இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மனம்!

Thursday, February 16, 2017

வந்திருப்பவர் விருப்பமறிந்து விருந்தோம்பும் தமிழ்ப்பண்பையொட்டி, முதல் இதழ் தொடங்கி இந்த இதழ் வரை தனது பணியைத் தொடர்ந்து வருகிறது மனம் இணைய இதழ். ஆம், கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று தொடங்கியது நமது இணையப்பயணம். தமிழ் என்பது மனிதத்தின் மனசாட்சி; அதனைச் சுமப்பதற்குக் கனவு காணும் இணைய வாகனம் தான் மனம் என்று சொன்னது போலவே, 24 இதழ்களைக் கடந்து வந்திருக்கிறோம்.

தனித்த எண்ணங்களைத் தாங்கிய நான் என்ற தன்மையைத் தாண்டி, நாம் என்பதை உருவாக்க முயற்சித்து வருகிறது மனம்; அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது.

சினிமா, அரசியல், கலை, இலக்கியம், மருத்துவம், தொழில்நுட்பம் இன்னபிற என்று ஒவ்வொரு துறையையும் தேடித்தேடி தேர்ந்தெடுத்து, அதுபற்றிய தகவல்களைப் பரிமாறி வருகிறது மனம். தங்கள் மனதின் அடுக்குகளில் மறைந்திருக்கும் எண்ணங்களை, மறந்துபோன நினைவுகளை மீட்டெடுத்து அழகு பார்த்த மனம்திறந்து பகுதிக்கு, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. முதல் இதழில் வெளியான நடிகர் விவேக்கின் நேர்காணல் இதனை மெய்ப்பித்தது. அவரது மனக்காயத்திற்கு மருந்திட்டது உலகத் தமிழினம். அதன் தொடர்ச்சியாக, திறந்த புத்தகமானது பல பிரபலங்களின் வாழ்க்கையனுபவம். அதிலிருந்த பக்கங்கள் தமிழ் மக்கள் ரசிக்கும் இலக்கியமாயின.

நாடகமே உலகம் என்று இயங்கிவந்த பாரதிமணி, பிரளயன் தொடங்கி, தற்போது இயங்கிவரும் கருணாபிரசாத், வினோதினி, தம்பிச்சோழன் என்று தொடர்கிறது அந்தக் கலையை நேசிக்கும் கண்ணி. அதனைத் தாங்கி வந்த பெருமையைச் சுமக்கிறது மனம். வெறுமனே நடிப்புலகம் சார்ந்த அனுபவங்கள் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயான நிலவரம் மற்றும் மனோபாவம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது இதன் சிறப்பு. 

குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கடவுளர்களின் அழகை, அந்தப் பகுதிகளின் பெருமைகளைத் தாங்கிநின்றது எழுத்தாளர்கள் சுபாவின் கொஞ்சம் புனிதம் கொஞ்சம் மனிதம். அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ஆவணப்படம் பார்த்த திருப்தியைத் தந்தது என்றால் மிகையல்ல. வாசகர்களைப் பார்வையாளர்களாக மாற்றிய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் சுபா. 

அழகு தமிழ் பழகு, பழமொழி இன்பம் என்ற இரட்டைச்சவாரியின் வழியாக, நம்மில் தமிழை ஆழமாக விதைத்தார் கவிஞர் மகுடேசுவரன். கண்டிப்பான தமிழ் வாத்தியாராகத் தொடர்ந்து வருகிறது அவரது விளக்கங்கள். கூடவே, எளிமையின் துணை கொண்டு எக்காலத்திலும் நம்மால் இலக்கணத்தை மறக்கமுடியாத நிலையை உருவாக்குகின்றன. 

நமக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தின் தெரியாத பக்கங்களைச் சொன்னது என். சொக்கனின் நுட்பவெப்பம். அந்தச் சூடு அடங்கும் முன்பே, சிறு கல்லில் பெரிய மாங்காய்களைப் பறித்த ஜாம்பவான்களையும் அவர்களது நிறுவனத்தின் சாதனைகளையும் ஒற்றைக்கொம்பன்கள் என தந்து வருகிறார். தன்னம்பிக்கையை விதைப்பவர்க்கு தமிழ்ச் சமுதாயம் என்ன கைமாறு செய்ய முடியும், அதனை மனதிலிறுத்தி செயல்படுத்துவதைத் தவிர..

உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் என்பது நமது தினசரி வாழ்க்கையினுள் பொதிந்திருக்கிறது என்பதே பாரம்பரிய மருத்துவத்தின் அடிநாதம். அதனைப் பிரதிபலித்து வருகிறது ஆயுர்வேத மருத்துவர் கௌதமனின் ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை. வெவ்வேறு வழி சென்று இலக்கை அடைவது போல, தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமாக வேரோடியிருக்கும் சித்தமருத்துவத்தின் சிறப்புகளைச் சொல்கிறது மருத்துவர் அருணின் மிகினும் குறையினும். இரண்டுமே நாம் இழந்துபோன பழக்கவழக்கங்களின் பெருமைகளை உரக்கச் சொல்கிறது.

தமிழ் சமுதாயத்தின் மூச்சாகத் திகழ்ந்துவரும் சினிமாவும் அரசியலும் கூட மனம் இதழில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளன. வெகுஜன ரசனையின் எல்லையில் இருந்து விடுபடும் பிரபலங்கள் மீதும் அவர்களது திறமைகள் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதில் மரியாதை செய்வதில் மகிழ்கிறது மனம். கூடவே, நாம் அண்ணாந்து பார்க்கும் பிரபலங்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கிறது. இயக்குனர் வெங்கட்பிரபுவின் சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் திரைப்பட அறிவிப்பை முதலில் சொன்னது மனம்; அதோடு, அதில் பங்கேற்ற அனைவரையும் கொண்டு சிறப்பிதழைத் தந்தது. 

தமிழ் திரையிசையின் அடையாளமாக மக்கள் மனதில் நிலைத்துப்போன இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, இரண்டு சிறப்பிதழ்களை வெளியிட்டது. 

சினிமா என்ற மாயப்பண்டத்தைச் சுவைக்க கிராமத்தில் இருந்து நகரத்திற்கு ஓடிவந்த ஒரு பாமரனின் பரிதவிப்பையும் போராட்டத்தையும் சொன்னது இயக்குனர் சந்துருவின் ‘கோனேரிப்பட்டி டூ கோடம்பாக்கம்’. 

இது தவிர, இலக்கியம், விளையாட்டு, சமூகம், உணவு என்று நம் அத்தனை ரசனைகளுக்கும் ஏற்ப, பாத்திரமறிந்து சுவையூட்டுகிறது மனம். முதல் இதழ் தொடங்கி தற்போதைய 25வது இதழ் வரை, எத்தனையோ உள்ளங்களின் வலிகளை, ஏக்கங்களை, துக்கங்களை, மகிழ்ச்சிகளை, பெருமிதங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது. நிகழ்காலத்தின் கண்ணாடியாக, தினந்தோறும் தனது பரப்பை இணையத்தில் விரிவாக்கி வருகிறது. 

வீட்டின் கதவைத் திறக்கும் சாளரம் போல, இன்று நம் அனைவரது கைகளுக்கும் மிக நெருக்கமாக இருக்கிறது இணையம். அதன் வழியே, உலகைத் தரிசிக்கும் அனுபவம் எல்லோருக்கும் சுலபமாகியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பெருமரத்தின் மாயவிழுதாக நீள்கிறது மனம் இதழின் பயணம். உங்கள் ஆதரவோடு, அது வேர் பிடிக்கும்.

- உதய் பாடகலிங்கம்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles