என் பலம் என் ரசிகர்கள் தான்!    ‘ம கைண்டா லைப்’ மோனிகா சௌத்ரி

Wednesday, May 31, 2017

உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்த்தது இணையம் என்றால், அதில் எல்லோரையும் ஒருங்கிணைத்து “வாருங்கள் மக்களே கூடி மகிழ்வோம்”  என பெரிய வாசலை திறந்து விட்டது சமூக வலைதளங்கள். குறிப்பாக முகநூலும், டுவிட்டரும், யூட்யூபும் அள்ளித்தரும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் எண்ணிக்கையில் அடங்காதவை. சில நாடுகளில் புரட்சிக்கும் வித்திட்டது இத்தகைய சோஷியல் மீடியாக்களே. 
 
 

தமிழகத்தில் அதன் தாக்கத்தை நாம் எல்லோரும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கண்கூடாகவே கண்டோம். அத்தகைய பெருமைக்குரிய சோஷியல் மீடியாக்களில் அதிகமாக எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வருவது செல்ப் வீடியோக்கள் தான். ஒரேயொரு செல்போனோ அல்லது சிறிய வகை வீடியோ கேமிராவோ வைத்துக்கொண்டு, உலகம் முழுக்க உங்களுக்கான ரசிகர்களை உருவாக்கிவிட முடியும். அப்படியாக, நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் உள்ளவர்களையும் தன்னுடைய வசீகரக் குரலாலும், மாறுபட்ட முக பாவங்களாலும், வித்தியாசமான ஐடியாக்களாலும் இளம் தலைமுறையினரின் உள்ளத்தில் சிரிப்பலையை பாய்த்து, சிந்திக்க வைக்கிறார் மோனிகா சௌத்ரி. ‘ம கைண்டா லைப்’ யூட்யூப் சேனலின் ஸ்டார், ஒன்மேன் ஆர்மி.  ஜெர்மனியில் வசிக்கும் அவரை தொடர்பு கொண்டபோது, தானே, ரிப்போர்ட்டராகவும், பதில் அளிப்பவராகவும் இரட்டை வேடம் தரித்து மனுஷி, அதகளப்படுத்திவிட்டார். 
 
சமூகத்துக்கு ‘ம கைண்டா லைப்’ என்ன சொல்லுது?
 
“நம்முடைய வாழ்க்கையில தினம் நடக்குற முரண்பாடான விஷயங்கள் தான், ‘ம கைண்டா லைப்’ யூ ட்யூப் சேனலோட மையம்.  இந்தச் சேனல்ல, நான் தயாரிச்சிருக்குற வீடியோக்களை யாரு வேணும்னாலும், அவங்க வாழ்க்கையோட தொடர்புபடுத்தி பார்த்துக்கலாம். இதுல நான் வாழ்க்கையினுடைய எல்லா விஷயத்தையும் காமெடி கலந்து சொல்லியிருக்கேன். அது பெரும்பாலான மக்களுக்கு அது எளிமையாக போய் சேர்ந்திருக்கு!”
 
உங்களுடைய வீடியோக்கள் அனைத்திலும், ‘மோனோ ஆக்டிங்’ என்பது சவால்தானே?
 
“அதை சவால்ன்னு சொல்ல முடியாது. எனக்கு சின்ன வயசிலிருந்தே, நடிப்புன்னா, ரொம்ப பிடிக்கும். பள்ளி நாட்கள்ல, நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட தயாரிப்புகள்ல, அதுவும் முக்கியமா, மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும்போது, எடிட்டிங் தான், எனக்கு பெரிய சவாலாக அமையும். ஆனால் அப்படியான வீடியோக்கள்தான் பலரின் மனதை ஈர்த்திருக்கிறது!.”
 
உங்கள்  குழு பற்றி?
 
“லொக்கேஷன், ஷூட்டிங், கேமரா, ஆடியோ, எடிட்டிங் எல்லாமே நான்தான். சில நேரங்களில் ஒன்றிக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் என்னுடைய நண்பர்களையே நடிக்க வைத்திருக்கிறேன்!”
 
கான்செப்ட் எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீங்க?
 
“முதல்ல எனக்கு என்ன தோணுதோ, அதை தயாரிச்சிடுவேன். இப்போ நான் என்னுடைய ஃபாலோயர்ஸிடம் கருத்துக்களை கேட்டுக்கறேன். என் பலம் என் ரசிகர்கள் தான். அவர்களுக்கு ஏற்ற மாதிரி, ஸ்க்ரிப்ட்டை உருவாக்கி, என்னோட யூட்யூப் சேனலுக்கான வீடியோக்களை தயாரிக்கிறேன்.”
 
மறக்க முடியாத விமர்சனம்?
 
“தினம் எனக்கு பலவிதமான விமர்சனங்கள் வரும். “உங்க வீடியோவை பார்த்தேன். என் கவலை மறந்து சிரிச்சேன்”னு சொல்லுவாங்க. இது போன்ற விமர்சனங்கள் எனக்கு மனநிறைவைத் தருது. அதோட நம்மளால, பல பேர் சந்தோஷமா இருக்காங்கன்னு நினைச்சா ரொம்ப நெகிழ்ச்சியாகவும் இருக்கு. என்னோட நண்பர்கள், உறவினர்கள் என்னை ஊக்குவிக்கலைன்னா என்னால இவ்ளோ சாதித்திருக்க முடியாது.” தனக்கே உரிய ஸ்டைலில் விடைபெற்றார் மோனிகா சௌத்ரி!
 
 - பவித்ரா
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles