வேட்டையனின் காதல் கதை!

Friday, June 30, 2017

“ஒரு நேர்காணல் பத்தாதுங்க, எக்கச்சக்க கதை என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு. இதுல, என்ன கொடுமைன்னா, நண்பர்களோட காதலுக்கு தூது போயி, நான்தான் அதிகமாக மொக்கை வாங்கி இருக்கேன்...” ஜாலியும் கேலியுமாக தன் காதல் அனுபவம் ஒன்றை விவரிக்கத் தொடங்குகிறார் கவின் என்கிற எல்லோருக்கும் தெரிந்த வேட்டையன்!. ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக இளசுகளின் இதயத்தில் ராக்கெட் விட்டவர். இப்போது, ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படம்  மூலம் கோலிவுட்டுக்குள் நுழைந்திருக்கிறார். 
 
 

“திருச்சியில நான் ஸ்கூல் படிக்கும்பொழுது எனக்கு கதிரேசன்னு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு, கயல் (கற்பனை பெயர்)னு ஒரு பெண்ணை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதை என்கிட்டே அவன் சொன்னதும், நாமதான் இவங்க காதலை தூக்கி நிறுத்தணும்னு முடிவு பண்ணினேன். அவனுக்கு சில உதவிகள் செஞ்சு அவன் காதலியோடு சேர்த்து வச்சேன். அடிக்கடி, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில  தூதெல்லாம் போனேன். அவங்க பேரன்ட்ஸ் கிட்டே பேசி,  நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன். எங்களோட ஸ்கூல் லைப் முடிஞ்சு, என்  நண்பன், மேல் படிப்புக்கு சென்னை வந்தான். இதனால ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு.
 
என்னடா நம்ம சேர்த்து வச்ச ஜோடி, சூப்பரா செட்டிலாகிடுவாங்கன்னு பார்த்தா கவுத்துட்டாங்களேன்னு அப்செட் ஆகிட்டேன். எப்படியாவது மறுபடியும் பேசி, இரண்டு பேரையும் சேர்த்து வைச்சிடணும்னு முடிவு பண்ணினேன். என் நண்பனோட காதலியை கான்டாக்ட் செஞ்சு  சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க முயற்சி பண்ணினேன். ஆனால் அது படு தோல்வியில போய் முடிஞ்சுது. நான் டெபாசிட் இழந்த வேட்பாளர் மாதிரி  ஆயிட்டேன். 
 
அப்படியே சில வருடங்களுக்குப் பிறகுன்னு ஒரு சினிமாவுல வர்ற மாதிரி ஒரு கார்டு போட்டுக்குங்க..! ஏன்னா, என்னோட வாழ்க்கைக்கான நானும் ஓட ஆரம்பிச்சேன். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு எனக்கு ‘கனா காணும் காலங்கள்’ தொடர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. வேட்டையனை தான் உங்க எல்லோருக்கும் தெரியுமே. அப்படி நான் குடும்பங்களோட வீட்டுக்குள்ளே நானும் ஒரு ஆளா போய்க்கிட்டு இருந்தப்போ, எனக்கு முகநூல் மூலமா, ஒரு பிரென்ட் ரிக்வஸ்ட் வந்துச்சு. அது என் நண்பனோட காதலி கயல்!
 
பிறகு, அந்தப் பொண்ணுகிட்ட “என்ன இருந்தாலும் கதிரை விட்டு நீங்க பிரிஞ்சு இருக்கக் கூடாது. அவன் ரொம்ப  வருத்தப்பட்டான். எங்க இருக்கான்னு எனக்கே தெரியல. உங்களை நான் சேர்த்து வைக்கிறேன்”னு பெரிய டயலாக் பேசினேன். அதுக்கு அவங்க “நீங்க சொல்ற அளவுக்கு  சீன் பெரிசா இல்லை!. எங்களுக்குள்ள பேசிகிட்டு சுமூகமாகத்தான் பிரிஞ்சோம்”னு  சொன்னாங்க. எனக்கு தூக்கி வாரிப்போட்டது. 
 
ஆனால், நான் விடவேயில்லை. வேற ஒரு ஸ்கூல் ஜுனியர் மூலமாக அவனை பேஸ்புக்ல கண்டுபிடிச்சேன். ‘நண்பேன்டா’ன்னு அவனோட ப்ரொபைல் ஸ்டேட்டஸ் பார்த்த எனக்கு செம்ம பல்ப்!.  மேரிட் ன்னு போட்டு இருந்துச்சு. அவன் போட்டோஸ்ல பார்த்தா, வேற பொண்ணு. நான்தான், என் நண்பனோடது தெய்வீக காதல்ன்னு நினைச்சு, சீன போட்டுட்டு இருந்திருக்கேன்னு தெரிஞ்சுது. இப்போ சொல்லுங்க. இது செம மொக்கை தானே?. இதுபோல, பல மரண மொக்கைகளை என் நண்பர்களோட காதலுக்காக வாங்கி இருக்கேன்!” என்று கதைக்கு என்ட் கார்டு போட்டவரிடம், “பாஸ்.. நல்லா வருவீங்க!” என்று கூறி,  கைகுலுக்கினோம்.

- பவித்ரா
 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles