கு கிடைத்தது. ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் எழுத்து என தீவிரமாக இயங்கி வந்தேன். சினிமாவில் நான் நடிக்கும் எதிர்மறை பாத்திரங்கள் வாசகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே எதாவது ஒன்றில் மட்டுமே என்னுடைய கவனம் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளனாக என்னை மாற்றிக்கொண்டேன். அதன் தொடர்ச்சியாக படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினேன். இப்போது 'வனமகன்' படத்தில் டாக்டர் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இனிவரும் காலங்களில் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்!" என்றவரை, வாழ்த்தி விடைபெற்றோம்.

- கிராபியென் ப்ளாக்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles