ரஜினி உடன் ஜோடி சேர ஆசை!  - நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்

Friday, July 14, 2017

 “என்னுடைய சின்ன வயசுல, ஸ்கூல் மேடை நாடகங்கள்ல நிறைய நடிச்சு இருக்கேன். அதற்குப் பிறகு கல்லூரி படிக்கும் பொழுது, என் தோழியோடு சேர்ந்து  கே. பாலச்சந்தர் சாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போ அவர் சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவரோட சீரியல்ல, நார்த் இந்தியன் கதாபாத்திரம் தேவைப்பட்டுச்சு. எனக்கு அந்த வாய்ப்பை  கொடுத்தாரு கே.பி. சார்.

பிறகு, குடும்ப சூழல் காரணமாக, நான் வெளிநாட்டுக்கு போயிட்டேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு,  சென்னைக்கு வந்த உடனே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது.  அதனையடுத்து ‘ரெமோ’. ‘கவண்’ திரைப்படங்களில் நடித்தேன். தொடர்ந்து படங்களில் நடிக்கவும் இருக்கேன்” என்கிறார் பிரியதர்ஷினி ராஜ்குமார் என்கிற பாவனா. தமிழ் சினிமாவுக்கு லேட்டஸ்ட்டாக கிடைத்திருக்கும் குணச்சித்திர நடிகை. அவரிடம் கொஞ்சம் கதைத்தோம்!

ரோல் மாடல்?

“எனக்கு கமல்ஹாசன் சாரை ரொம்ப பிடிக்கும். மாறுபட்ட பல பாத்திரங்களில் தன்னை ஒப்புக்கொடுக்கிற மனிதர். அவருதான் என்னுடைய ரோல்மாடல். அதேபோல ஹாலிவுட்டில் மெரில் ஸ்ட்ரீப்பும், பாலிவுட்டில் ஷபானா ஆஸ்மியும் என்னோட பேவரைட் ஆக்டரஸ்!”

“பூர்ணிமா பாக்யராஜ் போல் இருக்கிறீர்களே!” என்று யாரவது சொல்லி இருக்கிறார்களா?

“பொது இடங்களில் பார்த்து நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா அது பற்றி பெரிசா அலட்டிக்கிறது இல்லை. ஆனா, ஒருமுறை பூர்ணிமா மேடத்தையே நேர்ல பார்க்கும்போது, நண்பர்கள் எல்லாம் சொன்னது சரிதான்னு தோணுச்சு. அப்புறம் அவங்க கூட சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக்கிட்டேன். அந்தப் படத்தை பார்த்தா, நாங்க ரெண்டு பேரும் அக்கா, தங்கை மாதிரியே இருக்கும். அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைச்சிருக்கேன்!”

எந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை?

“சூப்பர் ஸ்டாரா விரும்பாதவங்க இருப்பாங்களா. நானும் அவருடைய ரசிகைதான். என்னோட பிலிம் கேரியர்ல ரஜினி சாரோட ஒரு படத்திலேயாவது நடித்துவிட வேண்டும். அதுதான் ஆசையும் கூட!”

திருமணத்துக்கு பின் நடிக்க வந்தது குறித்து?

“ ‘அச்சம் என்பது மடமையடா’ ஷூட்டிங் போகும்போது என் குழந்தைக்கு நான்கு மாசம். குடும்பத்தோட, சப்போர்ட் இல்லேன்னா என்னால தைரியமா இந்தத் துறைக்குள்ளே வந்திருக்க முடியாது. என்னுடைய தாயார், மாமியார் எல்லாரும் என் குழந்தையை நல்லா பார்த்துக்கிட்டாங்க. என் பேஷன் நடிப்புங்கிறதை மதிச்சு, என் கணவர் என்னை ஊக்குவித்து, ஆதரவாகவும் இருந்தாரு. இது எனக்கு நம்பிக்கையை கொடுத்துச்சு. அதனால, நானும் தைரியமா சினிமாவுல நடிக்க வந்துட்டேன்!”

கனவு ரோல்?

“ ‘பாகுபலி’ போன்ற சரித்திரப் படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி போன்ற பாத்திரத்துல நடிக்கணும்!” சொன்னபடியே நமக்கு விதவிதமான ரியாக்ஷன்களில் போஸ் கொடுத்தார். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் கூப்பிடுங்க பாவனாவை...’  என்கிற அளவுக்கு திறமைகளை ஒளித்து வைத்திருக்கிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கண்டுகொள்வீர்களாக!

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles