நாடகம் நல்ல மனுஷனை உருவாக்கும்! ஆனந்த் சாமி ‘பளீர்’ பேச்சு!

Thursday, February 16, 2017

"குப்பைமேடு என்ற தெரு நாடகத்தில் தொடங்கி சந்திரஹரி, படுகளம், பிரகலாத சரித்திரம் உள்பட பல நாடகங்கள், சுனாமி, காசநோய், மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வுச் சித்திரங்கள் என்று பலவற்றில் நடித்திருக்கிறோம்" என்று தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்து பேசத் தொடங்குகிறார் ஆனந்த் சாமி.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் என்று மொழி பேதமில்லாமல் எல்லா நாடக மேடைகளையும் அலங்கரிப்பவர் இவர். நடிப்பு என்ற உலகத்தினுள் தற்செயலாக நுழைந்தது முதல் அதுவே தன் மூச்சு என இயங்கிக்கொண்டிருக்கும் நிகழ்காலம் வரை எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார் எந்த தயக்கமும் இல்லாமல். வர்ணஜாலம், சிவா மனசுல சக்தி உட்பட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சமீபமாக லென்ஸ் என்ற படத்தில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். நாம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கியபோது, ‘எல்லாத்தைப் பத்தியும் பேசலாம்’ என்று புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஆனந்த்சாமி. 

 

நடிகனாக வேண்டும் என்கிற வேட்கை எப்போது தொடங்கியது?

நான் நடிகன் ஆனது ஒரு விபத்து. ஆரம்பத்தில், நடிப்பு பற்றி எனக்கு எந்த வேட்கையும் இல்லை. படிப்பை முடித்ததும், சில மாதங்களிலேயே நிறைய கம்பெனிகளில் வேலை செய்தேன். அப்போது எனக்கு என்ன தேவை என்றே தெரியவில்லை; ரொம்பவும் குழப்பமாக இருந்தேன். அந்த சமயத்தில் என்னோடு பணிபுரிந்த அருள் வின்செண்ட் லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தான். கிருமி படத்தின் ஒளிப்பதிவாளர் என்றால், அவனை எல்லோருக்கும் தெரியும். அவனுடைய நண்பர்கள் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்தார்கள். அதில் நடிக்க ஆள் தேவைப்பட்டபோது, என்னை அழைத்தார்கள். அதுதான் எனது முதல் நடிப்பு அனுபவம். 

அந்த சமயத்தில், காவ்யாஞ்சலி என்ற சீரியலில் நடிக்க விரும்புகிறீர்களா என்று தினசரிகளில் விளம்பரம் வெளியானது. என் நண்பர்கள், அதற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்றபோது, கேமிரா முன்பு ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். ‘இங்க மார்க் இருக்கு, கேமிராவை இங்க பாருங்க’ என்று அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கவனித்தேன். என்னை நடித்துக்காட்டுமாறு சொன்னபோது, எனக்கு முன்னிருந்தவர் நடித்ததைத் திரும்பச் செய்தேன். அவர் என்ன செய்தாரோ, அதனை ‘இம்ப்ரூவைஸ்’ செய்தேன்னு சொல்லலாம். அதன்பிறகு, என்னோட பெயரையும் போட்டோவையும் கேட்டாங்க. அவங்ககிட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை கொடுத்தேன். ‘போட்டோஸ் ப்ராபரா இருக்கணுமே’ன்னு அவங்க சிரிச்சாங்க. அப்பதான், அவங்க என்னை தேர்ந்தெடுத்தது புரிந்தது. அதில் சுமார் பத்து எபிசோடு நடித்தேன். 

விஜய் டிவியில இருந்த நண்பர் ஒருத்தர் ‘கூத்துப்பட்டறையில நடிப்பு பயிற்சி பெற்றால், நீங்க சினிமாவுக்குப் போகலாமே’ என்றார். அதற்காக, கூத்துப்பட்டறையின் நல்லவள் என்ற நாடகத்தைப் பார்த்தேன்; பிரமித்தேன். அதன்பிறகு ஒருநாள், ந.முத்துசாமியை நேரில் சந்திக்க கொட்டிவாக்கத்திற்குச் சென்றேன். ஜனவரி 5, 2002 என்று நினைக்கிறேன். ’நடிக்க ஏன் வர்றீங்க’ என்றார் அவர். ‘நான் பிலிம் பண்ணனும், அதனால வர்றேன்’ என்றேன். ‘எவ்வளவு நாள் இருப்பீங்க’ என்றார். ‘மூணு மாசம் இருப்பேன்’ என்றேன் நான். அந்த நேரத்துல, இன்னும் இரண்டு பேர் வந்து வாய்ப்பு கேட்டார்கள். எனக்கு பயம் வந்துவிட்டது. அப்போது என்னைப் பார்த்த முத்துசாமி, ‘திங்கள்கிழமை வந்து ஜாய்ன் பண்ணுங்க’ என்றார். ஜனவரி 7, 2002 அன்று கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன். அப்படித்தான், என் நாடக வாழ்க்கை தொடங்கியது. மூன்று மாதம் இருப்பதாகச் சொன்னவன், இப்போது 15 ஆண்டுகளாக அந்த பந்தத்தைத் தொடர்கிறேன். 

 

கூத்துப்பட்டறையில் கிடைத்த அனுபவங்கள் எவ்வாறு உங்களை ஒரு நடிகனாக மாற்றியது?

ஜனவரி 26, 2002 அன்று ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை அப்போது நடந்து கொண்டிருந்தது. தப்பாட்டம், தேவராட்டம், சிலம்பம் என்று பயங்கரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது தவிர, குப்பைமேடு என்ற வீதிநாடகத்திற்கும் பயிற்சி இருந்தது. இது அத்தனையிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியான பயிற்சிகள். அப்போதுதான், நல்லவள் என்ற நாடகத்தில் நடித்த சாந்தகுமார் என்பவர் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக, நான் ஒத்திகை செய்ய வாய்ப்பு வந்தது. தொடர்ந்து ஏதாவது ஒன்று செய்து கொண்டிருந்ததால், ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 

அப்போது, பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய சந்திரஹரி நாடகத்தை, நடிகர் ஜார்ஜ் இயக்கிக் கொண்டிருந்தார். அதில் ஒருவனாக, நானும் நடித்து வந்தேன். ’நீ மூணு மாசம் தான் இருப்பேன்கிற, நாடகத்துல நடிக்கறதுக்காக ஒரு ஆறு மாசமாவது இங்க இரு’ என்றார். அப்ப முத்துசாமி, ‘நடிப்புங்கறது பொட்டலம் கட்டிக்கொடுக்கறதுன்னு நினைச்சீங்களா உடனே வர்றதுக்கு’ என்றார். அவர் சொன்னது, இப்போதும் என் மனதில் இருக்கிறது. அப்போது, அவர் மீது கோபம் இருந்தது. ஆனால், அவரது வார்த்தையை மதித்து அங்கு இருந்தேன். அதுதான் நான் செய்தது. அந்த நாடகம் செய்தபோது கிடைத்த அனுபவம் அலாதியானது. குரு சோமசுந்தரம் உட்பட சுமார் 17 நடிகர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், கூத்துப்பட்டறையிலேயே தங்க ஆரம்பித்தேன். ‘இதுதான் நான் செய்ய வேண்டியது’ என்ற எண்ணம் வந்தது. 

எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் கிடையாது. எழுதும் வழக்கமும் கிடையாது; கையெழுத்து போடுவதுதான், நான் அதிகபட்சமாக எழுதுவது. உலகத்தை உள்வாங்கிக்கொள்வது தான் என்னுடைய வழக்கம். அதனால், கூத்துப்பட்டறையில் கிடைத்த பயிற்சிகள் தான் என்னை ஒரு நடிகனாக மாற்றியது என்று சொல்லலாம். இதுவும் அப்போது எனக்குள் தோன்றவில்லை; இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் இந்த எண்ணம் எழுகிறது. 

கூத்துப்பட்டறையில் சுமார் 7 வருஷம் தங்கியிருந்தேன். அப்போது எனது நடிப்பைப் பார்த்தவர் ராஜிவ் கிருஷ்ணன், பேர்ச் கலெக்டிவ் என்ற ஆங்கில நாடகக் குழுவை நடத்துபவர். அவர் எனக்கு நம்பிக்கையளித்தார். அதன்பிறகு, அவரது குழுவில் சேர்ந்தேன். இப்போதுவரை அங்கு பல நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

 

வேறு குழுக்களின் நாடகங்களில் பங்கேற்ற அனுபவங்கள்..!?

ஜப்பானில் உள்ள க்யோட்டோ என்ற இடத்தில் ‘தி வாட்டர் ஸ்டேஷன்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். அந்த இடத்தில் தான், அந்த நாடகம் முதலில் மேடையேறியது. ஆரம்பகாலத்தில் அந்த நாடகத்தில் நடித்தவர்கள், அன்று நாங்கள் நடித்ததை ரசித்தார்கள். அதில் வசனங்களே கிடையாது. நமது அசைவுகள் தான் நாடகத்தில் இருக்கும். ரொம்பவும் சவாலான நிகழ்வு அது. 

’ரிமெம்பரிங் வீனாபானி’ என்று ஒவ்வொரு ஆண்டும் நாடகங்கள் நடத்தப்படுகிறது. அதில், கடந்த ஆண்டு அக்‌ஷயாம்பரா என்ற நாடகம் இடம்பெற்றது. கர்நாடகாவின் யக்‌ஷகானாவை அடிப்படையாகக் கொண்ட படைப்பு அது. திரவுபதி வேடத்தை ஒரு ஆணும், துரியோதனன் வேடத்தை ஒரு பெண்ணும் ஏற்று நடித்தார்கள். ஒரே நேரத்தில் இருவரும் பெண்ணாகவும் ஆணாகவும் கூட சிந்திப்பார்கள். கதாபாத்திரமாகவும் தாங்களாகவும், இருவரும் ஒரே நேரத்தில் நடித்தனர். உண்மையும் புனைவும் கலந்து வரும் அற்புதமான நாடகம் அது. சமீபத்தில் நான் வியந்து பார்த்தது இதைத்தான்..

 

வர்ணஜாலம், சிவா மனசுல சக்தி என்று நீங்கள் நடித்ததில் சில படங்கள் ரசிகர்களுக்கு வெகு பரிச்சயம். ஆனாலும், உங்களை அடிக்கடி சினிமாவில் பார்க்க முடியாதது ஏன்? 

கூத்துப்பட்டறையில் சேர்ந்ததே, சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான். ஒருமுறை அங்கு இயக்குனர் லிங்குசாமி வந்திருந்தார்; அவர் படத்தில் நடிக்க, என்னைத் தேர்ந்தெடுத்தார். ’ரன்’ படத்தில் அதுல் குல்கர்னி ‘அவன் வருவானா’ என்று மாதவனைப் பற்றிக் கேட்கும்போது, ‘வருவாண்ணே, ஆனா திரும்பிப் போகமாட்டான்’ என்று டயலாக் பேச வேண்டும். அதனைச் செய்தேன். ஷூட்டிங்கில் நான் பேசுவதைப் பார்த்த ஒளிப்பதிவாளர் ஜீவா, ‘ஏன் லிங்கு, எதுக்காக இவ்வளவு சத்தமா பேசுறாரு’ என்றார். அதற்குப் பிறகுதான், எனக்குப் பின்னால் ஒரு மைக் இருந்ததைக் கவனித்தேன். சினிமா வேறொரு ஊடகம் என்று புரிந்துகொண்டேன். 

அதன்பிறகு, பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், கல்லூரியின் கதை படங்களில் நடித்தேன். தொடர்ந்து, சிவா மனசுல சக்தி படத்தில் நடித்தேன். கூத்துப்பட்டறையில் இருக்கும்போது வந்த வாய்ப்புகள் இதெல்லாம். அப்போதுதான், ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். நான் நினைத்திருந்தால், சினிமாவில் நடிப்பதைச் சொல்லி நாடகங்களில் நடிப்பதை ஒருவாறு சமாளித்திருக்க முடியும். அதனைச் செய்யவில்லை. ஷூட்டிங் தள்ளிப்போன சமயத்தில், நாடகங்களில் நடிக்க முடியாமல் தவித்தேன். அது மாதிரி நடக்கும் என்று, அதுவரை எனக்கு தெரியாது. அதன்பிறகு நிறைய யோசித்துவிட்டு, வெறுமனே தியேட்டர் மட்டும் பண்ணலாம் என்று மனம் மாறினேன். பேர்ச் கலெக்டிவ் குழுவில் சென்று சேர்ந்தேன். அந்த நேரத்தில், மலையாளத்தில் பாசஞ்சர் என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். அதன்பிறகு, சிறு இடைவெளி உண்டானது. முழுக்க நாடகத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன்.

சமீபத்தில் ‘லென்ஸ்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தேன். நிறைய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட, நிறைய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தை இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். விரைவில் இந்தப்படம் தமிழ்நாட்டில் வெளியாகப் போகிறது. இது தவிர, ‘ஓடு ராஜா ஓடு’ என்ற படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அதுவும் சீக்கிரம் ரிலீஸாகும் என்று நம்புகிறேன்.

 

ஒரு நாடகக் கலைஞனாக வாழ்க்கையை அணுகுவதில், ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன?

கூத்துப்பட்டறையில் சேர்ந்து ரொம்ப நாட்கள் கழித்து தான், அதுபற்றி என் வீட்டில் சொன்னேன். ஆனால், எனக்குப் பிடித்ததைச் செய்வதில் உறுதியாக இருந்தேன். ’இது நல்ல மனுஷனை உருவாக்கும்’னு அவங்ககிட்ட சொன்னேன். ‘அப்ப நாங்கள்லாம் யாரு’ அப்படின்னு திருப்பிக் கேட்டாங்க. எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. போகப்போக, அந்த அர்த்தம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. 

ஒரு விஷயத்தை அணுகுவது, தயக்கமின்றி சரளமாகப் பேசுவது, புரிதல் மாறுவது, என் வாழ்க்கைச்சூழல் மாறியது என்று பல விஷயங்கள் நாடகத்தினால் நிகழ்ந்தது. ஒரு மனுஷனா கீழிருந்து மேலே வந்திருக்கேன் என்ற நம்பிக்கை, எனக்குள் இருக்கிறது. இது முழுக்க, நாடக அனுபவத்தினால் கிடைத்தது. நான் காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்தேன். படித்ததெல்லாம் அங்கே தான். ஆனால், அந்த நண்பர்களின் தொடர்பு குறைந்துவிட்டது. இப்போது எனக்கிருக்கும் நண்பர்கள் எல்லாருமே நாடகத்தினால் கிடைத்தவர்கள் தான். 

மைனஸ் என்று பார்த்தால், ஒன்று இருக்கிறது. நான் அனுபவித்த, பார்த்த ஒரு விஷயத்தைச் சொல்லலாம். நாடகமே வாழ்க்கை என்றாகும்போது, நம் கையில் நிறைய பணம் இருக்காது. அதிர்ஷ்டவசமாக, எனக்கு அப்படியொரு கஷ்டம் வரலை. என் வாழ்க்கையை நடத்தப் போதுமான அளவு, கடந்த 15 ஆண்டுகளாகப் பணம் இருக்கிறது. என்னைப் பார்த்துக்கொள்வதற்கு, எனக்குப் பிடித்தமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு, எனது நாடக வாழ்க்கை உதவியிருக்கிறது. பெரிதாக, எனக்கு ஆசை இல்லாமல் இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். ஆனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாடக நடிகர்கள் சினிமாவுக்குச் செல்வதற்கு, பணமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். 

அதனால, மைனஸ் பெரிதாக இருப்பதாக நினைக்கவில்லை. ஒருவேளை மைனஸையும் ப்ளஸ்ஸாக நினைக்கும் மனப்பாங்கை நாடக அனுபவம் கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. 

 

உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?

சினிமாவில் சாதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நான் தான் சினிமாவை விட்டு விலகியிருந்திருக்கிறேன். அதனால், அந்த முடிவை மாற்ற முயற்சித்து வருகிறேன். இப்போது எனக்குப் பிடித்தமான பாத்திரங்கள் கிடைத்து வருகிறது. சினிமாவில் புதிய முயற்சிகளும் நடந்து வருகிறது. சோமு நடித்த ‘ஜோக்கர்’ மாதிரியான படங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அதனால், கண்டிப்பாக இனிமேல் சினிமாவில் நடிப்பேன். அதே நேரம், நாடக அனுபவத்தையும் இழக்கமாட்டேன். இப்படித்தான் எனது எதிர்காலம் இருக்குமென்று நம்புகிறேன். 

ஒற்றை வார்த்தைகளில் பதிலளித்துப் பழகியிருந்த ஆனந்த் சாமி, இன்று சரளமாகப் பேசக்கூடியவராக நம்முன் தெரிகிறார். ‘இதற்கும் நாடக மேடைகள் தான் காரணம்’ என்று சொல்பவர், அதனைச் சுற்றியே தனது வாழ்க்கை அமைந்திருப்பதாக நம்புகிறார். தான் விரும்பியதைச் சாதித்துவரும் நிறைவோடும், புதிய கனவுகள் குறித்த தேடலோடும் தொடர்கிறது ஆனந்த் சாமியின் வாழ்க்கைப்பயணம்..

- உதய் பாடகலிங்கம்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles