நீரில்லாக் கோடை - சிறப்புக் கட்டுரை

Friday, April 28, 2017

என் இளமைக்காலக் கோடைகளை எண்ணிப் பார்க்கிறேன். கோடை என்றாலே பள்ளிக்கு விடுமுறை நாள்கள் என்பதே உடனடியாக நினைவுக்கு வருகிறது. முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் கடைசி நாளில் நண்பர்கள் எல்லாரிடமும் விடைபெற்றுப் பிரிந்து வருவோம். 

கோடை என்றாலே கொண்டாட்டம்தான் என்கின்ற சிறுவம்தான் நினைவுக்கு வருகிறது. சிறுவம் என்பதைப் பால்யத்திற்கு நிகரான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறேன். கோடை விடுமுறையில் நான் என்னென்ன செய்தேன் ? பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன் நண்பர்களின் முகவரிகளை ஒருவர்க்கொருவர் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்தது. எல்லா நண்பர்களின் முகவரியையும் பெற்றுக்கொள்வதில்லை என்றாலும் அணுக்கமான நண்பர்களின் முகவரிகளைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். விடுமுறை நாள்களில் நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதுவது ஒரு பொழுதுபோக்கு. “உன்னிடம் என்னுடைய கேம்லின் சிவப்பு மை எழுதுகோல் இருக்கும். அதை வாங்கிக்கொள்ள மறந்துவிட்டேன். பரவாயில்லை. என்னுடைய நினைவாக அதை நீயே வைத்துக்கொள். ஆனால், ஒரு நிபந்தனை, அதைத் தொலைக்காமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்” என்பதுபோல் அந்தக் கடிதங்கள் இருக்கும்.

பத்திருபது நாள்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் நண்பர்களைத் தேடி அவர்களுடைய வீட்டுக்கே கிளம்பிவிடுவதும் உண்டு. நண்பனின் வீட்டுக்குத் தனியாகவும் செல்வதில்லை. அருகிலுள்ள இரண்டொரு நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓர் ஊர்வலமாய்ச் செல்வோம். எப்படியும் நம் நண்பனை அவன் வீட்டிலோ அவன் வீடுள்ள வீதியிலோ “கலைந்த கோலத்தில்தான்” பார்ப்போம்.  

நம்மைப் பார்த்தவுடன் நண்பனும் திக்குமுக்காடிப் போவான். வீட்டுக்கு அழைத்துச் சென்று நீரூட்டுவான். நண்பனின் தாயார்க்கும் எங்களின் இவ்வருகை உவப்பாகிவிடும். “நம்ம பையனையும் தேடி நாலு பசங்க வர்றாங்களே...” என்னும் ஆனந்தம் அது. பிறகு எல்லாரும் சேர்ந்து ஏதேனும் திரைப்படத்திற்குச் செல்வோம். பாண்டி நாட்டுத் தங்கம், எனக்குள் ஒருவன், வைகாசி பொறந்தாச்சு, கிழக்கு வாசல் போன்ற படங்களையெல்லாம் அத்தகைய நண்பர்கள் சூழப் பார்த்தது நினைவிருக்கிறது. கோடையாவது வாடையாவது... வெய்யிலே உறைக்காத நாள்கள் அவை.

நான் குடியிருந்தது, நகரத்தின் விளிம்பில் இருந்த சிற்றூர் என்றே சொல்லவேண்டும். வடக்குப் பகுதியில் நகரம் இருந்தது எனில் தெற்குப் பகுதியில் விளைநிலங்களும் வெட்ட வெளிகளும்தாம் இருந்தன. தெற்குப் பகுதியின் ஒருபுறத்தில் கருங்கற்களை அகழ்ந்தெடுத்த அகன்ற குழிகள் இருந்தன. ஒருகாலத்தில் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டபின் இப்போது கைவிடப்பட்ட நிலையில் இருப்பவை. அகன்ற குளங்களைப்போல், வடிவாக வழித்தெடுக்கப்பட்டதுபோல் இருக்கும். எங்கள் பகுதியில் அவற்றைப் “பாறைக்குழிகள்” என்போம். இப்போதும் இவ்வூர் நாளிதழ்கள் அதே சொல்லால்தான் குறிக்கின்றன “பாறைக்குழியில் மூழ்கி பள்ளிச்சிறுவன் சாவு” என்றுதான் செய்தி எழுதுகிறார்கள்.  

பாறைச்சுவர்களால் ஆகிய அதன் நீர்கொள்ளும் பகுதியையும், அதில் நிறைந்துள்ள பச்சை நீரையும் சேர்த்துப் பார்த்தால் அகன்ற கிண்ணம் போன்ற தோற்றத்தில் இருக்கும். சேரும் நீர் நிலத்துக்குள் இறங்காதபடி அடிப்பகுதியும் கடும்பாறையால் ஆனது. அதனால் சேறு என்று பெரிதாய் இருக்காது. விழும் மழைநீர் மொத்தமும், ஆவியானதுபோக மீதமுள்ளது, அப்படியே குழியில் இருக்கவேண்டியதுதான். 

சுற்றுப்புறப் பெண்கள் அக்குழியில்தான் துணி துவைப்பார்கள். சிறுவர்களுக்கு அது நீச்சல்குளம். என் வீட்டருகில் சுண்டமேடு என்ற அத்துவானக் காடு இருந்தது. அங்கேதான் அப்பகுதியின் மிகப்பெரிய பாறைக்குழி அமைந்திருந்தது. ஐந்நூற்றடி நீளமும் இருநூற்றடி அகலமும் கொண்ட பெருங்குழி. நாற்பதடி ஆழத்திற்குக் குறைவில்லாதது. அதன் பாதியளவு எப்போதும் நீரால் நிரம்பித்தான் இருக்கும். 

கோடை விடுமுறை விட்டதும் நான் ஒருநாளின் பாதிநேரம் கிடந்தது அந்தக் குழியில்தான். நீர் எருமையைப்போல் எந்நேரமும் அந்தக் குழியில் போய் இறங்கிக்கொள்வோம். வீட்டருகிலுள்ள தோழர்களும் இதில் என்னோடு கூட்டு. யாரும் எனக்கு நீச்சல் பழக்கிவிடவில்லை. முதலில் சில நாள்கள் அந்தப் பாறைக்குழிக்கு நண்பர்களோடு சென்று முழங்கால்நனையும்படி நின்றுகொண்டிருந்தேன். பிறகு தண்ணீருக்குள் தரையில் கையூன்றியபடி தவழ்ந்தேன். 

தண்ணீர் நம்மை மிதக்க வைக்கும் அந்த அருநொடியை உணர்ந்திருக்கிறீர்களா ? நம் உடல் எடையைப் பாதியாய்க் கழித்துவிட்டு நம்மைத் தனக்குள் வாழவந்த உயிர்போல் கருதும் தண்ணீர் அப்படியே மிதக்கவிடும். அந்த மிதப்பு கைவந்தவுடன் வேண்டியவாறு கைகால்களை அசைத்தால் நீரில் நகர்வோம். நீச்சல் என்பது இதுதான். உடலை நீர்த்தன்மைக்கேற்ப மிதக்க விடல். அவ்வாறு மிதந்து பழகிவிட்டால் நீச்சல் எளிது. அவ்வாறில்லாமல் கைகால்களைத் தண்ணீருக்குள் ஓங்கி ஓங்கி அடிப்பதுதான் நீச்சல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லவே இல்லை. அந்தப் பாறைக் குழியில் பழகிய நீச்சலை வைத்துக்கொண்டுதான் இந்தியாவின் மாபெரும் பேராறுகளில் நீந்திக் களித்திருக்கிறேன். என்றோ ஒரு கோடையில் பழகிய நீச்சல் கலைதான் வாழ்வின் இறுதிவரை என்னுடன் வருகிறது.

என் கோடைகளில் அடுத்ததாய் விரும்பிச் செய்தது நூல் வாசிப்பு. அக்காலங்களில் காசு கொடுத்து எல்லா இதழ்களையும் வாங்கும் நிலை எனக்கிருக்கவில்லை. அதற்காக வாசிப்பை நிறுத்திக்கொள்ளவில்லை. பழைய புத்தகக்கடைகள் அப்போது எல்லாவிடங்களிலும் இருக்கும். பழைய புத்தகக் கடைகளிலும் நல்ல விற்பனையும் நடந்தது அப்போது. விகடன் குமுதம் தொடங்கி எல்லா இதழ்களிலும் பத்திருபது வாங்கி வந்து வைத்துக்கொள்வேன். அப்படி வாங்கிப் படித்தால் தொடர்கதைகளை நாவல்போல் ஒரே அமர்வில் படிக்கலாம். நான் வார இதழ்த் தொடர்களை அவ்வாறு தொகுப்பான இதழ்களாக வாங்கி வந்து படித்தேன். மேலும் இருக்கவே இருக்கிறது நூலகம். ஒரு கட்டத்தில் நூலகத்தில் இனிமேற்கொண்டு படிப்பதற்கு நூல்களே இல்லையோ என்னுமளவுக்கு மேய்ந்து தீர்த்துவிட்டேன். 

இடையிடையே உள்ளூர்த் திரையரங்கில் ஒரு படம் விட்டுவைப்பதில்லை. எல்லாவற்றையும் பார்த்தேன். அத்தைவீட்டுக்கு ஆண்டுதோறும் இவ்விடுமுறை நாள்களில் சென்று நாள்கணக்கில் தங்கியிருந்ததும் நினைவிருக்கிறது. அங்கே போனாலும் இதே நிகழ்ச்சி நிரல்தான். கூடுதலாக நண்பர்களோடு விளையாடியதும் நினைவிருக்கிறது, அப்பா அம்மா விளையாட்டு உட்பட ஒரு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை.

கோடை என்பது என்னை விரிவு செய்யும் பருவமாக அன்றைய சிறுவத்தில் விளங்கியது. நான் என்னைப் பள்ளித் தொடரிலிருந்து விலக்கிக்கொண்டு என் திறன்களை அறியும் திசையில் நடைபோட்டேன். என் வயதொத்த சிறார்கள் அனைவர்க்கும் அன்றைய கோடை அப்படித்தான் ஏதேனும் ஒரு திசை காட்டிற்று. அதைப் பிடித்துக்கொண்டு எங்களை வளர்த்துக்கொண்டோம். என்னதான் நாம் ஆக முயன்றாலும் நம் இளமை ஆர்வம் எதுவோ அதில்தான் நாம் பேராற்றல் பெற்றவர்களாக முடியும் என்பது திண்ணம்.

இன்றைய கோடைகள் எப்படியிருக்கின்றன என்னும் ஒப்பீட்டையும் தவிர்க்க முடியவில்லை. அன்றைய கோடைகளில் எங்களிடம் அணியச் செருப்பிருக்கவில்லை. ஆனால், வெய்யிலில் எந்தச் சுணக்கமுமில்லாமல் உற்சாகமாக அலைந்து திரிந்தோம். வெறுங்கால்களோடு நடந்தோம். ஆனால், இன்றைய கோடைகளில் ஒவ்வொருவர்க்கும் செருப்பு இருக்கிறது. அதை அணிந்துகொண்டேகூட வெய்யிலில் நடக்க முடியவில்லை. வெப்பம் கொளுத்துகிறது. அன்றும் இதே வெய்யில்தான் காய்ந்தது என்றாலும் எங்கெங்கும் மரங்கள் இருந்தன. சாலையில் வெற்றிடம் மிகுந்து, மிதமான போக்குவரத்து இருந்தது. எல்லாம் இயல்பான நடமாட்டத்தில் இருந்தன. மிகைப்புகை எங்கும் இல்லை.

இன்றைய பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேற மறுக்கின்றன. வெய்யில் எப்படிப் பொசுக்கினாலும் அஞ்சாமல் விளையாடிக்கொண்டிருப்போம். இன்று விளையாடும் தலைமுறையையே காணவில்லை. வீட்டுக்குள் தொலைக்காட்சியின் முன்னம் முடங்கிக்கிடக்கிறோம். அதற்கேற்ப கோடை வெய்யிலும் தீயாய்ப் பொசுக்குகிறது. வெளியே சென்றால் உயிர் வற்றிவிடுகிறது. 

என்னைப்போல் என் பிள்ளைகளுக்கும் நீச்சல் கற்றுத்தர விரும்பினேன். எல்லாப் பாறைக்குழிகளிலும் கிழவியின் துருத்திக்கொண்டிருக்கும் பற்களைப்போல வெற்றுப் பாறைகளே நீட்டிக்கொண்டிருக்கின்றன. தண்ணீர் இல்லை. ஆற்றை நோக்கிச் செல்ல நான் அணியமாயிருப்பினும் அங்கும் நீரில்லை. நீரில்லாத எதிர்காலம்தான் நம் கண்முன்னே தெரிகிறது என்னும்போது நீச்சல் எதற்குப் பழகவேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டு அடங்கவேண்டியதுதான். 

 - கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles