நடுக்கடலில் ஒரு திகில் அனுபவம்! இயக்குநர் சி.வி.குமார்

Saturday, August 19, 2017

“ஒரு போலீஸ் அதிகாரி தொடர் கொலைகளை தேடிப் போறாரு. அப்படி போகும்போது, அவருக்கு கிடைக்கிற தகவல்களும் புரிதல்களும் அதிரடியாகவும் ஆச்சர்யமூட்டும்படியாகவும் இருக்கு. அதுதான் மாயவன் படத்தோட ஒன்லைன். ஒரு வெற்றிகரமான சினிமாவுக்கு உண்டான எல்லா அம்சங்களும் இந்தப் படத்துல இருக்கு. அதையெல்லாம் டீடெய்லா சொன்னா படத்தோட கதை வெளியே தெரிஞ்சுடும். மிஸ்ட்ரி த்ரில்லர் வகை தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லை;

ஆனா, மாயவன் படம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான, யதார்த்தப் படமாக இருக்கும்!” எளிமையாக, எந்த அலங்கார வார்த்தைகளின்றி பேசுகிறார் இயக்குநர் சி.வி. குமார். தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த தயாரிப்பாளர்களில் ஒருவர். மனம் இதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது! 

படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதே?

“படத்தோட ஹீரோ சந்தீப், ‘மாநகரம்’ படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல, இந்தப் படத்திலேயும் அவருடைய நடிப்பு பேசப்படும். ஹீரோயின் லாவண்யா திரிபாதியை ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்னுதான் சொல்லணும். ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல நடித்திருக்கும் ஆர்ட்டிஸ்ட் எல்லோருமே தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவா செஞ்சிருக்காங்க. இந்த கேரக்டரில் இவங்க இல்லாம வேறொருத்தரை நடிக்க வைத்திருக்கலாமோன்னு யோசிக்கறதுக்கான இடத்தை யாரும் தரல. நான் எடுத்த முடிவு சரிதான் என்பது போல அவர்களுடைய பங்களிப்பு இருந்துச்சு. அதிலும் டேனியல் பாலாஜி ரொம்ப சிறப்பாகவே நடித்துக் கொடுத்திருக்காரு. ஸ்கீரினில் அவர் வருகிற காட்சியெல்லாம் அவ்வளவு அருமையாக வந்திருக்கு!”.

இந்திய சினிமாவின் மகுடம் ஜாக்கி ஷெராப். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு எப்படி? 

“இந்தப் படத்துல வெவ்வேறு வயது உடைய வெவ்வேறு வில்லன்களை நீங்க பார்க்கலாம். சுமார் ஐந்து வில்லன்களில் இருந்து ஜாக்கி ஷெராப் தனித்து தெரிவார். அவர் நடிக்கிற எல்லா காட்சிகளுமே நல்லா இருக்கும். எதை எடுத்துக்கிறது, எதை தவிர்க்கிறது என்கிற குழப்பம் வர்ற அளவுக்கு நடிப்பில் மிரட்டிவிடுவார். அவர் பாத்திரத்தை புரிந்துகொண்ட விதமும் அதை வெளிப்படுத்திய விதமும் எங்கள் படக்குழுவையே சந்தோஷத்தில் ஆழ்த்தியது. மக்கள் மனதில் அவருடைய பாத்திரம் நின்று பேசும்!”

ஜிப்ரான் இசையமைப்பு படத்துக்கு பலம் சேர்க்குமா?

“ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் படத்தோட இசையும் தான். அதை சரியாக உள்வாங்கிட்டு செய்திருக்கிறார் ஜிப்ரான். இந்தப் படம் ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர். நாங்க ஐம்பது சதவீதம் கொடுத்தா, அவர் அதை நூறு சதவீதமா மாற்றிக் கொடுப்பாரு. மாயவனுக்கு அவருடைய இசையமைப்பு பெரிய பலம் தான்!”

உங்களுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் இடம்பிடித்து விடுகிறாரே?

“எடிட்டர் தான் படத்தோட பர்ஸ்ட் ஆடியன்ஸ். கட் பண்ணி கட் பண்ணி நாம எடுக்கிற காட்சிகளை ஒரு படமாக ஓட்டிப் பார்க்கிறது அவர்தான். அதனால எடிட்டரும் இயக்குநரும் நல்ல ஜோடியாக இருக்கணும். அப்படி இல்லன்னா, நல்ல படங்கள் கூட ஆடியன்சிடம் எடுபடாமல் போய்டும். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால். அவருடைய வேலையில் ரொம்ப தீவிரமாகவும், நேர்மையாகவும் இருப்பார். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, “என்னுடைய எடிட்டிங் அறைக்குள் நீங்க ஒரு இயக்குநராகத்தான் வரணும். தயாரிப்பாளராக வரக் கூடாது. அப்படி வந்தீங்கன்னா நமக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப் கெட்டுப்போயிடும்”னு கண்டிப்பாக சொல்லிவிட்டார். என் தயாரிப்பில் உருவாகுற படங்களில் எல்லோருமே தனித்துவமாக வேலைப் பார்க்க அனுமதிப்பேன். அதுல லியோவுக்கும் இடமுண்டு. அந்தவகையில் ‘மாயவன்’ படத்துக்கு அவரும் ஒரு பில்லர்தான்னு சொல்லுவேன்!”

இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ளாரே?

“உண்மையைச் சொல்லணும்னா, ‘மாயவன்’ படத்துக்கான முழு திரைக்கதையை நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து உருவாக்கி, ஒரு நாள் படப்பிடிப்பையும் நடத்திவிட்டோம். ஆனால், இந்தப் படம் ஜெயிக்குமா? நாம பண்ணியிக்கிற கதை சரிதானா? என்கிற சந்தேகம் எனக்குள்ளே வந்துடுச்சு. அப்படியான ஒரு சூழலில் நலன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் பேசினேன். “நானே முழு திரைக்கதையையும் எழுதறேன். எப்போதும் ஒரு ரைட்டரா இருக்கத்தான் ஆசைப்படறேன். ஒரு படம் இயக்கினா, மூன்று படங்களுக்காவது திரைக்கதை எழுதணும்னு நினைக்கிறேன்”னு சொல்லி, இந்தப் படத்துக்குள்ளே வந்துட்டார். ஏறக்குறைய இருவரும் ஒரு வருடம் சேர்ந்து இந்தப் படத்தினுடைய கதையை மூன்று முறைக்கு மேலாக திருத்தி, எழுதி, இறுதி செய்தோம். எனக்கு பெரிய பக்க பலமாக நலன் எப்போதும் இருப்பார்!”

இயக்குநர் அவதாரம் ஏன்?

“இந்தக் கேள்விக்கான பதிலே மனிதன் தான். அடுத்தக் கட்ட வளர்ச்சின்னு ஒண்ணு இல்லாம போயிருந்தா, நாம எல்லோரும் இன்னும் குரங்குகளாகவே இருந்திருப்போம். தேடல் உள்ள எவரும் முன்னோக்கி போய்க்கிட்டேதான் இருப்பாங்க. அப்படித்தான் நானும். எந்த இடத்திலேயும் தேங்கிவிடக் கூடாதுன்னு நினைப்பேன்!”

படப்பிடிப்பின்போது மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்குமே?

“ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாளாகத்தான் இருந்துச்சு. படத்தின் கதையமைப்புப்படி கடலுக்குள்ளே ஒரு காட்சியை எடுத்தோம். அப்போ மீன் பிடி தடைக்காலம். நடுக் கடலில் போய் ஷுட் பண்ணிக்கிட்டு இருக்கும்பேது, கடற்படையினர் சுத்தி வளைச்சுட்டாங்க. துப்பாக்கி முனையில் வைத்து விசாரணை பண்ணினாங்க. பிறகு, அனுமதி எல்லாம் வாங்கிட்டு வந்துதான் படப்பிடிப்பு நடக்குதுன்னு தெரிந்ததும், கெடுபிடியை தளர்த்தி, ஆதரவாக நடந்துக்கிட்டாங்க. “மீன்பிடி தடைகாலத்தில் மற்றொரு படகு உள்ளே வந்தா, அனேகமாக அது கடத்தல்காரர்களாகவோ, தீவிரவாதியாகவோ இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தான் வந்தோம். ஏதாவது பிரச்னைனா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்க. உதவிக்கு வர்றோம்”னு சொல்லிட்டுப் போனாங்க. எப்போதுமே மறக்க முடியாத அனுபவமாக அது ‘மாயவன்’ படத்தோட சேர்ந்து என்னோட இருக்கும்!” திகில் அனுபவத்தை த்ரில்லாக முடித்தார் சி.வி.குமார். ‘மாயவன்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்!

  

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles