கோடையை கொண்டாடுவோம்!

Friday, April 28, 2017

வீட்டில் இருந்து வெளியே தலைக் காட்டினால் வெயில் மண்டையை பிளக்கிறது. சாலையில் இறங்கி, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட கால்கள் மறுக்கின்றன. வீட்டிக்குள்ளேயே ஏ.சி.யை போட்டுக்கிட்டு (வசதியில்லாதவர்கள் மின்விசிறியை சுழலவிட்டுக்கொண்டு) உட்கார்ந்திருக்காலாமே என்று மனம் தவிக்கிறது.

ஆனால், வேறு வழியே இல்லை. இன்று அலுவலகம் போயே ஆக வேண்டும் என்கிற எச்சரிக்கை மணியும் சேர்ந்தே அடிக்கிறது. "கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிட்டா... வெயிலுக்கு முன்னாடி ஆபீஸ் போய் சேர்ந்துடலாம்"னு கணக்குப் போட்டு கிளம்பினா, வழக்கத்தை விட அதிகமான வெயில் அடித்து எல்லாக் கணக்கையும் பொய்த்துவிடுகிறது. 

ஒவ்வொரு நாளும் வெப்பநிலை கூடிக்கொண்டே போகிறது. இரவில் மின்தட்டுப்பாடும் சேர்ந்து கொள்வதால் தரைதட்டி நிற்கும் கப்பல் போல மனித உடலை புழுக்கம் ஆட்கொண்டுவிடுகிறது. ஆக, எப்படி திரும்பினாலும் இந்தக் கொடுங் கோடையை பெரும்பாலானோர் வெறுக்கவே செய்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று நுழையவே இடம் அளிக்காமல் கட்டப்பட்ட வீடுகளுக்குள்ளேயே அல்லது அடுக்குமாடியிலோ சிக்கிக் கொண்டவர்களின் நிலைமை உலகப் போரில் சிக்கியவனின் நிலைமையை காட்டிலும் பரிதாபமானது. 
வாரி சுருட்டிய வர்தா புயலால், நகரத்தின் சாலைகளில் ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு மரங்களும் காணாமல் போய்விட்டதால், ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளின் அவஸ்வதைகள் வார்த்தைகளில் சிக்காதவை. 

"இதுவரைக்கும் இப்படியொரு வெயிலை என் சர்வீஸ்ல பார்த்ததே கிடையாதுங்க...". "இந்த சம்மருக்கு நான் அப்படியே மூணாறு பக்கம் போகலாம்னு திட்டமிட்டிருக்கேன்..." "ரெண்டு மாசத்துக்கு ஒரு பாரீன் டூர் போறேன் பாஸ்" என்று சம்மர் நெருங்கியதுமே அலுவலகங்களில் ஊழியர்களின் பேச்சு மாறிவிடுவதும், கோடை காலத்தின் மீதான பயத்தை நமக்கு உணர்த்தவே செய்யும். இப்படியான வாய்ப்புகள் எல்லாம் எதுவும் கிடைக்காதவர்கள், தன் வாழ்வை நொந்தபடியே கடந்து செல்வர். இதுவரை கோடையை பலரும் எதிர்கொள்வது இவ்விதமே!. ஆனால், இந்த சம்மரால் பல நன்மைகளும், ரசாயன மாற்றங்களும் நடப்பதை அறிந்தவர் மிகச் சிலரே. உண்மையில், கோடை காலம் கொண்டாடுவதற்கே!

"என்ன பாஸ்... மோசமான வெயிலால, உங்க கண்ணு அவிஞ்சு போயிடுச்சா என்ன?" என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை  அதுதான் பாஸ்... என்பதே என் பதில். இந்த வெயில் நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை பயக்கிறது என்பதே சுட்டெரிக்கும் உண்மை. இயற்கையின் கொடைகளில் ஒன்றுதான் வெயில். சூரியனின் அதிகப்படியான வெப்பத்தை இந்தக் கோடை காலங்களில் நாம் அனுபவிப்போம். இன்று, உலகமயம், தனியார் மயத்தால் நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. முன்னோர்கள் கடைபிடித்த, வகுத்துச்சென்ற பல விஷயங்களை நாம் பழமைவாதம் பேசி, தவிர்த்துவிட்டோம். விளைவு, புதுப் புது நோய்களுக்கு நாம் ஆட்பட்டுவிட்டதுதான்!

நோய்களில் இருந்து விடுபட மருத்துவமனைகளின் பின்னால் அலைகிறோம். ஆனால், இப்படி எதற்கெடுத்தாலும் அங்கே செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்கவே, நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக கடைப்பிடித்தனர். அதன் மகத்துவம் இப்போது பலருக்கும் புரிய ஆரம்பித்துள்ளது. மீண்டும், இயற்கை உணவுகளையும், பாரம்பரியத்தையும் காக்க களத்தில் குதித்துள்ளனர் இளைஞர்கள். சரி, இந்தக் கோடையை கொண்டாட்டமாக வைத்திருப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்று உங்களுக்கு கேட்க தோன்றும். இந்தக் கோடையைத்தான் நம் முன்னோர்கள் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினர். 

நெல், மக்காட்சோளம், கேழ்வரகு, எள், கொள்ளு, பச்சைப் பயிறு, பட்டைப் பயிறு, மஞ்சள், மிளகாய், சீரகம், கடுகு உள்ளிட்ட பயிர்களை பதப்படுத்தவும், மீண்டும் விளைச்சலுக்கு தயார்படுத்தவும் கடுங் கோடையை பயன்படுத்திக்கொண்டனர். இப்போது நாம் சூப்பர் மார்க்கெட்டுகளிலேயே எல்லாவற்றையும் வாங்கிவிடுவதால், இவற்றின் அருமை தெரிவதில்லை. பெரும்பாலும் கோடை காலத்தில் தான் அனைத்து வகையான பயிர்களும் தேவையான சூட்டுக்கு தயார்படுத்தப்படும். அப்போதுதான் அது நல்ல விளைச்சலை தரும். அதுபோல, உற்று இயற்கையை கவனித்தீர்களானால் மரங்கள் எல்லாம் கோடையில் பச்சை நிறம் போர்த்தியிருக்கும். குறிப்பாக, பனை மரங்கள் காய்த்து தொங்கும். பெரும் கொடையான வேப்ப மரம் பூத்து குலுங்கும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்ததை எல்லோரும் அறிவோம். ஆக, வெப்பநிலையை சமன்படுத்திக்கொள்ள இயற்கையிலேயே பல மாற்றங்கள் நடக்கின்றன என்பதையும் நாம் உணர வேண்டும். 

மனித உடல் ஒரு மாபெரும் அதிசயம். அதனுள் நடக்கும் ரசாயன மாற்றங்கள் குறித்து முழுமையாக நாம் இன்னும் அறியவில்லை. ஆனால், குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் ஆராய்ந்து கண்டறிந்து இருக்கிறோம். அவற்றில் ஒன்று வியர்வை. உடலின் மிக முக்கியமான மாற்றங்களில் வியர்வைக்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது. மனித உடல் தன்னுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற பலவித முயற்சிகளை எடுக்கிறது. அவற்றில் ஒன்றுதான் வியர்வை. இன்றைய பரபரப்பான சூழலில் பலர் ஏ.சி. அறைகளுக்குள்ளேயே (அது வீடோ, அலுவலகமோ) அடங்கிக் கிடக்கின்றனர். அப்படியாக பல மாதங்களாக தேக்கி வைத்திருந்த வியர்வையை வேகமாக வெளியேற்ற இந்த கோடை காலமே மிகச் சிறந்தது. இதை தானே அறிந்துகொள்ளும் உடல், வியர்வையின் வழியே மாசுக்களை வெளியேற்றிவிடுகிறது. இது ஒரு மாபெரும் அதிசயம் என்று மருத்துவர்கள் வியக்கின்றனர். 

இப்படியாக மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்க வேண்டும் இல்லையா?. இந்தக் கோடை காலத்தில் தான் நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிடலாம். உங்கள் வசதியை பொறுத்து அவற்றை அமைத்துக் கொள்ளலாம். அருகில் உள்ள திருத்தலமோ, பூங்காவோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமோ எதுவானாலும் குடும்பத்தோடு சென்று வரலாம். இது கோடையில் மட்டுமே கிடைக்கும் கொடை. மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தக் கோடையை கொண்டாட்டமாக வைத்திருக்க உள்ளன. அவற்றையெல்லாம் பின்வரும் பக்கங்களில் நட்சத்திரங்களும், எழுத்தாளர்களும், அறிஞர் பெருமக்களும் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றை படிப்பதோடு நின்றுவிடாமல், விருப்பமானவற்றை கடைபிடித்து, இந்தக் கோடையை கொண்டாடி மகிழுங்கள்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles