பாலுமேகந்திரா என்ற பொன்நிற ஒளி!

Monday, February 13, 2017

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலு மகேந்திராவின் பள்ளியில் இருந்து நிறைய ஒளிப்பதிவாளர்கள் வெளிவந்திருக்க வேண்டும் தான். ஆனால், அது நடந்தேறவில்லை. மாறாக, நிறைய இயக்குநர்கள் அவரிடம் இருந்து வந்து தமிழ் சினிமாவை இன்றுவரை தடதடக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் நீளமானது.

அதில் ஒருவரான இயக்குநர் வசந்த் பாலசுந்தரம், பாலுவின் நினைவைப் போற்றும்வகையில் "சினிமாவின் பொன்நிற ஒளி பாலுமகேந்திரா'' என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறார். அதன் வெளியீட்டு விழா, இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் சீனுராமசாமி, நடிகர்கள் ஜுனியர் பாலையா, 'கதைநேரம்' சசி, நடிகை அர்ச்சனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

இந்த ஆவணப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் வசந்த் பாலசுந்தரம்,

"ஒவ்வொரு சினிமா மாணவனுக்கும் இயக்குநர் பாலுமகேந்திரா குறித்த ஆவணப்படத்தை எடுக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும். ஏனெனில், அவருடைய ஆளுமை அந்தளவிற்கு நம்மை ஈர்த்துவிடும். அவரைப் போல சினிமாவை ரசித்து, சொல்லிக்கொடுக்க கூடிய ஆள் தற்போது இல்லை. சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி, ஒரு இயக்குநராகவும் சினிமா நோக்கி வருபவர்களுக்கு தனது திரைப்படக் கல்லூரியின் வழியே பல வாசல்களைத் திறந்துவிட்டவர். அவரைப் போற்றும்வகையில் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளேன். சினிமாவில் அவருடைய பங்களிப்பு குறித்து, இதில் சொல்லியுள்ளேன்; தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசவில்லை.

அவருடைய உதவி இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, மீரா கதிரவன், நா.முத்துக்குமார் மற்றும் கணேசலிங்கம் (கோகிலா படத்தின் தயாரிப்பாளர்), கவிஞர் காசி ஆனந்தன், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, நடிகை அர்ச்சனா உள்ளிட்ட 28 பேர் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஆவணப்படம் ஒன்றரை மணி நேர கால அளவு கொண்டது. படத்துக்கான முழு செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன்.

படத்தைப் பார்த்துவிட்டு ஓவியர் வீரசந்தனம் அய்யா, "ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க. ஒரு ஆவணப்படம் கொஞ்சநேரத்துக்கு மேல போரடிக்க ஆரம்பிச்சிடும். ஆனால், ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கீங்க..." என்று பாராட்டினார். விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கான உணவு உபசரிப்பை அர்ச்சனா மேடம் ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்" என்று நம்பிக்கையோடு முடித்தார். 

தமிழ் சினிமாவின் நிரந்தர அடையாளங்களில் ஒருவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் இயக்கிய 'வீடு', 'சந்தியா ராகம்' போன்ற படங்கள் சர்வதேச சினிமா ரசிகர்களைத் திருப்தியடையச் செய்யும் படைப்புகள். 

இன்று இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவு தினம். சமூக வலைதளங்களும் தொலைக்காட்சிகளும் வேறு சில பிரச்சினைகளில் மூழ்கியிருந்த போதும், அவரது நினைவைப் போற்றும் வகையில் ஆங்காங்கே சில நிகழ்வுகளும் நடந்தேறின. இதுதான் பாலு மகேந்திரா என்ற காலத்தை வென்ற படைப்பாளியின் பலம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles