ஆச்சாரியர் ராமானுஜர் ஆயிரம்!

Friday, April 28, 2017

பூமியில் தோன்றிய அனைத்து உயிர்களும், இறுதியாக அடையக்கூடிய இடம் நாராயணனின் திருவடியே. இதைப் புரிந்து கொண்டு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவர் பகவத் ஸ்ரீ ராமானுஜர். இந்த உலகத்தில் வைணவம் தழைக்க பாடுபட்ட மஹாநுபாவர்களில் முதன்மையானவரும் அவரே!.

இப்போது அவருக்கு ஆயிரமாவது பிறந்த நாள். உலகம் முழுவதும் உள்ள அவரது பக்தர்கள்,  பல்வேறு வகையிலான விழாக்களை எடுத்து, அவரின் புகழை கொண்டாடி வருகின்றனர். சென்னையிலும் பகவத் ஸ்ரீ ராமானுஜருக்கான நிகழ்ச்சிகள், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்து, அவரின் புகழ்பாடிச் சென்றனர் பக்தர்கள். சாதி, மதங்களைக் கடந்து அனைவரும் கொண்டாடும் ராமானுஜரின் அருமைகளில் சிலவற்றை இங்கே காண்போம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் 1017 ஆம் ஆண்டு சித்திரை திருவாதிரையில் அவதரித்தார். பல காலமாக பிள்ளை பேறு இல்லாமல், தவித்த கேசவ சோமையாஜி, காந்திமதி அம்மையார் தம்பதியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை சேவித்து, அவர் அனுக்கிரகத்தால் நாராயணின் தலையணையான ஆதிசேஷனின் அம்சமாக பிறந்தார் இராமானுஜர். 

 

பவிஷ்யதாச்சாரியார்! 

மதுரகவி ஆழ்வார், தன்னுடைய ஆச்சாரியிரான நம்மாழ்வாரை தினப்படி சேவித்து, அவருக்கு கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். தாமிரபரணி ஆற்றின் தீர்த்தத்தை நாள்தோறும் காய்ச்சி, அதில் சேர்ந்த உலோகத்தைக் கொண்டு சிலை செய்வித்தார். சிலை முழுமையானதும், தன் குருவான நம்மாழ்வாரிடம், “இது தங்களை போன்று இல்லையே?” என்று வினவினார். அதற்கு மாறன், “ எதிர்காலத்தில், ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை வாழவைக்க ஓர் மகான் பிறக்கவுள்ளார். அவரது திருவடிவமே நீர் இப்பொழுது செய்த  சிலை!” என்றார். அதோடு இந்த பவிஷ்ய (எதிர்காலம்) சிற்பத்தை ஆழ்வார் திருநகரியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் பணித்தார். ராமானுஜரின் ஆச்சர்யமான  அவதார ரகசியம், அவர் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவத் சங்கல்பத்தால் நமக்கு தெரிந்தது.

 

படி அளப்பவனுக்கே ஆச்சார்யன்!

ஒரு முறை திருமலையில் எழுந்து அருளியிருக்கும் பெருமான் சிவ பெருமானா அல்லது நாராயணனா என்று, சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே கடும் சச்சரவு ஏற்பட்டது. எதேச்சையாக அவ்வேளையில், இராமானுஜர் அங்கு எழுந்தருளியிருந்தார். அவர் அங்கிருந்தோரிடம் “ சிவனின் இலச்சினையான சூலத்தையும் டமரூகத்தையும் நாராயணனின் சின்னமான சங்கு சக்கரத்தையும் பகவான் முன்பு வைப்போம். அவர் எதனை மனமுகந்து தரித்துக் கொள்கிறாரோ அதை வைத்து ஒரு முடிவுக்கு வருவோம்” என்று கூறினார்.  

இதனை எல்லோரும் ஒப்புக் கொண்டு, தங்கள் சின்னங்களை முதல் நாள் இரவு சன்னிதானத்தில் வைத்து விட்டு, கதவை தாழிட்டு சென்று விட்டனர். மறுநாள் காலை விஸ்வரூப தரிசனத்துக்காக திறக்கும் பொழுது சங்கு சக்கரத்துடன் வேங்கடவன் காட்சி அளித்தார். நம் எல்லோருக்கும் படி அளப்பவனாகிய மலையப்ப பெருமாளுக்கே ஆழி சங்கத்தை அளித்ததால் அவருக்கே ஆச்சாரியனாகிறார் இராமானுஜர். இன்றும் நாம் திருமலையில் அவரை ஆச்சாரிய முத்திரையில் சேவிக்கலாம்.
 

சமுதாயப்பணி! 

உயிர்களிடத்தில் பேதங்கள் பார்க்காத இராமானுஜர், சமுதாயத்திலும் தீண்டத் தகாதோர் படும் வேதனைகளை கண்டு மிகவும் மனம் வருந்தினார். இதனால் மனமிரங்கி, அவர்களுக்கு “திருக்குலத்தார்” என்ற பெயரிட்டு, அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தார். இப்படியாக அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் எழுப்பியதில் முதலாமானவராக இன்றும் அனைவராலும் புகழப்படுகிறார்!. 
ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழும் உரிமையையும் பெற்றுக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல், அக்காலத்திலேயே படித்தவர், அரசன், ஆண்டி, ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்கியவர்.

 

ஆறு கட்டளைகள்!

கோயிலைச் சுற்றி பல வகையான தொழில்களை ஏற்படுத்தினார். கோயில் சீரமைப்போர், காவிரி ஆற்றைக் காப்போர், மண்பானை செய்வோர், ஓவியர்கள், கல்தச்சர், மரத்தச்சர், பிரபந்த ஆய்வாளர்கள், இசை மற்றும் நாட்டிய கலைஞர்கள் போன்றவர்களை நியமித்து இருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அவருக்கு தொலைநோக்கு சிந்தனை இருந்தது வியப்பளிக்கிறது. வாழும் இடத்தை முன்னேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட பணிகளை அவர் வட இந்தியா வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மடங்கள் அமைத்து, அதன் மூலம் எண்ணற்றவைகளை செய்தார்.

இராமானுஜர் பழுத்த பழமாகி, அவர் சிஷ்யகோடிகளிடம் ஆறு கட்டளைகளை வைத்தார். அவற்றை கீழே காணலாம்!

  • ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.
  • திவ்யப் பிரபந்தத்தை நாம் மட்டும் ஓதாமல், பிறர் ஓத உதவ வேண்டும்.
  • திவ்ய தேசங்களில் தினமும் அமுதுபடி செய்ய வேண்டும்.
  • திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.
  • துவய மந்திரத்தை அர்த்தத்துடன் தினம் அனுசந்திக்க வேண்டும்.
  • ஒரு பாகவதனின் நிழலில் அண்டி இருக்க வேண்டும்.

வாழ்நாளில் இதில், ஏதேனும் ஒரு கட்டளையையாவது நாம் பின்பற்றி நற்கதி அடைய வழி வகுக்க வேண்டும். அடியார்கள் வாழ, அரங்க நகர் (ஸ்ரீரங்கம்) வாழ, இராமானுஜரின் கீர்த்தி பாரெங்கும் பல்லாண்டு காலம் இருக்க, உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே சரணம். யதிகளின் நாதனான இராமானுஜரின் ஸஹஸ்ராப்தி (ஆயிரமாவது வருடம்) வைபவத்தை அவர் வகுத்த வழியிலேயே அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles